Friday, January 5, 2024

நடிகனாக ஜெயித்தார், பலரை வாழவைத்தார்-விஜயகாந்த்

விஜயகாந்த் எனும் நடிகரை தாண்டி, தோற்றுபோன அரசியல்வாதியினை தாண்டி ஒரு நல்ல மனிதன், பலருக்கு உதவிய ஒரு வெள்ளை உள்ளம் கொண்ட மனிதன் இறந்துவிட்டான் என்பது நிஜமாகவே மனம் வலிக்கும் தருணம்

அவர் போராடி வளர்ந்தவர், அதிக படிப்பில்லை, கிராமத்து பின்புலம், கரிய நிறம், தமிழ்மொழி தாண்டி நடிக்க தயக்கம் என எவ்வளவோ பலவீனங்கள் இருந்தாலும் கமலஹாசனும் சரத்பாபுவும் மிரட்டிய காலங்களில்  கிராமத்து மனிதனாக போராடி வளர்ந்தவர்

அவரிடம் ஒரு உணர்ச்சி இருந்தது, ஒரு துடிப்பு இருந்தது, மெல்லிய வசீகரமும் இருந்தது அதை கொண்டு போராடி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்

நடிகனாக சரியாக ஜெயித்தார், பலரை வாழவைத்தார், எவ்வளவோ இயக்குநர்களை உருவாக்கினார், காலத்தால் அவர் கெட்டாரே தவிர அவரால் கெட்டவர்கள் என யாரையும் காட்டமுடியாது

அவ்வளவுக்கு சினிமா உலகில் தனக்கென ஒரு நல்ல அடையாளத்துடனேதான் வலம் வந்தார்

ஆனால்  காலம் மிக பொல்லாதது,  அது சரியான நேரத்தில் சரியான யோசனைபடி நல்ல முடிவினை எடுத்தவனை தேரில் ஏற்றி பறக்க வைக்கும்

அப்படியே உரிய நேரம் சரியான முடிவினை எடுக்காதவனை அதன் ரதங்கள் வேகமாக  இழுத்து சென்று தன் சக்கரங்களில் கட்டி நசுக்கும்

காலம் அப்படியானது, பின்னால் வரும் காலத்தை முன்னால் அறியும் சக்தி யாருக்கும் இல்லை எனினும் அந்நேரம் அவன் எடுக்கும் முடிவினைத்தான் விதி என்பார்கள், ஊழ்வினை என்பார்கள், ஜாதக பலன் என்பார்கள்

அப்படி காலம் சரித்துபோட்ட ஒருவர் விஜயகாந்த், அவருக்கென ஒரு எதிர்பார்ப்பு ஒரு காலத்தில் இருந்தது

ஆனால் அவர் திணறினார், தனக்கு இருந்த அரசியல் எதிர்காலத்தை திமுகவும் அதிமுகவும் கூட்டு சேர்ந்து குழிபறிப்பதை கண்ணார கண்டும் அவரால் தடுக்கமுடியவில்லை

அவர் கொஞ்சம் யோசித்திருக்கலாம் தனக்கான பின்புல சக்தி அரசியலில் அவசியம் என சற்று சிந்த்தித்திருக்கலாம்

அவர் மட்டும் சரியாக சிந்தித்து பாஜக பக்கம் சரிந்திருந்தால் இந்நேர்ம் அவர்தான் ராஜா சந்தேகமில்லை, பெரும் உயரம் அவருக்கு கிடைத்திருக்கும்

ஆனால் காலத்தை கணிக்க தவறினார், தனக்கொரு பெரும் பின்புலம் அவசியம் என்பதை யோசிக்க தவறினார், சினிமாவின் பலம் ஒன்றே அரசியலில் தன்னை காக்கும் என தவறான கணக்கிட்டார்

