Sunday, December 17, 2023

பாம்பு என்றால் என்ன?

 புத்தக அறிமுகம்...*


பல்லுயிரியத்தின் காவலர்கள்.*


ச.முகமது அலி

வேலா வெளியீட்டகம்.

பக்கங்கள்:96

விலை:90

தொடர்புக்கு:9047087058


பாம்புகளைப் பற்றி நமக்கு நிறைய தெரியும்...


உதாரணமாக,


*நல்ல பாம்பும் சாரைப்பாம்பும் புணையலாடும். அதாவது இணைந்து இனப்பெருக்கம் செய்யும்.


*நல்ல பாம்பை அடிச்சு விட்டுட்டோம்னா மறுபடி பழி வாங்க வரும்.


*ஆண் பெண் பாம்புகளில் ஏதோவொன்றை அடிச்சு கொன்னுட்டோம்னா அதோட ஜோடி பாம்பு பழி வாங்க வரும்.


*வயதான நல்ல பாம்பு நீளத்துல குறுகிகிட்டே வந்து ஒரு அடி நீளமாயிடும். அதோட தலையில விலையுயர்ந்த நாக மாணிக்கம் இருக்கும்.


*வயசான நல்ல பாம்புக்கு கண் சரியா தெரியாது. இருட்டுல அதோட மாணிக்கத்தை கக்கி வச்சுட்டு இரை தேட போகும். அப்போ அந்த மாணிக்கத்தை ஒரு கூடை சணி போட்டு மூடி வைச்சுட்டா பாம்புக்கு கண்ணு தெரியாம எங்கேயோ போயிடும். பிறகு நாம போய் அந்த மாணிக்கத்தை எடுத்துட்டு வந்திடலாம்.


*மனைவி மாசமா  இருக்கும்போது கணவன் நல்ல பாம்பை அடிக்கக் கூடாது.


*நல்ல பாம்பை அடிச்சு கொண்ணுட்டா பாலும் காசும் ஊத்தி புதைக்கனும்.


*கொம்பேறி மூக்கன் மிகக் கொடிய விஷமுள்ள பாம்பு. அது கடிச்சா சாவுதான். அப்படி தான் கடித்து செத்தவர்கள சுடுகாட்டில் எரிக்கும் போது பக்கத்தில் உள்ள மரத்தில் ஏறி அவங்க எரிவதைப் பார்க்கும்.


*பச்சை பாம்பு கண்ண குத்தும்.


*நல்ல பாம்பு சாமி.


*கூல பாம்பு என்னும் மண்ணுளி பாம்பு கடிச்சா தொழுநோய் என்னும் குஷ்டம் வரும்.


*பாம்புகள் பால் குடிக்கும். 


*பாம்புக்கடியிலிருந்து பிழைக்க மந்திரங்கள்


இன்னும்... இன்னும்... நிறைய நமக்குத் தெரியும்.


ஆனால் அது அத்தனையும் பொய்...


மானைப் போல

பூனைப் போல

சிங்கம் போல

சிறுத்தைப் போல

ஆடு போல

மாடு போல


பாம்பு நமது உயிர் சூழலியலில் முக்கியமான ஒரு உயிரினம். அவ்வளவே.‌


விலங்குகளிலேயே பாம்புகள் மேல்தான் அதிக மூடநம்பிக்கை உள்ளது என்கிறார் நூலாசிரியர்.


நம் சுற்றுப்புறச் சூழலின் சமன்பாட்டை சரிவர வைத்துக் கொள்ளும் தொடர்புமிகு உயிர்கள் பாம்புகள். ஊர்வன பிரிவைச் சேர்ந்த பல்லி இனத்திலிருந்து பாம்புகள் உருவாகி சுமார் 13 கோடி ஆண்டுகள் ஆகின்றன. உலகில் சுமார் 3000 சிறப்பினங்கள் உள்ளன. நம் நாட்டில் பொதுவாக 270 வகைப் பாம்புகள் உள்ளன. இதில் 4 பாம்புகள் மட்டுமே நஞ்சுள்ளவை என்கிறார்.


