Thursday, April 24, 2025

தினம் ஒரு திருமுறை

 *


*தினம் ஒரு திருமுறையில்*

இன்று  நாம் படித்து,கேட்க இருப்பது 

மாணிக்க வாசக சுவாமிகள்    எட்டாம் திருமுறையில்  006வது பதிகமாக திருஉத்திரகோச மங்கையில்

அருளிச்செய்த *நீத்தல்விண்ணப்பம்*எனும் 

திருமுறை திருப்பதிகம் 


 நீத்தல் விண்ணப்பம் – ஒரு

வாசகம்


திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது பழமொழி.

 

இறையருள் பெற்ற அடியார் பலருண்டு, 


அவர்கள் பாடிய பனுவல்களும் பல 

உண்டு. 


இத்தனைக்கும் இல்லாத சிறப்பு திருவாசகத்திற்கு எப்படி வந்தது?


எல்லா அடியார்களும் இறைவனைப் போற்றுவர். 


அவனது பேராற்றலைப் புகழ்வர். அவனது கருணையைப் பரவுவர். 


மணிவாசகரோ ஒவ்வொரு பாடலிலும் தன் சிறுமைகளை விரிவாகக் கூறி, இத்தனை தாழ்ந்த எனக்கும் அருள் புரிந்தாயே என்று வியக்கும் போது, இறைவனின் கருணையின் பெருமை மிகுதிப்படுகிறது. 


தன் சீவபோதம் ஒடுங்கும் வகையில் மாணிக்க வாசகர் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ளும் சிறுமைகள் மானிட குலம் முழுமைக்கும் பொருத்தமானதாக உள்ளன. 


நம் சார்பில் அவர் பேசுவதாகவே தோன்றுகிறது.


வாழ்க்கையில் தவறு செய்யாதவர் நம்மில் யார்? 


நாம் தவறு செய்து விட்டோம், நமக்கு உய்யும் வழி இல்லை என்று விரக்தி அடைந்த நிலையில் இருப்போர்க்கு, ‘எந்த நிலையிலும் மனம் திருந்தி இறை நாட்டம் கொண்டால் அவன் நம்மைக் கடைத்தேற்றக் காத்து இருக்கும் கருணை வள்ளலாக விளங்குகிறான்’ என்ற ஆறுதல் ஏற்பட்டு, திருவாசகம் படிக்கும் பொழுது வெளிப்படும் கண்ணீரில், செய்த பாவங்கள் கரைந்து மனம் பக்குவப்படுவது பலருடைய அனுபவம்.


இப்படிப்பட்ட திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பம் என்ற பகுதியிலிருந்து சில முத்துகளைச் சுவைப்போம், 

வாருங்கள்.


பெயர் நீத்தல் விண்ணப்பம் என்று இருந்தாலும் அதில் கூறப்பட்ட விஷயம்- இறைவன் தன்னை 

விட்டு நீங்காது இருக்க வேண்டும் என்ற விண்ணப்பம் தான். 


அனைத்துப் பாடல்களிலும் வரும் 

ஒரு பொதுவான தொடர், விட்டிடுதி கண்டாய் என்பது. ‘என்னை விட்டு விடாதே’ என்பது பொருள்.


நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டது. அந்தாதி முறையில் அமைந்தது. 


இதன் முதல் பாட்டின் முதல் சொல் ‘கடையவன்’ என்பது. 


அந்தாதி இலக்கணப்படி, கடைசிப் பாட்டின் கடைசிச் சொல்லும் இதுவே. முதலில் உள்ள ‘கடையவன்’ என்ற சொல்லைக் ‘கீழ்த்தரமானவன்’ என்ற பொருளில் தன்னைக் குறிக்குமாறும், கடைசியில் உள்ள ‘கடையவன்’ என்ற சொல்லைக் ‘கடைசித் தொழிலான சம்காரம் செய்பவன்’ என்ற பொருளில் சிவனைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளது.


தத்துவரீதியாகப் பார்க்குமிடத்து, வாழ்க்கையை மும்மலங்களுடன் துவக்கும் சீவன் படிப்படியாகச் சீவபோதம் நீங்கி இறுதியில் சிவபோதம் அடைவதை இது குறிக்கிறது.


மணிவாசகர் கூறுகிறார், “நான் கடையவன். காமத்தின் வசப்பட்டுக் கடவுளை மறந்தவன். 