அதையும் தாண்டிகுடும்பத்தாரை முன்னிறுத்தி இன்னும் வீழ்ந்தார்

சினிமாவில் தன் காலால் பலரை உதைத்தே வளர்ந்த அவர் கால்விரல் வெட்டபட்டது என்பதையும், சிவாஜி கணேசனுக்கு பின் அணல் பறக்கும் வசனங்களை அசராமல் பேசிய அவரால் பேசமுடியவில்லை என்பதும் அவர் வீழ்ச்சியின் காட்சிகள்

இனி அவர் இல்லை, விஜயகாந்த் என சுமார் ஐம்பது வருடமாக தமிழக மக்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்த இனி அவர் இல்லை

எவ்வளவோ வசனங்கலை சிவாஜிக்கு பின் கம்பீரமாக பேசிய அவர் இதோ சடலமாக கிடக்கின்றார், துள்ளி துள்ளி அடித்த அவரின் கால்கள் முடங்கி கிடக்கின்றன‌

ஓயாமல் உழைத்தவன் என சொல்லபட்ட நடிகர் தீரா ஓய்வுக்கு சென்றுவிட்டார்,  உணவாகவும் பணமாகவும் அள்ளி அள்ளி கொடுத்த கரங்கள் அசையாமல் கிடக்கின்றன‌

தன் கர்மாவினை முடித்து அவர் கிளம்பிவிட்டார்

இது அவரின் நினைவில் மூழ்க வேண்டிய தருணம் 

ஆம்  அவருக்கும் ஒரு காலம் இருந்தது, அந்த காலத்தில் ஒரு வரலாறு இருந்தது என்பதும், அதையெல்லாம் விட அவருக்கு முரட்டு தைரியம் இருந்தது என்பதும் நிஜம்

அதை சற்று பின்னோக்கி பார்க்கலாம்

தமிழக நடிகர்களில் ஓரளவு பொதுநலனும் தைரியமும் கொண்ட நடிகர் அவர், தமிழை தவிர எந்த மொழிபடத்திலும் அவர் நடித்ததில்லை

கருப்பு நிறம், பெரும் திறமையாளர் என சொல்லமுடியாவிட்டலும் அவர் நடிப்பில் ஒரு உணர்ச்சி இருந்தது. அந்த வேகமும் உணர்ச்சியும்தான் அவரை உச்சிக்கும் கொண்டு சென்றது

உச்ச நடிகராகவும் இல்லாமல் அதே நேரம் காணாமலும் போகாமல் கங்கை ஓடும் நாட்டில் காவேரி போல அவரும் ஓடிகொண்டிருந்தார்

பெரும் சர்ச்சையிலோ ஏதும் முறைகேடுகளிலோ சிக்காத மிக சில நடிகர்களில் அவரும் ஒருவர். சினிமா எனும் மாய சுழலில் தன்னை தக்கவைத்து கொண்ட வெகுசிலரில் அவரும் ஒருவர்

கருணாநிதி தலமையில் திருமணம் செய்யும் அளவிற்கு அவருக்கு தமிழக சூழலும் தெரிந்திருந்தது.

எந்த சர்ச்சையிலும் சிக்காமல் மிக வேகமாக வளர்ந்தார், உணர்ச்சி மிக்க நடிப்பால் புரட்சி கலைஞர் எனவும் அழைக்கபட்டார்

ஒரு விஷயம் நிச்சயமாக சொல்லமுடியும். நிச்சயம் விஜயகாந்த் நல்ல நிர்வாகி

எம்.ஜி ராமசந்திரனும் , சிவாஜியும் இது நடக்காது என தூர எறிந்த நடிகர் சங்கத்தை, ரஜினியும் கமலும் ஏற்க தயங்கிய பொறுப்புகளை அவர் ஏற்று நடத்தி சங்கத்தை கடனில் இருந்து மீட்டார்

நடிகர் சங்கம் வித்தியாசமானது, புரிந்துகொள்ளமுடியா குழப்பம் கொண்டது, எம்ஜிஆரை வள்ளல் என்பார்கள், பிரபல போராளிகளுக்கே  100 கோடி கொடுத்த கொடையாளன் என்பார்கள்