பாம்புகளைப் பற்றிய பொதுவான தகவல்கள்... பல்லி இனத்திலிருந்து பாம்புகள் பரிணமித்த வரலாறு...

பத்து குடும்பங்களாக பகுக்கப்பட்டுள்ள வகைப்பாடு. இந்த பத்து குடும்பங்களில் மூன்றே குடும்பங்களே நச்சுடையவை என்ற தகவல்கள்...நம் பகுதியில் பொதுவாக அறியப்படும் 13 இன பாம்புகள் பற்றிய வியப்பூட்டும் செய்திகள்... பாம்புக்கடிக்கு செய்ய வேண்டிய அறிவியல் பூர்வமான முதலுதவி மற்றும் சிகிச்சைகள் என 98 பக்கங்களில் பாம்புகளைப் பற்றிய தெரியாத பல வியப்பூட்டும் தகவல்களைத் தந்துள்ளார் நூலாசிரியர்.


இப்புத்தகத்தின் மூலம்   நான் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் முக்கியமானது.


அதாவது கட்டுவிரியன் என்றே இதுவரை நினைத்திருந்தேன். இதில் எனக்கு ஒரு குழப்பம் இருந்தது.

அதாவது நஞ்சுள்ள பாம்புகள் விஷத்தின் அடிப்படையில்


1.மைய நரம்பு மண்டலத்தைத் தாக்கும் Neurotoxic. நாகப்பாம்பு மற்றும் கட்டுவிரியன்களின் விஷம் இத்தன்மை உடையது. இதனால் கடிபட்டவர்களின் மூளை உள்ளிட்ட மைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு சுவாசித்தலில் சிரமம்உண்டாகி உடலுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது தடைபட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும்.


2. தலை முக்கோணம் வகையில் அமைந்த இரண்டாவதான விரியன் வகை பாம்புகளின் விஷம் இரத்தத்தை பாதிக்கும் Heamotoxic வகையைச் சேர்ந்தது. இந்த வகைப் பாம்புகளின் விஷம் ரத்தம் உறைதலில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கண்ணாடி விரியன் கடித்து சிறுநீரகச் செயலிழப்பைச் சந்தித்து பிறகு டயாலிஸிஸ் மற்றும் விஷ முறிவு சிகிச்சை செய்யப்பட்டு மீண்டு வந்தவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தித்து இருக்கிறேன்.


அதே நேரம் இரவு உறங்கும்போது முகத்தின் தாடைப்பகுதியில் கட்டு வரியன் கடித்து பக்கவாதம் ஏற்பட்டு கண்கள் இருண்டு வர மரணத்தைச் சந்தித்தவரைப் பற்றியும் நான் அறிவேன்.


இந்தப் புத்தகத்தில் தான் கட்டுவரியன் என்று அதன் உடலில் உள்ள வெண்ணிற வரியை காரணப் பெயராக்கி குறிப்பிட்டுள்ளமையை அறிந்தேன். 


எனவே கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் என்பவை விரியன் வகையைச் சேர்ந்த Heamotoxic விசத்தன்மை கொண்டுள்ளமையும், கட்டுவரியன் என்பது நாகப்பாம்பு போன்ற Neurotoxic விசத்தன்மை வகையைச் சேர்ந்தது என்பதையும் அறிந்து தெளிந்தேன்.


பாம்புக்கடி என்பது சாலையில் நடக்கும்  விபத்து போன்றது. பாம்புக்கடிக்கு அறிவியல் பூர்வமாக மருத்துவமனைகளில் செய்யப்படும் அல்லோபதி மருத்துவம் ஒன்றே தீர்வு. மூலிகை வைத்தியம், மந்திரித்தல் போன்றவை  தற்கொலைக்குச் சமமானது என்று உரக்கச் சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர்..


வாசித்துப் பாருங்கள்...

No comments:

Post a Comment