ஆற்றங்கரையில் உள்ள மரத்தின் வேரடி மண், ஓடும் நீரால் அரிக்கப்பட்ட நிலையில் அந்த மரம் பார்வைக்கு நேராக நின்றாலும் எந்த நேரத்திலும் விழுந்து விடக் கூடிய நிலையில் இருப்பது போல, என் ஐம்பொறிகள் காம நீரால் அரிப்புண்டு என்னை நிலையற்றவனாக்கி விட்டன. 


இறைவா, நீ என்னை வளைத்துப் பிடிக்க வந்தாய். 


நானோ உன் கையில் பிடிபடாமல் புலனின்பமே பெரிது என்று மயங்கி இன்னமும் உலகாயதச் சேற்றில் உழல்கின்றேன். 


தீயினைப் பழம் என்று நினைத்து அதைச் சுற்றி வட்டமிட்டு இறுதியில் தன்னை அதில் மாய்த்துக் கொள்ளும் விட்டில் போல, நான் இந்த உலக வாழ்வே இன்பம் என்று கருதி அதையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். 


நீ உன் அருள் அமுதை என் வாயில் ஊட்ட வந்தாய். நான் அதை ஏற்காமல் மறுத்து விட்டேன். 


என்னே என் அறியாமை” என்று நொந்து கொள்கிறார்.


செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற்பன்னாள்

விழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி வாய்அறுகால்

உழுகின்ற பூமுடி உத்தர கோசமங் கைக்கரசே

வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட மறுத்தனனே.


“என் ஐம்புலன்கள் எனக்கு வஞ்சனையைச் செய்து கொண்டிருக்கின்றன. 


உண்மையான இன்பம் எது என்று நான் உணர அவை வாய்ப்பு அளிக்கவில்லை. 


அதனால் நான் உன் மணி மலர்த் தாள் குறுகாமல் வேறுபட்டேன். 


எறும்புகள் நெய்க்குடத்தை மோப்பத்தால் அறிந்து நாடுவது போல என் புலன்கள் உலக இன்பத்தையே நாடிக் கொண்டிருக்கின்றன. 


உண்மையான மெய்ப்பொருள் நீ இருக்க, நான் பொய்மை செய்து வீண் பேச்சைப் பெருக்கிக் கொண்டிருக்கிறேன். 


கடைகின்ற மத்துப் பொருந்திய உடனே, தயிர் சுழல்வது போல என்னைப் பற்றிய பாசங்கள் ஐந்தினால் நான் அலைப்புண்டு வருந்துகிறேன். 


இவ்வாறாக, மீண்டும் ஒரு பிறவிக்கு உரியவனாக என்னை ஆக்கிக் கொண்டிருக்கிறேன். 


இவ்வாறு புலன் வசப்பட்டு வாழ்ந்தது கூடப் பெரிதில்லை. 


அதை விடப் பெரிய தவறு ஒன்றும் செய்து கொண்டிருக்கிறேன். 


இறைவனை அடைய வேண்டும் என்ற குதுகுதுப்பு (ஆர்வம்) என்னிடத்தில் எள்ளளவும் இல்லை.


என் மனம் போன வழியில் சென்று கொண்டு இது தான் இறைவனின் குறிப்பு என்று தவறாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறேன். 


இது மன்னிக்கப்படக் கூடிய குற்றமா?”


குதுகுதுப் பின்றிநின் றென்குறிப்பேசெய்து நின்குறிப்பில்

விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்


“உன்னோடு ஒன்றுபடும் வழியும் எனக்குத் தெரியவில்லை. உன்னைப் பாடவில்லை. உனக்குப் பணி செய்யவில்லை. 


சிவன் யார் எங்குளான் என்று தேடவில்லை. 

ஓடிப் பார்க்கவில்லை. ஸ்தம்பித்து மனம் உருகவில்லை. அது மட்டுமல்ல, உன்னைப் பழிக்கவும் துணிந்தேன்.”


“இத்துணை நாள் இப்படி வாழ்ந்தது போதும். இனி புலால் நாற்றமுடைய, நோய்களுக்கு இருப்பிடமான இந்த உடலை நான் தாங்கி இருக்க மாட்டேன். 


நான் தளர்ந்து விட்டேன். என்னைத் தாங்கிக் கொள்வாயாக” என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார்.


தன் சிறுமைகளை எல்லாம் பட்டியலிட்ட மணிவாசகர் ஆங்காங்கு இறைவனின் கருணையையும் புகழ்ந்து பாடுகிறார். 


