Wednesday, March 20, 2024

லுக் அவுட் நோட்டீஸ்' என்றால் என்ன?

காவல்துறையால் அளிக்கப்படும் இந்த கவன ஈர்ப்பு அறிக்கையானது, வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டுக்கு மட்டும் செல்லத்தக்கது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.


குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர், சொந்த நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குப் பயணம் செல்வதை அல்லது வெளிநாட்டிலிருந்து உள்நாட்டிற்கு வருவதைத் தடுக்கும் நோக்கத்துடன், இந்தியக் காவல் துறை உள்ளிட்ட சில துறைகளால் விடுக்கப்படும் சுற்றறிக்கையானது ‘கவன ஈர்ப்பு சுற்றறிக்கை’ (Look Out Circular - LOC) எனப்படுகிறது. இது குறித்த சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.


கவன ஈர்ப்பு சுற்றறிக்கை

குற்றம் சாட்டப்பட்ட நபர், இந்திய நாட்டைவிட்டு வானூர்தி நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவைகளின் வழியாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிடாமல் தடுப்பதற்காக, பன்னாட்டு எல்லைச் சாவடிகளில் செயல்படும் குடியுரிமைத் துறையின் குடிவரவு சோதனைச் சாவடி (Immigration Check Posts - ICP)) அதிகாரிகளுக்கு இந்தக் கவன ஈர்ப்பு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தக் கவன ஈர்ப்பு அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவரின் ஒளிப்படம், பெயர், கடவுச்சீட்டுத் தகவல்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும். கவன ஈர்ப்பு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்ட நபர், வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக வானூர்தி அல்லது கப்பல் போன்றவைகளின் வழியாகப் பயணம் செய்ய முற்பட்டால், குடிவரவுத் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நபரின் பயணத்தைத் தடுத்து, காவல்துறையினரிடம் ஒப்படைப்பர்.




கோரிக்கை அதிகாரிகள்

கவன ஈர்ப்பு சுற்றறிக்கை கோரிக்கையானது கீழ்க்காணும் பதவிக்குக் குறையாதவர்களால் வழங்கப்பட வேண்டும்.

இந்திய அரசின் துணைச்செயலாளர் அல்லது மாநில அரசின் இணைச்செயலாளர் அல்லது தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் அல்லது தொடர்புடைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்.


மத்தியப் புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பளர் அல்லது அதற்கு இணையான பணியிலிருக்கும் அதிகாரி.


போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தில் மண்டல இயக்குநர் அல்லது அதற்கு இணையான பணியிலிருக்கும் அதிகாரி.

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அல்லது மத்திய நேரடி வரிகள் வாரியம் அல்லது மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் துணை ஆணையர் அல்லது அதற்கு இணையான பணியிலிருக்கும் அதிகாரி.


புலனாய்வுப் பணியகம் (Intelligence Bureau) உதவி இயக்குநர்


ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு (Research and Analysis Wing - R&AW) துணைச் செயலாளர்


தேசியப் புலனாய்வு முகமையில் காவல் கண்காணிப்பாளர் நிலைக்குக் குறைவில்லாத அதிகாரி.


அமலாக்க இயக்குநரகத்தின் உதவி இயக்குநர்


புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு அலுவலகத்தில் புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு அலுவலர்.


பன்னாட்டுக் காவல் துறை அதிகாரி

மேலும், இந்தியாவிலுள்ள குற்றவியல் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படி கவன ஈர்ப்பு சுற்றறிக்கை கோரிக்கை வழங்கப்படலாம்.



முக்கியத் தகவல்கள்

தற்போதுள்ள நடைமுறையில், இந்திய அரசின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் 25022/13/78-F.I நாள்: 5.9.1979 மற்றும் OM number 25022/20/98-F.IV நாள் 27.12.2000 கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நடைமுறைகளின்படி, கவன ஈர்ப்பு சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.


இந்தியக் குடிமகனைப் பொறுத்த வரை, கவன ஈர்ப்பு சுற்றறிக்கைக்கான கோரிக்கை அனைத்துக் குடிவரவு சோதனைச் சாவடிக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் வடிவில், முழுமையான தகவல்களுடன் அனுப்பப்பட வேண்டும்.


