Thursday, May 16, 2024

நம்மதி அங்கே தானாகவே உருவாகிறது

 நமது வாழ்கையில் நாம் எதிர்நோக்கும் அனைத்து விசயங்களும் நமக்கு சாதகமாக நடந்துவிட்டால் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்று எண்ணுகிறோம். ஆனால் இங்கு எதுவுமே நாம் எதிர்பார்ப்பது போல நடப்பதில்லை, ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதனால் எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி என்று அதனை தேடி அழைந்து கொண்டு இருக்கிறோம். 


இங்கே நிம்மதி என்பது எங்கேயும் யாராலும் யாருக்கும் கொடுத்து விடவும் முடியாது. அதனை யாரும் எங்கிருந்தும் விலைக்கு வாங்கவும் முடியாது. நமக்கான நிம்மதியை நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும். அது எவ்வாறு என்பது பற்றி இப்பதிவில் ஆராய்வோம்.


நாம் நம்முடைய வாழ்கையில் குடும்பம், தொழில் மற்றும் சமுதாயம் ஆகிய மூன்று அமைப்புகளிலும் நமக்கான பொருப்புகளை சரியாக நிறைவேற்ற கற்றுக்கொள்வது அவசியம். நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றையும் நாம் முழுமையாக நிறைவேற்றும் போது அங்கு நிம்மதி உருவாகிறது. 


நாம் நமக்கான வாழ்கையை சிறப்பாக வாழ நமக்கென சுயஒழுக்க விதிமுறைகளை உருவாக்கி அதனை நமது பழக்கவழக்கங்களாக உருவாக்கி வாழகற்று கொள்ளும் போது அங்கே நம்மிடத்திலேயே நிம்மதியும் அதில் இரண்டற சேர்ந்தே கலந்து இருக்கிறது. 


நமது வாழ்கையில் நமது ஒவ்வொரு செயல்களிலும் முழுமையான கவனம் செலுத்தும் போது நாம் நிகழ் காலத்தில் வாழ பழகிகொள்கிறோம். கடந்தகாலத்தை பற்றிய கவலையோ, எதிர்காலத்தை பற்றிய பயமோ இல்லாத போது நம்மதி அங்கே தானாகவே உருவாகிறது.


முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது, எங்கேயும், யாரிடத்திலும் அதிகம் எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ளக்கூடாது. எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது அங்கே நிம்மதி என்பது முற்றிலுமாக இல்லாமல் போய் விடுகிறது.


கூடுமான வரையில் நம்மால் இயன்ற நன்மைகளை  மற்றவர்களுக்கு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் யாருக்கும் மனதாரக்கூட தீங்கிழைக்க கூடாது. இது நாம் நிம்மதியான வாழக்கையை வாழ வழிவகுக்கும்.


அவரவர் எண்ணங்களுக்கு ஏற்பவே அவரவர்களுக்கான வாழ்கை அமைகிறது. ஆக நமது எண்ணங்களை எவ்வளவு நேர்மறையானதாக கட்டமைத்துக்கொள்கிறோமோ அதற்கேற்பவே நமது அகம் மற்றும் புறசூழல்களை நம்மால் உருவாக்கி கொள்ள முடிகிறது.  நமது வாழ்கைக்கான சூழல் சிறப்பாக கட்டமைக்கப்படும் போது நமக்கான நிம்மதியும் அதனுடன் சேர்த்தே கட்டமைக்கப்படுகிறது.


நம்முடைய வாழ்கையில் ஒவ்வொரு தருணத்திலும் வரும் சோதனைகளை எதிர்கொள்ள பழகுவது மிகவும் அவசியம். நாம் எவ்வளவு தூரம் சோதனைகளை சிறப்பாக எதிர்கொள்கிறோமோ, அங்கே நமக்கான வாழ்கை பாதையில் நாம் சிறப்பாக பயணித்துக்கொண்டு இருக்கிறோம் என்பது  அர்த்தமாகிறது.  இதில் சிறப்பு என்பது நிம்மதியையே குறிக்கிறது.


நமது வாழ்கையில் வரும் வெற்றி மற்றும் தோல்விகள் இரண்டையும் சமமாக ஏற்றுக்கொள்ள பழகுவது அவசியம். ஏனெனில் வெற்றி என்பது தங்ககூண்டில் அடைபட்டு கிடப்பது போல, தோல்வி என்பது இரும்பு கூண்டில் அடைபட்டு கிடப்பது போலாவும் ஆகும். வெற்றி நம்மை விட்டு நீங்கினாலும், தோல்வி நம்மை நெருங்கினாலும் இரண்டுமே நமது நிம்மதியை சீர்குழைத்துவிடும்.


நாம் நிம்மதியாக வாழ நமது மனதை எப்போதும் அமைதியாக வைத்திருப்பது மிகவும் அவசியம். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களாலும், எதிர்மறையான உணர்ச்சிகளாலும் மட்டுமே மனஅமைதி சீர்குழைகிறது. மனதை எப்போதும் அமைதியாக வைக்க தியான பயிற்சி மற்றும் மூச்சுபயிற்சி தினமும் மேற்கொள்வது சிறந்தது.


மற்றவர்களுடைய எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஒருபோதும் செவிமடுக்கக்கூடாது. இது நமது நிம்மதியை முழுமையாக அழித்துவிடும். நமக்கான வாழ்கை பாதையில் தொடர்ந்து பயணிக்க நாம் வகுத்துக்கொண்ட வழிமுறைகளில் முழுமையாக கவனம் செலுத்த கற்றுக்கொள்ள வேண்டும். 


நம்முடைய ஒவ்வொரு செயல்களிலும் முழுகவனத்தை செலுத்தும் போது நாம் ஒவ்வொரு கணமும் விழிப்புணர்வோடு வாழ பழகி கொள்கிறோம். விழிப்புணர்வோடு வாழும் வாழ்கையே நிம்மதியான வாழ்கையாகிறது.


No comments:

Post a Comment