Thursday, April 4, 2024

இடிதாங்கி தந்த மாமேதை!



மெழுகுவர்த்தி வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றியவர், ஜோன்சா பிராங்க்ளின். இவரது மனைவி, அபையா போல்கர். அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் வசித்தனர். இந்த தம்பதிக்கு, 15வது குழந்தையாக, 1706ல் பிறந்தார் பெஞ்சமின் பிராங்க்ளின்.

சுறுசுறுப்பும், குறும்புத்தனமும் நிறைந்தவர்; எந்த பொருளையும் ஆழ்ந்து நோக்குவார். சிறுவர்களை ஒருங்கிணைப்பதில் திறன் மிக்கவர். கற்று கொடுப்பதை கவனமாய் கேட்டு, ஒப்பிக்கும் ஆற்றலை பெற்றிருந்தார்.

பாஸ்டன் நகர பள்ளியில், எட்டு வயதில் லத்தீன் மொழி கற்றார். பின், இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளையும் கற்றார். 9ம் வயதில் புதிய கணக்குகளை உருவாக்கிய திறன் கண்டு, ஆசிரியர்கள் வியந்தனர்.

ஓய்வு நேரத்தில், தந்தைக்கு உதவினார். புதியவற்றை ஆர்வமாக கற்றுக் கொண்டார். 14 வயதில் ஒரு கட்டுரை எழுதி, அவரது அண்ணன் நடத்திய பத்திரிகைக்கு அனுப்பினார். அது பிரசுரமானதும் மகிழ்ந்தார்; தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.

அப்போது, ஐரோப்பிய நாடான இங்கிலாந்தின் அடிமையாக இருந்தது அமெரிக்கா. பெஞ்சமின் எழுதிய கட்டுரை ஒன்று, இங்கிலாந்து அரசுக்கு எதிராக இருந்தது. இதனால் பத்திரிகை உரிமையாளரான அவரது அண்ணன் ஜேம்ஸ்க்கு, சிறை தண்டனை கிடைத்தது. வேதனையடைந்த பெஞ்சமின், கட்டுரை எழுதுவதை நிறுத்தினார்; வேலைதேடி, 17 வயதில் நியூயார்க் சென்றார்.

பல இடங்களில் பணி செய்து, சிறுக சிறுக சேமித்த பணத்தில், எழுது பொருள் விற்பனையகம் ஒன்றை துவங்கினார். ஓய்வு நேரத்தில் கட்டுரைகள் எழுதினார்.

ஏழை, எளியவர்கள் படிப்பதற்காக, ஒரு வாசகசாலையை துவக்கினார். இது தான், அமெரிக்காவின் முதல் வாசகசாலை எனப் புகழ் பெற்றது.

அந்த காலத்தில், கிட்டப் பார்வைக்கும், துாரப்பார்வைக்கும் தனித்தனி கண்ணாடிகள் இருந்தன. இரு வேறுப்பட்ட லென்ஸ்களை, ஒரே கண்ணாடியில் பொருத்தி, இந்த சிரமத்தை குறைத்தார் பெஞ்சமின்.

மின்சாரத்தில், நேர், எதிர் சக்திகள் இருப்பதை கண்டுபிடித்தார். அதுவே, 'பாட்டரி' என்ற மின்கலன் தயாரிக்க உந்தியது.

ஒரு மழை நாளில், மேகங்கள் உரசி, மின்னல் பிரகாசிப்பதைக் கண்டார். அதை ஆராய்ந்து மின்னலும், மின்சாரமும் ஒன்று தான் என, உலகுக்கு உணர்த்தினார்.

இடி முழக்கத்தால் கட்டடங்களில் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, இடிதாங்கியை கண்டுபிடித்தார். அறிவியல் அறிஞர்கள் அவரை பாராட்டி கவுரவித்தனர். உலகம் எங்கும் அவர் புகழ் பரவியது.

அமெரிக்க விடுதலைக்காக போராடியவர்களுக்கு பல வகையிலும் உதவினார். கட்டுரைகள் தீட்டி உத்வேக மூட்டினார். நீதி வழுவாத ஒழுக்க நெறியை பின்பற்றினார். அவரது ஒழுக்கத்தைப் பாராட்டி, அமெரிக்காவில் பிலடெல்பியா மாகாண நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அமெரிக்க அரசியல் சாசன உருவாக்க குழுவிலும் பங்கேற்று பணிகள் செய்தார்.

அவரது சேவைகளைப் பாராட்டி, ஐரோப்பிய நாடான பிரான்சை ஆண்ட மன்னர், 16ம் லுாயி, மதிப்புமிக்க, 400 வைரங்கள் பதித்த பதக்கத்தை பரிசாக வழங்கினார்.

கடும் உழைப்பு, நேர்மை, ஒழுக்கம், பிறர் நலம் பேணல், நாட்டு முன்னேற்றம் என, ஓயாது உழைத்த பெருமகன், 1790ல் மறைந்தார்.

உலக மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, பெஞ்சமினை நினைவில் கொள்வோம்!

No comments:

Post a Comment