Friday, May 24, 2024

ஏ.டி.எம். கார்டு வைத்திருந்தாலே விபத்து, ஆயுள் காப்பீடுகள் உண்டு

 🙏🏽🙏🏽

ஏ.டி.எம். கார்டு வைத்திருந்தாலே விபத்து, ஆயுள் காப்பீடுகள் உண்டு - எப்படி பெறுவது

கட்டுரை தகவல்

எழுதியவர்,சுபாஷ் சந்திர போஸ்

பதவி,பிபிசி தமிழ்

நம்மில் பலரும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அல்லது விபத்து காப்பீட்டுத் திட்டம் குறித்து கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருப்போம். அதெல்லாம் நாம் தவணை முறையில் பணம் செலுத்தி நமக்கு விபத்து நேரும்போது அல்லது இறப்பு நிகழும்போது அதன் பலன்களை நாமோ அல்லது நமது குடும்பமோ பெற்று

க் கொள்ளும் வகையிலானது.

ஆனால், நீங்கள் வங்கியின் ஏடிஎம் கார்டு வைத்திருந்தாலே போதும் உங்களுக்கு இந்தக் காப்பீடுகள் கிடைக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அதற்கென தனியே கட்டணம் செலுத்த தேவையில்லை. அதன் முழு விவரங்களை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான பணப் பரிமாற்றம் இணையம் வழியாகவே நடைபெறுகிறது. சாதாரண உள்ளூர் கடைகள் தொடங்கி உலகச் சந்தை வரை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முக்கியமான அங்கமாக மாறிவிட்டது. அதில் பெரிய பங்கு வகிப்பது டெபிட் கார்டுகள் (Debit Cards) என்றழைக்கப்படும் ஏடிஎம் கார்டுகள் தான்.

இந்தியாவில் மட்டும் வங்கித் துறையில் நூற்றுக்கணக்கான பொதுத் துறை, தனியார் துறை, சர்வதேச வங்கிகள் இயங்கி வருகின்றன. அதைத் தாண்டி குறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் வங்கி சார்ந்த அலுவல்களைச் செய்து வருகின்றன.

கடந்த செப்டம்பர் மாத ஆர்பிஐ (RBI) அறிவிப்பின்படி, இந்த வங்கிகளில் 966 மில்லியன் ஏடிஎம் கார்டுகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட அட்டைகளை வைத்திருக்கும் கணக்கும் அடக்கம்.

டெபிட் கார்டு காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?

இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் தொடங்கி தனியார் வங்கிகள் வரை அந்தந்த வங்கிகளின் விதிகளுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஏடிஎம் கார்டு என்று அழைக்கப்படும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்.

இவற்றின் வகையைப் பொறுத்து ஏடிஎம் இயந்திரங்கள் வழியாக பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி மற்றும் வெவ்வேறு தேவைகளுக்காக அவற்றைப் பயன்படுத்தி பணப் பறிமாற்றம் செய்தல் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், அதையும் தாண்டி இந்த கார்டுகளின் மூலம் பயனர்களுக்கு மற்றொரு ஆதாயமும் உள்ளது. அதுதான் “டெபிட் கார்டு காம்ப்ளிமென்ட்ரி இன்சூரன்ஸ் திட்டம்” (Complimentary Insurance Cover) என்ற பெயரில் வழங்கப்படும் விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம். இதர காப்பீட்டுத் திட்டங்களைப் போல மாதாந்திர அல்லது வருடாந்திர தவணை பணமெல்லாம் இதற்கு கட்டத் தேவையில்லை.

மாறாக, நீங்கள் பயன்படுத்தும் டெபிட் கார்டுகளுக்காக வருடந்தோறும் ஒரு தொகை உங்களது வங்கியால் பிடித்தம் செய்து கொள்ளப்படும். இதிலிருந்து ஒரு பகுதி குறிப்பிட்ட பயனரின் சார்பில், வங்கி பிற காப்பீட்டு நிறுவனங்களில் நிர்வகித்து வரும் காப்பீடு கணக்கிற்கு சென்றுவிடும்.

இந்த இன்சூரன்ஸ் பணத்தையே நீங்கள் விபத்து மற்றும் உயிரிழப்பு சமயங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், டெபிட் கார்டு பயன்படுத்தும் பெரும்பான்மையான மக்களுக்கு இதுகுறித்த விவரம் ஏதும் தெரியாதது ஆச்சரியம் அளிக்கக் கூடியதாக உள்ளது.

பொதுமக்கள் மட்டுமல்ல பல வங்கி ஊழியர்களுக்கே இப்படியொரு காப்பீட்டு திட்டம் இருப்பது தெரியவில்லை என்று கூறுகிறார் வங்கியில் எழுத்தராகப் பணியாற்றி வரும் சுனில் குமார். இதனால் மிக அரிதாகவே வங்கிக் கணக்காளர்கள் இந்தக் காப்பீட்டுத் தொகையைக் கோரி வங்கிகளில் விண்ணப்பிப்பதாகவும், வங்கிகளும் அதுகுறித்த பயிற்சியை ஊழியர்களுக்கு வழங்குவதில்லை என்றும் தெரிவிக்கிறார்.

