Wednesday, December 27, 2023

சிறுவன் ஒருவனுக்கும் வாக்குவாதம்

அவர் தன் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சந்தைக்கு சென்றார். அவர் போகும் வழியில் ஓரிடத்தில் கூட்டம் கூடியிருந்தது.
என்னவென்று அறிவதற்காக அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்தார்.

அங்கே கழுதைகளுடன் வணிகன் ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கும், சிறுவன் ஒருவனுக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.

வணிகனைப் பார்த்து 'உங்களுக்குள் என்ன தகராறு?" என்று கேட்டார்.

'ஐயா! நான் வெளியூர். பத்துக் கழுதைகளின் மேல் வெல்லத்தை ஏற்றிக் கொண்டு இந்த ஊர் சந்தைக்கு வந்தேன். இங்கே வரும் போது என் கழுதைகளில் ஒன்று துள்ளிக் குதித்தது. அதன் முதுகில் இருந்த மூட்டை கீழே விழுந்து விட்டது. அந்த மூட்டை மிகுந்த எடையுள்ளதாக இருந்தது. என் ஒருவனால் அதைத் தூக்க முடியவில்லை.

அப்போது இந்தச் சிறுவன் அங்கு வந்தான். அவனை அழைத்த நான், 'தம்பி! இந்த மூட்டையைக் கழுதையின் மேல் ஏற்ற உதவி செய். உனக்கு நிறைய வெல்லம் தருகிறேன். நீ மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம்" என்றேன். இவனும் என்னுடன் சேர்ந்து மூட்டையைத் தூக்கி கழுதையின் முதுகில் மூட்டையை ஏற்றினான்.

'நான் சொன்னது போலவே, கை நிறைய வெல்லத்தை எடுத்து இவனிடம் தந்தேன்." ஆனாலும் இவன், 'நீங்கள் நிறைய வெல்லம் தருவதாகச் சொன்னீர்கள். சொன்னது போல நடந்து கொள்ளவில்லை. குறைவான அளவு வெல்லமே தருகிறீர்கள். நான் பெற்றுக் கொள்ள மாட்டேன்" என்று மறுத்தான்.

'நான் முதலில் எடுத்ததைப் போல இன்னொரு பங்கு வெல்லம் எடுத்து நிறைய வெல்லம் இது. பெற்றுக் கொள்" என்று தந்தேன்.

'இதுவும் குறைவாகத்தான் இருக்கிறது. நீங்கள் நிறைய வெல்லம் தந்தால்தான் வாங்கிக் கொள்வேன் என்று மறுத்தான்."

மேலும், சிறிதளவு வெல்லத்தைச் சேர்த்து இவனிடம் தந்தேன்.

'இதுவும் நிறைய இல்லை" என்று வாங்க மறுத்தான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இவனோ, 'நிறைய வெல்லம் கொடு. நிறைய வெல்லம் கொடு" என்று அடம் பிடிக்கிறான். அதற்குள் இங்கே கூட்டம் கூடி விட்டது.

கூட்டத்தில் உள்ளவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. வேடிக்கை பார்த்தபடி நிற்கின்றனர்.

அந்தச் சிறுவன் குறும்பு செய்து விளையாடுகிறான் என்பது புரிந்தது.

வணிகனிடமிருந்து வெல்லத்தை வாங்கினார்.

தன் ஒரு கையில் சிறிதளவு வெல்லத்தை வைத்தார். இன்னொரு கையில் இன்னும் அதிகமாக வெல்லத்தை வைத்தார்.

இரண்டு கைகளையும் அந்தச் சிறுவனின் முன் நீட்டினார்.

'எந்தக் கையில் எவ்வளவு வெல்லம் உள்ளது? உன்னால் சொல்ல முடியுமா?" என்று கேட்டார்.

'இந்த கையில் வெல்லம் குறைவாக உள்ளது. அந்த கையில் வெல்லம் நிறைய உள்ளது," என்றான் சிறுவன்.

'எந்த கையில் நிறைய வெல்லம் உள்ளது?" என்று கேட்டார் .

நிறைய வெல்லம் இருந்த கையைக் காட்டினான் சிறுவன்.

'இந்தக் கையில் நிறைய வெல்லம் உள்ளது என்று நீயே ஒப்புக் கொண்டாய். இதை வாங்கிக் கொண்டு போ. இனி வீணாக இங்கே தகராறு செய்யாதே," என்ற அவர் அதைச் சிறுவனிடம் நீட்டினார்.

வேறு வழியில்லாத அந்தச் சிறுவன் வெல்லத்தை எடுத்துக் கொண்டான். ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றான்

No comments:

Post a Comment