Showing posts with label மறவாத நினைவுகள். Show all posts
Showing posts with label மறவாத நினைவுகள். Show all posts

Thursday, April 25, 2024

சயாம் மரண இரயில்பாதை


சயாம் மரண இரயில்வே நிலவரை படம்

பர்மா இரயில்பாதை (Burma Railway), மரண இரயில்பாதை (Death Railway), என அழைக்கப்படும் பர்மா-சயாம் இரயில்பாதை (Burma–Siam Railway), அல்லது தாய்லாந்துபர்மா இரயில்பாதை என்பது இரண்டாம் உலகப்போரின் போது கட்டப்பட்ட 415 கி.மீ (258 மைல்கள்) தொலைவு கொண்ட ஒரு புகைவண்டித் தடம் ஆகும்.

இந்தத் தடமானது தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் முயற்சியில் ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்டது. இது மனித வரலாற்றில் மிகவும் துயரம் தோய்ந்த ஒரு ரயில்பாதை முயற்சி. அந்த முயற்சி பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் முடிந்து இருக்கிறது.

சயாம் இரயில்வே கட்டுமானத்திற்கு கொண்டு வரப்பட்டவர்கள் அனைவரும் கட்டாய உழைப்பு வேலைக்கு உட்படுத்தப்பட்டனர். ஏறக்குறைய 180,000 ஆசியத் தொழிலாளர்களும், 60,000 போர்க்கைதிகளும் வலுக்கட்டாய வேலைகளைச் செய்தனர்.

போதிய உணவு இல்லாமை, கொடிய மிருகங்களின் தாக்குதல்கள், ஜப்பானியரின் மிகக் கொடூரமான தண்டனைகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் 90,000 ஆசியத் தொழிலாளர்களும் 16,000 போர்க் கைதிகளும் இறந்து போயினர்.

மலேசிய எழுத்தாளர் சண்முகம் அவர்கள் சயாம் மரண ரயில் பாதை அமைத்த ஜப்பானியர்களால் தமிழர்கள் அடைந்த கொடுமைகளை நாவல் வடிவில் ஆவணப்படுத்தியுள்ளார்.




நரகத்தீ கணவாய். 2004-இல் எடுக்கப்பட்ட படம்.

தாய்லாந்து நாட்டிற்கும் பர்மா நாட்டிற்கும் இடையே ஒரு ரயில் பாதை அமைப்பதற்கு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்தது.ஆனால், மலைக் காடுகளில் பல பெரிய பெரிய ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடியதால் அந்தத் திட்டம் சாத்தியம் இல்லாமல் போனது.

1942 இல், ஜப்பானியப் படைகள் தாய்லாந்து வழியாக நுழைந்து, ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த பர்மாவைக் கைப்பற்றின. ஜப்பானியர் தங்களின் படைகளைப் பராமரிக்க, மலாக்கா நீரிணை மற்றும் அந்தமான் கடல் வழியாக வரவேண்டி இருந்தது. மேலும், நேச நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களின் மூலம் தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருந்தன.


அதனால் ஒரு மாற்றுவழியை ஜப்பானியர்கள் தேடினர். அதற்கு இரயில் பாதை அமைப்பது மட்டுமே ஒரு தீர்க்கமான வழியாக அமைந்தது. ஜப்பானியப் படைகள் ஜூன் 1942 இல் ரயில் பாதை திட்டத்தைத் தொடங்கின.

தாய்லாந்தில் உள்ள பான் போங் எனும் இடத்தில் இருந்து பர்மாவில் உள்ள தான்பியுசாயாட்  வரை ரயில் பாதை அமைக்கும் மாபெரும் திட்டம் இரு பிரிவுகளாக 1942 ஜூன் மாதம் 22ஆம் தேதி தொடங்கியது.
ஜப்பானுக்குப் போன போர்க் கைதிகள்.

ரயில் பாதை அமைப்பதற்கான தளவாடப் பொருட்கள் மலாயாவில் இருந்தும் இந்தோனேசியாவில் இருந்தும் கொண்டு வரப்பட்டன. மலாயாவைப் பொருத்த வரையில் தளவாடப் பொருட்கள் மலாக்கா, சிங்கப்பூர், கோத்தா பாரு, கோலா லிப்பிஸ் பகுதிகளில் போடப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்கள் எடுக்கப்பட்டு புதிய ரயில் பாதைக்கு பயன்படுத்தப்பட்டன.

1943 அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்தன. அங்கு வேலை செய்த போர்க்கைதிகளில் பெரும்பாலோர் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டனர்.ஒரு சிலர் மட்டுமே ரயில் பாதை பராமரிப்பு பணிகளுக்கு தங்க வைக்கப்பட்டனர்.

நரகத்தீ கணவாய்

ரயில் பாதை கட்டுமானத்தில் (Hellfire Pass) எல்பையர் கணவாய் எனும் நரகத்தீ கணவாய் பகுதிதான் மிகவும் கடினமான பகுதியாகக் கருதப்படுகிறது. பெரும் பாறைகளை வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நரகத்தீ கணவாய் பகுதி காடுகளின் மிக மிக உள்பகுதியில் இருந்தது. அத்துடன் கட்டுமான உபகரணங்களின் பற்றாக்குறை காரணத்தினாலும் வேலைகள் தாமதம் ஆயின.

ஆஸ்திரேலியர்கள், பிரித்தானியர்கள், டச்சுக்காரர்கள், போர்க்கைதிகள், சீனர்கள், மலாய்க்காரர்கள், தமிழர்கள் போன்றோர் கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். வேலை தொடங்கிய ஆறே ஆறு வாரங்களில் 68 பணியாட்கள் ஜப்பானிய, கொரியக் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். அதில் சிலர் காலரா, வயிற்றுப்போக்கு, பட்டினி, உணவில்லாமையால் இறந்து போயினர்.

கட்டுமானத்தின் போது தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமையான நிலைமைகள்; மற்றும் அதிகமான உயிர் இழப்புகள்; அதனால் அந்தக் கணவாய்க்கு நரகத்தீ கணவாய் என பெயர் வந்தது. தவிர, உடல் மெலிந்து நலிந்து போன போர்க் கைதிகளும்; ஆசியத் தொழிலாளர்களும்; கைவிளக்குகளைப் பயன்படுத்தி உழைக்கும் காட்சிகள், நரகத்தின் காட்சிகள் போல அமைந்து இருந்ததாலும் ’எல்பயர் பாஸ்’ என்று பெயர் வைத்து அழைக்கப்பட்டது.

