Thursday, February 29, 2024

மணத்தக்காளி கீரை கூட்டு - அல்சருக்கான அருமருந்து

மணத்தக்காளிக்கீரை கூட்டு:


தேவையான பொருட்கள்:

மணத்தக்காளிக் கீரை – 1கட்டு

துவரம் பருப்பு :-  ஒரு கைப்பிடி

மஞ்சள் பொடி – கால் டீஸ்பூன்

சர்க்கரை – ஒரு சிட்டிகை

கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறிய அளவு

கல் உப்பு - தேவைக்கு ஏற்ப


அரைக்க வேண்டிய பொருட்கள்:


துருவிய தேங்காய் – ஒரு குழிக்கரண்டி அளவு

பச்சை மிளகாய் – 2 நம்பர்

ஜீரகம் – ஒரு டீஸ்பூன்

அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்


தாளிக்க வேண்டிய பொருட்கள்:


கடுகு – ஒரு டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

வற்றல் மிளகாய் – ஒரு நம்பர்

கடலெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்


செய்முறை:


முதலில் கீரையை மட்டும் ஆய்ந்துக்கொள்ளவும். தண்டு உபயோகப்படாது. பிறகு கீரையை நன்கு அலசவும். அதன் பிறகு பத்து நிமிடம் வடிதட்டில் வடிய விடவும். அடுத்து கீரையப் பொடியாக நறுக்கவும்.


துவரம் பருப்பை குக்கரில் அல்லது தனியாகவோ மஞ்சள் பொடிப் போட்டு வேகவிடவும்.


ஒரு கடாயில் சிறிது அளவு தண்ணீர் ஊற்றவும். அது கொதிக்க ஆரம்பித்தவுடன் மஞ்சள் பொடி, உப்பு, சக்கரை, கட்டிப் பெருங்காயம் போடவும். பிறகு கீரையைச் சேர்க்கவும்.


அரைக்க வேண்டிய தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம் மூன்றையும் ஒன்றாகப் போட்டு அரைக்கவும். நன்கு மசிந்தவுடன், அரிசிமாவு சேர்த்து ஒரு சுத்து சுத்தவும்.


கீரை வெந்தவுடன், வெந்த துவரம் பருப்பைச் சேர்க்கவும். அடுத்து தேங்காய் கலவையைச் சேர்க்கவும்.


கடைசியில் தாளித்துக் கொட்டவும்.

அருமையான மணத்தக்காளிக் கீரைக் கூட்டு ரெடி.


முக்கியக் குறிப்பு:


இக்கீரை நல்ல மருத்துவ குணம் உடையது. குறிப்பாக குடல்புண் என்கின்ற அல்சருக்கு அருமருந்து.


கீரையை நறுக்கியவுடன் சமைத்து விடணும். நேரம் கழித்து சமைத்தால் அதிக கசப்புத் தன்மைத் தெரியும்.


இக்கீரை மருத்துவ குணம் நிறைந்ததால் வெங்காயம், பூண்டு போடக்கூடாது. இவை இரண்டிற்கும் அமில, காரத் தன்மை இருப்பதால் குறிப்பாக அல்சர் உள்ளவர்களுக்கு தேவை இல்லை. அல்சர் உள்ளவர்கள் பச்சை மிளகாய்க்குப் பதில் சாம்பார் பொடி ஒரு ஸ்பூன் கீரை வேகும் போதே சேர்க்கலாம்.


அல்சர், நெஞ்சுஎரிச்சல், அசிடிட்டி, வயிற்று வேக்காளம் (காதில் உள் பக்கம் அரிக்கும்) உள்ளவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் செய்து சாப்பிடலாம். நாளைடைவில் அல்சரின் தாக்கம் குறையும். ஆரோக்கியமாக வாழலாம்.


காலை எழுந்து பல் தேய்த்தவடன், வெறும் வயிற்றில் கீரைக் கூட்டை ஒரு சிறிய கப்பில் எடுத்துக்கொண்டு பொறுமையாகச் சாப்பிடவும். அரை மணி நேரம் கழித்து காபி அல்லது டீ குடிக்கலாம்.


இக்கீரை அதிக குளிர்ச்சி உடையது. அதனால் பாசிப்பருப்பும் குளிர்ச்சியாக இருப்பதால்  சேர்க்க வேண்டாம். துவரம் பருப்பே போதுமானது.


பொதுவாக அல்சர் உள்ளவர்கள் காபி/டீ குடிக்காமல் தவிர்த்தால் நல்லது.

No comments:

Post a Comment