Saturday, June 8, 2024

2024 தேர்தல் - என் பார்வை Dr. B.R .J. கண்ணன்.

இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது நம் ஜனநாயகம் மற்றும் நம்முடைய தேர்தல் நடத்தும் முறை. சமீபத்தில் பாகிஸ்தான், மெக்ஸிகோ, ரஷியா என்று பல நாடுகள் தேர்தலைச் சந்தித்தன. அந்தத் தேர்தல்கள் எவ்வாறு நடந்தன என்பது உலகிற்குத் தெரியும். யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நம் தேர்தலை அமெரிக்கா முதற்கொண்டு பல நாடுகள் வியந்து பாராட்டியுள்ளன. ஆஸ்திரேலி

யா,  'நாம் இந்தியாவிடமிருந்து பலவும் கற்க வேண்டும்' என்று கூறுகிறது. இந்தியாவை விட நான்கில் ஒரு பங்கு மக்கட்தொகைகொண்ட நாடுகளிலேயே காகித முறையில் நடந்து கொண்டிருக்கும் தேர்தலை நடத்துவது எவ்வளவு கடினம் என்று அறிந்த அவர்கள் இ.வி.எம் இயந்திரங்களைப் பற்றிப் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். அதாவது, எத்தனை பலமாக ஆட்சியில் இருந்தாலும் அரசியல்வாதிகள் குறுக்கீடு செய்ய முடியாது என்பதும், அவர்கள் நினைத்தால் தமக்கு ஏற்றவாறு இந்த இயந்திரங்களை மாற்றி அமைக்க முடியாது என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது. இந்த இயந்திரங்களை இழிவுபடுத்தி, தேர்தலே ஒரு நாடகம் என்று  விமர்சிக்கப் பலரும் தயாராகியிருந்தனர். இனி வாழ்க்கைக்கும் அவர்கள் இதைப் பற்றி வாய் திறக்க முடியாத வண்ணம் நடந்துவிட்டது. இதனை உருவாக்கிய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த விஞ்ஞானிகளை நாம் நன்றியுடன் நினைவு கூறுவோம். 


இரண்டாவதாக, ஆட்சி அமைக்கக் காத்திருக்கும் பாரதிய ஜனதாவிற்கு வருவோம். அவர்கள் தனிப் பெரும்பான்மை பெறவில்லையே, ஆட்சியில் அமர அருகதை உள்ளதா என்று பலரும் கேட்பது மிகவும் வியப்பாக உள்ளது. 


1984ல் இந்திராகாந்தி கொல்லப்பட்ட அனுதாப அலையில் தேர்தலைச் சந்தித்த ராஜீவ் காந்தி 414 இடங்களைப் பிடித்தார். அதன் பின் 2014 வரை எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறவில்லை. பலருக்கும் இந்தச் செய்தி புதியதாக இருக்கலாம்.  ஆனால் உண்மை.  கீழே பட்டியலைக் கொடுத்திருக்கிறேன். 


1989 ஜனதா தளம் 197

1991 காங்கிரஸ் 244

1996 பிஜேபி 161

1998 பிஜேபி 182

2004 காங்கிரஸ் 145

2009 காங்கிரஸ் 206


அதன்பின், அதாவது முப்பது வருடங்களுக்குப் பின் தனிப்பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சி அமைக்கிறது. 


2014 பிஜேபி 282

2019 பிஜேபி 303


தற்போது முடிந்த தேர்தலில் பிஜேபி தனிப் பெரும்பான்மை பெறவில்லை என்பதை வைத்து மற்ற கட்சிகள் கொண்டாடுவது ஏற்புடையதா என்று தெரியவில்லை. தேசிய கட்சிகளின் இந்த வெற்றிவிகிதப்  பட்டியலைப் பாருங்கள். போட்டியிட்ட இடங்கள் , வென்றவை, சதவிகிதம். 


பிஜேபி        441 - 240 - 55%

காங்கிரஸ் 328 - 98   - 30.6%

கம்யூனிஸ்ட் (மா) 52 - 4 - 7.7%

கம்யூனிஸ்ட் (இ) 30 - 2 -  6.6%


நான் மாநில அளவில் முதல் மாணவனாக வருவேன் என்று ஜம்பம் அடித்துக் கொண்ட மாணவன் Distinction என்று சொல்லும் அளவிற்கு கூட மதிப்பெண் பெறவில்லை. ஆனால், ஓரளவு சுமாரான மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வாகிவிட்டான். அவனைப் பார்த்து மற்ற மாணவர்கள் கை கொட்டிச் சிரிக்கிறார்கள், பரிகாசம் செய்கிறார்கள்.  ஆனால் இவர்கள் தேர்வில் பாஸ் மார்க் கூட வாங்கவில்லையே. 