குவாய் ஆற்றுப்பாலம்

சயாம் மரண ரயில்பாதையில் மிகவும் புகழ்பெற்றது 277ஆவது பாலம் என்று அழைக்கப்படும் குவாய் ஆற்றுப்பாலம் ஆகும். இந்திய தேசிய இராணுவம் இம்பாலில் போர் தொடுத்த சமயத்தில் ரயில் பாதை திட்டமிட்டபடி போடப்பட்டு விட்டது.

1943 பிப்ரவரி மாதம் முதல் மரப்பாலம் கட்டப்பட்டது.அதே பாலம் 1943 ஜூன் மாதம் இரும்புப் பாலமாக மாற்றம் செய்யப்பட்டது. அமெரிக்க, பிரித்தானிய விமானப்படையினர் இந்தப் பாலத்தின் மீது இரு முறை தாக்குதல்கள் மேற்கொண்டனர்.

நேதாஜி பயன்படுத்திய ரயில் பாதை

ஜப்பானியர் ரயில் பாதையைப் பயன்படுத்தினர். ரயில் வண்டிகள் ஓடின. பர்மா எல்லையில் இருந்து இந்தியாவைப் பார்த்துவிட்டு சிங்கப்பூருக்குத் திரும்பிய போது நேதாஜி அந்த ரயில் பாதையைப் பயன்படுத்தினார். பிரித்தானியர் அந்த ரயில் இணைப்பைக் குறி வைத்தனர். குண்டுகள் வீசப்பட்டன.

சேதமுற்ற பகுதிகளைத் தொழிலாளர்கள் சீர்படுத்தினர். தாக்குதல் நடத்திய ஒரு சில வாரங்களில் பாலம் புனரமைப்பு செய்யப்பட்டு செயல்பாட்டிற்கு தரம் பெற்றது. 1943 ஜூன் மாதம் 27-இல் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் குவாய் ஆற்றுப்பாலம் முற்றாகச் சேதம் அடைந்து தகர்ந்த்து. மீண்டும் சீர்படுத்தி பயன்படுத்த முடியாத அளவுக்கு அது சேதமுற்றது.

தண்டவாளங்கள் விற்பனை

ஜப்பானியர்கள் சரண் அடைந்ததும் தாய்லாந்து-பர்மா எல்லையில் போடப்பட்ட 3.9 கி.மீ நீளத் தண்டவாளத்தை பிரித்தானிய இராணுவம் அப்புறப்படுத்தியது. அந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட தண்டவாளம் பொதுப் பயன்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் உகந்ததாக அமையவில்லை என்று பிரித்தானிய இராணுவம் முடிவு செய்தது. பின்னர் அந்தத் தண்டவாளங்கள் தாய்லாந்து ரயில்வே நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.


குவாய் ஆற்றுப்பாலம்.

சயாம் மரண ரயில்பாதையின் கட்டுமானத் துறையில் வேலை செய்தவர்கள் அடிமைகளை விட படுமோசமான, கொடூரமான முறைகளில் நடத்தப்பட்டனர். அவர்களின் குடியிருப்பு வசதிகளும் மிக மிக ஆரோக்கியமற்றவையாக இருந்தன. அவர்கள் பரிதாபத்திற்குரிய மனிதப் பிண்டங்களாக வாழ்ந்தனர்.

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி சயாம் மரண ரயில்பாதை கட்டுமானத்தில் 330,000 பேர் பணிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 106,000 பேர் இறந்து போயினர்.

கிரா குறுநிலக் கால்வாய்த் திட்டம்

சயாம் மரண ரயில்பாதை கட்டி முடிக்கப்பட்ட பின்னர், ஆசிய வேலைக்காரர்கள், போர்க்கைதிகள் போன்றவர்கள் தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள கிரா குறுநிலத்தில் கால்வாய் அமைக்க அனுப்பப்பட்டனர். பணியாட்களில் பலர் சுமத்திராவின் பலேம்பாங் ரயில்பாதையை அமைக்கவும் அனுப்பப்பட்டனர். ஆனால், கிரா குறுநிலக் கால்வாய்த் திட்டம் தோல்வியில் முடிந்தது.

அப்படியே கிரா குறுநிலக் கால்வாய் வெட்டப்பட்டிருந்தால், மலாயா தீபகற்பமும் ஆசிய பெருநிலமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும். புவியியல், பொருளியல் ரீதியில் மலாயா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளின் தலையெழுத்துகளும் மாறிப் போயிருக்கும்.

போர்க்குற்றங்கள்

சயாம் மரண ரயில்பாதை கட்டுமானத்தை ஒரு போர்க்குற்றமாக உலக நாடுகள் அறிவித்தன. ஜப்பான் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்தக் கட்டுமானத்தின் தலைமைக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்த ஹிரோஷி ஆபே (Hiroshi Abe) என்பவர் மீது தலையாய குற்றம் சுமத்தப்பட்டது. 3000 போர்க்கைதிகள் இறப்பதற்கு அவர் தான் மூலகாரணம் என்று குற்றப்பதிவுகள் எழுதப்பட்டன. போர்க்குற்றங்கள் புரிந்ததற்காக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

கல்லறைகளும் நினைவுச் சின்னங்களும்

இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவிற்கு வந்ததும் போர்க்கைதிகளின் முகாம்களில் இருந்த கல்லறைகள் அல்லது இடுகாடுகளில் புதைக்கப்பட்டிருந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 415 கி.மீ நீளம் கொண்ட ரயில் பாதைத் தொடரில் பல இடுகாடுகள் இருந்தன. அந்த இடுகாடுகள் மூன்று நிலையான இடுகாடுகளாக சீர்செய்யப்பட்டு போர்க்கைதிகளின் உடல்கள் மறுஅடக்கம் செய்யப்பட்டன. அவற்றுள் 667 அமெரிக்க வீரர்களின் உடல்கள் அமெரிக்காவிற்கே எடுத்துச் செல்லப்பட்டன.

