Tuesday, January 14, 2025

பொங்கலுக்கு கரும்பு வைப்பதன் சூட்சமம்..!!

கரும்பு என்பது இந்துக்கள் ஞானத்தின் பெரும் அடையாளம் , அதனை நாலடியார் பாடல் ஒன்று அழகாக‌ சொல்லும்

"கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்

துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார் 

வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்

வருங்கால் பரிவ தில"

கரும்புகாடு எரிகின்றது எனும் செய்தி வந்தால் ஒருவர் பதறி ஓடுவர் ஒருவர் பதறவே மாட்டார், அதாவது கரும்பை வெட்டி அதன் சாறை பிழிந்துவிட்டு வெறும் தோகையும்

சக்கையும் குவித்திருப்பவர் பதறமாட்டார் 

எரியட்டும் என அவர்போக்கில் இருப்பார், யார் இன்னும் கரும்பை வெட்டி சாறு எடுக்கவில்லையோ அவர்தான் அலறி அடித்து ஓடுவர்

அப்படி இந்த உடலாகிய கரும்பை ஏற்கனவே பிழிந்து அதாவது தன்னை வருத்தி இறைவனை கண்டோர் தன் உடலுக்கு தன் வாழ்வுக்கு என்ன வந்தாலும் அவர்கள் போக்கில் இருப்பார்கள் காரணம் முழு உண்மையும் அறிந்து இனி தன் ஆத்மா நித்திய ஒளியில் சஞ்சரிக்கும், சதா காலமும் பரம்பொருளுடன் பேரானந்த நிலையிலிருக்கும் என்பதை உணர்ந்ததால் அவர்கள் பதறமாட்டார்கள்


ஆனால் அப்படி ஒரு அனுபூதி நிலை இல்லாத, கரும்பினை இன்னும் சாறுபிழியாதவன் அது எரியும்போது எல்லாம் போயிற்றே என பதறுவது போல சாமானியர்கள், லவுகீகவாசிகள் ஓடி திரிவார்கள்


இந்த கரும்பு உவமை இந்துஞானியரிடையே மிக பிரசித்தி


இதைத்தான் ஒளவையும் தன் விநாயகர் அகவலில் "கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி" என்பாள்


பட்டினத்தார் தன் கையில் கரும்பு ஏந்தி நின்ற தத்துவம் இதுதான்


ஒருவகையில் விநாயகபெருமானுக்கு கரும்பு படைக்கும் சூட்சும ஞானமும் இதுதான்


ஆம், அப்படி ஞானியர் இறைவனை உணர்ந்தோர் தங்கள் மரண வேளையில் அஞ்சமாட்டார்கள் பதற மாட்டார்கள் மாறாக எல்லாம் பிழிந்த உடலில் இனி என்ன உண்டு என்பது போல் இருப்பார்கள், ஞானசாறு பெற்றபின் இந்த சக்கை எரியட்டும் என அவர்கள் போக்கில் இருப்பார்கள்

அந்த ஞானம் அல்லாதவர் பதறுவார்கள்


இந்துக்களின் ஒவ்வொரு அசைவும் ஓராயிரம் ஞான தத்துவம், அவை பொங்கல் காட்சியிலும் நிரம்ப உண்டு

No comments:

Post a Comment