Saturday, March 16, 2024

கடலைக்கறி - Kadala Curry

சமையல் குறிப்புகளில் இன்று கடலைக்கறி செய்யும் முறையை பார்ப்போம் வாருங்கள்...*

*தேவையான பொருட்கள்:*


கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/2 கப்

பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய தக்காளி - 1

தேங்காய்த்துருவல் - 1 கப்

தேங்காய்ப்பால் - 1/2 கப்

கடுகு& உளுந்து - 1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

தனியா தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு


கடலைக்கறி மசாலா பொடி செய்ய


சோம்பு - 1/2 டீஸ்பூன்

பட்டை - சிறிய துண்டு

கிராம்பு - 4

ஜாதிபாத்ரி - 2 சிறிய இதழ்கள்


செய்முறை


1. கருப்பு கொண்டைக்கடலையை நன்றாக கழுவி போதுமான நீரில் 8 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பின் மீண்டும் ஒருமுறை தண்ணீரில் கழுவி குக்கரில் 1 கப் தண்ணீர் மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து 7 முதல் 9 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். 


2. வாணலியை சூடாக்கி சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் ஜாதிபாத்ரி சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். சோம்பு மற்றும் கிராம்பிலிருந்து நல்ல ஒரு மணம் வரும் போது அடுப்பை அணைத்து ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவும். பின் நைசாக பொடித்துக் கொள்ளவும். 


3. தேங்காய்த்துருவலை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். 


4. கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 


5. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து குறைந்த சூட்டில் வதக்கவும். 


6. பின் தயார் செய்த மசாலா பொடி சேர்த்து வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து கலந்து கொள்ளவும். அதோடு தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கடலை வேகவைத்த தண்ணீரையும் கலந்து மூடி வைத்து குறைந்த சூட்டில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். 


7. கறி நன்றாக கொதித்ததும் கடைசியாக 1/2 கப் தேங்காய்ப்பாலை சேர்த்து 2 நிமிடங்கள் லேசான கொதி வந்ததும் இறக்கவும். புட்டு, இடியாப்பம் மற்றும் ஆப்பத்திற்கு பரிமாறவும். 


இந்த கடலைக்கறியை தேங்காய்ப்பால் சேர்க்காமலும் செய்யலாம்.‌ மசாலா பொடி மட்டும் இதேபோல் வறுத்து பொடித்து கடலைக்கறி செய்து பாருங்கள் அதன் சுவை வேற லெவல். மசாலா பொருட்களை வறுக்கும் போது கவனமாக கருகிடாமல் வறுத்துக் கொள்ளவும்.

No comments:

Post a Comment