Saturday, August 24, 2024

 உன்னதமான #வாழ்க்கையை வாழலாம் வாருங்கள். 

முடிந்த அளவாவது உதவுபவர்களுக்கு முதன்மையான வாழ்க்கை...

நம்மால் முடிந்த மட்டும் உதவுவோம் ..!

நாம மட்டும் நல்லா இருந்தா போதாதா? 

எதுக்கு இன்னொருத்தருக்கு உதவி பண்ணணும்?

பிறருக்கு நன்மை செய்ய நாம் ஏன் கடமைப்பட்டுள்ளோம்? 

நாமும் நம்ம குடும்பமும் நன்றாக இருந்தால் போதாதா

என்றே பலரும் நினைக்கின்றனர்..!

மாமேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகிறார்

`சமுதாயமும் தனி மனிதனும்` என்ற புத்தகத்தில் 

அவரது எண்ணங்களின் சாரம் இது:

"தனிப்பட்ட நம் வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால், நமது பெரும்பாலான எண்ணங்களும் செயல்களும் பிற மனிதர்களின் வாழ்வைச் சார்ந்தே உள்ளதைக் காணலாம். நமது இயல்பே கூடி வாழும் தன்மை உடையது தான்.

பிற மனிதர்கள் பயிராக்கிய தானியங்களையே நாம் உட்கொள்கிறோம், பிறர் நெய்த ஆடைகளையே நாம் உடுத்துகிறோம், பிறர் கட்டிய வீடுகளிலேயே நாம் வசிக்கிறோம். நாம் வாழ்வதற்கான அன்றாட அறிவும் தகவல்களும் நமது நம்பிக்கைகளும், பெரும்பாலும் பிற மனிதர்கள் மூலமே நம்முள் வியாபித்துள்ளன.

சமுதாயம் என்ற சத்தான விளை நிலம் இல்லாமல் எப்படி தனிமனிதனால் வளர்ச்சியடைய முடியாதோ, அதே போன்று, சிந்தனைத் திறன்மிக்க தனிமனிதர்கள் இல்லையென்றால், சமுதாயத்தால் முன்னேற முடியாது" என்பதை அவர் அதில் சொல்லி இருக்கிறார்

"உதவி"

ஒரு நாள் ஒரு எறும்பு ஒரு குளத்தில் தவறி விழுந்து விட்டது. தண்ணீரில் இருந்து கரைக்கு வர முடியாமல் அது தத்தளித்தது. இதை அக் குளக்கரையில் இருந்த மரத்திலிருந்த ஒரு புறா கவனித்தது அது எறும்புக்கு உதவி செய்ய எண்ணி மரத்திலிருந்து ஒரு இலையைப் பிடுங்கி எறும்பின் அருகில் போட்டது.

இலை தண்ணீரில் மிதந்தது. அந்த இலையின் மேல் ஏறி எறும்பும் கரை சேர்ந்து உயிர் பிழைத்தது தன்னைக் காப்பாற்றிய புறாவிற்கு மனதினுள் நன்றி சொல்லிக் கொண்டது.

பின்னர் ஒரு நாள் அந்தப் புறா மரத்தில் இருக்கும் போது ஒரு வேடன் அதைக் கண்டான். பசியால் உணவு தேடிக் கொண்டிருந்த அவ் வேடன் அதைக் கொல்ல எண்ணி, தன் அம்புவில்லை எடுத்துக் குறி பார்த்தான். வேடன் குறி பார்ப்பதை அந்தப் புறா கவனிக்கவில்லை.

இதை எறும்பு கண்டது. தன்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றிய புறாதான் அது என்பதை அந்த எறும்பு உணர்ந்தது. உடனே வேகமாக ஓடிப்போய் வேடனின் காலில் கடித்தது. வேடன் அலறியபடி காலைக் குனிந்து பார்த்தான். இந்தச் சத்தத்தைக் கேட்டுப் புறா திரும்பிப் பார்த்தது.

தன்னைக் கொல்ல முயன்ற வேடனைக் கண்டது. உடனடியாக மரத்தை விட்டுப் பறந்தது. பறக்கும் போது அவனைக் கடித்த எறும்பைக் கண்டது. தான் முன்னர் காப்பாற்றிய எறும்பு தன்னை இப்போது காப்பாற்றியதை நினைத்து மகிழ்ச்சியால் நெகிழ்ந்தது.

ஓரறிவு உள்ள எறும்பு புறாவுக்கே அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்போது, ஆரறிவு படைத்த மனிதனுக்கு இது அவசியம் இருக்க வேண்டுமல்லவா?

மரம் உதவுகிறது நிழல் தந்து ..

புல்லங்குழல் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து ..

ஏணி கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றி விட ...

நாம் சற்று கவனித்தோமானால் எல்லாமே உதவுகின்றன என்று தோன்றும்!

ஆகவே முடிந்த அளவு கண்டிப்பாக பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்.

அடுத்தவருக்கு உதவி செய்தால் பின்னால் அது உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்.

நீங்கள் செய்கிற உதவியைப் பெறுபவர் அவர் மனசார வாழ்த்துகிறார்ப்போல் அது இருக்கட்டும்...

அது உதட்டால் அல்ல ..!

நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பதுதான் பிரபஞ்ச விதி ..!

முடிந்த மட்டும் உதவுவோம் ..!

நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.

நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்.

எனவே நல்லதையே தேடுவோம் நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்!

நாம் ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம். ஓர் உன்னத வாழ்வை வாழ்வோம்...

No comments:

Post a Comment