145 இடங்களை மட்டுமே வென்று 2004 ல் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததை ஏற்க முடிந்ததென்றால், 240 இடங்களைக் கொண்ட பிஜேபி ஆட்சி அமைப்பதை ஏற்க என்னத் தயக்கம்? சுதந்திரம் கிடைத்து தேசிய அளவில் சொல்லிக்கொள்ளும் படி வேறு எந்த ஒரு கட்சியும் இல்லாத சமயத்தில்தான் நேரு மூன்று முறை தொடர்ச்சியாகப் பிரதமராக இருந்தார். ஆனால், இப்பொழுதுள்ள மிகவும் சவாலான சமயத்தில் தொடர்ச்சியாக ஒருவர் மூன்றாம் முறை பிரதமராகப் பதவி ஏற்கிறாரென்பது சாதாரண விஷயமல்ல.


இப்பொழுது அமையவிருக்கும் அரசு பலம் இல்லாதது, பிஜேபியின் குடுமி நிதிஷ் மற்றும் நாயுடுவின் கைகளில் என்ற விமர்சனமும் தவறு. இவர்கள் இருவரும் எந்த நேரத்திலும் கழற்றி விடுவார்கள் என்ற விமர்சனம் இருந்தாலும், இதைவிட மற்றொரு போக்கிடம் இருந்தால் தானே அவ்வாறு செய்வார்கள்? அப்படி ஒன்றும் இல்லையே. அப்படியே அவர்கள் திடீரென்று விலகினாலும் பல சிறு கட்சிகளும் சுயேட்சைகளும் ஆதரவு கொடுக்கத் தயாராக இருப்பார்கள். ஆக, தங்களுக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பை இவர்கள் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பார்களேயன்றி விலகிவரும் வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த ஆட்சி ஐந்து வருடம் நிலையாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பிஜேபி தன்னுடைய முரட்டுத்தனமான அணுகுமுறையைச் சற்றே தளர்த்தும், ஆனால் கைவிடாது. 


பலமான எதிர்க்கட்சி ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. அது தற்சமயம் அமைந்திருக்கிறது. 'நான் வச்சது தான் சட்டம்' என்ற நிலைமை மாறி, எந்த ஒரு சட்டமும் முடிவும் பாராளுமன்றத்தில் பலமாக விவாதிக்கப்படும். அதன் சாதகப் பாதகங்கள் எல்லாக் கோணங்களிலும் மக்களுக்குத் தெரிய வரும். அதன் பின் தான் அது நடைமுறைக்கு வரும் அல்லது வராமல் போகும். இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று. ஒரு சில மதங்கள் அல்லது சமூகங்கள் சார்பாகப் பேசாமல் பொதுவாக நாட்டு நலன்கள் மட்டுமே கருத்தில் கொண்டு அரசியல்வாதிகள் நம் பாரதம் உயர வழி வகுப்பார்கள் என்று நம்புவோமாக. 


சரி, 2029ல் என்ன நிலைமை இருக்கும்? பிஜேபி அல்லது காங்கிரசுக்கு மாற்றாக ஏதேனும் தேசிய கட்சி உருவாகும் என்று மக்கள் நம்பி இருந்தார்கள். ஆம் ஆத்மி காட்சியை எதிர்பார்த்தார்கள். அதுவோ இன்று பரிதாப நிலையில் உள்ளது. வேறு ஒரு கட்சி இந்த ஐந்து வருடங்களில் விரைவாக வளர்ந்து வர வாய்ப்பு இல்லை. இப்பொழுது கிடைத்திருக்கும் ஒரு உத்வேகத்தைப் பயன்படுத்தி எல்லா மாநிலங்களிலும் (மாநிலக் கட்சிகளை அண்டியிருக்காமல்) காங்கிரஸ் தன்னைச் செம்மைப்படுத்திக் கொண்டாலொழிய, தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன்பு ஒன்றுகூடாமல் இப்பொழுதிலிருந்தே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டாலொழிய, தற்பொழுது எங்கே கோட்டை விட்டோம் என்று பூதக்கண்ணாடி வைத்து பார்த்து செப்பனிடத் தயாராக இருக்கும்  பிஜேபிக்கு தான் 2029லும் வாய்ப்புகள் அதிகம்.


------


நண்பர்களே, என் மனதில் பட்டதை எழுதி இருக்கிறேன். இது சரிதான் என்று நான் வாதிட விரும்பவில்லை. தயவு செய்து பின்னூட்டம் இடுவதை தவிர்க்கலாமே.. தேவையில்லாமல் யாரும் காயப்படாமல் நாம் நண்பர்களாகவே இருந்து விடுவோமே.. 


🙏🙏🙏

No comments:

Post a Comment