Monday, January 15, 2024

சிவனருள் பெற்ற அடியார்-நந்தனார்



ஆதனூரில் பிறந்து சிவாலயங்கள்தோறும் சென்று பேரிகை, மத்தளம் முதலிய வாத்தியங்களுக்கு தோலும் கட்டுபவரும், யாழ், வீணை முதலான வாத்தியங்களுக்கு நரம்புகளும், சிவபெருமானுடைய திருமேனியில் பூச கோரோசனையும் தருபவர் திருநாளைப்போவார் என்று அழைக்கப்படும் நந்தனார். தனது இழி பிறப்பை நினைத்து வருந்தினாலும், இசைத் தமிழில் சிறந்து விளங்கி ஆலயத் தொண்டு புரிந்தவர்.

நந்தனார்


சோழவள நாட்டில் ஒரு பிரிவான மேகாநாட்டில், கொள்ளிடக் கரைக்கு அடுத்துள்ள சிவத்தலம் ஆதனூர். சிறந்த நீர்வளமும், நில வளமும் பெற்றுள்ள இவ்வூருக்கு அடுத்தபடியாக வயல்களால் சூழப்பட்ட சிறு குடிசைகள் நிறைந்த ஊரான புலைப்பாடியில் புலையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். விவசாயத்தை தொழிலாகக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வந்தவர்களுள் ஒருவர் நந்தனார்.

சிவபெருமானிடத்தில் மிகுந்த அன்பு கொண்ட நந்தனார், அவர் கோயில் கொண்ட இடங்களில் தொண்டாற்றி வந்தார். உழுதுண்டு பிழைத்து அதில் ஈட்டும் பொருளை, கோயில்களில் பயன்படும் மத்தளம், பேரிகை போன்ற வாத்தியங்களுக்கு தேவையான போர்வைத் தோல் மற்றும் விரிவார்களை வழங்கி வந்தார். கோயில்களில் உள்ள வீணை, யாழ் போன்றவற்றுக்கு நரம்புகள் அளிப்பார். சிவபெருமான் ஆராதனைக்குத் தேவையான நறுமணமிக்க பொருட்களையும் (கோரோசனை) அளிப்பார் நந்தனார்.

விலகி இருக்கும் நந்தி...


இருப்பினும் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்று கருதப்பட்டு, கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட தகுதியற்றவராக முத்திரை குத்தப்பட்டார். இதை நினைத்து ஒவ்வொரு நாளும் நந்தனார் வருந்தினார். இருந்தபோதும் கோயிலுக்கு வெளியில் இருந்தவாறே இறைவனை மனதில் நினைத்து ஆனந்தக் கூத்தாடுவார். மிகுந்த மகிழ்ச்சி கொள்வார்.

ஒருமுறை திருப்புன்கூர் தலத்துக்குச் சென்று சிவலோகநாதரை தரிசிக்க எண்ணினார் நந்தனார். அதன்படி ஒருநாள் திருப்புன்கூரைச் சென்றடைந்தார். அங்கு கோயில் வாசலில் நின்றபடி ஈசனை தரிசிக்க நினைத்தபோது, நந்தி குறுக்கே இருந்து ஈசனை மறைத்தது. அதைக் கண்டு நந்தனாருக்கு வருத்தம் மேலிட்டது. தேடி வந்த ஈசனின் தரிசனம் தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சினார்.

இதற்குமேலும் பக்தனை சோதிக்க விரும்பாத சிவலோகநாதர் நந்தியை சற்று விலகும்படி பணித்தார். ஈசனின் சொல் கேட்டு நந்திதேவரும் சற்று விலகினார். தீபாராதனை ஒளியில், கருவறையில் ஆனந்தச் சுடராக அருள் வடிவமாக காட்சியளிக்கும் சிவலோகநாதரின் திருத்தோற்றத்தைப் பார்த்து உள்ளமும் உடலும் பொங்கி பூரிக்க, தரையில் விழுந்து பலமுறை வணங்கினார் நந்தனார்; பாடி பரவசமானார். ஆனந்தக் கூத்தாடினார். கோயிலை பலமுறை வலம் வந்தார். மனநிறைவுடன் தன்னுடைய ஊருக்குப் புறப்பட்டார்.
திருப்புன்கூர் கோயில்