காஞ்சனாபுரி பிரதான கல்லறை

காஞ்சனாபுரியில் பிரதான கல்லறை (Kanchanaburi War Cemetery) இருக்கிறது. இங்கு 6,982 போர்க்கைதிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெரும்பான்மையோர் பிரித்தானிய, ஆஸ்திரேலிய, டச்சு, கனடிய போர்க்கைதிகள் ஆவர்.பிரித்தானியப் படையணியில் பணிபுரிந்த 11 இந்தியப் போர்வீரர்களும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சூங் காய் எனும் இடத்தில் மற்றொரு கல்லறை (Chungkai War Cemetery) இருக்கிறது. இதில் 1,750 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். மியான்மாரின் தான்பியுசாயாட் (Thanbyuzayat) எனும் நகரில் 3,617 போர்க்கைதிகளின் கல்லறை இருக்கிறது. 

Friday, April 19, 2024

என்னா அடி!!!

அந்த காலத்தில் நாங்க  எதுக்கெல்லாம் அடி வாங்கி இருக்கோம்னு இப்போது பலருக்கு  தெரிய வாய்ப்பில்லை...


1. அடி வாங்கி ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா மறுபடியும் அடி..


2. அடி வாங்கிட்டு அமுக்கமா அழாமல் இருந்தால் மறுபடியும் அடி..


3. அடி வாங்காமலேயே அழுதாலும் விழும் அடி..


4. பெரியவங்க உட்கார்ந்திருக்கும்  இடத்தில் நின்னுட்டு இருந்தா அடி..


5.பெரியவங்க நின்னுட்டு இருக்கும் போது உட்கார்ந்திட்டே இருந்தா அடி.


6. பெரியவங்க உட்கார்ந்து இருக்கும் போது குறுக்காலும் நெடுக்காலும் நடந்தால் அடி.


 7. விருந்தாளிக்கு சமைத்ததை முன்னதாக சாப்பிட்டால் அடி..


8. தட்டில்  சோத்தை வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சா அடி.


 9. சூரியன் மறைஞ்ச பிறகு லேட்டா வீட்டுக்கு வந்தா, எங்க சுத்திட்டு வர்ரேன்னு ஒரு மொத்து.


10. அடுத்தவன் வீட்ல சாப்பிட்டு வந்தா அடி..


11. எப்போ பார்த்தாலும் மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருந்தா அடி.


 12. ரொம்பவும் துள்ளிக் குதிச்சாலும் அடி. 


13. மூத்தவங்களோட சண்டை போட்டு தோத்தா அடி..


 14. சின்ன பசங்களோட சண்டை போட்டு ஜெயிச்சிட்டேன்னு கூவினா அடி.


 15. ரொம்பவும் மெதுவா சாப்பிட்டா அடி.

 

16. அவசர அவசரமா அள்ளி போட்டு சாப்பிட்டாலும் அடி. 


17. காணாது கண்டது போல கண்டமேனிக்கு சாப்பிட்டால் அடி.


 18. பூரணமா சாப்பிடாமல் இருந்தால் அடி


19. சாப்பிட்ட பிறகும் தட்டை சுரண்டிட்டு இருந்தால் அடி,

 

20. பேசிட்டே சாப்பிட்டா அடி.


21. பெரியவங்க எழுந்த பிறகும் தூங்கிட்டு இருந்தா அடி. 


22. விருந்தாளிங்க சாப்பிடுவதை பார்த்தால் அடி. 


23. தடுமாறி நடந்து விழுந்தா உதை.


24. பெரியவங்களை முறைத்துப்  பார்த்தால் அடி.  


25. பெரியவங்க பேசும்போது முழிச்சா அடி.


26. அவங்க பேசும்போது முழிக்காம வெறிச்சு பார்த்தா அடி.


27. பெரியவங்களை ஓரக் கண்ணால பார்த்தால் அடி..


28. நண்பர்கள் தெருவில் ஃபுட்பால் ஆடும்போது நாம அவங்களோட சேர்ந்தால் அடி.


 29. நண்பர்கள் விளையாடும் போது நாம உம்முன்னு வீட்ல உட்கார்ந்திருந்தாலும் அடி.


 30. சாப்பிட்டபின் தட்டை அலம்பலேன்னா அடி.


 31. சாப்பிட்ட தட்டை சரியா கழுவலைன்னா அடி.


 32. சாப்பிட்ட தட்டை கீழே போட்டு நசுங்கல் ஏற்பட்டால் அடி.


 33. கழுவின தட்டை ஒழுங்கா வைக்கலேன்னா அடி..


34. நகத்தை கடிச்சா அடி


 34. குளிக்காவிட்டால் அடி. 


35. காக்கா குளியலா குளிச்சு உடனே வந்தா முதுகுல பொளேர். 


36. உள்ள போயி ஒரு மாமாங்கம் ஆச்சுன்னா வெளில வந்தவுடன் அடி.


 37. ஸ்கூல்ல மிஸ்பிஹேவ் பண்ணினேன்னு தெரிஞ்சா வீட்ல அடி.


 38. தெருவில் போகிற கார் உரசிட்டு போச்சுன்னா அடி. 


39. கார் அடிச்சு குத்துயிரும் குலையுயிருமா இருந்தாலும் அஜாக்கிரதைக்கு நாலு அடி.


 40. கேட்ட கேள்விக்கு பதில் வரலைன்னா அடி.


41. பெரியவங்க பேசும்போது பதில் சொன்னா அடி.


 42 லேட்டா கோவிலுக்கு போனா அடி.


 43. ஃப்ரெண்ட்ஸ்ட்டேந்து ஓஸியா ஷூ வாங்கி போட்டுகிட்டா அடி. 


44. அம்மா செலெக்ட் பண்ணின சட்டை பிடிக்கலைன்னா அடி 


45. கடைசில அவங்க சூஸ் பண்னின ஷர்ட்டை செலெக்ட் பண்ணினா, இதுக்கு இம்புட்டு நேரமான்னு அடி.


46. வாத்தி சொல்லிகுடுத்த ரெண்டுங்கெட்டான் பதிலை பரிஷைல எழுதினா அதே வாத்தி ”சொந்தமா என்னடா gas விட்ர”ன்னு சொல்லி  அடிக்கும்.


