Tuesday, September 12, 2023

உடலுறவு என்பது புனிதமா..? பாவமா..? சத்குரு தரும் விளக்கம்..!

 “மனித பாலுணர்வு பாவமா புனிதமா?” பாலுணர்வில் சரி தவறு என்று எதுவுமில்லை. இது பொருள் தன்மையிலான இருப்பின் அத்தியாவசிய அங்கம், ஆனால் குறுகிய எல்லைக்குட்பட்ட பங்கு வகிக்கிறது. பாலுணர்வு உந்துதலை ஏற்பதும், பொறுப்பாக நடத்துவதும் மிகவும் முக்கியம்.

சத்குரு:

“வாழ்க்கையில் விரும்பத்தக்க விஷயங்கள் அனைத்தும் ஒழுக்கக்கேடானதாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ இருப்பது எதனால்?” இளைஞர்கள் அடிக்கடி இப்படி கேட்கிறார்கள் அல்லது இதுபற்றி சிந்திக்கிறார்கள். முதலில் பாவம் என்ற சொல்லைப் பார்ப்போம். பெரும்பாலும் உடலுறவை குறிக்கும்போது மக்கள் பாவம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். வாழ்க்கையில் உடலுறவு பற்றி சிந்திப்பதிலேயே அபரிமிதமான நேரத்தை மக்கள் செலவிடுகிறார்கள். ஒரு சாதாரண உடல்தேவை, பலருக்கு வாழ்க்கை முழுக்க மனதை ஆட்டிப்படைக்கும் விஷயமாக மாறிவிட்டது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்: பாலுணர்வு என்பது நமக்குள் இருக்கும் ஒரு சாதாரண உந்துதல், பருவமெய்தும்போது ஏற்படும் ரசாயன மாற்றம்.

இனப்பெருக்கம் நோக்கி நம்மை உந்தித்தள்ள இயற்கை இதை இனிமையான அனுபவமாக செய்துள்ளது. காலப்போக்கில் நாம் இனப்பெருக்கத்தை விருப்பத்திற்கேற்ப தேர்வுசெய்யும் அம்சமாக்கிவிட்டோம், ஆனால் அதுதரும் இன்பம் அப்படியே இருக்கிறது. இதில் சரி தவறு என்று எதுவுமில்லை. பொருள்தன்மையிலான இருப்பின் அத்தியாவசியமான அங்கமாக பாலுணர்வை ஏற்றுக்கொள்வது முக்கியம். இருவர் மத்தியில் இந்த பாலுணர்வு சார்ந்த ஈர்ப்பு ஏற்பட்டதால்தான் நீங்களும் நானும் இங்கு இருக்கிறோம், இதுதான் நிதர்சனம்.

மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், மதம் மற்றும் நெறிமுறை போதிப்பவர்கள் நம் உடலே பாவம் என்று சொல்லிவிட்டார்கள். காலங்காலமாக, இது சொல்லமுடியாத குற்ற உணர்வையும் வேதனையையும் உருவாக்கியுள்ளது. ஏதோவொன்றை எந்த அளவு அதிகமாக ஏற்க மறுக்கிறீர்கள், அந்த அளவு அது மனதில் முக்கியமானதாக வியாபிக்கும். இப்படி இயற்கை உந்துதலை அடக்கமுயலும் நிலை மனித மனத்தில் சொல்லமுடியாத கொந்தளிப்புகளை உருவாக்கியுள்ளது.

அதே சமயத்தில் நாம் என்ன நம் ரசாயனங்கள் ஆட்டிப்படைக்கும் பொம்மைகளா? நிச்சயமாக இல்லை. மனித வாழ்வில் உடலுறவு உரிய பங்கு வகிக்கிறது, ஆனால் அது ஒரு குறுகிய எல்லைக்கு உட்பட்டது. மனம் கூர்மையாக இருப்பவர்கள், இந்த உந்துதல் தங்களை அதிகம் ஆட்டிப்படைக்காததை கவனிக்கிறார்கள். மனதினும் ஆழமான இன்பங்களைக் கண்டறிந்துவிட்டால், பாலுணர்வின் முக்கியத்துவம் மேலும் குறையும்.

பாலுணர்வு உரிய இடத்தில் இருக்க அனுமதிப்பது

மதத்தின் பாரம்பரியத்தில், உடலுறவு பாவச்செயல் என்று சொன்னதற்கு எதிர்வினையாக, மேற்கத்திய நாடுகள் சமீப காலமாக உடலுடன் அதிகப்படியான அடையாளம் கொள்ளத் துவங்கிவிட்டது. இந்த போக்கையே பின்தொடர்வது துரதிர்ஷ்டவசமாகிவிடும். நம் அடிப்படை உடலியக்கத்தை நாம் அபத்தமாக்க வேண்டியதில்லை. அதே சமயம் அதை கொண்டாடவும் வேண்டியதில்லை.

குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபம் நோக்கிய உங்கள் வளர்ச்சியை நீங்கள் கவனித்தால், அது உங்களை வியப்பில் ஆழ்த்தவேண்டும், உங்களை ஆட்டிப்படைக்கக் கூடாது. இயற்கையான ஒரு புத்திசாலித்தனம், வெறும் ஹார்மோன்களின் விளையாட்டைக் கடந்தவர்கள் நாம் என்பதை நம் அனைவருக்கும் உணர்த்துகிறது. விலங்குகளைப் போலல்லாமல், மனிதர்கள் ரசாயனங்களின் தயவில் இல்லை. மனிதருக்குள் உணர்ச்சியளவில் மற்றும் சிந்தனையளவிலான துணைக்கான தேவை, உடலின் தேவையைவிட மிகவும் வலுவாக இருக்கிறது.

துரதிஷ்டவசமாக, தங்கள் புத்திசாலித்தனம் மீது ஹார்மோன் செயல்முறை ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பவர்கள், தங்கள் உள்நிலை சமநிலையை இழந்துவிடுகிறார்கள். எங்கோ வாசித்தது, இணையத்தில் பார்த்தது, அல்லது திரைப்படத்தில் பார்த்ததற்கு தங்கள் புத்திசாலித்தனத்தை இளைஞர்கள் பலிகொடுப்பது பரிதாபமானது. இதன் விளைவு, உள் விழிப்புணர்வு மற்றும் சமநிலையின் அடிப்படையில் பாலுணர்வுக்கு பதில்செயல் செய்யாமல், ஒரேவிதமாக பதில்கொடுக்கிறார்கள்.

மக்கள் தொடர்ந்து பாலுணர்வை ஆதரித்தும் எதிர்த்தும் பேசுகிறார்கள், ஆனால் இரண்டும் அவசியமில்லாதது. உடலிலும் மனதிலும் ஒருவித உள் சமநிலையை நாம் வளர்த்தால் போதும், பாலுணர்வு உரிய இடத்தைச் சேரும். பாலுணர்வு உந்துதலை ஏற்றுக்கொள்வது முக்கியம், அதை பொறுப்பாக நடத்துவதும் மிகவும் முக்கியம்.

இளமையிலிருந்தே பயிற்சிசெய்யத் துவங்கினால், சில எளிய யோகப்பயிற்சிகள் மிகுந்த பலன்தருவதாக இருக்கமுடியும், ஏனென்றால் எந்த போதனையும் செய்யக்கூடியதைவிட உடலையும் மனதையும் அது திறம்பட சமநிலைப்படுத்துகிறது.

No comments:

Post a Comment