Friday, March 22, 2024

வரலாற்றில் இன்று 22.03.2024

முக்கிய நிகழ்வுகள் :-

👉 1868ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி இயற்பியல் துறை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வென்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் மோரிசன் நகரில் பிறந்தார்.

👉 1993ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்-ஐ (chip (80586)) அறிமுகம் செய்தது.

👉 2005ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி தமிழ்த் திரையுலகில் காதல் மன்னன் என்று அழைக்கப்படும் ஜெமினி கணேசன் மறைந்தார்.

முக்கிய தினம் :-

உலக தண்ணீர் தினம்

🌊 நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நம்மால் வாழ இயலாது. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

🌊 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக ஐநாவால் அறிவிக்கப்பட்டு இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு கொண்டாடி வருகிறோம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந்த வகையிலும் அகலவில்லை. எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசுப்படுத்தாமல், உயிர் போல் காப்போம் என்ற உறுதிமொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.

பிறந்த நாள் :-

டி.வி.சுந்தரம் ஐயங்கார்

🚌 இந்திய தொழில்துறை, ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான டி.வி.சுந்தரம் ஐயங்கார் 1877ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பிறந்தார்.

🚌 இவர் வழக்கறிஞர், ரயில்வே குமாஸ்தா, வங்கி ஊழியர் என வேலை செய்து வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு, தொழில்துறையில் இறங்கினார். முதலில் தேக்கு மரங்களை இறக்குமதி செய்து மர வியாபாரத்தை தொடங்கினார்.

🚌 இவர் 1911ஆம் ஆண்டு தி.வே.சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து 1912ஆம் ஆண்டு தஞ்சாவூர்-புதுக்கோட்டை வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கி, தென்னிந்தியாவில் சாலைப் போக்குவரத்து துறைக்கு அடித்தளமிட்டார்.

🚌 பேருந்து கட்டணம் இவ்வளவு தூரத்திற்கு இவ்வளவு கட்டணம், ரசீது வழங்குவது ஆகிய நடைமுறைகளை கொண்டுவந்தார். கால அட்டவணைப்படி பேருந்துகள் புறப்பட்டு, சென்றடையும் நடைமுறையையும் நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தினார்.

🚌 அதன்பின்பு ரப்பர் புதுப்பிப்பு ஆலை, தி மெட்ராஸ் ஆட்டோ சர்வீஸ் லிமிடெட், சுந்தரம் மோட்டார் லிமிடெட், வீல்ஸ் இந்தியா, ப்ரேக்ஸ் இந்தியா, டி.வி.எஸ் இன்ஃபோடெக், சுந்தரம் ஃபைனான்ஸ் என டி.வி.எஸ் குழுமத்தில் ஏராளமான நிறுவனங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

🚌 நாட்டின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான டி.வி.எஸ் குழுமத்தை தொடங்கியவரும், முன்னணி தொழிலதிபராக விளங்கியவருமான டி.வி.சுந்தரம் ஐயங்கார் தனது 78வது வயதில் (1955) மறைந்தார்.

No comments:

Post a Comment