Thursday, February 15, 2024

குறை காணல்

ஒருவரை ஒருவர் ஏன் குறை பேசுகிறோம்? தன்னை விட ஒரு செயலை வேறு ஒருவர் திறமையாகச் செய்கிற போதும்,*


ஒரு மனிதன் தன் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுகிற போதும், நம்மிடம் பொறாமைத்தனம் மிகுதியாகின்ற போதும், நாம் மற்றவர்களின் மேல்  பொறாமை கொண்டு அவதூறு பேசுகிறோம்.*


மற்றவர்களின் குறையைக் காண்பது மிக எளிது.ஆனால் அந்தக் குறைகள் நம்மிடம் இல்லாமல் பார்த்துக் கொள்வது கடினம்.*


பிறருடைய குற்றங்களை அதிகமாகச் சிந்திப்பதை விட தங்களின் குற்றங்களை அதிகமாகச் சிந்தியுங்கள் என்பது நபியின் மொழி..*


நிறை கண்டால் போற்றுங்கள். குறை கண்டால் ஒன்றும் கூறாதீர்கள் என்பது பைபிளின் கூற்று.*


ஒரு பெரியவர் கையில் எப்போதும் ஒரு கண்ணாடி இருக்கும். அதை அடிக்கடி அதைப் பார்ப்பார்..பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார்.*


இதை வெகு நாட்களாக அருகில் வசித்து வந்த ஒரு இளைஞன் கவனித்துக் கொண்டு வந்தான்.*


ஒரு நாள்,அந்தப் பெரியவரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்..*


பின்பு அவரிடம் அய்யா,,''நீங்கள் அடிக்கடி அந்தக் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்களே, அது ஏதாவது அதிசயமான கண்ணாடியா? என்று வினவினான்.*


அதற்கு அந்தப் பெரியவர்,, ''சாதாரணக் கண்ணாடி தான். ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய!*


பாடமா!. கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?” என்றான்.*


ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படி சுட்டிக் காட்ட வேண்டும். எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை இந்தக் கண்ணாடியிடம் கற்க வேண்டும் !”*


*“எப்படி?”என்றான்..*


நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை.உள்ளதை உள்ளபடி காட்டுகிறது*


அதேபோல்,    மற்றவர்களிடம், நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டும்.*


எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது..*


கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும்.*


அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக் கூடாது.*


ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுவது இல்லை..இது கண்ணாடி தரும் பாடம்! என்றார்..*


*ஆம்.,தோழர்களே..*

*நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்கும் என்றால் திருத்திக் கொள்ள வேண்டும்..✍🏼🌹*

No comments:

Post a Comment