Sunday, December 21, 2025

அவர்களைக் கண் போன்று பாதுகாப்போம்.

 பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது. 

பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக  ஆற்றல் குறைந்து,  மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்து விட்டால்,

அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான  மலைகளின் மேல் வைத்து விட்டு வந்து விடுவார்கள். 

எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, 

தாகத்தினால் தனிமையில் வாடி  வதங்கி மடிவார்கள்.

இப்படியான சூழ்நிலையில் ஓர்  இளைஞன் முதுமையடைந்த தன்  தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி  நடந்து கொண்டிருந்தான்.

தாய்,மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!

ஆனால் சிறிது நேரத்தில் தன் தோளில் இருந்த தாயார் ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னச்சின்னக்  கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான். 

உடனே, 

"அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' 

என்று கேட்டான்.

அதற்கு தாயார், 

""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும் போது வழி  தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?

இங்கே போடப்பட்டுள்ள கிளைகளை கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம்.

அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.

வயதாகி விட்டத் தன்னை தவிக்க விட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்தத் தாயா பயனற்றவர் என்று உள்  மனம் கேட்க,

அவன் தன் தாயை மீண்டும் தன் வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .

அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது. 

இந்தக் கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்கு மிக  முக்கியம்..

நீ  நல்லவனா கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுத்தவள் உன்  தாய் 

எத்தனை ஜென்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க  முடியாது என்றால் அது உன் தாயின் கருவறை என்பதை மறந்து விடாதே.

எத்தனையோ கஷ்டங்கள்,நஷ்டங்கள்

துன்பங்கள்,துயரங்கள்,அசிங்கங்கள்,

அவமானங்கள் கடந்த பிறகும் ஒன்றுமே தெரியாதது போல் காட்டிக் கொண்டு குடும்பத்தின் மத்தியில்  சிரித்துக் கொன்டிருக்கும் தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும்  புத்தகம் இந்த உலகில் வேறெதுவுமில்லை. 

நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள். 

அவர்களைக் கண் போன்று பாதுகாப்போம்.

No comments:

Post a Comment