Friday, February 2, 2024

வாழ்க்கை என்ற ஒரு அமைப்பில் “உணவென்பது” அத்தியாவசியம்!

 



பிடி உணவாக இருந்தாலும் சரி

பிடித்தமான உணவாக இருந்தாலும் சரி

ஒவ்வொரு உணவின் பின்பும்

ஒரு உற்பத்தி உண்டு!!

அதில்

உழைப்பும் உண்டு– அவ்வாறு

உழைக்கும் உழவனின்

உழைப்பை இங்கு

வார்த்தையாக படைக்கிறேன்…

பிடித்திருந்தால் படித்து பாருங்கள்!!


கஷ்டம் வந்த போதும்

காயும் வெயில் வந்த போதும்

வாய் திறந்து கடவுளை அழைக்கும்

முன்பு இங்கு

அனைவரின் கண்களையும்

தேடவைப்பது “வானம் தான்”…….


வான்மழை வந்தாள் மட்டுமே

விளைச்சல் என்ற ஒன்று

வீரியம் பெரும்


விரிசல் விட்ட எங்கள்

நிலங்களில் — வானம்

மனம் வைத்தால் மட்டுமே

மழைத்துளி

உயிர்த்துளியாக உருவடுக்கும்– அன்றதான்

என் உழவர் இனங்களுக்கு

நம்பிக்கை பிறக்கும்


பானைகளில் பாதுகாத்த விதைகள்

பாதைகளின் இடையே– வெயிலின்

பார்வைக்கு வைக்கப்படும்


விதைநெல்லின் மேல் அவனின்

விரல்படும் போதும்

வியர்வை விழும் போதும்

தன்னை மீறிய பற்றொன்று

பாதுகாத்த விதையை நனைக்கும்!!


மணலில் மறைத்து வைத்து!

மழைநீர் சொட்டும் வரை– நித்தம்

அதனை பிரியாமல்

நெடுநேரம் காவல் புரிவான்!!

விதைகளை முழு வெளிச்சத்தில்

பார்க்கும்போது அளவில்லா

ஆனந்தம்– அன்றுதான்

அவன் முகத்தில் தாண்டவமாடும்!!


பழுதென்று நினைத்த நிலங்களை

உழுது பார்க்க நேரம் வந்த போது

உறக்கமென்பது அவன்

உடலில் இருக்குமா?


தன் பொன் பாதங்களை

அம்மண்ணில் பதித்து

உழுவான்….!

கட்டித் தழுவான்…!!

கண்ணீர் விட்ட நிலத்தில்

தண்ணீர் விட்டு

முளைத்துவந்த விதைகளை

முழுவதுமாக பதிக்க முற்படுவான்!!


அன்பு கொண்ட அவனின்

கைகள் விதைகளை விதைக்கும்போது

முதன் முறை தெரியும்!

அவனின் பொறுமை எதுவென்று…!!


விதைக்கப்பட்ட விதையானது

வேர்ஊன்றி நிற்கும் வரை

அவனுக்கு வேறுவேலை

எதுவுமில்லை,

மண்ணில் இறங்கிய வேர்கள்

முளைத்து வந்த சிறு விளைச்சல்

இரட்டிப்பாக– இங்கு

மருந்து தேவை!

அதையும்

மறவாமல் செய்வான்!!

ஒருமுறை

நீர் இறைக்க

நாள்தோறும் வாய்காலினை சுற்றியே

அவனின் கண்கள்

அலைமோதும்!!

நிலம் காய

ஒரு மருந்து…

நிரந்தரமாக களைய

ஒரு மருந்து என

விருந்தாக எண்ணி விளைச்சலுக்கு

மருந்து தெளிப்பான்!!


பயிரிட்டு பாதுகாத்த தண்டில்

தானக கதிர் வந்து

கதிரவனை தேடும் போது

அவனின் கண்கள்

கணக்கில்லாமல் களிப்படையும்!!


வாய்கால்களில்

கொளைநெல் வந்து

வரப்பின் மேலா தலைசாய்ந்து

பூமியை வணங்கும் வரை– புரியாத

ஒரு பூகம்பம்

அவனை புரட்டி போட்டுச் செல்லும்!!


தலை வணங்கிய செந்நெல்லை

தான் வணங்கி

“அறுவடை செய்யும் நாள்”

வரும் வரை

அவனின் இன்னல்கள் எத்தனை?

அடிக்கும் காற்றிடம்

கைக்கட்டி நிற்பான்….

அண்ணாந்து பார்க்கும் வானத்திடம்

ஆதாரம் கேட்டு நிற்பான்….


ஆதரம் கேட்டு நின்றபோதும்

“அறுவடை நாளில்”

ஆயிரம் பேருக்கு உணவளிக்க

அவன் உண்டு— ஆனால்

தன்னுடை அடிவயிறு காய்ந்து

“நித்தம் உழைத்த உழவனுக்கு”

உற்பத்தியின் (உழைப்பின்) உண்மை

ஊதியத்தை கொடுக்க

யார் உண்டு?


பச்சை கட்டிய

பசுமை வயலில்

கதிர் வராமல் போனால்

“கடன் வாங்கி பயிரிட்ட”

அவனின் கதி என்ன?…..


இறுதி மாதம் நிறைவேறும்

தருணத்தில் — இருக்கும்

விளைச்சல் இயற்கை காரணியால்

நீரில் மூழ்கினால்

அவன் எதை நினைத்து பார்ப்பான்?


வயிற்றுக்கு கஞ்சி இல்லாத போதும்

“உழவன்” வாழவைத்த பயிர்களுக்கு

விலை நிர்ணயம்”

யார் முடிவு செய்வது?….

உற்பத்தி செய்தவனுக்குத் தான் தெரியும்

உழைப்பின் மதிப்பு– ஆனால்

அவனின் ஊதியத்தை

உரிமை குரல்விட்டு

கேட்ட முடியுமா?….


தான் விளைவித்த விளைச்சலுக்கு

தரம் தெரியாத ஒருவர்

விலை கொடுத்தால்– தாங்காத

அவனினா நெஞ்சம்

என்ன செய்யும்?…


தானக பசித்து

தாமதமாக புசிக்கும் போது

தன்னையறிமால் சிந்தனையொன்று

கசிந்தது சிந்தித்துப் பாருங்கள்

அப்போது புரியும்

உழவனின் வியர்வை துளிகளுக்கு

விலைமதிப்பே இல்லையென்று…!!


(ஒவ்வொரு உடல் வாழவும் உணவு என்பது அத்தியாவசியம். நாங்கள் அந்த உணவினை கேட்கவில்லை. உணவினை நாங்கள் உற்பத்தி செய்ய உறுதுணையாக இருந்து ஊக்கமளித்தால் போதும்.)


உழைப்பை மதிப்போம்…!

உழவனை மதிப்போம்…!!

விவசாயம் காப்போம்…!!



No comments:

Post a Comment