இயற்கையை ஒட்டிய வாழ்வு - "தான்-சமுதாயம்-இயற்கை"*
மனித இனம் தோன்றிய காலந்தொட்டு அறியாமை உணர்ச்சி வயப்படுதல் என்ற இரண்டு காரணங்களால் குற்றங்கள் இருந்து வருகின்றன.*
*இயற்கை அமைப்பை அறியாமை, அவ்வாறு அறியாத்தனத்தினால் எழுந்த தன்முனைப்பு காரணமாக உணர்ச்சி வயப்படுதல் என்ற இரண்டு காரணங்களால் மனிதன் துன்பத்தைத் தனக்கும் பிறருக்கும் விளைவித்துக் கொண்டே இருக்கிறான்.*
*எனவே உண்மை அறிவு மிக வேண்டும்; பிறந்த நோக்கம் தெரிந்து கொள்ள வேண்டும்; அதன்படி வாழும் நெறியை வகுத்துக் கொண்டு வாழ வேண்டும். அப்போது தான் அமைதியாக இருக்க முடியும்.*
*அமைதி என்ற வார்த்தை மிக ஆழமுடையது. இன்பம், துன்பம் என்ற இருவிதமான உணர்ச்சிகள் தான் பெரும்பாலோருக்குத் தெரியும். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையே உள்ள மனோநிலைதான் "அமைதி"*
*அந்த அமைதியை நாம் எவ்வளவுக்கெவ்வளவு பெருக்கிக் கொள்கிறோமோ அங்கேதான் அறிவு உயர்வதற்கு இடம் உள்ளது. இல்லையென்றால் துன்பத்திலும் இன்பத்திலும் அறிவு செயல்படும்போது, அறிவு அனுபவம் பெறலாமேயன்றி அறிவு உயர்வதற்கு முடியாது.*
*இன்ப துன்ப அனுபவங்களை ஆராய்ந்து, அதிலிருந்து அறிவைப் பெருக்கிக் கொண்டே இவன் வந்த நோக்கத்தை அடைவதற்கு ஏதுவாக இருப்பது "அமைதி' தான்".*.
*அந்த அமைதியை நாம் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றால் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அமைதியைக் குலைக்கக்கூடிய சூழ்நிலைகள் செயல்கள் இவைகளையெல்லாம் கண்டு அதிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும்.*
*அத்தகைய முறைகளையெல்லாம் ஒருங்கே உடையதுதான் யோகம் (Simplified Kundalini Yoga - SKY). யோகம் என்றாலும் தவம் என்றாலும் ஒன்று தான். இயற்கையை ஒட்டிய வாழ்வு. சமுதாயம், தான், இயற்கை என்ற முக்கூட்டு இயக்கங்களையும் உணர்ந்த வாழ்வு.*
*எண்ணத்தில் நிறைந்திடு*
விண்ணிலும் மண்ணிலும் வியாபக மான நீ
எண்ணத்தில் நிறைந்திடு! செய்கையில் சிறந்திடு!
(ஞானக்களஞ்சியம் கவி: 1549)
*அறிவின் அமைதி*
இறைவனது திருநிலையோடு இணைந்த போது
இன்பதுன்ப உணர்வுகளைக் கடந் துயர்ந்து
மறைபொருளாம் அறிவுஅதன் முழுமை பெற்று,
மாஅமைதி பெறும்அது பேரின்ப மாகும்;
நிறையறிவு நிலை ஈதே; இந்தப் பேற்றை
நினைந்தோ மறந்தோ உலகில் மனிதன் அந்தத்
துறைநோக்கி வாழ்க்கைக் கடல் நீந்து கின்றான்;
துணைகுருவே! வாழஅறமும் தவமும் ஆகும்.
(ஞானக்களஞ்சியம் கவி: 660)
*தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.*
No comments:
Post a Comment