 47. டீச்சர் தப்பு தப்பா நோட்ஸ் கொடுத்தாலும் நாம கரெக்ட் பதில் எழுதினா வாத்திட்ட ”நீ பெரிய பிஸ்தாவா”ன்னு சொல்லி வாங்கும்  அடி.. 


48. வீட்ல பெற்றோர்கள் இடையில் அல்லது பெருசுங்க சண்டை மூட்ல இருந்தா நாம வாங்கும் அடி.


49. சொந்த காரங்கவீட்ல, நண்பர் வீட்ல பக்கிங்க மாதிரி சாப்பிட்டால், வீட்ல வந்து வாங்கும் அடி.


50 மூன்று தோசை/பூரியை தாண்டி இன்னொண்ணுன்னா வாங்கும் அடி.


51 எல்லாத்துக்கும் நெய்யா கேக்குதுன்னு முதுகுல பளார்.


52. சாப்பிட்ட பிறகு தட்டை நக்கினால் அடி.


53) காரணமும் தாண்டி காரணமே இல்லாமல் வாங்கும் அடி. 


இன்னிக்கு பசங்களுக்கு இதெல்லாம் அபத்தமா தெரியலாம். ஆனால் கிட்டதட்ட கூட்டு குடும்பத்தில் பெரியோர்கள் - பங்காளிகளுடன் வாழ்ந்த அந்நாட்களில் இந்த அடிகள் வாங்கியது தான் எங்களுக்கு  வாழ்வில் முன்னேற உதவின.


வாழ்க  பெற்றோர்கள்....

Tuesday, April 16, 2024

தமிழகத்தில் தனுஷ்கோடி புயல் ஓர் பேரழிவு சின்னம் !!!

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது.

தனுஷ்கோடியில் அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம்புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே. தனுஷ்கோடியைப் புதுப்பிக்க அரசுகள் ஏனோ மறந்து போய் விட்டன. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம். அவர்களும் கூட தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது. தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது. ரயில் தண்டவாளம் மட்டும் பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது.

மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில், பேய் மழையுடன் புயல் வீசியது. ராமேசுவரத்தில், புயலின் வேகம் கடுமையாக இருந்தது . புயல் காரணமாக, கடலில் அலை பயங்கரமாக இருந்தது. தென்னை மர உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்து கரையில் மோதின திடீர் என்று கடல் பொங்கி, ராமேசுவரம் தீவில் உள்ள தனுஷ்கோடிக்குள் புகுந்தது. தனுஷ்கோடி அடியோடு அழிந்து,
கடலில் மூழ்கி விட்டதால்,

தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் என்ற இடத்தையும் , ராமேசுவரம் தீவையும் இணைப்பது "பாம்பன் பாலம்." இது கடலில் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது, இந்தப்பாலம் இரண்டாகப் பிரிந்து, கப்பலுக்கு வழிவிடும். இந்த பாலம், பலத்த சேதம் அடைந்தது. புயல் வீசுவதற்கு முன், ராமேசுவரத்தில் இருந்து, தனுஷ்கோடிக்கு ஒரு ரெயில் புறப்பட்டுச் சென்றது . தனுஷ்கோடியை நெருங்கிக் கொண்டிருந்தபோது , பலத்த மழையுடன் சூறாவளி வீசியது. உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. எனினும் சற்று நேரத்தில் கடல் பொங்கி, தனுஷ்கோடியை விழுங்கிய போது, ரெயிலும் கடலில் மூழ்கியது. ரெயிலில் 115 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அவ்வளவு பேரும் கடலில் மூழ்கி பலியாகி விட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவர்கள், ராமேசுவரத்துக்கு உல்லாசப் பயணம் வந்திருந்தனர் . கடலில் மூழ்கிய
ரெயிலில் அவர்கள் பயணம் செய்தனர் என்ற தகவல் பின்னர் தெரியவந்தது . அந்த 40 பேரும் கடலில் மூழ்கி இறந்து விட்டார்கள். தனுஷ்கோடியில் இருந்த பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பெரும்பாலான வீடுகளும், கட்டிடங்களும் கடலுக்குள் மூழ்கிவிட்டன . தந்தி, டெலிபோன் கம்பங்கள் சாய்ந்து விழுந்து விட்டதால், ராமேசுவரம் தீவுக்கும், வெளி உலகத்துக்கும் இடையே தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன . இதனால் சேதத்தின் முழு விவரங்களும் உடனடியாக சென்னைக்குத் தெரியவில்லை .

கடலுக்குள் மூழ்கி பலியாகாமல் உயிர் தப்பியவர்கள் , மணல் திட்டுகளில் தவித்தனர். அவர்களைக் காப்பாற்ற கப்பல்கள், மோட்டார் படகுகள், "ஹெலிகாப்டர்" விமானங்கள் அனுப்பப்பட்டன. ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிக்கு முன்பு ரெயில் மூலம்தான் குடிநீர் அனுப்பப்பட்டு வந்தது. புயல்_மழை வீசியதைத் தொடர்ந்து அங்கு குடிநீரே இல்லாமல் போய்விட்டது . உயிர் தப்பியவர்கள், குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்தனர். அவர்களுக்காக ஹெலிகாப்டர் விமானத்தில் தண்ணீர் அனுப்பப்பட்டது . விமானத்தில் இருந்து சாப்பாடு பொட்டலங்களும் போடப்பட்டன . உயிர் பிழைத்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மதுரையில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்தும் ராமேசுவரத்துக்கும் டாக்டர்கள் அனுப்பப்பட்டனர் .

அதன் தொடர்பான கட்டுரையை கீழே படிக்கவும்.

தனுஷ்கோடி - டிசம்பர் 23,1964 தமிழக மக்களால் மறக்க முடியாத தினங்கள் பல. அதில் ஒன்று தனுஷ்கோடியை கடல் தின்ற தினம்.

தமிழக கடலோரப் பகுதிகளை 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப் பேரலை புரட்டிப் போட்டு விட்டுப் போனதற்கு முன்பே, தனுஷ்கோடியை அந்த சுனாமி விகாரமாக்கி விட்டுச் சென்ற தினம்தான் டிசம்பர் 23,1964. அழகிய தனுஷ்கோடியை சின்னாபின்னமாக்கி, அலங்கோலப்படுத்தி விட்டுப் போனது.

