Tuesday, March 26, 2024

பண வீக்கம் என்பது என்ன? அதை எளிமையாக விளக்க இயலுமா?

பணத்தின் வாங்கும் திறன் குறைவதையே பணவீக்கம் என்று குறிப்பிடுவர். என் பாட்டி பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரியும் போது அவர்கள் வாங்கிய மாத சம்பளம் ரூபாய் பத்து. அது ஒரு குடும்பதிற்கே போதுமானதாக அப்போது இருந்தது. இப்போது? ஒரு டீ குடிக்கலாம். இது சாதாரணமாக நடக்கும் ஒன்று தான். ஒரு கட்டுப்பாட்டில் இருக்கும் வரை. உங்கள் பண இருப்பு அதிகமாகும் (தரம் குறைந்தாலும் அதிகமானது என்ற மகிழ்ச்சி). (Deflation - பணவாட்டம் - இருந்தால் தான் பிரச்னை. நீங்கள் ஒரு வங்கியில் 10000 போட்டு அடுத்த ஆண்டு அது 9000-ஆக "வளர்ந்தால்" எப்படி இருக்கும்?)

இதற்கு பல காரணங்கள் உண்டு. Time value of money, opportunity cost, interest rate என்று உங்களைக் குழப்ப விரும்பவில்லை. சாதாரணமாக புரியும் படி இருக்கும் விடயங்களை மட்டும் விளக்குகிறேன். கீழ் கூறப்படுபவைகள் ஒரு சில scenarios மட்டுமே. முழுமையல்ல. இதிலும் terms and conditions apply.

அரசு:

அரசு புதுத் திட்டம் ஒன்று கொண்டு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இத்திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்வோர்க்குக் குறைந்த வட்டியில் பணம் கிடைக்கும்.

இதனையடுத்து இந்தத் திட்டத்தின் கீழ் பல ஆயிரம் பேர் வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவார்கள். இந்தத் தொகையை வைத்து தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்களை வாங்குவார்கள். பல பேருக்குச் சம்பளமும் தருவார்கள். இப்படி ஒரு சில பேர் வாங்கிய கடன் பல பேருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. நாட்டில் பணப்புழக்கம் அதிகமாகும். பணபுழக்கம் அதிகமானால் எல்லாரும் அதிகம் செலவழிப்போம். உதாரணமாக தேவையில்லை தேவையில்லை என இதுவரை எண்ணிய பொருட்களை இப்போது வாங்க ஆரம்பிப்போம். நாட்டில் செலவழிக்க முன்னை விட இப்போது நிறைய பேர் தயாராக இருப்பார்கள். செலவு திறன் அதிமாக அதிகமாக பொருட்களின் விலையையும் அதிகமாக்குவார்கள் பொருள் விற்பவர்கள். "நம்ம பொருளை வாங்க நிறைய பேர் இருக்காங்களே" என்று சிலரும் "நிறைய வெச்சிருக்கானே பயபுள்ள. இன்னும் கொஞ்சம் கேட்டுப் பார்ப்போம்" என்று சிலரும்.

RBI:

RBI போன்ற வங்கிகள் எல்லா நாட்டிலும் ஒன்று உள்ளது. இது வங்கிகளுக்கெல்லாம் வங்கி. இங்கிருந்து பணம் வாங்கித் தான் வங்கிகள் நமக்கு கடன் தருகின்றன. ஒரு பொருளாதார முடிவு எடுத்ததில் வங்கிகள் தம்மிடம் வாங்கும் பணத்திற்கு 1% வட்டி கொடுத்தாலே போதும் என்று ரிசர்வ் வங்கி சொல்லி விட்டால் வங்கிகள் எல்லாம் நமக்கு குறைந்த வட்டியில் கடன் தர ஆரம்பித்து விடுவார்கள். இதனால் குறைந்த வட்டி தானே என்று நிறைய மக்கள் கடன் வாங்குவார்கள். பணப்புழக்கம் அதிகமாகும். பல பேர் புதிய தொழில் தொடங்குவார்கள். பல பேருக்கு வேலை கிடைக்கும். அப்புறம் என்ன? மேலே குறிப்பிட்டதைப் போல விலை அதிகமாகும்.

பணத்தாசை:

நாம் ஒரு வேலையில் இருக்கிறோம் என்றால் அடுத்த ஆண்டு promotion வாங்கி சம்பளம் கூடுதலாகப் பெற வேண்டும் என்று தான் நினைக்கின்றோம். சிறிது காலம் சம்பள உயர்வு பெறவில்லை என்றால் வேலையிடத்தை மாற்றி சம்பள உயர்வு பெறுகின்றோம். நமது செலவழிக்கும் திறன் கூடி விடுகிறது. நமது செலவுத்திறன் கூடக் கூட விலைகளும் எழுகின்றன.

பால் பாக்கெட்:

ஒரு பால் பாக்கெட் 20 ரூபாய் என்றால் சம்பள உயர்வினால் 25 ரூபாய் கூட கொடுத்து வாங்க தயாராய் இருக்கின்றோம். பால்காரருக்கும் நம்மைப் போலத்தான். அவர் வாழ்க்கை தரத்தை உயற்ற லாபம் அதிகமாக வேண்டும் என்று விரும்புகிறார். "அட நேற்று இதை 25 ரூபாய்க்கும் வாங்கினார்களே" என்று 20 ரூபாய் பாலின் விலையை 22 என்று ஏற்றி விடுகிறார்.

இதில் இன்னொரு வகையும் இருக்கிறது. உதாரணமாக பால் என்பது ஒரு குறிப்பிட்ட அளவு தான் கிடைக்கும். ஆனால் மக்கள் தொகையோ அதிகம். 20 ரூபாய் பாலை 100 ரூபாக்கு விற்க முடியாது. வேறு ஒருவரிடம் வாங்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் 22க்குக் குடுத்தால் நமது விற்பனையிலும் சேதம் இல்லாமல் அதிக லாபத்தையும் வாங்கி விடலாம் என்றும் விலையை ஏற்றுவார். இதைப் பார்த்து அடுத்த பால்காரரும் விலையை ஏற்றுவார்.

இன்னொரு வகையும் உண்டு. ஒருவரரிடம் பால் நன்றாக இருக்கிறது என்று அவரிடம் பால் வாங்க கூட்டம் அலைமோதும் போது இதை நான் 22க்குக் கூட விற்கலாம் என்று விலையை ஏற்றுவார்.

ஆக பாலின் விலை 20ல் இருந்து 22 ஆகி விட்டது. இதைப்போல பலப் பொருட்களின் விலை ஏற, நீங்கள் சென்ற ஆண்டு 100 ரூபாய் குடுத்து வாங்கிய பொருட்களை இந்த ஆண்டு 120 குடுத்தால் தான் வாங்க முடியும். இது தான் 20% பண வீக்கம். பணத்தின் தரம் 20% கீழே போய்விட்டது. அல்லது பணத்தின் வாங்கும் திறன் 20% குறைந்து விட்டது.

No comments:

Post a Comment