Saturday, April 27, 2024

காலை நேர சிந்தனை - ( 27.04.2024)

நம் மனதில் பதிவாகியுள்ள பல அனுபவப் பதிவுகள்  நாம் அறியாதவை. அது ஓர் தொடர்ச்சியான தொகுப்பு. அதன் காலத்தை அறுதியிட்டுக் கூற இயலாது. 


அத்துடன், இப்போதும் நாம் விரும்பும், பார்த்தும், கேட்டும், சுவைத்தும், நுகர்ந்தும் அனுபவித்துக் கொண்டிருக்கும் பலவிதமான  அனுபவங்களிலிருந்தும், மனதில் நல்லதாகவோ, தீயதாகவோ தகவல்கள் உருவாகிப் பதிவாகின்றன. 


ஆக எண்ணங்கள் தோன்றுவதற்கு நம் மனதில் உள்ள அனுபவப் பதிவுத் தளங்களில், அன்றாடம் நாம் சேர்க்கும் தகவல்களும், ஆதியிலிருந்தே பதிவாகி, நாம்  அறியாது, நம்முள் உறைந்திருக்கும் பல கோடிக்கணக்கான தகவல்களும் காரணமாக உள்ளது. 


ஒரு எண்ணம் நம் மனதில் உருவாகும் போது அதனுடன் கற்பனையில் நாம் உறவாடுகிறோம்.  நாம் அந்த எண்ணத்துடன் உறவாடவில்லை எனில் அந்த எண்ணம் தானாகவே மறைந்து விடும். 


எந்த எண்ணத்தோடு கற்பனையில் உறவாடுகிறோமோ, அது காட்சிகளாக விரிந்து, வார்த்தைகளாக, செயல்களாகப் பரிணமிக்கிறது. 


அப்போது அதனால் உண்டாகும் நல்ல, தீய பாதிப்புகளை நாம் அனுபவிக்கிறோம். அதுவும் ஒரு மனப் பதிவாகிறது. 


எத்தனை துயரம் தருவதாக இருந்தாலும், சில வலிமையான எண்ணங்களோடு கற்பனையில் உறவாடுவதை நம்மால் எளிதாகக் கட்டுப்படுத்த முடியாது. அது அத்தனை வீரியமானது. 


மனதில் பதிந்து இருக்கும் அனுபவப் பதிவுகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான எண்ணங்கள் தோன்றுகின்றன. ஆக மனப் பதிவுகளில் பதிந்து இருக்கும், நாம் உணராத, அறியாத, எண்ணிக்கைக்கு அடங்காத பல கோடி தீய பதிவுகள் நீக்கப்பட வேண்டும். 


அனுதினம் பல  நல்ல பதிவுகள், மனதில் பதிவு செய்யப்படவேண்டும். அதனால் நல்ல செய்திகள் கேட்பது, நற் செயல்களில் ஈடுபடுவது, நல்ல நூல்களை வாசிப்பது, என மனதில் ஒருபுறம் பயனுள்ள அனுபவப் பதிவுகளை உருவாக்கிக் கொண்டே இருத்தல் வேண்டும். 


மனம் ஒரு நிலத்தைப் போன்றது. நிலத்தின் கரடு முரடான கற்களை அகற்றி, சரியாகக் கொத்தி, பண்படுத்தி, நல்ல விதைகளை ஊன்றி, நீர் பாய்ச்சி, உரமிட்டு, வேலியடைத்துக் காப்பாற்றினால், 


அந்த விதை வளர்ந்து, பெருகி, நற்பலன்களைத் தரும். இது ஒரு பெரும் பொறுமையுடன் நீண்ட காத்திருப்போடு செய்ய வேண்டிய தவம். 


அப்போது மனம் பக்குவப்படும். அதிலிருந்து தோன்றும் எண்ணங்களும் பயனுள்ளவையாக இருக்கும். 


நம் மனதில் தோன்றும் எண்ணங்களை விழிப்புடன் கண்காணிக்கும் பழக்கம் இயல்பாகிவிடும். 


தேவையற்ற எண்ணங்களில் கற்பனையில் உறவாடுவதிலிருந்து தற்காத்துக் கொள்ள, நான் வேறு – எனக்குள் தோன்றும் இந்த தேவையற்ற சிந்தனைகள் வேறு, என்ற தெளிவான புரிதலும் ஏற்படும். 


இந்த தெளிவு மனதில் எந்தளவு உறுதியாக உள்ளதோ, அந்தளவிற்கு மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணமும், சிந்தனையையும் உங்களால் இலகுவாக உதறித் தள்ள முடியும். அந்த தீய எண்ண ஓட்டங்கள் உங்களைப் பாதிக்க முடியாது.


மனதில் தோன்றும் பலவகையான எண்ண ஓட்டங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் அவ்விதமாகத் தோன்றும் எண்ணங்களுக்கு எவ்விதம் எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பது நமது அர்ப்பணிப்பில் தான் உள்ளது. 


மனதை தன் வசப்படுத்துவதை விட மனிதருக்கு வேறு எது இந்த உலகில் மிகப் பெரிய சவாலாக இருக்கக் கூடும்?


┈❀🌿🀼󟽀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈ 


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!


நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...


இந்த நாள் இனிய நாளாகட்டும்




🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

No comments:

Post a Comment