Monday, September 11, 2023

மல்பெரியின் மரபணு வளங்கள்!: சில சுவாரஸ்ய தகவல்கள்

 


பட்டுப்புழுக்களுக்கு முக்கிய தீவனமாக விளங்கும் மல்பெரி செடிகளில் மரபணு வளம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இதுகுறித்து அறிய கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பட்டுப்புழுவியல் துறை பேராசிரியர்கள் மங்கம்மாள், உலகநாதன், சோழன் ஆகியோரைச் சந்தித்தோம்.“பட்டுப்புழு வளர்ப்பில் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து நாடுகளும் வேளாண் தட்பவெப்பநிலைகளுக்கு ஏற்றவாறு புதிய மல்பெரி ரகங்களை உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. எந்தவொரு பயிர் மேம்பாட்டுத் திட்டத்திற்கும் தாவர இனங்களின் மரபணு வேறுபாடு முக்கியமானதாக கருதப்படுகிறது.இத்தகைய மகத்துவம் வாய்ந்த மரபணு வேறுபாடுகள் பயிர் இனப்பெருக்க ஆராய்ச்சியாளர்களுக்கு புதையல் போன்றதாகும். இந்த மரபணு வளங்களைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் தரும் வகையிலும், நோய் எதிர்ப்புத்திறன் மற்றும் வறட்சியைத் தாங்கும் வகையிலும், வெவ்வேறு சூழல்களைத் தாங்கி வளரும் வகையிலும் புதிய ரகங்களை உருவாக்க முடியும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மரபணு வளங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு, காடுகளை அழித்தல், தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் போன்ற காரணங்களால் வேகமாக மறைந்து வருகின்றன. எதிர்காலத் தேவைகளுக்காக அவற்றை உடனடியாக பாதுகாக்க வேண்டும்.மத்திய பட்டுப்புழு வளர்ப்பு மரபணு வள மையம் 1990- ம் ஆண்டு ஓசூரில் (தமிழ்நாடு) தொடங்கப்பட்ட நாட்டின் பட்டுப்புழு மற்றும் மல்பெரி பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டிற்கான முதன்மை மையமாகும். இந்த மையம் புதுதில்லியில் உள்ள தேசிய தாவர மரபணு வளங்களின் பணியகத்தால் (National Bureau of Plant Genetic Resources NBPGR) மல்பெரிக்கான தேசிய மரபணு செயல்பாட்டு தனமாக ( National Active Germplasm Sites NAGS) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மல்பெரி மரபணு தோட்டம் அமைத்தல் மற்றும் உயிரி தொழில்நுட்ப பாதுகாப்பு வழிமுறைகள் இரண்டையும் பயன்படுத்தி பட்டுப்புழு வளர்ப்பு மரபணு வள மேலாண்மை தொடர்ந்து செயல்பாடுகளை மேம்படுத்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்த மையத்தில் 1269 மல்பெரி மரபணுக்கள் தோட்டம் அமைத்து பாதுகாக்கப்படுகின்றன. இவற்றில் 999 மரபணுக்கள் இந்தியாவிலும், 270 மரபணுக்கள் வெளிநாட்டிலும் சேகரிக்கப்பட்டது. பதிமூன்று மோரஸ் இனத்தை சார்ந்த மல்பெரி மரபணு வளங்கள் 25 நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டன.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டுப்புழுவியல் துறை அமைந்துள்ளது. இங்கு மல்பெரி பயிர் மேம்பாட்டு ஆய்வுகளுக்காக 81 மரபணுக்கள் மத்திய பட்டுப்புழு வளர்ப்பு மரபணு மையத்தில் இருந்து பெறப்பட்டது. இந்த 81 மரபணுக்களும் மோரஸ் இண்டிகா, மோரஸ் ஆல்பா, மோரஸ் லாடி போலியா, மோரஸ் லேவிகேட்டா, மோரஸ் கெதையானா, மோரஸ் அஸ்ட்ராலிஸ், மோரஸ் பாம்பிசிஸ் மோரஸ் ரோட்டுண்டிலோபா, மோரஸ் மேக்ரோரா, மோரஸ் சயினென்சிஸ் மற்றும் மோரஸ் நயகரா ஆகிய 11 மோரஸ் இனத்தை சார்ந்தது. இந்த 11 மோரஸ் இனமானது அதிக இலை விளைச்சல் மற்றும் உயிர்ப்பொருள், அதிக பழங்கள், அதிக அறுவடை, இலை ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறன், அதிக வேர்விடும் தன்மை, சிறந்த உருவவியல் வளர்ச்சிப் பண்புகள் கொண்டது. வெப்பமண்டல மற்றும் வறண்ட பகுதிகளுக்கும், வெப்பமண்டல மற்றும் காரத்தன்மை மண்ணிற்கும், வெப்பமண்டல மற்றும் அதிக ஈரப்பதத்திற்கும், மிதமான குளிருக்கும் ஏற்றது. மேலும் நோய்கள் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது. நுண்துகள் பூஞ்சை காளானுக்கு எதிர்ப்புத்தன்மை மற்றும் இலை சுருக்க நோய்க்கு எதிர்ப்புத் தன்மையும் கொண்டுள்ளது. இந்த 81 மல்பெரி மரபணு வளங்களும் 6X6 அடி இடைவெளியில், 15 மீட்டர் உயர மரமாக வளர்க்கப்பட்டுள்ளது. ஒரு வரிசைக்கு 5 மரம் என்ற எண்ணிக்கையில் நடப்பட்டுள்ளது. வருடத்திற்கு இரண்டு முறை கவாத்து செய்யப்படுகிறது.

