Wednesday, March 13, 2024

கருணை காட்டுவோம் -இன்றைய சிந்தனை 13/03/2024

இரக்கமற்றவர்களை நாம் மனிதர்கள் என்றுக் கூறவியலுமா...? இரக்கமே ஒரு மனிதனை நாகரீகமானவன் ஆக்குகிறது. மனிதர்கள் கொண்ட கருணையே அவர்களைப் பண்பாடுடையவர்களாய் மாற்றுகிறது...*

அனைவரும் அடுத்தவர் மேல் இரக்கத்தோடு இருப்பார்கள் என்றால் பிறகு உலகில் கலகங்கள் ஏது...? வாதங்கள் ஏது...?*

மனம் மென்மைப்படும் பொழுது இரக்க உணர்வு தாமாகவே மனதில் எழுகிறது. ஆதிமனிதன் நாகரீகம் அடைந்ததன் வெளிப்பாடு தான் அவனது இரக்க உணர்வு...*

மரக்கிளையின் உச்சியில் இருந்த அந்தச் சின்னஞ்சிறு பறவையின் கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன, தாய்ப்பறவை எங்கோ சென்று இரை தேடிக்கொண்டு தன் குஞ்சுகளுக்குப் புகட்ட திரும்பி வந்த போது திடுக்கிட்டு அலறியது...*

ஒரு அரவம் (பாம்பு) மெதுவாக ஊர்ந்தபடி அந்தக் கூட்டை நெருங்கியது. அந்தப் பறவைக் குஞ்சுகளை உண்பதுவே அதன் நோக்கம்...*

தாய்ப் பறவையால் அந்த அரவத்தினை என்ன செய்யவியலும்...?*

சேடனே...! சேடனே...!! எங்களை விட்டு விடுங்கள் என்றபடி கரைந்தவாறு கெஞ்சியது அந்தத் தாய்ப்பறவை...! (சேடன்-பாம்பு)*

திரும்பிப் பார்த்த சேடனோ! , “ஏன் எதற்காக ஓலமிடுகிறாய்...?” என்றது.*

“அண்ணா! நீங்கள் எவ்வளவு பெரியவங்க! உங்களைக் கண்டு பயந்து கொண்டிருக்கும் எங்கள் மேல் நீங்க இரக்கப்படக் கூடாதா..?” எனக் மெல்லியக் குரலில் கெஞ்சியது பறவை..*

“அப்படியா...?” என்றது சேடன்.*

“அண்ணா என் குழந்தைகளை விட்டு விடுங்கள்! நாங்கள் பிழைத்துக் கொள்கிறோம்”*

“நான் கேட்பதற்குச் சரியான பதிலைச் சொல்லி விட்டால், நான் உன் குழந்தைகளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுகிறேன்” என்றது அந்த அரவம்...*

“கேளுங்க அண்ணா” சொல்கிறேன் என்றது தாய்ப் பறவை...*

“உன் வாயில் தற்போது என்ன வைத்திருக்கிறாய்...?”*

“என் குஞ்சுகளுக்குச் சிறிது இரை கொண்டு வந்து இருக்கிறேன் அண்ணா...!”*

“என்ன இரை அது...?”*

“சிறிய புழுக்கள் அண்ணா...!”*

“உன் குழந்தைகளின் இரைக்காகச் சென்ற நீ, அந்தப் புழுக்களுக்கு இரக்கம் காட்டவில்லை, ஆனால், என்னிடம் மட்டும் இரக்கம் காட்டச் சொல்கிறாயே...!"*

சேடன் கேட்ட அந்தக் கேள்விக்கு அந்தப் பறவையால் எந்த பதிலும் கூற இயலவில்லை...*

இதுதான் நமது வாழ்க்கையின் நியதி...!*


உன்னை விட பலம் குறைந்தது உனக்கு இரையாகிறது...!*

*என்னை விட பலம் குறைந்தது எனக்கு இரையாகிறது...!!*


இப்படி இல்லாமல் தானே உற்பத்தி செய்து வாழ வழி இருக்கிறவர்கள் மனிதர்கள் தான், ஆனால், அவர்களே அப்படி வாழ்வதில்லை, பல உயிரினங்களைக் கொன்று உண்டு வாழ்ந்து வருகிறார்கள்...*


இப்படிப்பட்ட சூழலில் என்னை இரக்கம் காட்டச் சொல்வது சரிதானா...?*


நீயே ஆலோசித்துக் கொள். இன்று நீ என்னை அண்ணா என்று அன்போடு பலமுறை அழைத்தாய், அந்த மகிழ்ச்சியில் இன்று உன் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தையும் நான் விளைவிக்கப் போவதில்லை.*


என் பசிக்கு நான் வேறு வழியைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றபடி அந்த அரவம் சென்று விட்டது...*


சேடன் சென்ற அந்தத் திசையைப் பார்த்துத் திகைத்து நின்றது தாய்ப் பறவை...!*


*ஆம் தோழர்களே...!*


*அனைத்து உயிர்களிடத்தில் இரக்கம், அன்பு செலுத்துவோம், உயிர்களிடத்திலும் இரக்கமாக இருப்பது நமது நோய் எதிர்ப்புத் திறன் அமைப்பிற்கு சிறந்தது. அது மனிதர்களின் அகவையை நீட்டிக்கும், இதை நீங்கள் பணம் கொடுத்துப் பெற வேண்டாம். இது எளிமையான ஒன்று...!"✍🏼🌹*

No comments:

Post a Comment