Thursday, April 18, 2024

யானை மீன் குறித்து விளக்கம்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் யானை மீன் குறித்து விளக்கம் !!!


கடலில் வாழும் விநோத உயிரினங்களில் ஒன்றுதான் யானை மீன். இதன் வாய்த்தாடை யானையைப் போன்ற தோற்றம் உடையதாக இருப்பதால் இதற்கு யானை மீன் என்று பெயர். இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார்:

""கலோரிங்கஸ் மில்லி என்ற விலங்கியல் பெயருடைய இந்த மீன், பார்ப்பதற்கு கணினியில் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது போலவே இருக்கும். உலகிலேயே மிகவும் கடினமான சதைகளை உடைய தாடையைக் கொண்டதாகும். முன்பக்கத் துடுப்புகள் மூலம் தண்ணீரைப் பின்னுக்குத் தள்ளியவாறு கடலில் வேகமாக முன்னால் நகர்கின்றன. பின்புற பக்கவாட்டில் இரு துடுப்புகளும் அமைந்துள்ளன.

இத்தனித்துவமான துடுப்பு அமைப்பும் இதற்குக் கடலில் நீந்த பேருதவியாக உதவுகிறது. வாயின் தாடை அமைப்பு யானையைப் போன்றுள்ளதால் இதற்கு யானை மீன் என்கிறார்கள். பேய்ச்சுறா, யானைச்சுறா, வெள்ளை மீன் என்ற வெவ்வேறு பெயர்களிலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் அழைக்கப்படுகிறது. இவ்விரு நாடுகளிலும் அதிகமாக வாழ்வதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பொதுவாகவே 200 முதல் 500 மீட்டர் வரை ஆழம் உள்ள இடத்தில் மணற்பாங்கான அடிப்புறத்தில் வாழ்கின்றன. பெண் இனம் முட்டையிட மட்டுமே ஆழமற்ற பகுதிக்கு வரும் போது மீனவர்களின் வலைகளில் சிக்கி விடுகின்றன.

சிறிய தோல் பைகளை போன்ற தோல் கவர்களை உருவாக்கி அதில் முட்டையிட்டுச் செல்கின்றன. இம்முட்டைகள் கடலில் மிதந்து செல்லும் போது சூரிய வெப்பத்தின் தன்மைக்கேற்ப குஞ்சுகளாகி விடுகின்றன.

எலும்புகளே இல்லாமல் மிருதுவான சதையைக் கொண்டிருக்கும் இவையும் சுறாக்களின் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். ஒரு வயதான மீன் 60 செ.மீ. முதல் 120 செ.மீ. வரை வளர்ந்திருக்கும். இந்த யானை மீனுக்கும், மனிதனுக்குமான ஜூனோம் தொடர்பு மிக நெருக்கமாக இருப்பதாகவும் கடல் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இம்மீனைப் பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் பல நாடுகளில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் சுத்தியல் சுறா எனும் ஒரு வகை மீனுக்கு இந்த யானை மீன் நெருங்கிய பங்காளியாகவும் இருக்கிறது எனலாம். கடலுக்கடியில் இருக்கும் சங்குகளையும், சிப்பிகளையும் உண்டு உயிர் வாழும் இந்த உயிரினத்தின் வாயில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையிலான ஓர் அமைப்பின் மூலம் இவை இதற்குத் தேவையான இரையைப் பிடித்து உண்கின்றன.''


No comments:

Post a Comment