Friday, February 2, 2024

சிக்கனம் என்றால் என்ன ?

 சிக்கனம் என்றால் என்ன ? செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. 


அநாவசிய செலவுகளைக் குறைப்பது, ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது இவற்றையே சிக்கனம் என்று சொல்லலாம்...


அவ்வாறு தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பைப் பெருக்கினால் சிறப்பாக வாழலாம்.


தனிமனித சிக்கனம் வீட்டையும் மேம்படுத்தும். நாட்டையும் மேம்படுத்தும். 


வேலை செய்கின்ற ஒவ்வொருவரும் தனது சம்பளத்தின் முதல் செலவு என்பது சேமிப்பாகத் தான் இருக்க வேண்டும். 


தனது சம்பளத்தில் இருந்து சேமிப்புக்கு ஒதுக்கியப் பின்னர் தான் மற்ற செலவுகளுக்கான பட்ஜெட் போடப்பட வேண்டும். 


எது எப்படியிருப்பினும் சிக்கனம் இல்லையேல் சிறப்பான வாழ்க்கை வாழ முடியாது. நமது வளமான வாழ்க்கை நமது சிக்கனத்தைப் பொறுத்தது.


அமெரிக்காவின் ஆரம்ப வரலாற்றில்

 ஜான் டி ராக்பெல்லர் ஒரு மிகப் பெரிய கோடீஸ்வரர்


பிற்காலத்தில் எண்ணைய் நிறுவனங்களைத் தனது ஆதிக்கத்தில் வைத்து இருந்தவர். 


மிகச் சாதாரண நிலையில் வாழ்ந்தவர் அவர். தமது இளம் வயதில் சிறுகச் சிறுக சம்பாத்தித்தப் பணத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடித்து தனது வாழ்க்கையை உயர்த்திக் கொண்டவர். 


தான் வேலை செய்த நிறுவனத்திலயே பங்குகளை வாங்கி தொழிலில் கொடிக் கட்டிப் பறந்தவர். அவருடைய ஆரம்பம் அந்த சிக்கனம் தான்.


நீங்கள் சிக்கனமாக இருந்தால் வெளியில் இருந்து கேலிப் பேச்சுக்கள் வரத்தான் செய்யும். நண்பர்கள் பலர் நம்மைப் பலவிதமான பெயர்களில் அழைப்பார்கள்.


உங்கள் பெயரோடு கஞ்சன் என்னும் அடைமொழியும் சேர்ந்து கொள்ளும். கருமி, 

பிசினாறி என்று பிதற்றுவார்கள். உலோபி என்று உளறுவார்கள். 


இவைகளை எல்லாம் தாண்டித் தான் நீங்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.


ஒன்றை நினைவிற் கொள்ளுங்கள். பணம் உங்களுடையது. நீங்கள் உழைத்துச் சம்பாதித்தது.


அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது உங்களைப் பொறுத்தது. 


சிக்கனம் என்பது உங்களின் வருங்கால வாழ்க்கைக்கு. உங்களைக் கேலி செய்வோர் நீங்கள் பணப் பிரச்சனையில் இருக்கும் போது யாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை.


இன்று பணத்தின் மீது நீங்கள் அசட்டையாக இருந்தால் நாளை பணம் உங்களை அசட்டை செய்து விடும். அதை மறந்து விடாதீர்கள்.


ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நமது கையில் இருக்கும் பணம் தான் நமக்கு உதவி செய்யும். 

வேறு யார் வீட்டுப் பணமும் நமது ஆபத்துக்கு உதவாது.


ஆம்.,நண்பர்களே..,


இது சுயநலமான உலகம். மற்றவர் படும் துன்பத்தைப் பார்த்து கண்டும் காணாமல் இருக்கும் உலகம். 


நமது உறவுகள், நண்பர்கள் ஆபத்துக் காலத்தில் உதவுவார்கள் என்று அசட்டையாக இருக்காதீர்கள்.


மீண்டும் மீண்டும் சொல்கிறேன். சிக்கனமாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். 


No comments:

Post a Comment