Friday, June 28, 2024

கோயில் கொடிமரம் பற்றிய அரிய தகவல்கள்

 _*!*_

🍁🍁🍁

கொடிமரம் என்பது கோயில் கருவறைக்கு எதிரிலும் பலிபீடத்திற்கு அருகிலும் அமைக்கப்பட்டிருக்கும். கோயில் திருவிழாக் காலங்களில் கொடியேற்றுவதால் இதற்கு, ‘கொடிமரம்’ என்று பெயர் ஏற்பட்டது. கொடிமரம் சம்ஸ்க்ருதத்தில் ‘துவஜஸ்தம்பம்’ என்று அழைக்கப்படுகிறது. கொடிமரம் மூன்று பாகங்களை உடையது. அடிப்பகுதியில் அகலமான மற்றும் சதுரமான பாகம், நடுப்பகுதியில் எண்கோண பாகம் மற்றும் மேல்பகுதியில் நீண்ட ருத்ரபாகம் என்ற மூன்று பகுதிகளால் ஆனது கொடிமரம். சதுர பாகம் பிரம்மனுக்கு உரியது. எண்கோண பாகம் விஷ்ணுவிற்கு உரியது. ருத்ர

பாகம் சிவபெருமானுக்கு உரியது. கொடிமரமானது மூம்மூர்த்திகளை உணர்த்தும் ஒரு அடையாளமாகும்.


மனிதர்களுக்கு முதுகுத்துண்டு எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே கோயில்களுக்கு கொடிமரம் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. நமது முகுதுவடத் தண்டில் 32 எலும்பு வளையங்கள் அமைந்திருக்கும். அதுபோலவே கோயில் கொடிமரமானது 32 வளையங்களுடன் அமைக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. இராஜகோபுரத்திற்கும் கருவறைக்கும் இடையில் கொடிமரம் அமைக்கப்படும். இரண்டு பகுதிகளுக்கும் பொதுவாக பதிமூன்று மீட்டர் இடைவெளி அமையும். கொடிமரத்தின் ஐந்தில் ஒரு பாகத்தை பூமிக்குள் இருக்கும்படி அமைப்பது வழக்கம். கொடிமரமானது இராஜகோபுரத்தை விட உயரம் குறைந்ததாகவும் கருவறை விமானத்திற்கு நிகரான உயரத்துடன் அமைக்கப்படும்.


கொடிமரமானது பொதுவாக சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம், பலா, மா ஆகிய மரங்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. மரத்தினால் ஆன கொடிமரத்தை காப்பதற்காக அதன் மீது பித்தளை மற்றும் செப்புத்தகடுகள் பொருத்தப்படுகிறது.


கொடிமரத்தின் முன்னால் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும் என்பது மரபு. தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு அங்கங்களும் தரையில் படுமாறு விழுந்து வணங்குவது அஷ்டாங்க நமஸ்காரம் என்று அழைக்கப்படுகிறது. தலை, கைகள் மற்றும் முழங்கால்கள் ஆகியவை தரையில் படுமாறு விழுந்து வணங்குவது பஞ்சாங்க நமஸ்காரம் என்று அழைக்கப்படுகிறது.


கோயில் திருவிழா சமயங்களில் முதல் நாளன்று கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும். இதற்கு துவஜாரோஹணம் என்று பெயர். சிவன் கோயில்களில் நந்தியும், பெருமாள் கோயில்களில் கருடனும், அம்மன் கோயில்களில் சிம்மமும், முருகர் ஆலயங்களில் மயிலும், விநாயகர் ஆலயங்களில் மூஷிகமும் கொடிச்சின்னங்களாகப் பொறிக்கப்பட்டிருக்கும். திருவிழாவானது நிறைவுபெறும் நாளன்று கொடியானது இறக்கப்படும். இதற்கு துவஜாரோஹணம் என்று பெயர்.



🍁🍁🍁

No comments:

Post a Comment