ஆனால் நடிகர் சங்கத்து சில லட்ச கடனை அவர் கட்டவில்லை, இவ்வளவிற்கும் அவரிக்கு ஏணியாக இருந்ததே அந்த திரையுலகம், ஏன் எம்ஜிஆர் அந்த கடனை கட்டவில்லை என்பது தெரியவில்லை

சிவாஜி, ஜெமினி என சொத்துக்களை குவித்த நடிகர்களும், பெரும் பணம் குவித்த ரஜினியும், 6 வயதிலே சம்பாதிக்க தொடங்கிய கமலும் முன்வரவில்லை

ஆனால் நடிகர் சங்க பொது நலனுக்காக வந்து அதை செய்தும் காட்டியவர் விஜயகாந்த்

இப்படிபட்ட ஆர்வம்தான் அவரை அரசியலுக்கும் இழுத்தது. 

ஆனானபட்ட மூப்பனாரே அய்யோ என அலறி தன் கட்சியினை காங்கிரசோடு இணைக்கும் அளவிற்கு அவருக்கு மர்ம அடி முதுகில் விழுந்தது அப்படிபட்ட அரசியல் இது

இன்னொரு பக்கம் ஜெயா இரும்பு பெண்மணி, இன்னொரு பக்கம் சிரித்துகொண்டே தந்திர அரசியல் செய்யும் கருணாநிதி

இவர்களை எதிர்த்து தைரியமாக கட்சி கண்டது விஜயகாந்த் ஒருவர்தான். அன்றும் ரஜினி அமைதி, மகா அமைதி தியானம்

 மய்யம் முழுக்க‌ அடக்கமாகி இருந்தது

அன்றும் திரைதுறையில் இருந்து  விஜயகாந்துக்கு ஒரு ஆதரவுமில்லை

உண்மையில் விஜயகாந்த் யாரையும் மிரட்ட கட்சி தொடங்கவில்லை, மக்களுக்கு ஏதோ செய்ய நினைத்தார்.

மனதில் பட்டதை பேசியதில் தமிழக அரசியல்வாதிகளில் காமராஜருக்கு அடுத்த ஒருவர் விஜயகாந்த் மட்டும்தான் என்பதை மறுக்கமுடியாது.

அவரின் மண்டபம் எல்லாம் இடிக்கபட்டிருக்க வேண்டியதே இல்லை, இன்று அதன் அருகே நின்று பார்த்தாலும் குழந்தையே சொல்லும், இந்த சாலை ஏன் இங்கு வளைகின்றது?

அரசியல் என்பது மர்ம சதுரங்கம், அதில் விஜயகாந்த் தடுமாறினார். நடிகராக ஜொலித்த அவர் பின்னாளில் அரசியலில் கலக்கினார், எதிர்கட்சி தலைவராக கூட இருந்தார்

அன்று ஜெயலலிதா முன்னால் தம் கட்டி நின்ற விஜயகாந்தினை மறக்க முடியாது, இன்றைய எதிர்கட்சி தலைவர் எதற்கெடுத்தாலும் ஓடிவந்து நடுரோட்டில் அமரும் பொழுது, அன்று தில்லாக நாக்கை கடித்து நின்ற விஜயகாந்த் நினைவுக்கு வந்துதான் போவார்

அரசியலின் மர்ம நகர்வில் விஜயகாந்த் சிக்கினார், ஒருவித அதீத நம்பிக்கையும் அவருக்கு வந்தது

விளைவு படுதோல்வி அடைந்தார், மீண்டு வந்துவிடலாம் ஆனால் உடல்நலம் ஒத்துழைக்கவில்லை

நோயின் தாக்கத்தை அவர் குடிகாரர் என்றார்கள், ஏன் ரஜினிக்கு இருந்த குடிபழக்கம் ஊர் அறிந்தது, சிங்கப்பூர் சிகிச்சைக்கு அதுதான் காரணம்

ஆனால் யாராவது அவரை சொல்வார்களா? இல்லை

விஜயகாந்த் குடிகாரர் என்பது ஊதிபெருக்கபட்ட பிம்பம், நோயின் தாக்கமே அவரை வீழ்த்தியது