மேலும் பேசிய அவர், பெரும்பான்மையான வங்கிகள் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் இது போன்ற இன்சூரன்ஸ் இருப்பது குறித்துச் சொல்வது இல்லை. அது ஊழியர் எண்ணிக்கையோடு தொடர்பு கொண்டது. எனவே, உங்களைப் போன்ற ஊடகங்கள் வெளியே சொன்னால்தான் உண்டு என்று கூறினார்.

டெபிட் கார்டு காப்பீட்டு திட்டம் எப்படி செயல்படுகிறது?

ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமாக ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அதன் வருடாந்திர கட்டணம் மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து அந்த கார்டின் படிநிலை இருக்கும். உதாரணமாக சில்வர், கோல்டு, டைமண்ட் என்ற படிநிலையில் இது இருக்கும்.

இதன் அடிப்படையில் உங்களின் இன்சூரன்ஸ் தொகையும் அமையும். நீங்கள் அதிகமான கட்டணம் செலுத்தும் டெபிட் கார்டு பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதிகமான இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என்று கூறுகிறார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவரும், முன்னாள் வங்கி ஊழியருமான சி.பி. கிருஷ்ணன்.

வங்கிகள் பொது மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களோடு இணைந்து இந்த டெபிட் கார்டு காம்ப்ளிமெண்ட்ரி இன்சூரன்ஸ் கவரேஜ் என்று சொல்லும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.

ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் ஒவ்வொரு வங்கியின் குழுமமும் இதுபோன்ற பலன்கள் மற்றும் விதிகளை நிர்ணயிக்க முடியும். அப்படி அநேகமாக எல்லா வங்கிகளும் இந்தத் திட்டத்தைக் கொண்டுள்ளன. எனக்குத் தெரிந்தே 20 வருடங்களுக்கும் மேலாக இந்தத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது என்கிறார் அவர்.

இன்சூரன்ஸ் பலன்கள்

பெரும்பாலும் டெபிட் கார்டு இன்சூரன்ஸ் கவரேஜ் குறித்து அனைத்து முன்னணி வங்கிகளும் தங்களது வலைதளங்களில் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளன. அதன்படி விபத்து மற்றும் உயிரிழப்புகளுக்கு இன்சூரன்ஸ் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதில் ஒவ்வொரு வங்கிகளின் கொள்கைகளுக்கு ஏற்ப விதிமுறைகள் மாறும். அதன்படி, விபத்து நடந்த 3 மாதம் முதல் 6 மாதங்களுக்குள் பயனாளர் அல்லது அவர் சார்ந்தவர்கள் இன்சூரன்ஸ் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதில்,

வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படுதல்

தனிப்பட்ட விபத்து காப்பீடு

விமான விபத்து காப்பீடு

பொருட்களை வாங்குவதற்கான பாதுகாப்பு

பொருட்கள் இழப்பு மற்றும் சேதம்

உள்ளிட்டவற்றுக்காக இன்சூரன்ஸ் பலன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் எதைத் தர வேண்டும் என்பது அந்தந்த வங்கிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. வங்கிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தால் விபத்தின் தன்மையைப் பொறுத்து குறைந்தபட்சமாக 50,000 ரூபாயில் தொடங்கி 2 கோடி வரை இன்சூரன்ஸ் பலன்கள் கிடைக்கும்.

காப்பீட்டுத் தொகையை எப்படிப் பெறுவது

டெபிட் கார்டு காப்பீட்டு திட்டம் வழியாகப் பணம் பெறுவது அவ்வளவு பெரிய கடினமான வேலை ஒன்றும் இல்லை என்கிறார்

சுனில்குமார்.

பொதுவாக வங்கிக்குச் சென்று அதற்கான விண்ணப்பங்களைப் பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முறையாகப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு சேர்த்து சமர்ப்பித்தால் போதும்.

அதை நாங்கள் எங்கள் வங்கியில் இன்சூரன்ஸ் தொடர்பான பணிகளைக் கையாளும் அதிகாரிக்கு அனுப்புவோம். அவர் அவற்றைச் சரிபார்த்து அதற்கான வழிமுறைகள் செய்வார். அதன்பிறகு அந்த விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பிறகு அந்த பயனாளருக்குப் பணம் வழங்கப்படும் என்கிறார் அவர்.

என்னென்ன காரணங்களுக்காக காப்பீடு விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்?

என்னென்ன காரணங்களுக்காக இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என்று சுனில் குமாரிடம் கேட்டதற்கு, ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு விதமான விதிமுறைகளைக் கொண்டுள்ளன என்று கூறினார்.

"முதலில் வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டும். விபத்து நடந்த தேதியில் இருந்து 3 மாதங்களுக்குள் சம்மந்தப்பட்ட நபர் அல்லது அவர் சார்ந்தவர்கள் அந்த வங்கியில் விண்ணப்பிக்கத் தவறி காலம் தாழ்த்தி விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படலாம்.