கவன ஈர்ப்பு சுற்றறிக்கைக் கோரிக்கை விண்ணப்பத்தில் கையொப்பமிடும் அதிகாரியின் பெயர், பதவி தவறாமல் குறிப்பிட வேண்டும். இவையில்லாத கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.


கவன ஈர்ப்பு சுற்றறிக்கைக் கோரிக்கையில் இணைக்கப்படும் படிவத்தில் கோரிக்கை விடுப்பவரின் தொடர்பு விவரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும். முறையான தொடர் நடவடிக்கைகளுக்காக, தொடர்புடைய கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி / அலைபேசி எண்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.


கவன ஈர்ப்பு சுற்றறிக்கை விடுக்கப்படும் நபரின் முழுமையான தகவல்கள் இணைப்பில் இடம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று அடையாளம் காணும் அளவுருக்கள் அளிக்கப்பட வேண்டும். அவை இல்லாத நிலையில், கோரிக்கை ஏற்கப்படாது. பெயர், ஒளிப்படம், கடவுச்சீட்டுத் தகவல்கள் போன்றவை இருக்க வேண்டும். உண்மையான பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் கூடுதல் அளவுருக்களை முன்பே வழங்குவது கோரிக்கை அளிப்பவரின் பொறுப்பாகும்.


கவன ஈர்ப்பு சுற்றறிக்கைக்கேற்ப குடிவரவு அதிகாரிகளால் எடுக்கப்பெற்ற நடவடிக்கையின் சட்டப்பூர்வப் பொறுப்பு அதனைத் தோற்றிவித்த நிறுவனம் / அமைப்புக்குத்தான் உண்டு.

Look Out Notice


இந்தியக் குற்றவியல் சட்டம் அல்லது பிற தண்டனைச் சட்டங்களின் கீழ் அறியக்கூடிய குற்றங்களில் கவன ஈர்ப்பு சுற்றறிக்கை கோரிக்கை பயன்படுத்த வேண்டும். அதுகுறித்த இணைப்புப் படிவத்தில் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும். இத்தகவல்கள் இல்லையெனில் கைது செய்யவோ அல்லது தடுக்கவோ இயலாது.


இந்தியக் குற்றவியல் சட்டம் அல்லது பிற தண்டனைச் சட்டங்களின் கீழ் அடையாளம் காணக்கூடிய குற்றங்கள் எதுவும் இல்லாத நிலையில் கவன ஈர்ப்பு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டவர் தடுத்து வைக்கப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம் அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கலாம். இருப்பினும், இதுபோன்ற வேளைகளில், கவன ஈர்ப்பு கோரிக்கை விடுக்கும் அமைப்புகள் வானூர்தி / கப்பல் வருகை / புறப்பாடு குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்குபடி மட்டுமே கோர முடியும்.


காவல்துறையால் அளிக்கப்படும் இந்தக் கவன ஈர்ப்பு அறிக்கை, வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டுக்கு மட்டும் செல்லத்தக்கது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஒரு ஆண்டுக்குப் பின்பு நீட்டிக்க விரும்பினால், கால வரம்பு நிறைவடைவதற்கு முன்பாக நீட்டிப்பு செய்து கொள்ளலாம். நீட்டிப்பு செய்யப்படாத நிலையில், குடிவரவு அதிகாரிகள் அதனை இடைநிறுத்தம் செய்து கொள்ள முடியும்.


குறிப்பிட்ட கால அளவுகளில் தேடப்பட்டு வரும் நபர்களின் வருகையைப் பார்ப்பதற்காக வழங்கப்பட்ட தடை – நுழைவு கவன ஈர்ப்பு சுற்றறிக்கை, கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்வதற்காக வழங்கப்பட்ட கவன ஈர்ப்பு சுற்றறிக்கை, கடவுச்சீட்டு இழப்பு தொடர்பாக வழங்கப்பட்ட கவன ஈர்ப்பு சுற்றறிக்கை, நீதிமன்றங்கள் மற்றும் பன்னாட்டுக் காவல் துறையால் வழங்கப்பட்ட கவன ஈர்ப்பு சுற்றறிக்கை போன்றவை ஓராண்டு என்று கால வரையறைக்கு உட்பட்டதல்ல. ஓராண்டுக்கு மேலும் கவனத்தில் கொள்ளப்படும்.




No comments:

Post a Comment