Wednesday, February 28, 2024

இன்பம் மற்றும் துன்பம்

நாம் நமது வாழ்கையில் பல இன்பம் மற்றும் துன்பங்களை எதிர்கொள்கிறோம். ஆனால் நம்மில் பலர் தான் அனுபவித்த துன்பங்களை மட்டுமே நினைத்து வருந்திக்கொண்டே இருக்கிறார்கள். நாம் ஒரு செயலை தேர்வு செய்யும் போதே அதில் இன்பம் மற்றும் துன்பம் இரண்டுமே கலந்து தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாததே வருத்தத்திற்கு காரணமாக அமைகிறது.

இன்பம் வரும் போது சந்தோசமாக ஏற்றுக்கொள்ளும் நாம் துன்பத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன். நம்மில் வரும் இன்பம் மற்றும் துன்பம் இரண்டிற்குமே காரணம் நமது மனநிலை தான். நாம் எதிர்கொள்ளும் எந்த ஒரு விசயத்தையும் எத்தகைய மனநிலையில் இருந்து அணுகுகிறோம் என்பதை பொருத்தே இன்பமோ அல்லது துன்பமோ நம்மை நெருங்குகிறது.

நாம் எதிர்கொள்ளும் துன்பத்திற்கு காரணம் நாம் மட்டுமே. நாம் மேற்கொள்ளும் செயலில் முழுகவனத்தை செலுத்தும் போது அச்செயலில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு குறைவு, மற்றும் வரும் தவறுகளையும் உடனே கண்டறிந்து அதனை சரிசெய்தும் கொள்ள முடியும். நாம் மேற்கொள்ளும் செயல்களில் கவனம் சிதறுவதாலேயே நமது வாழ்கையில் பல தருணங்களை நாம் சிதறடித்துக்கொண்டு இருக்கிறோம். 

மனிதன் ஒருவனுக்கு மட்டும் தன்னை உருவாக்கி கொள்ளவும், தன்னை தானே அளித்துக்கொள்வதற்குமான சக்தி அவனிடத்திலேயே இந்த பிரபஞ்ச பேராற்றல் வழங்கியுள்ளது. காரணம் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்திற்க்காக இப்பிரபஞ்சத்தில் பிறப்பெடுத்திருக்கிறோம். யாரொருவர் அதனை சரியாக புரிந்துகொண்டு தன்னை தானே சரியாக வழி நடத்திக் கொள்கிறார்களோ அவர்கள் அவர்களுடைய வாழ்கையின் நோக்கத்தை பூர்த்தி செய்கிறார்கள். 

நமது வாழ்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவால்களும் நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவே வருகின்றன என்கிற புரிதல் மிக அவசியம். நாம் எதிர்கொள்ளும் சவால்களை யாரொருவர் பிரச்சனைகளாக பார்க்கிறார்களோ அவர்களால் தொடர்ந்து முன்னேற முடியாது. மேலும் அவர்கள் தனக்கான வாழ்கை பாதையில் இருந்து விலகி நிச்சயம் மாற்று பாதையில் செல்ல எத்தணிக்கும் போது  மேலும் பல பிரச்சனைகளை சந்தித்தே தீர வேண்டும், இது உலக நீதி.

நாம் நமது வாழ்கையில் இல்லாததை எண்ணியே பல சமயங்களில் வருந்திக்கொண்டு இருக்கிறோம். இதனால் எதிர்மறையான எண்ணகளுடைய ஆதிக்கமே நம்மில் அதிகமாக இருக்கும். அப்போது நமது செயல்கள் மற்றும் உணர்ச்சிகளிலும் எதிர்மறையான தாக்கங்களே அதிக அளவில் வெளிப்படும். இது நம்மை பாதிப்பதோடு மட்டும் அல்லாது நம்மை சார்ந்தவர்களையும் பாதிக்கிறது. 

நம்மிடம் இல்லாததை எண்ணி வருந்துவதை காட்டிலும் நம்மிடம் இருப்பவைகளுக்குக்காக பிரபஞ்ச சக்திக்கு மனதார நன்றி செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். பிரபஞ்சசக்தி தேவையானவற்றை தேவையான தருணங்களில் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

நாம் ஒரு செயலை மேற்கொண்டு இருக்கும் போது நம்மை திசை திருப்ப பல கவனச்சிதறல்கள் நம்மில் உண்டாவது இயற்கையே. இதில் தான் நாம் திசைமாறி விடுகிறோம். இதில் எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.

நாம் வாழும் வாழ்கையை சொர்க்கமாக மாற்றிக்கொள்ள சில வழிமுறைகள்...

உங்களது மனதை நிகழ்காலத்தில் சிந்திக்க பழக்கப்படுத்துங்கள். தேவையற்ற சிந்தனைகளிலிருந்து விடுபட முடியும்.

உங்களுக்கான சுயஒழுக்க விதிமுறைகளை பின்பற்ற தொடங்குங்கள். உங்களுக்கான வெற்றிப்பாதை எது என்பது தெரியும்.

எச்சூழலிலும் உங்களை பற்றி நீங்களே தாழ்வாக எண்ணாதீர்கள்.

காலை நேரத்தை உங்களில் முதலீடு செய்ய கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் சுயமுன்னேற்றத்திற்க்காக செலவிடுங்கள்.

எப்போதும் ஏதாவது ஒரு செயலில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டே இருங்கள்.

எந்த ஒரு செயலை செய்யவும் நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அந்த நேரத்திற்குள் அந்த செயலை செய்து முடிக்கும்போது மனது உற்சாகமடையும்.

எந்த ஒரு செயலிலும் முழுகவனத்தை செலுத்தி செய்ய பழகிகொள்ளுங்கள். இறுதிவிளைவை பற்றி சிந்தித்து செயலை செய்யும் போது செயலில் கவனம் குறைந்து விடும் .

எந்த ஒரு செயலை செய்து முடித்த பின்பும் உங்களை நீங்களே ஊக்குவித்துக்கொள்ள மறவாதீர்கள்.

மற்றவர்களின் புகழ்ச்சி மற்றும் இகழ்ச்சிகளுக்கு  முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் . அது உங்களை பலவீனப்படுத்தக்கூடும்.

உங்களால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்யுங்கள். முக்கியமான தருணங்களில் அதனுடைய பலன்களை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே 👇🏻👇🏻👇🏻

           

No comments:

Post a Comment