Wednesday, December 27, 2023

நடராஜர்' பெயர்க்காரணம்



தில்லை மரங்கள் அடர்ந்த வனமான சிதம்பரத்தில் ஆடும், நடராஜரின் திருநடனம் காண, வியாக்ர பாதர் என்னும் புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் தவம் செய்து வந்தனர். அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நன்னாள் வந்தது. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அங்கே கூடினர். துந்துபிகள், பானுகம்பன் போன்ற தேவலோக இசைக் கலைஞர்கள் வாத்தியங்களை இசைத்தனர். பிரம்மா,விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதியும் வந்து சேர்ந்தனர். மூவாயிரம் தில்லை அந்தணர்களும் அங்கே ஒன்று கூடினர். அப்போது, நந்தியின் மீது நடராஜப் பெருமான் எழுந்தருளினார். அம்பாள் பார்வதி, "சிவகாமி' (சிவன் மீது விருப்பம் கொண்டவள்) என்ற பெயருடன் அருகில் நின்றாள். அப்போது சிவன் ஆனந்த நடனம் ஆடினார். எல்லாரும் நடனம் கண்டனர். நடனம் ஆடியதால், "நடராஜா' என்று போற்றினர். 


*இசை பிறந்த கதை*


படைப்பவரான பிரம்மா மட்டுமே, ஒவ்வொரு முறை உலகம் அழியும் போதும் இறந்து போவார். உலகம் தோன்றியதும் அவரே இறைவனால் முதலில் எழுப்பப்படுவார். இவ்வாறு அவர் 32 முறை பிறந்து இறந்திருக்கிறார். அந்த 32 பிரம்ம தலைகளையும், நடராஜர் தனது கழுத்தில் அணிந்திருப்பார்.


உலகை அழிப்பதும், ஆக்குவதும் தானே என்பதைக் குறிப்பதே சிவனின் இந்தக் கோலம். அவர் நடனம் ஆடும் போது, தலையில் சூடியிருக்கும் பிறைநிலவில் இருந்து அமிர்தம் வழிந்து, பிரம்ம தலைமாலையில் விழும். அமிர்தம் பட்டால் இறந்தவர்கள் உயிர் பிழைத்து விடுவர். அந்த பிரம்ம தலைகளும் உயிர் பெற்று நடராஜரைப் புகழ்ந்து பாடும். பாட்டும், ஆட்டமும் இணையும் போது ஆனந்தம் ஊற்றெடுக்கும். இந்த பிரம்ம கபாலங்களில் இருந்தே இசை பிறந்ததாக சங்கீத சாஸ்திரம் கூறுகிறது. இதனால் தான் கலைஞர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றம் நடத்த விரும்புகின்றனர். 


*அங்குலம் அங்குலமாய் வர்ணனை*


*நடராஜர் ஒரு காலை ஊன்றி மற்றொரு காலைத் தூக்கியபடி நடனமாடுகிறார்*


முயலகன் என்னும் அசுரன் மீது அவருடைய ஊன்றிய பாதம் அழுத்திப் பிடித்திருக்கிறது. இந்த அசுரன் "நான்' என்னும் அகந்தையைக் குறிப்பவன். இந்த எண்ணம் நம்மிடம் எழுந்து விடக்டாது என்பதை உணர்த்தவே நடராஜர் இவ்வாறு கால் ஊன்றியிருக்கிறார். 


அவர் தனது கழுத்தில் பாம்பை அணிந்திருக்கிறார். பாம்பு ஒரு அழிவு சக்தி. மனிதனும் அழிவை உண்டாக்கும் தீய எண்ணங்களை அடக்கியாள வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.


*நடராஜரின் விரிந்த ஜடை, நமக்கு பரந்த அறிவு வேண்டும் என்பதைக் குறிக்கிறது*


*கையிலுள்ள உடுக்கையும், நெருப்பும் பிறப்பையும், இறப்பையும் குறிக்கிறது*


*அவரது ஒரு கை அபயஹஸ்த நிலையில் உள்ளது. அதாவது, என்னைச் சரணடைந்தவர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை என்பதைக் காட்டுகிறது.*


*அவரது இன்னொரு கை வரத ஹஸ்த நிலையில் உள்ளது. இது வேண்டிய வரத்தை நமக்கு அருள்கிறது*


*இதழில் புன்சிரிப்பும், முகத்தில் மலர்ச்சியும் மனதில் எப்போதும் ஆனந்தம் நிறைந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது*


*ஓம் நமச்சிவாய*

No comments:

Post a Comment