Monday, March 10, 2025

சும்மா இருப்பதே சுகம்

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

................................................

*" ''!*

................................................

''சும்மா கிடப்பதே சுகம்’ என்றார்கள் வாழ்வியல் ஞானிகள்.

நாம் என்ன நினைக்கிறோம்.. உடல் உறுப்புகளை அசைக்காமல் இருந்தால் என்ன ஆவது..! எப்படி நம்மால் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியும்.. என்று தானே. 


ஆனால் அந்த ஞானிகள் நமக்குச் சொன்னது ஒரு மறை

பொருள் சூத்திரத்தை.


நமது மனதை வெறுமையாக வைத்துக் கொண்டு இருப்பது என்பதே அந்த சுகம். அப்படி நம்மால் எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருக்க முடியுமா..! 


முடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள். அப்படி இருந்ததால் தான் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது அளவிட முடியாத சுகம்.

.

ஆராய்ச்சி அற்று ''சும்மா இருப்பதே சுகம்''.. .இதைத் தேடுகிறேன், அதைத் தேடுகிறேன்,ஆன்மீகத்தை தேடுகின்றேன், இறைவனைத் தேடுகின்றேன், என்னைத் தேடுகின்றேன் என்ற எந்த தேடுதலும் இல்லாமல் சும்மா இருந்தாலே சுகம் . 


சும்மா ஆராய்ச்சி அற்று இருந்தால் மனம் ஒருமை நிலை ஏற்படும். முழு திருப்தி நிலை வந்து விடும் . அறிவு முழுமை அடையும் .


ஒரு மடத்தில் "சும்மா இருப்பது எப்படி?"என செய்முறை விளக்கம் தருமாறு தன் மாணவர்களுக்கு அந்த மடத்து குரு ஒரு பரீட்சை வைத்தார்.


யார் சிறந்த விளக்கம் அளிக்கிறார்களோ? அவன் தன்னை உணர்ந்தவன் எனப் பாராட்டி தலைமை பொறுப்பு அளிப்பதாக அறிவித்தார்.


எல்லா மாணவர்களும் சுறுசுறுப்பாய்,''சும்மா'' 'இருப்பதற்குண்டான வழிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.


சிலர் பேசாமலும்,சிலர் அசையாமலும்,சிலர் உணவு உண்ணாமலும் இருந்தனர்.சிலர் கண்களை மூடி தியானிப்பது போன்று சும்மா இருந்தார்கள்.


இன்னும் சிலர் மலைகள்,காடுகள் என்று போய் சும்மா இருப்பதை செய்து காண்பித்தார்கள்.


ஆனால்,ஒரே ஒரு மாணவன் மட்டும் ''சும்மா'' இருக்க எந்த முயற்சியும் எடுக்காமல்,தன்னுடைய வேலைகளை  எப்போதும் போல செய்துக் கொண்டு

இருந்தான்.


போட்டியின் முடிவு நாள் வந்தது..குரு முடிவை சொன்ன போது அனைவருக்கும் அதிர்ச்சி..


எந்த முயற்சியும் எடுக்காத அந்த மாணவனுக்குத் தான் குரு பாராட்டி பொறுப்பை அளிப்பதாக அறிவித்தார்.


இதை ஏற்காமல், எல்லா மாணவர்களும் குருவிடம் சென்று விளக்கம் கேட்டார்கள்.


இதற்கு குரு,


"நீங்கள் எல்லோரும் சும்மா இருப்பதைப் பற்றி சிந்தித்து சிந்தித்து, எப்படியெல்லாமோ சும்மா இருக்க முயற்சி செய்தீர்கள்..


நீங்கள் எடுத்த முயற்சியாலேயே நீங்கள் சும்மா இருக்கத் தவறி விட்டீர்கள்...ஆனால்,எந்த முயற்சியும் எடுக்காமல், அந்தந்த நேரத்தில் தன் முன்வரும் வேலைகளை செய்தபடி,உண்மையாகவே சும்மா இருந்து காட்டியது இவன் மட்டுமே"என்று கூறினார் குரு..


நடந்து ஒரு இடத்திற்கு சென்று அமர்கிறோம். அமர்ந்த பிறகும் கால் செயல்பட்டுக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? வேலை முடிந்ததும் கால் தானே ஓய்வெடுப்பதைப் போல, மனமும் ஓய்வெடுக்க வேண்டும்.

 

அப்போது தான் நம் மனம் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால் நாம் மனதிற்கு ஓய்வு கொடுப்பதே இல்லை. கண்டதையும் அதுபாட்டுக்கு அசை போட்டுக் கொண்டே இருக்கிறது. 


இதைக் கொஞ்சம் நிறுத்தி, ஒருநாளில் ஒரு சில நிமிடங்களாவது அமைதியாக சும்மா இருக்க வேண்டும். 


இப்படி இருந்து பாருங்கள், அப்புறம் புரியும் ''சும்மா'' இருப்பதில் உள்ள அருமையும், பெருமையும்...


🟪🟪🟪🟪🟣🟪🟪

No comments:

Post a Comment