இப்பொழுதும் விஜயகாந்திற்கு வாய்ப்பு இருந்தது, பாஜக பக்கம் சென்றிருந்தால் அவரின் நிலை பெரிதும் உயர்ந்திருக்கும் ஆனால் அப்படி செய்யாமல் தன்னை அவரே சரித்து கொண்டார்

ஒரு விஷயத்தில் விஜயகாந்த் மிக பரிதாபமானவர்

அவர் தமிழகத்துக்கு ஏதோசெய்ய நினைத்தார், காலம் அறியாமல் இறங்கியதில் திணறினார், உண்மையில் அவர் அரசியலுக்கு வந்து அவர் இழந்துதான் மிக அதிகம்

அதில் சொத்துக்கள், நண்பர்கள், உடல்நலம் என ஏகபட்ட இழப்புகள் உண்டு,

வடிவேல் கூட அவருக்கு எதிரியானார்

அவர் எந்த நடிகர் சங்கத்திற்கு உழைத்தாரோ அது கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை

அவரின் 40ம் ஆண்டு விழாவினையும் திரையுலகம் கண்டுகொள்ளவில்லை, நன்றிகெட்டதனத்திற்கு இவ்வுலகில் ஒரு உதாரணம் வேண்டுமென்றால் தமிழக திரையுலகத்தை சொல்லலாம்

அரசியலை விடுத்து முன்னொரு காலத்தில் சங்கத்தினை மீட்டவர் என்ற வகையிலாவது அவரை கொண்டாடியிருக்க வேண்டும்

இந்த பூவுலகில் நன்றி ஒரு மில்லி கிராம், அல்லது அரை மிமீட்டர் கூட இல்லாத ஒன்று தென்னிந்திய நடிகர் சங்கம்

அதற்காக உழைத்த மனிதனை இப்படி மறக்க கூடாது, நிச்சயம் அந்த நன்றி மறந்த சங்கம் உருப்படாது.

அட அவர்களுக்குத்தான் நன்றி இல்லை

விஜயகாந்திற்கும் காமராஜருக்கும் கிட்டதட்ட ஒரே ராசி

அவர்கள் யாருக்கெல்லாம் உழைத்தார்களோ அவர்களே நன்றிமறந்து ஓட அடிப்பார்கள்

சினிமா உலகமும் நன்றி மறந்தது, தமிழகமும் விஜயகாந்தினை புரிந்துகொள்ள தடுமாறியது

இன்று அவரைபோல் எதிர்கட்சி தலைவர் வேண்டும் என தேடுகின்றது. நிச்சயம் சட்டசபையில் அப்படி ஒரு மனிதன் தைரியமாக‌ இனி சீறபோவதில்லை

சினிமாவிலும் அரசியலிலும் எத்தனையோ பேரை கைதூக்கிவிட்டவர் விஜயகாந்த்

ஆக போலிகளுக்காக உழைத்தாலும் தன்னை அறியாமல் நன்றிகுரிய சிலரை சம்பாதித்திருக்கின்றார்

விஜயகாந்த் சம்பாதித்ததிலே மிக உயர்ந்தது இம்மாதிரி ரசிகர்கள்தான்.

இனி விஜய்காந்த் இல்லை என்பதை நினைக்கும் போது கண்ணீர்தான் முட்டுகின்றது

எப்படியோ வாழ்ந்து எங்கோ சென்றிருக்க வேண்டிய மனிதர் வார்த்தை பேசமுடியாமல் கால்களில் விரல் இழந்து பொம்மை போல் அமர்ந்திருந்து இப்போது விடைபெற்றதெல்லாம் அவரின் விதிபயன் என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை

இரக்கமில்லா காலம் எப்படியெல்லாமோ அவரை இழுத்து சென்று ஒடுக்கி அடக்கி வைத்துவிட்டது

விஜயகாந்தின் பரிதாப வீழ்ச்சிசொல்வது ஒன்றுதான்

இனி வரும் காலத்தில் தமிழகத்தில்  தேசியம் பேசாமல் மாநில திராவிட அரசியல் பேசி ஒரு நடிகன் அரசியலுக்கு வந்தால் எப்படி வீழ்வான் என்பதுதான் அது

