Saturday, June 8, 2024

தர்மம் என்றால் என்ன?*

 *காலை நேர சிந்தனை*

( 08.06.2024)

*

நாம் தர்மங்கள் என்றவுடன் தானம் செய்வது என்று எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் இது தவறாகும். 


தர்மம் என்பதற்கு தமிழில் அறம் என்ற சொல் உண்டு. தர்மம் என்ற சொல்லுக்கு எண்ணற்ற பொருள்கள் உள்ளன. 


தர்மம் தான் உலகை நிலைநிறுத்

துகின்றது. ஆங்கிலத்தில் தர்மம் எனும் சொல்லைச் சரியாகக் குறிப்பதற்கு ஒரு சொல் இல்லை.


தர்மம் எனும் சொல்லை மிகச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் “முறையான வாழ்வுமுறை” என்று சொல்லலாம். 


‘ர்தம்’ கோட்பாட்டின் அடிப்படையில் விளங்கும் நடத்தைகள் தர்மம் எனப்படும். அத்தகைய செயற்பாங்குகளே, இந்த பிரபஞ்சமும் அதன் உறுப்பினர்களும் முறையாகச் செயல்பட உறுதுணையாகின்றது. 


‘ர்தம்’ என்றால் இயற்கை செயல்முறை விதியாகும். அதுவே இந்த பிரபஞ்சத்தையும் அதற்குள் இருக்கும் அனைத்தையும் முறையே செயல்பட இயக்குகின்றது. ஆங்கிலத்தில் விளக்கினால்,


தர்மத்திற்கு எதிர்ச்சொல் அதர்மம். பிரபஞ்ச நியதிக்கு எதிராக இருக்கும் செயல்கள் அதர்மம் என்று சொல்லப்படும். 


இந்த பிரபஞ்சத்தினுள் இருக்கும் அனைத்திற்கும் தர்மங்கள் உண்டு. உயிருள்ள உயிரற்ற எல்லாப் பொருள்களுக்கும் தர்மங்கள் உண்டு. 


இந்த பிரபஞ்சத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் தத்தம் தர்மங்களையே முறையே செய்து வருகின்றனர். மனிதர்கள் மட்டும் அதில் சற்று வேறுபட்டு, தங்கள் தர்மங்களை மறந்து அதர்மங்களைச் செய்கின்றனர். 


இது உலகின் மாயைகளின் காரணத்தால் அவர்கள் செய்வதே. இதுவே அவர்களின் அறியாமை என்று சொல்லப்படுகிறது. 


இவ்வாறு தர்மங்களை மறந்து செயல்படுவதே பிரபஞ்சம் முறையே செயல்படாது அங்கும் இங்கும் அழிவுகள் நேர காரணமாக அமைகின்றது. 


மனிதர்களே தங்கள் அழிவுக்கு வித்திட்டு, பின்னர் இறைவன் கோபப்பட்டு அழிக்கிறார் என்று அவர்மீது பழியைப் போடுகிறார்கள். 


மனிதர்கள் ‘ர்தம்’ கோட்பாட்டிற்கு கட்டுப்பட்டு தங்களின் தர்மங்களை செய்தால், இந்த பிரபஞ்சத்தில் எதும் குறைகள் வருமோ?


அவ்வகையில் நாம் மனிதர்களின் தர்மங்களைக் காணலாம்.


*மனிதர்களின் தர்மங்கள் :-*


1) *தனக்கு தானே ஆற்றவேண்டிய தர்மம்*


எப்போதும் தன்னை தானே நேசித்துக் கொள்ளவேண்டும். முறையான உணவுப் பழக்கம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தை சிதைக்கும் உணவுகளைத் தவிர்க்கவேண்டும். 


நன்கு கல்வி கற்கவேண்டும். மெய்ப் பொருளை உணர்தல் வேண்டும். எப்போதும் தெளிவான ஞானத்தோடு இருத்தல் வேண்டும்.


2) *இறைவனுக்குச் ஆற்றவேண்டிய தர்மம்*


இறைவன் மீது பக்தியும் பாசமும் கொண்டிருக்க வேண்டும். மலர், நீர், இலை, பழம் வைத்து இறைவனை வழிபடுதல் சிறப்பு. 


இறைவன் எங்கும், எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறார். எல்லா உயிர்களையும் நேசிப்பதும் இறைவனை நேசிப்பதற்கு ஒப்பாகும்.


3) *பித்ருக்களுக்குச் ஆற்றவேண்டிய தர்மம்*


பித்ருக்கள் என்றால் ‘தென்புலத்தார்’. அதாவது மறைந்த நம் முன்னோர்களே பித்ருக்கள். 


அவர்கள் செய்த நன்மைகள் நாம் என்று மறவாது, அவர்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். 


அவர்கள் நினைவாக அவர்களின் நினைவு நாட்களில் அவர்களுக்கு ஆகம முறைபடி மரியாதை செய்யவேண்டும். அவர்களின் மோக்ஷத்திற்காக எப்போதும் பிரார்த்தனை செய்யவேண்டும்.


4) *பிள்ளைகளுக்குச் ஆற்றவேண்டிய தர்மம்*


நமது பிள்ளைகளை நன்றாக, பாசமும் நேசமும் ஊட்டி வளர்க்க வேண்டும். அவர்கள் தேவையானவற்றை செய்து கொடுத்தல் வேண்டும். 


முறையான கல்வியும் ஒழுக்கமும் கற்றுத்தர வேண்டும். அவர்கள் தங்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் செய்ய கற்றுத்தர வேண்டும். 


அறிஞர்கள் மத்தியில் நாம் பெற்ற செல்வங்கள் முந்தியிருக்க செய்யவேண்டும். அவர்களின் கல்வி யாற்றல் இவ்வுலகிற்கு நன்மைப் பயக்கவேண்டியதாக இருக்கவேண்டும்


5) *சக மனிதர்களுக்குச் செய்யவேண்டிய தர்மம்*


சக மனிதர்களுக்குத் தானம் செய்வதே சிறந்தது. நம்மால் முடிந்தவரை உணவு தானம், துணிகள் தானம், புத்தகங்கள் தானம் செய்யலாம். 


சிலவேளைகளில் சக மனிதர்களுக்கு நல்ல ஞானத்தை அருள்வதும் தானமாக தான் போற்றப் படும். எப்போதும் மனிதர்களை நேசிக்க வேண்டும். உயர்வு தாழ்வு பாராமல் எல்லோருடனும் சகஜமாகப் பழகவேண்டும். 


’மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதற்கு ஒப்ப, நாம் மக்களுக்கு நல்ல தர்மங்களைப் புகட்டுவதை சேவையாக செய்யவேண்டும்.


யாரைப் பார்த்தாலும் கையெடுத்து நெஞ்சத்திற்கு நேராக வைத்து கும்பிட்டு வணக்கம் / நமஸ்காரம் என்று சொல்லவேண்டும். இதன் பொருள் “உங்களுக்குள்ளும் உறையும் இறைவனை நான் மனதார வணங்குகிறேன்” என்பதாகும்.



முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!


நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...


இந்த நாள் இனிய  நாளாகட்டும்.

No comments:

Post a Comment