அதேபோல், இறப்பு சான்றிதழ், வங்கி கணக்கு தொடர்பான ஆவணங்கள், அரசு அடையாள அட்டைகள் மற்றும் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட சில ஆவணங்கள் வங்கியால் கேட்கப்படும். இவற்றைச் சமர்ப்பிக்கத் தவறினாலும் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.

அதேபோல் அந்த வங்கியின் விதிமுறைப்படி சம்மந்தப்பட்ட வங்கிக் கணக்குதாரர் குறிப்பிட்ட கால அளவிற்குள் அந்த டெபிட் கார்டை ஒருமுறையாவது பயன்படுத்தியிருக்க வேண்டும்.

விமான விபத்துகளில் பாதிக்கப்பட்டவர் அந்த டெபிட் கார்டை பயன்படுத்தி விமான பயணச்சீட்டை வாங்கியிருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் அனைத்தும் வங்கிக்கு வங்கி வேறுபடும்," என்கிறார் சுனில்.

மக்களுக்கு ஏன் தெரிவதில்லை?

பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு வங்கிகள் இந்த விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களை வழங்கி வருகின்றன. இதில் ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு நடைமுறை இருக்கும்.

"இதுகுறித்த தகவலை டெபிட் கார்டை வழங்கும்போது அதோடு தரப்படும் ஆவணங்களில் ஆங்கில மொழியில் வழங்குவதால் மக்கள் பெரும்பாலும் அதைப் படிப்பதில்லை. வங்கிகளும் இதை மக்களுக்கு தெரியப்படுத்த எந்த முயற்சியும் எடுப்பதில்லை," என்கிறார் எல்ஐசி ஊழியர் மற்றும் தென் மண்டல காப்பீடு ஊழியர் கூட்டமைப்பின் இணை செயலாளரான சுரேஷ்.

வங்கிகளில் இருக்கும் நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ரிசர்வ் வங்கியின் கடமை. அதற்காகவே வங்கிகளில் இருக்கும் யாராலும் பயன்படுத்தப்படாத ஆயிரக்கணக்கான கோடி டெப்பாசிட் பணங்களை பயன்படுத்தப் போவதாக அறிவித்தது ரிசர்வ் வங்கி.

ஆனால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் மக்களுக்கு ஏற்படும் நிதியிழப்பிற்கு இன்சூரன்ஸ் உள்ளது என்பதைக் கூட மக்களுக்கு அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ முறையாகச் சொல்வதில்லை என்று விமர்சனத்தை முன்வைக்கிறார் சி.பி. கிருஷ்ணன்.

ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இருக்கிறதா?

பயனருக்கு குறிப்பிட்ட வங்கிப் பணம் செலுத்தத் தவறினால் யாரிடம் புகார் தெரிவிப்பது என்ற கேள்விக்கு, "ஒரு வங்கியின் ஒட்டுமொத்த நிர்வாக செயல்பாட்டின் மீதும் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உள்ளது. எனவே அதன் ஒரு பகுதியான இந்த இன்சூரன்ஸ் குறித்த பிரச்னைகளின் போதும் அது தலையிடலாம்.

அப்படி வங்கிகள் தகுதியான பயனருக்கு பணம் கொடுக்க மறுத்தால் அவர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த ஆவணங்களோடு ரிசர்வ் வங்கியை அணுகலாம். ஆனால், இதற்கு எந்தளவு தீர்வு கிடைக்கும் என்று தெரியவில்லை," என்கிறார் சுனில்குமார்.

கோரப்படாத இன்சூரன்ஸ் பணம் என்ன ஆகிறது?

டெபிட் கார்டு காப்பீட்டு திட்டம் குறித்து யாருக்குமே தெரியாத நிலையில் யாருமே இதைக் கேட்டு வர மாட்டார்கள். அந்தச் சூழலில் மொத்த பணமும் குறிப்பிட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கே சென்று விடும்.

"அதுவும் அரசு நிறுவனமாக இருந்தால் அரசுக்கு அதில் ஒரு பகுதி வரி உள்ளிட்ட வழிகளில் சென்று விடும். இதே தனியார் நிறுவனமாக இருந்தால் மொத்த பணமும் அவர்களுக்கு லாபம்தான்," என்று குற்றச்சாட்டை முன்வைக்கிறார் சி.பி.கிருஷ்ணன்.

ஆனால், "பொது இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் ஒருவரிடம் பேசியபோது, எந்தத் திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குப் பணம் வந்தாலும் அது ஒட்டுமொத்த வரவாக கணக்கு வைக்கப்படும்.

இந்நிலையில் வெவ்வேறு காப்பீடு திட்டங்களின் மூலம் பணம் கோரும் மக்களுக்கு அந்தப் பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்படும். எனவே, எந்தப் பணமும் எங்களிடம் இருக்காது. அது வரவும் செலவுமாகவே இருக்கும்," என்றார்.

No comments:

Post a Comment