Monday, January 15, 2024

பொங்கல் பண்டிகை... கரும்பின் முக்கியத்துவம்

 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில்🎈 கரும்பிற்கு🎋 மட்டும்.. ஏன் இவ்வளவு ஸ்பெஷல்?


பொங்கல், கரும்பு, வெல்லம், மஞ்சள் குழை.... நமக்கு அள்ளித் தரும் ஆரோக்கியப் பலன்கள்.!!


பொங்கல் பண்டிகையான தமிழர் திருநாளன்று விளைந்த பயிரை அறுவடைசெய்து, அதன் பலனை அடையும் பருவமே தைப்பொங்கல். தைப்பொங்கலில் இடம்பெறும் தலைவாழை இலையில் தொடங்கி அரிசி, கரும்பு, கிழங்கு என ஒவ்வொன்றுக்கும் ஓர் ஆரோக்கியப் பலன் உண்டு.


மஞ்சள் குழை :


பொங்கல் பானையை சுற்றி கட்டிவைக்கப்படும் மஞ்சள் குழை கிருமிநாசினியாக செயல்படும். பானையை சுற்றிக் கட்டிவைக்கப்படும் அந்த மஞ்சள் குழையில் உள்ள கிழங்கை கீறி எடுத்து மறுநாள் சிறியவர்களின் நெற்றியில் வைத்து ஆசி வழங்குவார்கள்.


ஆவாரம்பூ :


 தமிழர் திருவிழாவில் ஆவாரம்பூவிற்கு முக்கிய இடமுண்டு. காப்புக் கட்டுதலில் தொடங்கி மாட்டுப்பொங்கல் வரை ஆவாரம்பூவைப் பயன்படுத்துவார்கள். இது சிறந்த கிருமிநாசினி. நோய்களைத் தடுக்க பொங்கலின்போது ஆவாரம்பூவை வீட்டின் கூரைகளில் சொருகி வைப்பார்கள்.


சிறுபீளைப்பூ :


 சிறுபீளைப்பூ பொங்கல் பண்டிகையில் பயன்படுத்துவதுண்டு. இதை வீட்டுக் கூரையில் சொருகி வைப்பதால் இதை 'கூரைப்பூ' என்றும் சொல்வார்கள். இது பூச்சிகள் வராமல் தடுக்கும். அம்மை, அக்கி, மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கும்.


மண்பானை :


 மண்பானையில் சமைப்பதால் நுண் துளைகளின் வழியாக நீராவியும், காற்றும் உணவின் மீது சீராகவும், மெதுவாகவும் பரவும். இதனால் சுத்தம் செய்யப்படாத அரிசி, காய்கறிகளாக இருந்தாலும் மண்பானையில் சமைக்கும்போது கிருமிகள் அழிந்துவிடும். அடுப்பைவிட்டு இறக்கினாலும் சூடு ஆறாமல், அதன் தன்மை கெடாமல் பாதுகாக்கும். உணவின் சத்துக்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு எளிதாக செரிமானமாகும். தரமான உணவு கிடைக்கும்.


தலைவாழை இலை :


 பொங்கல் பண்டிகையின்போது தலைவாழை இலையில் அனைத்து உணவுகளையும் வைத்து படைப்பார்கள். சூரியனுக்குப் படைத்த பிறகு வாழை இலையில் பரிமாறப்படும் பொங்கலை சாப்பிடுவதால் இலையில் உள்ள இயற்கைச் சாறு உறிஞ்சப்பட்டு உடலில் சேரும். இது தோல்நோய் உருவாகாமல் தடுக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.


வெல்லம் :


 பொங்கல் பண்டிகைக்கே இனிமை சேர்ப்பது வெல்லம்தான். இது வாதம், செரிமான நோய்களைக் குணப்படுத்தும். வெல்லத்தை அளவுடன் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண்ணை ஆற்றும். இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்களும் இதில் உள்ளன.


கரும்பு :


 பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம்பிடிப்பது கரும்பு. கரும்பில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கரும்பை கடித்து சாப்பிடுவதால் பற்கள் உறுதி பெறுகிறது.


கரும்பின் முக்கியத்துவம் :


பொங்கல் பண்டிகையின் முக்கிய பங்காக இருக்கும் கரும்பானது உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமைமிக்கதாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்தவித தயக்கமும் கொள்ளக்கூடாது. அப்படியானால்தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பை சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் என்றால் அது மிகையாகாது.

No comments:

Post a Comment