Friday, December 26, 2025

அகந்தை தான் மனிதனை வீழ்த்தும்!

 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

அகந்தை என்பது ஒரு  கொடிய நோய்! 

அகந்தை கொண்டவர்கள் வீழ்ந்தார்கள் என்பது தான் வரலாறு. எந்த நோய் வந்தாலும் மருந்து உட்கொண்டால் நலமாகி விடும். ஆனால் அகந்தை என்னும் நோய் மனிதனை தாக்கி விட்டால் மருந்து உட்கொண்டு பயன் இல்லை! மாறாக மண்ணில் மடிந்து மறைந்து போவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்த அகந்தை மிகச் சாதாரண மனிதர்கள் முதல் பெரிய அறிஞர்கள் வரை அனைவரையும் சீண்டிப் பார்த்திருக்கின்றது. 

இந்த அகந்தை

ஔவையாரையும் விடவில்லை.

தமிழில் தன்னை மிஞ்ச யாருமில்லை யென்று நினைத்திருந்தார் ஔவையார். 


"எது வேண்டும்? "சுட்ட பழமா? சுடாத பழமா?" என்று கேட்டு செருக்கழித் தான் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் உருவிலே வந்த முருகன். அப்பொழுது ஔவையார் பாடல் வழியாக புலம்பியது தான் கீழே உள்ள பாடல்:


"கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி

சிறுகதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்

காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது

ஈரிரவும் தூங்காது என் கண்"


இதன் பொருள் இது தான் நண்பர்களே!


பெரிய பெரிய கருங்காலி மரங்களை யெல்லாம் 

வெட்டித் தள்ளிய உறுதியான இந்த இரும்புக் கோடாலி, இளங் கதலித் தண்டுக்கு (வாழை மரம்) வளைந்து விட்டதே.இந்தப் பெருங்காட்டில் மாடு மேய்க்கின்ற இந்தச் சிறுவனிடத்தில் நான் தோற்றதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு உறக்கமே வாராதே என்று புலம்புகின்றார் ஔவையார்.


அரிசியிலிருக்கும் கருக்கு சுவையை அழிப்பது போல, உள்ளத்தில் தோன்றும் செருக்கு பெருமையை அழித்து விடும். 


எவ்வளவு உயர்ந்தாலும் அடக்கமாக இருக்க வேண்டும். "நிலை உயரும் பொழுது பணிவு வந்தால், உலகம் உன்னை வணங்கும்" என்பது கண்ணதாசன் அவர்களின் வைரவரிகளாகும்.


அகந்தை என்பது கொடியைப் போன்றது. கொடி கொம்பினடியில் பிறந்தாலும், பிறகு கொம்பையே வளைத்து மூடி விடும்.

அகந்தையும் அப்படித் தான். தான் தோன்றிய இடத்தையும் அழித்து விடும். அதனை "பொறையாம் அறிவால்" என்ற அரிவாளைப் பயன் படுத்தி அகந்தையை அழித்து விடலாம் என்கிறார் அருணகிரியார்.



🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

No comments:

Post a Comment