மன்னார்வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. அதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று பொதுவான வார்த்தையால் அழைத்தனர்.

அன்றெல்லாம் சுனாமி என்றால் என்ன என்றே அக்காலத்து மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நமது காலத்தில் நம்மைத் தாக்கிய சுனாமியைப் போன்ற ஆழிப் பேரலைதான் அன்றைய தனுஷ்கோடியையும் அலைக்கழித்துள்ளது.

இந்த அலை 20 அடி உயரத்துக்கு ராட்சத அளவில் எழும்பி வந்தது. ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் தனுஷ்கோடி நகரம் இருந்தது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட அழகிய மீனவ நகரம்.

அப்போது அதிகாலை 3 மணி இருக்கும். மீனவ மக்களும், பிறரும் நிம்மதியாக கண்ணயர்ந்திருந்த நேரம் அது. ஆனால் கடல் மட்டும் காட்டுத்தனமாக விழித்துக் கொண்டிருந்தது.

பொங்கி வந்த கடல் வெள்ளமும், திரண்டு வந்த ஆழிப் பேரலைகளும், தனுஷ்கோடிக்குள் புகுந்து, புரட்டிப் போட்டது. நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது.நகரிலிருந்த முக்கால்வாசிப் பேர் முகவரி தெரியாமல் கடல் அன்னையின் கோரப் பிடியில் சிக்கி உயிரிழந்தனர்.

எனவே இலங்கை செல்ல ஏராளமான பயணிகள் அதில் இருந்தனர். தனுஷ்கோடியைத் தாக்கிய புயலுக்கும், ஆழிப் பேரலைக்கும் இந்த ரயிலும் தப்பவில்லை. அப்படியே கடலுக்குள் இழுத்துப் போட்டு விட்டது போட் மெயிலை, கடலில் எழுந்து வந்த ஆழிப் பேரலை.
அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் 2000 பேர் உயிரிழந்தனர்.

அழகிய தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே.

தனுஷ்கோடியைப் புதுப்பிக்க நமது அரசுகள் ஏனோ மறந்து போய் விட்டன. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம். அவர்களும் கூட தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது.

தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது. ரயில் தண்டவாளம் மட்டும் பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது - கடந்த காலத்தில் தாங்கள் 'தடம் புரண்ட' கதையை சொல்லியபடி.

ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், ஒரு எட்டு தனுஷ்கோடிக்கும் சென்று வருவது வழக்கம். இப்படி வந்து செல்பவர்களால்தான் இன்னும் தனுஷ்கோடி நமது மன 'டைரி'யிலிருந்து அழியாத காவியமாக உள்ளது.

Sunday, December 10, 2023

தனுஷ்கோடி- செழிப்புமிக்க நகரம் காணாமல் போன துயரம்

நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்.. ?? 

புயலின் உக்கிர தாண்டவத்நில் ஒரு செழிப்புமிக்க நகரமே காணாமல் போன விஷயம்.. 

அதுவும் நம் தமிழ்நாட்டில்  !!



ஆம், பழைய நினைவொன்றை, இன்றையத் தலைமுறையினர் நினைத்துப் பார்க்க வேண்டிய நேரமிது. 


சுமார், 55 ஆண்டுகளுக்கு முன், தனுஷ்கோடி என்ற ஒரு வணிக நகரம் என்று ஒன்று இருந்ததும் அது மறைந்தது எப்படி என்றும் நெஞ்சைப் பிளக்கும் கதையை கேளுங்கள்.. !! 


இன்றைய தலைமுறையினர் சிலருக்கு மட்டுமே தனுஷ்கோடி என்ற ஊர் தமிழகத்தில் இருந்திருக்கிறது,  என்று தெரியும்.


 தனுஷ்கோடி என்ற தொலைந்து போன ஊரின் பின்னே இருக்கும் அந்த கடுந் துயரத்தைப் பற்றி, இன்று யாருக்கும் தெரியாது.


ராமேசுவரத்தில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது தனுஷ்கோடி.



தனுஷ்கோடியில், அப்போது கோவில்கள்,  துறைமுகம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் ,தபால் நிலையம், ரெயில்வே குடியிருப்புகள், ரெயில் நிலையம், எனச் சகலமும்   இருந்தன. புராணம் காலந்தொட்டே, மிகவும் புகழ் பெற்ற வணிக  நகரம் அது. இராம, ஹனுமான் பாதங்கள் பட்டப் புண்ணியத்தலம், தனுஷ்கோடி. 


மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் ரெயில்கள், ராமேசுவரம் வருவது கிடையாது. 


நேராக தனுஷ்கோடி சென்று விடும். 

ராமேசுவரத்திற்கு வர விரும்புபவர்கள் பாம்பனிலிருந்து ‘ஷன்டிங்க்’ என்று சொல்லக்கூடிய தனி ரெயிலில் ராமேசுவரம் வருவர்.


டிசம்பர் 22 1964... வரை கலகலப்பாக இருந்த ஊர் யாருமே எதிர்பார்க்காத தினமாக 23.12.1964-ந் தேதி அமைந்தது.


 அன்று இரவில் சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசிய கடும் புயலாலும், பலத்த மழையாலும், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து சுமார் 20 அடி உயரத்திற்கு எழும்பிய ராட்சத அலைகள் தனுஷ்கோடியை மூழ்கடித்து சின்னாபின்னமாக்கியது.


தனுஷ்கோடியின் அன்றைய தினமானதுத்,  தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. 


கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. 


வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. 


இன்று, நம்மிடமுள்ள மிக நவீன உபகரணங்கள் எதுவுமே, அன்று நம் மூத்தோரிடம் இல்லை.


அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது.


புயல் எச்சரிக்கை என்பது தெரியும், ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. 


புயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்துக் கொண்டாக வேண்டிய காலக்கட்டம் அது. அது வரை, நடக்கவுள்ளக் கொடூரத்தை அறியாது வாழ்ந்தனர் நம் முன்னோர். 


ட்ரைன் நம்பர் 653, 


பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது. 


ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது. 


இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார்.


தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அணைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை. 


டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 


'பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும்' என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை. 


எங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே, ரயில் வருவதை தெரிவிக்க.... தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார். 


அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள்..........


ஊழிக்காலமெனப் பாய்ந்த, ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த ராட்சதப்  பேரலையும்,  இரயிலை வாரி அணைத்துக் கொண்டு, கடலுக்கடியில் மூழ்கடித்துக் கோரத்தாண்டவமாடியது.  


ரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆயினர். 


ரயில் நிலையத்திற்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது. 


ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசன்ஜெர், ரயில் நிலையத்தை அடைந்திருக்கும். 


அத்தனை உயிர்களும் மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும். 


'விதி சற்றே வலியது'. அதனால் தானோ என்னவோ, அவர்கள் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டது. 


தனுஷ்கோடிக்கு முன்பே, புயல் தலைமன்னாரை நெருங்கி இருந்தது. தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களை புயலுக்கு காவு கொடுத்திருந்தது. 


தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள், தனுஷ்கோடி கரையில் உடலாக ஒதுங்கத் தொடங்கியிருந்தது.


தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின. 


அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின, 


''இன்னது நடக்கிறது...'' என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. 


கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன. 


நடுநிசியில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும்.... ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. 


உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர். 


இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. 


இயற்கை கொடுத்த இந்த 'அபாய அறிவிப்பை' உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல் படத்தொடங்கினார்கள். 


அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள். 


இதில், 'நீச்சல் காளி' என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார். 


அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. 


அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும். 


இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது.....


ஒரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது, 



மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது . 


ஆம். பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். 


மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இருக மூடிக் கொண்டது. 


ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. 



தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது. 


தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது. 


எதிர்பாரா சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்ப்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியது. 


இவை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. 

தனுஷ்கோடி சிதைவுகள்

படக்குறிப்பு,
அஞ்சல் நிலையம்.

அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. 


அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது. படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே.


மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். 

புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, 


தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடர்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது. 


குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி. 



விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. 


அன்றைய முதல்வர் மாண்புமிகு.  அமரர். பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார். 


அன்றைய, அவர் சார்ந்தக் காங்கிரஸ்  அரசின் உதவியை நாடினார். 


நிலைமையைப் புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. 


தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை ''தேசியப் பேரிழப்பு'' என்று அறிவித்தது. 


இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. 


முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. 


இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது. 


அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. 


''காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம்'' என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 


எஞ்சிய தனுஷ்கோடியை "சாரதா" என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. 


உயிர் பிழைத்த மக்கள் அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை.


மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது, 'ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை' என்று. 


மீண்டும் தேடல் தொடங்கியது. 


இறுதியாக முடிவுக்கு வந்தனர். 


புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர். 


இரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. 


அதில் பயணித்த 115 பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர். 


பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் 'ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது' என்று குறிப்பிடுகிறார். 


தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது. 


இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது. 


தனுஷ்கோடியில் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது. 


விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது.


 1500 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது.


சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன, 


தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து. 

''ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக'' ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது. 


தமிழக மக்களின் மன நிலை, ஆழ்ந்தச் சோகத்தில் இருக்க,  அன்றையப் பத்திரிக்கைகள் பலவும்  மிகவும் கவலை கொள்ளத் தொடங்கி எழுதியது.  


அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. 


மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம். 


அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. 


மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று.


மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை ''மக்கள் வாழத் தகுதியற்ற நகரம்'' என்று அறிவித்தது. 


தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி.


ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச் சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து, ''மக்கள் வாழத் தகுதியற்ற...'' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. 


தனுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து, அன்று தொலைந்த தனுஷ்கோடி... 


இன்று வரை அடையாளம் காணப்படாமல் அப்படியே நிற்கிறது, எஞ்சிய தனுஷ்கோடியின் மிச்சங்களையும் பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு.


மக்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில், பிடிவாதமாக,  இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது. 


இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது, 


கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன. 


"ராமேஸ்வரத்துக்கு போனா தான்  லைட்டைப்  பார்க்க முடியும்" 


.

அடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, 


கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, 


இந்த நீரூற்றுக்கள் தான் இவர்களது நீர் ஆதாரம். 


சமையல் பொருட்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். 


இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள். 


மீன்பிடி தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். 


தமது மூதாதையர் வாழ்ந்த இந்த இடத்தை விட்டுச் செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர். 


இன்றைய, நம் மத்திய அரசின் ஆணையின் பேரில், தமிழகத்தின்  முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி யுமான   பொன். ராதாகிருஷ்ணன் அவர்களதுத் துரிதக் கதியிலான அக்கறை மற்றும் செயற்பாட்டு மேற்பார்வையில், 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை வரை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.50 கோடியில் புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கியது. 


கடலின் நடுவே நடைபெற்று வந்த இந்த சாலைப் பணி, வெறும்  ஒன்றரை ஆண்டுக்குள்,  முழுமையாக முடிந்தது. 


சாலையின் பாதுகாப்பு கருதி இருபுறமும் கற்களால் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன. 


அரிச்சல்முனை வரை செல்லும் வாகனங்கள்,  திரும்பிச் செல்ல வசதியும் செய்யப்பட்டு, அதற்கான வளைவின் மைய பகுதியில் தூண் அமைக்கப்பட்டு, அதன் மேலே அசோக சின்னமும் நிறுவப்பட்டது.


தற்போது அங்கு மின்சார  இணைப்பு கொடுப்பதற்கும் புதிய குடியிருப்புகள்  ஏற்படுத்துவதுக் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. 


இந்த வரலாற்று சோகம் History of Dhanushkodi என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம்....

Friday, November 24, 2023

டிசம்பர்25, கீழவெண்மணி படுகொலை




கீழவெண்மணி படுகொலைகள் தேவேந்திரர்களால் மறக்க இயலாத வடுவாக மாறியிருக்கிறது ..