இறைவன் பேராற்றலும் பெருங் கருணையும் உடையவன் என்பது முன்னரே தெரிந்தது தான். 


ஆனால் இவ்வளவு குறை உடைய எனக்கும் அவன் கருணை செய்துள்ளான் என்பது அவனது கருணைக்கு எல்லையில்லை என்பதை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.


கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட

விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்

உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே

சடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.


“நான் கள்ளன் என்பது உனக்குத் தெரியும். அப்படியும் என்னை ஆண்டு கொண்டாயே அப்பா, அது என்ன காரணம் பற்றி?” என வினவுகிறார்.


கள்ளேன் ஒழியவும் ஆண்டு கொண்டதெக் காரணமே


“என்னை ஆண்டு கொண்டது மட்டுமல்லாமல் என் குறையை நிறையாக்கி என் பிறவிப் பிணியைத் தீர்த்தாயே இறைவா. 


முன்பு பாற்கடலைக் கடைந்த போது உண்டான ஆலகால விடத்தை அமுதமாக்கி உண்டாயே அது போன்ற விந்தைச் செயல் அல்லவா நீ என்னிடம் செய்து விட்டாய்!”


பொய்யவனேனைப் பொருளென ஆண்டொன்று பொத்திக்கொண்ட

மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட முண்மிடற்று

மையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே

செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந் தீர்ப்பவனே


“சுடர் விடும் பொருள்களுக்கு எல்லாம் ஒளி தந்த மூலப் பொருள் நீ. அதே நேரத்தில் எளிமையின் எல்லையைத் தொட்டவன். அதனால் அன்றோ, உன்னோடு கலந்து விட நான் வெளிவராத போதும் நீயாக வந்து என்னை ஆட்கொண்டாய்.”


களிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டுங் கலந்தருள

வெளிவந்தி லேனை விடுதிகண் டாய்மெய்ச் சுடருக்கெல்லாம்

ஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங் கைக்கரசே

எளிவந்த எந்தை பிரான்என்னை ஆளுடைய என்னப்பனே


“சிவனே, உன்னிடத்தே ஒன்றுக்கொன்று பகையான நிலவும் பாம்பும் இசைந்து வாழ்கின்றன. 


அது போலப் பண்பில் மேம்பட்ட பழ அடியார் பலரோடு கூட படிறு {பொய்} ஒழுக்கம் கொண்ட என்னையும் இசைத்தாயே, இந்த வித்தையை எப்படிப் புகழ்வேன்? 


பிறவி என்னும் ஐவாய் அரவத்துக்கு அஞ்சி என் மனம் பொந்தில் ஒடுங்குகிறது. என்னைக் கைவிட்டு விடாதே.”


பரம்பர னேநின் பழஅடி யாரொடும் என்படிறு

விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென் முயற்கறையின்

அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவிஐ வாயரவம்

பொரும்பெ ருமான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே.


“நான் உன்னை ஏசினாலும் ஏத்தினாலும் பிழைகளை எண்ணி மனம் குழைகின்ற என்னை விட்டு விடாதே” என்று நீத்தல் விண்ணப்பத்தை நிறைவு செய்கிறார்.


தாழ்மை உணர்வோடு பாடிக் கொண்டு வந்த மாணிக்க வாசகர் தோழமை உரிமையோடு பாடிய பாடல் ஒன்றும் நீத்தல் விண்ணப்பத்தின் இறுதிப் பகுதியில் உண்டு.


“இறைவா, நீ கபால மாலை அணிந்து தீயை ஏந்தி அரவு பூண்டு வீரத்தின் நிலைக் களனாக விளங்குகிறாய். 


நீ என்னைக் கைவிட்டு விட்டால், நீ யாருடைய அடியவன் என்று ஊரார் என்னைக் கேட்கும்போது உத்தரகோசமங்கைக்கு அரசின் அடியார்க்கு அடியேன் என்று பதில் அளிப்பேன். 


என் கீழ்மையைப் பார்க்கும் அவர்கள் உன்னைப் பரிகசிப்பர். 


இது உனக்குத் தேவையா? உன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவாவது நீ என்னைக் கடைத்தேற்ற வேண்டும்” என்கிறார்.


அடுத்த பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய் நிந்தா ஸ்துதியாக மிரட்டுகிறார்.


“நான் பிழை செய்தவன் என்று என்னை நீ வெறுத்துப் புறக்கணித்தால் உன் செயல்கள் சரியல்ல 

என்று ஊரார் சிரிக்கும்படி செய்து விடுவேன். 