ஆம், தேசாபிமானம் கொண்டு முழு இந்தியனாக ஒரு நடிகனோ அல்லது நடிகன் அல்லாதவனோ கட்சி தொடங்கி, இனியும் திராவிடம் தமிழகம் என எதையோ சொல்லி குழப்பி  அரசியல் செய்தால் என்னாகும் என்பதற்கு விஜயகாந்தே சாட்சி

அவரின் இப்போதைய நிலை முதல்வர் கனவில் வலம் வரும் எல்லா தமிழ்நடிகர்களுக்கும் பெரும் எச்சரிக்கை சாட்சி

இனி ஒரு நடிகனோ இல்லை மக்கள் அபிமானம் பெற்றவனோ தேசியம் பேசாமல் மாகாண பழைய திராவிட பல்லவிபாடி மாகாண அரசியல் ஆட்டத்தில் சிக்கினால் என்னாவான்? இந்து ஆதரவினை பகிரங்கமாக பேசாமல் மதசார்பற்ற, முற்போக்கு, சமதர்மம் என பேசினால் அவனும் அவன் கட்சியும் என்னாகும் என்பதற்கு விஜயகாந்த் பெரும் எடுத்துகாட்டு

எப்படி தலைவனாக உயரவேண்டும் என பெரும் உதாரணமாக வரவாய்ப்பு இருந்த விஜயகாந்த், தேசிய அடையாளம் பெறாமல் திராவிட அரசியலில் விழுந்து வீழ்ந்து சரிந்து மிக தவறான உதாரணமாகிவிட்டதெல்லாம் வலியான விஷயங்கள்

இன்றிருக்கும் நடிகர்களுக்கும் இதர அரசியல் இம்சை அபிலாஷை கொண்டவர்களுக்கும் வாழும் சாட்சியாக இருந்த விஜயகாந்த் விடைபெற்றுவிட்டார்

வறுமை,சினிமா என போராடி வென்று பின் அரசியலில் தோற்று பின் நோயுடனும் தோற்றுபோன அவர் கிளம்பிவிட்டார்

அவர் வணங்கிய மதுரை மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும், ஆண்டாளும், அந்த மலைகோவில் அழகரும் அந்த ஆத்மத்துக்கு நற்கதியினை அருளட்டும், அந்த ஆத்மா நற்கதி அடையட்டும்

நடிகர்களில் நாட்டுபற்றோடும், தெய்வபற்றோடும் வந்தவர் அவர்,  சினிமாவில் அதையே பின்பற்றினார்

அவ்வகையில் தேசாபிமானிகளின் ஒரு இரக்கமான பார்வை எப்போதும் அவர்மேல் உண்டு, அந்த பார்வை இப்போது கண்ணீர்துளிகளால் மறைந்து ஈரமாகின்றது, அந்த ஈரகண்களின் மங்கிய நிழலில் தெரியும் விஜயகாந்தின் புன்னகை பூத்த முகத்துக்கு தேசாபிமானிகள் ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகின்றார்கள்

சினிமா, அரசியல், குடும்ப சொந்தபந்தம், கட்சி, பத்திரிகை ஊடகம் , தமிழக மக்களின் மடமை என எல்லாவற்றின் இன்னொரு பக்கத்தை காட்டிவிட்டு விடைபெற்று செல்லும் அவருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்

பரந்தாமனின் அருள் அவருக்கு இருந்தது, பூரணமாக இருந்தது என்பதை மார்கழி மரணம் காட்டிவிட்டது

1980களில் வந்த கள்ளங்கபடமில்லா அந்த புன்னகையும்,  அப்பாவிதனமான சிரிப்பும், துடிப்பான அந்த குரலும் மறக்க கூடியது அல்ல, அந்த நினைவுகளை  சில சொட்டு கண்ணீர் வராமல் எப்படி கடக்க முடியும்?

No comments:

Post a Comment