தஞ்சை மண்ணை தேவேந்திரர்கள் முப்பாட்டன்களான சோழ மன்னர்கள் ஆண்டதன் அடையாளம் ஆயிரமாயிரம் இருந்தும் கல்வியிலும்,அறிவிலும் பின்தங்கிய சமுதாயமாய் மாற்றப்பட்டு கேட்ப்பாரற்று கொத்து,கொத்தாக எரித்து கொலை செய்யப்பட்ட போதும் கூட நம்மால் அந்த கொலையாளர்களுக்கு எதிராக எதையுமே செய்ய முடியாவில்ல்லை என்பதை விட உயர்நீதி மன்ற தீர்ப்பு உயர் சாதி தீர்ப்பாய் வரலாற்றின் பக்கங்களில் கருப்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது .

கொலையாளிகளை பணக்காரர்கள் என்றும் அவர்கள் கார்களை வைத்திருந்தவர்கள் என்றும் “அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள் எனவே அந்தக்கொலையை செய்ததாய் குற்றம் சாட்டப்பட்டுள்ள நூற்றி ஆறு பேரும் குற்றவாளிகள் அல்ல…” என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதி தீர்ப்பு சொன்ன நீதிபதி.

அதன் விபரம் வருமாறு :

கீழ்வெண்மணிப் படுகொலைகள் என்பது 25 திசம்பர் 1968இல் இந்தியாவின், தமிழ்நாட்டில், ஒன்றினைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பள்ளர் வேளாண் தொழிலாளர்கள் படுகொலை நிகழ்வாகும்.

தஞ்சை மாவட்டம் மிகுந்த செழுமையான மாவட்டமாக இருந்தது அங்கு பாசன வசதி மிகுந்து. விளைநிலங்கள் செழுமையாகவும் அதிக விளைச்சலை தருபவை ஆக இருந்தது. தமிழ்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் முப்பது சதவிகித விளைநிலங்கள் தஞ்சை மாவட்டத்தின் கீழ் இருந்தது. தஞ்சையில் பல நிலங்களில் வேலை செய்யும் வேளாண் தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர். 

அங்கு இருந்த நிலக்கிழார்கள் அவர்களை அடிமையாக எண்ணி நடத்திவந்தனர். அங்கு இருந்த பண்ணை ஆட்கள் அராஜக போக்கால் அவர்கள் மிக குறைந்த ஊதியம் மிக குறைந்த வேளை உணவு வழங்க பட்டது. கூலி ஆட்களுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த சம்பளம் அவர்கள் வழக்கை முறை வெகுவாக மன உளைச்சலை ஏற்படுத்தியது. 

அவர்கள் நல்ல வழக்கை முறை அடைய பல முறை முயற்சி செய்தும் அவர்கள் அடிமை நிலையும் குறைந்த ஊதியமும் அவர்களை முன்னேற விடவில்லை. அவர்கள் நியாமான கோரிக்கை எதுவும் அவர்களை பணி அமர்தியவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

1960 ஆம் ஆண்டு இந்திய சீனா போரால் எங்கும் ஏற்பட்ட பஞ்சம் இவர்களை பெரிதும் வாட்டியது.


தஞ்சை மண்ணில் “பண்ணையாள் முறை” ஆழமாக வேரூன்றியிருந்த காலம். சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன .கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும் பி. சீனிவாசராவ்வும். சங்க உணர்வை உருவாக்கினார்கள். விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். உழைப்புக்கு‍ ஏற்ற கூலியைக் கேட்டார்கள் விவசாயிகள். 

ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரம் மூண்டது. கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நில உடமையாளர்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் படுகொலையை அரங்கேற்றினார்கள்.

1968 டிசம்பர் 25. கிறித்துமசு நாள். நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகளைத் தாக்கினார்கள், விவசாயிகள் திருப்பித் தாக்கினார்கள். நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். 

ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் “ராமையன்” என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில் அக்குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர்.


பாப்பா (ராமய்யன் மனைவி) 25
ஆசைத்தம்பி 10
சந்திரா 12
வாசுகி 23
சுந்தரம் (பெண்) 45
சரோஜா 12
மருதம்பாள் 25
தங்கையன் 5
சின்னபிள்ளை (பெண்) 25
கருணாநிதி 12
வாசுகி 5
குருவம்மாள் 30
பூமயில் 16
கருப்பாயி 35
நாச்சியம்மாள் 16
தாமோதரன் 12
ஜெயம் 10
கனகம்பாள் 25
ராமச்சந்திரன் 7
சுப்பன் 70
குப்பம்மாள் 60
பாக்கியம் (பெண்) 35
ஜோதி 10
காளிமுத்து (பெண்) 35
குருசாமி 15
நடராஜன் 5
வீரம்மாள் 22
பட்டு 46
சண்முகம் 13
வேதவல்லி 13
முருகன் 40
ஆச்சியம்மாள் 30
நாகராஜன் 10
ஜெயம் 6
செல்வி 3
கருப்பாயி 50
சோலை 26
நடராஜன் 6
அஞ்சலை 45
ஆண்டாள் 12
சீனிவாசன் 40
காவேரி 50
சீனிவாசன் 38
முருகன் 45



106 பேர் கைதானார்கள். “இது சாதிய மோதல்” என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. “அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…” என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானார்கள்.
திரைப்படம்

இந்நிகழ்வை விளக்கி, 2006 ஆம் ஆண்டு, பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய ராமையாவின் குடிசை என்னும் ஆவணத் திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் அந்தக் கோர நிகழ்வில் இருந்து தப்பிய சிலர் தங்கள் நினைவுகளை கூறுவதாக அமைந்து உள்ளது .ஒரு மணிநேரம் இந்த படத்தை பார்த்த பலரும் படத்தின் முடிவில் அவர்கள் கண்ணில் வரும் கண்ணீரை துடைப்பதாக அமைந்துள்ளது என்று பிரன்ட் லைன் (frontline) செய்தி இதழ் செய்தி வெளி இட்டது. அங்கு உள்ள நினைவகத்தில் ஒரு கண்ணாடி குடுவையில் அச்சம்பவத்தில் உயிர் நீத்தவர்களின் அஸ்தி, சம்பவம் நடந்த சில நாட்கள் பிறகு சுதந்திர போராட்ட வீரர் ஐ. மாயாண்டி பாரதி என்பவரால் சேகரிக்கப்பட்டு பத்திரபடுத்தி வைக்கபட்டுள்ளது.

Tuesday, September 12, 2023

மனைவியின் ஆசையை நிறைவேற்ற காதலனுடன் அனுப்பி வைத்த சந்திரபாபு!