அப்படியும் நீ என்னை ஒதுக்குவாய் ஆயின் நீ யானைத் தோலைப் போர்த்த பித்தன், புலித் தோலை உடுத்த பித்தன், நஞ்சு உண்ட பித்தன், சுடுகாட்டுத் தீயில் விளையாடும் பித்தன், என்னை ஆண்டு கொண்டு பின்பு புறக்கணித்த பித்தன் என்றெல்லாம் ஏசி உன்னைப் பழிக்கு ஆளாக்குவேன்” என்கிறார்.


கற்றுப் புலமை தேர்ந்து தன் அறிவுத் திறம் விளங்கப் பாடிய பாடல்கள் அல்ல இவை. 


பக்திச் சுவையில் தோய்ந்து கிடந்து பழுத்த மனத்திலிருந்து பீறிட்டு எழுந்தவை இவை. ஆயினும் இவற்றில் இலக்கியச் சுவைக்கும் பஞ்சமில்லை.


மணிவாசகரின் உவமை நயம் சிறப்பு மிக்கது. புலனின்பமே மேலானது என்று கருதி வாழ்பவன் சிறப்புற வாழ்வது போலத் தோன்றினாலும் அவன் ஒரு நாள் வீழ்ந்து படுவது திண்ணம் என்பதைக் காட்ட வேரடி மண் அரிக்கப்பட்டும் நிமிர்ந்து நிற்கின்ற ஆற்றங்கரை மரத்தை உவமையாக்கியதை முதலில் பார்த்தோம்.


புலனின்பம் தனக்கு அழிவு தர வல்லது என்பதை உணராமல் அதைத் தேடி அலைகின்ற மானிடரை தீப்புகு விட்டிலாகவும் நெய்க்குடம் மொய்க்கும் எறும்பாகவும் சித்தரித்ததையும் பார்த்தோம்.


இறை நாட்டம் ஒரு புறமும் புலன் நாட்டம் ஒரு புறமுமாக இருப்பவர்களை இருதலைக் கொள்ளி எறும்புக்கு உவமிக்கிறார்.


இறையருள் வெள்ளமாகப் பெருகிக் கொண்டிருந்தும் அதைப் பருக முடியாமல் தடுமாறும் மனிதக் கூட்டத்தை வெள்ளத்தில் மிதந்து கொண்டே தாகத்தால் நா வறண்டு துன்புறும் பேதை என வர்ணிக்கிறார்.


யானைப் படை கொண்டு புரிகின்ற போரில் சிறு செடிகள் மிதியுண்டு மாய்வது போல, ஐம்புலன்கள் இன்பம் நாடிச் செல்லும் வேளையில் ஆன்மா நாசமடைகிறது என்கிறார்.


நாங்கூழ்ப் புழுவைச் சுற்றி எறும்புகள் கூட்டமாக மொய்த்து அதைக் கடித்து உண்ணும் வேளையில் தன்னைக் காத்துக் கொள்ள முடியாமல் புழு துடிப்பது போல், ஐம்புலன்கள் துன்புறுத்த, என் மனம் தன்னைக் காத்துக் கொள்ள முடியாமல் துடிக்கிறது என்கிறார்.


இறைவனை அடைய வேண்டும் என்கிற இதய தாகத்துக்கு அவர் கொடுக்கும் உவமை, ‘பெரு நீர் அறச் சிறு மீன் துவண்டாங்கு.’ வெள்ளம் வற்றிய இடத்தில் உள்ள மீன் துடிப்பது போல இறைவனின் பிரிவாற்றாமையால் தான் துடிப்பதாகக் கூறுகிறார்.


வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன் கலந்து பால் கலந்து செழுங் கமலத்தின் சுவை கலந்து

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே


என்று வள்ளலார் பாடியது பொருத்தமானதே என்று உணர்கிறோம்.


கேட்க கேட்க தெவிட்டாத பேரின்பப் பாடல்.


திருவாசகத்தேனை சுவைத்தவனுக்கே அதன் சுவை தெரியும்.


திருக்கழுக்குன்றம் திருவாசகச் சித்தர் சிவதிரு. தாமோதர ஐயா அவர்களின் தெய்வீக குரலில்  குரலில் ஒலிக்கும் *நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் ஒலி வடிவ காணொளிக்காட்சி உங்களுக்காக கீழே!👇👇

No comments:

Post a Comment