Tuesday, March 26, 2024

பணத்தின் நேர மதிப்பு" (Time value of money)

 ஆம், நாள் ஆக ஆக பணத்தின் மதிப்பு கண்ணுக்குத் தெரியாமல் குறைந்து கொண்டே போகிறது. இதை "பணத்தின் நேர மதிப்பு" (Time value of money) என்பர். இதற்குக் காரணம்: விலைவாசி / பணவீக்க ஏற்றத்தால் வாங்கும் திறன் குறைகிறது.

விலைவாசி என்றால் ஒரு பொருளின் விலையேற்றத்தை வைத்து விலைவாசி எனக் கூறலாகாது. சராசரி நபர் பயன்படுத்தும் பொருட்களின் (அதாவது, a basket of products = பொருட்களின் கூடை) ஒட்டுமொத்த விலை பொதுவாக ஏறிக்கொண்டே போகிறது. ஆனால் ஏறும் வீதம் நாளுக்கு நாள் வேறுபடலாம். பொருளாதார வல்லுநர்கள் இதைக் கண்காணித்துக் கொண்டு வருவார்கள். "நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்" மற்றும் "மொத்த விலைக் குறியீட்டு எண்" போன்ற விலைக் குறியீடுகளைக் கண்காணிப்பர்.

விலைவாசி ஏற ஏற, பணத்தைக் கொண்டு வாங்கும் திறன் (Purchasing power) குறைந்து கொண்டே போகிறது. வெறும் பணமாக கையிலிருந்தால், அதன் மதிப்பு விலைவாசி ஏற்றத்தால் குறைந்து விடும். வாங்கும் திறனை எவ்வாறு மேம்படுத்துவது? ஒன்று, உற்பத்தியாகும் பொருட்களின் - சரியாகச் சொன்னால், பொருட்கூடையின் - விலையைக் குறைக்க வேண்டும். பெரும்பாலும் இது நடக்காது. ஏனென்றால் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி செலவும் (எ.கா. மூலப் பொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர் கூலி உயர்வு) அதிகரிப்பதால் விற்பனை விலையை குறைக்க முடியாமல் போகலாம்.

உங்களிடமுள்ள பணத்தை நல்வழியில் முதலீடு செய்து பணத்தை "வளர்க்க" வேண்டும். அப்படிப்பட்ட பண வளர்ச்சியின் வீதம் விலையேற்ற வளர்ச்சி வீதத்தை வீட அதிகமாக இருக்க வேண்டும். அப்போது தான் அதலிருந்து வரும் வருமானம் விலைவாசியை முறியடிக்கும்.

மிகவும் எளிதாக்கப்பட்ட ஒரு உதாரணம்:

பொருட்கூடையில் உள்ள பொருட்கள்: 100 வெவ்வேறு பொருட்கள் என்றும் ஒவ்வொன்றும் ஒரே விலையாக (₹1000) கடந்த ஆண்டு இருந்தது எனவும் கற்பனை செய்து கொள்வோம்.

₹1,00,000 தொகையில் கடந்த ஆண்டு வாங்கக்கூடிய பொருட்கள் = 100 (அதாவது, கடந்த ஆண்டில் வாங்கும் திறன்)

இந்த ஆண்டு பொருட்களின் விலை 4% உயர்ந்து விட்டது. அதாவது, ஒவ்வொன்றின் விலை ₹1040.

₹1,00,000 தொகையில் இந்த ஆண்டு வாங்கக்கூடிய பொருட்கள் = 96 (= 100000/1040) அதாவது, வாங்கும் திறன் நூறிலிருந்து 96 ஆக குறைந்து விட்டது. அதனால் தான், பெயரளவில் ₹1,00,000 கையிலிருந்தால் கூட அதன் உண்மையான மதிப்பு ₹96,000 ஆகும்!)

(அ) பணத்தின் வளர்ச்சி = 0

(ஆ) (விலைவாசி ஏற்றத்தால் ஏற்படும்) பணவீக்க வளர்ச்சி = 4%

(இ) வாங்கும் திறனில் மாற்றம் = (அ) - (ஆ) = (-)4%

இதையே இன்னொரு வகையில் கூறலாம்:

(i) பணமாக வைத்திருப்பதால் வரும் பெயரளவு வருமான (Nominal rate of return %) வளர்ச்சி = 0

(ii) (விலைவாசி ஏற்றத்தால் ஏற்படும்) பணவீக்க வளர்ச்சி = 4%

(iii) பணமாக வைத்திருப்பதால் வரும் உண்மையான வருமான (Real rate of return %) வளர்ச்சி = (i) - (ii) = -4% (அதாவது, 4% வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

பணமாக வைத்திருக்காமல் மூதலீடு செய்தால் கூட முதலீட்டின் வளர்ச்சி விலைவாசி / பணவீக்க வளர்ச்சியை (4%) மிஞ்ச வேண்டும். முதலீடு 3% உயர்ந்தால் கூட உண்மையில் 1% வீழ்ச்சி தான். 3% - 4% = -1

No comments:

Post a Comment