மல்பெரி மேம்பாட்டு ஆய்வுகள் 1960ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டன.அதிலிருந்து, நாட்டில் பட்டுப்புழு வளர்ப்புப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மல்பெரி ரகங்கள் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இன்று இந்தியாவில் பயிரிடப்படும் பெரும்பாலான ரகங்கள், மத்திய பட்டு வாரியத்தின் கீழ் இயங்கும் பல்வேறு தேசிய ஆராய்ச்சி மையங்களில் பராமரிக்கப்படும் மல்பெரி மரபணுக்களின் மூலம் உருவாக்கப்பட்டவை ஆகும். புதிய ரகங்களை உருவாக்குவதில் பயிர் இனப்பெருக்க ஆராய்ச்சியாளர்களின் பங்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். பயிர் இனப்பெருக்க ஆராய்ச்சியாளர்கள் அடிப்படையில் மரபணு பொறியாளர்களாவர். அவர்களின் முக்கிய நோக்கம் பல்வேறு இனப்பெருக்க நுட்பங்களைப் பயன்படுத்தி பயிர்களை மேம்படுத்துவதாகும்.தமிழ்நாட்டில் பட்டுப்புழு வளர்க்கும் பெரும்பாலான விவசாயிகள் வி1 மற்றும் எம்ஆர்2 போன்ற ரகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரகங்கள் நல்ல இலை விளைச்சல் கொடுத்தாலும் நீண்ட நாட்களாக ஒரே ரகங்களைப் பயன்படுத்துவதால் நோய்த் தொற்றுக்கு எளிதில் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப புதிய ரகங்களை உருவாக்குவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். புதிய ரகங்களை உருவாக்குவதில் மரபணு வளங்களில் உள்ள மரபியல் வேறுபாடுகள் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த மல்பெரி மரபணுக்களை பயன்படுத்தி உயர் விளைச்சல் ரகங்கள் மட்டுமல்லாது பூச்சிகள், நோய்கள் மற்றும் வறட்சி தாங்கி வளரக்கூடிய ரகங்களை உருவாக்க முடியும். இவ்வாறு புதிய மல்பெரி ரகங்கள் வெளியிடும்போது பட்டுப்புழு வளர்க்கும் பெரும்பாலான விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும்’’ என பல தகவல்களை தெரிவித்தனர்.

தொடர்புக்கு

பேராசிரியர் மங்கம்மாள்: 95979 56268

No comments:

Post a Comment