Saturday, December 9, 2023

ஆசைப்படுவது தவறில்லை!

"அனைத்துக்கும் ஆசைப்படு!" என்பார்கள்.ஆங்கிலத்தில் "Think Big" என்பார்கள்.

"எதிலும் பெரிதாக நினை!" என்பார்கள் பலர். "ஆசைப்படுவது தவறு" என்று அருளாளர்கள் சொல்கிறார்கள்
சிலரோ "அளவாக ஆசைப்படு!பேராசைப் படாதே!"என்பார்கள்
இவற்றையெல்லாம் நாம் கேட்கும் பொழுது சற்று குழப்பம் அடைகிறோம்.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எதுவாக எல்லாம் வரவேண்டும் என்று நினைக்கிறீர்களோ?அது எதுவுமே தவறில்லை.நீங்கள் நினைத்தபடி வருவதற்கு முயற்சிக்கவில்லை என்றால் அதுதான் தவறாகும். நினைத்தது நடக்கவில்லை என்றால்,அதற்காக கூறும் காரணம், நேரம் சரியில்லை, சூழ்நிலை சரியில்லை,உடன் உதவ ஆள் இல்லை, நல்ல நண்பர்கள் இல்லை. உரிமையோடு கைகொடுக்கும் உறவுகள் இல்லை, பணம் இல்லை, உடம்பிலே வலு இல்லை, இப்படி எத்தனை காரணங்கள் உண்டோ அவற்றையெல்லாம் சொல்ல மறப்பதில்லை.

ஆனால் சொல்லும் காரணங்கள் அனைத்திலும் சிறிது கூட உண்மையில்லை!அனைத்தும் பொய்யே!வயதான ஒரு பெரியவர் சின்ன டிவிஎஸ் வண்டியிலே,ஆறு கேஸ் சிலிண்டர் களை மாட்டிக்கொண்டு வீடுகளுக்குச்சென்று கொடுப்பதற்காக அலைகிறாரே! ஏன் தெரியுமா? எல்லாமே கால் வயிற்றுக் கஞ்சிக்காக உழைக்கிறார். 

ஒய்வு எடுக்க வேண்டிய வயதில்உழைக்கிறாரே! தன் குடும்பம் நிம்மதி யாக வாழ்வதற்கு, நேர்மையான முறையிலே உழைத்து பணம் சம்பாதிக்கிறார்.

குடும்பத்திற்கு தேவையானதை மகன் சம்பாதித்தாலும்,
தானும் சம்பாதித்தால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்குமே என்ற ஆசைதான் காரணம்.

மனிதனுடைய ஆசைகள் பெரிய இலக்கை நோக்கிய பயணமாக இருத்தல் வேண்டும்! அதை அடைவதற்கு ஆசைப்படுவதில் தவறில்லை. பயணிக்கும் பாதை சரியாகவும், நோக்கம் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
எவரையும் ஏமாற்றி வாழ்வதற்கு ஆசைப்படுவது மிகமிகத்தவறு.


No comments:

Post a Comment