வரும்வழியில் ஓரிடத்தில் ஒரு பள்ளத்தைக் கண்டதும் அதை, இரவு பகல் என்று பார்க்காமல், சீராக வெட்டி குளமாக்கினார். சுவாமி புஷ்கரிணியாக்கினார். எண்ணியதை எண்ணியபடி செவ்வனே செய்து முடித்து ஆதனூர் திரும்பினார். சில நாட்கள் கழித்து மீண்டும் திருப்புன்கூர் சென்று சிவலோகநாதரை தரிசிக்க எண்ணினார் நந்தனார். அதன்படி திருப்புன்கூர் உள்ளிட்ட சிவத்தலங்களுக்குச் சென்று ஈசனை தரிசித்து மகிழ்ந்தார்.

இப்படியே நாட்கள் செல்லச் செல்ல, தில்லை சென்று அம்பலக்கூத்தனை தரிசிக்க வேண்டும் என்ற தணியாத ஆசை அவருக்கு எழுந்தது. தினமும் இரவு படுக்கச் செல்லும்போது, நாளை பொழுது புலர்ந்ததும் கிளம்பி தில்லை செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்வார். ஆனால் காலையில் எழுந்ததும், அந்த எண்ணமே மறைந்துவிடும். இப்படியே சில நாட்கள் ஓடின.

எப்படியோ ஒருநாள் அவரது எண்ணம், பூவாகி, காயாகி, கனிந்தது. நாளை போவோம் என்று கூறியவர், துணிந்து எழுந்தார். தில்லைக்குப் புறப்பட்டார். தில்லையின் எல்லையை வந்தடைந்தார். தில்லைவாழ் அந்தணர் எழுப்பிய யாகத்தீயில் இருந்து வந்த புகை, விண்ணை முட்டி மேகத்தோடு கலந்திருந்தது. நகரத்துக்குள் சென்று ஈசனைக் காணும் தகுதி தனக்கு இல்லை என்று வருந்தினார். இருந்த இடத்திலேயே அம்பலக்கூத்தனை நினைத்துப் பாடினார். தன் நிலை குறித்து ஈசனிடம் கூறினார். கோயில் மதிலைச் சுற்றிச் சுற்றி வந்தார்.
சிவலோகநாதர்


ஆனந்த நடனத்தைக் காண முடியவில்லையே என்றும், கண்ணிருந்தும் குருடனாக இருக்கிறேனே என்றும் அழுது அரற்றினார் நந்தனார். தன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் நந்தனாரை நினைத்து மகிழ்ந்த ஈசன், தில்லை வாழ் அந்தணர் தம் கனவில் தோன்றி, நந்தனாரை கோயிலுக்குள் அழைத்து வருமாறு பணித்தார். மேலும், அவரை தீயிடை மூழ்கச் செய்து தன் சந்நிதிக்குள் அழைத்து வரச் சொன்னார்.

மறுநாள் காலை தில்லைவாழ் அந்தணர்கள், நந்தனாரை அழைத்து வந்து அவருக்கு எதிரே தீ மூட்டினர். ‘நெருப்பிடை மூழ்கி வருக’ என்று அந்தணர்கள் கூற, நந்தனாரும் அவ்வாறே தீயினுள் மூழ்கி எழுந்தார். பால் போன்ற மேனியும், திருவெண்ணீற்று ஒளியும், உத்திராட்ச மாலையும், முப்புரி நூலும் விளங்க, ஒரு முனிவரைப் போன்று சடைமுடியுடன், கோடி சூரிய பிரகாசத்துடன் வெளியே வந்தார் நந்தனார்.

நந்தனார்


அந்தணர் வழிகாட்ட, நந்தனார் முன் சென்றார். கரம்குவித்து, ஐந்தெழுத்து ஓதியபடி, ஆடுகின்ற கூத்தன் முன் நின்றார். திரு முன் நின்றவர் திரும்பவே இல்லை. அம்பலத்தரசன் திருவடி நிழலிலேயே ஐக்கியமாகி, உமையொரு பாகரோடு கலந்தார் திருநாளைப் போவார் என்றழைக்கப்படும் நந்தனார். எம்பெருமானின் மலரடிகளில் உறையும் பேரின்ப வாழ்வைப் பெற்றார்.

‘திருநாளைப் போவார் அடியார்க்கடியேன்’

No comments:

Post a Comment