ஆசை ஆசையை தீராத காதலுடன் திருமணம் செய்து கொண்ட மனைவியை, ஒரே வாரத்தில் மனைவியில் ஆசைக்காக அவருடைய காதலனுடனே அனுப்பியவர். இவரை பற்றிய சிறு தொகுப்பு இதோ...




தமிழ் திரையுலகில், உடல்மொழியால் நடிக்கும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவர் ஜே.பி.சந்தரபாபு. கதாநாயகன், காமெடி நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என என தனக்கென தனி முத்திரை பதித்தவர். இவரது திரையுலக வாழ்க்கை செல்வம் செல்வாக்கை கொடுத்திருந்தாலும், இல்லற வாழ்க்கை சந்தோஷமானது கிடையாது. ஆசை ஆசையை தீராத காதலுடன் திருமணம் செய்து கொண்ட மனைவியை, ஒரே வாரத்தில் மனைவியில் ஆசைக்காக அவருடைய காதலனுடனே அனுப்பியவர். இவரை பற்றிய சிறு தொகுப்பு இதோ...




நடிகர் சந்திரபாபு தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவரது உண்மையான பெயர் ஜோசப் பிச்சை என்றாலும், இவரை அனைவரும் பாபு என்றே அழைப்பது வழக்கம். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்பதால் தன்னுடைய பெயரைச் சந்திரபாபு என இவரே மாற்றிக் கொண்டார். இவரது தந்தை ஒரு விடுதலை போராட்ட வீரர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டவர். அவர் விடுதலையானவுடன் அவரையும் அவரது குடும்பத்தினரையும் இலங்கைக்கு நாடு கடத்தியது ஆங்கிலேயே அரசு.


அங்கு அவர் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றினார் சந்தரபாபுவின் தந்தையார். சந்திரபாபு கொழும்பில் புனித யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் கொழும்பு அக்குவைனாசு கல்லூரியிலும் கல்வி தன்னுடைய படிப்பை முடித்தார். சந்திரபாபுவின் குடும்பம் 1943 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பி சென்னையில் குடியேறியது. தன்னுடைய தந்தை போலவே இவரும் நாளிதழில் பணியை துவங்கினார்.




இவர் ஒரு தமிழராக இருந்தாலும், ஆங்கிலேயரின் நவ நாகரீக ஆடைகள், மற்றும் அணிகலன்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். எப்போதும் ஸ்டைலிஷாக இருப்பதை விரும்புவார். எனவே இவரது கவனம் திரையுலகின் பக்கம் திரும்பியது. தன்னுடைய 16 வயதில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேட துவங்கினார். ஒரு படத்திற்கு வாய்ப்பு கேட்க சென்ற போது, அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. எனவே தற்கொலைக்கு முயன்றார். இதற்காக நீதிமன்றம் வரை சென்ற சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சி கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார்: “உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டதுதான் தெரியும்; என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும் என வாதிட்டார்.”


ஒருவழியாக 1947ஆம் ஆண்டு 'அமராவதி' என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி, மிக விரைவிலேயே முன்னணி காமெடி நடிகர் என்கிற அடையாளத்தை பெற்றார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் என அப்போதே அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் சந்திரபாபு தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதே போல் பாடல் பாடுவதிலும் வல்லவர்.




திரையுலக வாழ்க்கையில் இவர் நினைத்த தூரத்தை மிக விரைவாகவே எட்டினாலும், இவரது சொந்த வாழ்க்கை சொல்லிக்கொள்ளும் படி சந்தோஷமாக அமைந்து விடவில்லை. கோயம்புத்தூரைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் சுவாமிகண்ணு வின்சென்ட்டின், பேத்தியும், ஆங்கிலோ இந்தியருமான ஷீலாவை சந்திரபாபு முதன்முதலில் அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போதே அவருக்கு ஷீலாவை மிகவும் பிடித்து விட்டது. ஆசை ஆசையாக தீராத காதலுடன், 1958 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.





அப்போதைய சினிமா வட்டாரமே மெச்சும் படி நடந்த இவரது திருமணத்தில் முதல்வர் காமராஜ் உட்பட பிரபல திரையுலகப் பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய மனைவி ஷீலா வேறொருவரை காதலித்ததாக கூறியதும், அவரது ஆசையை நிறைவேற்ற, அவரது காதலனுடனே சேர்த்து வைத்தார்.
 



ஷீலாவின் காதலர் லண்டனை சேர்ந்தவர் என்பதால், அவர் லண்டன் செல்லும் வரை சந்திரபாபு தொடர்ந்து தன்னுடைய ஆதரவை அவருக்கு கொடுத்து வந்தார். சில நாட்களுக்குப் பிறகு, முறையாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், சந்திரபாபுவின் ஒப்புதலுடன் லண்டனை சேர்ந்த, தன்னுடைய காதலரான மருத்துவர் ஒருவரை ஷீலா திருமணம் செய்து கொண்டார்.


திருமண வாழ்க்கை கொடுத்த வலியை அவர் வெளிக்காட்டி கொள்ளவில்லை என்றாலும், அது அவரை அதிகம் பாதித்தது.தனது திரையுலக வாழ்க்கையில் இருந்து தற்காலிக ஓய்வு எடுக்க முடிவு செய்த அவர், தனது நெருங்கிய நண்பர்களிடம் கூட தெரிவிக்காமல் டெல்லி சென்றார். அந்த நாட்களை அவர் மது அருந்திக்கொண்டே இருந்தார். பின்னர் அவர் காதல் மற்றும் திருமணம் தோல்வியுற்ற போதிலும் தொழிலில் தனது வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார். தொழில் ரீதியாகவம் சில தோல்விகளை சந்தித்தார் சந்திரபாபு.




இவர் ஒரு கிறித்தவர் என்பதால், மாதா மீது கொண்ட பற்றின் காரணமாக... சர்ச் கட்டுவதற்கு கலைநிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி கொடுத்துள்ளார். மேலும், வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்தித்த இவருடைய வாழ்க்கை வரலாறு... கண்ணீரும் புன்னகையும் என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான அந்த 7 நாட்கள் படம் கூட சந்திரபாபுவை நினைவில் வைத்து கதை எழுதப்பட்டகாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.