Sunday, August 11, 2024

 _*உங்கள் ஸ்மார்ட்போனே உங்கள் எதிரி... ஜாக்கிரதை!*_



*ஸ்மார்ட்போன்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், உலகத்துடன் இணைந்திருக்கவும் நமக்கு வசதி அளிக்கின்றன. ஆனால், இந்த வசதிகள் நம்மை ஆக்கிரமித்துவிட்டனவா? ஸ்மார்ட் போன்கள் நம் நலனுக்கான கருவிகளாக இருப்பதற்கு பதிலாக, நம் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் எதிரிகளாக மாறிவிட்டனவா? இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இருக்கப்போகிறது இந்தப் பதிவு.*


இன்றைய உலகில் ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி உள்ளன. நாம் எழுந்தவுடன் அதை கையில் எடுத்தால்தான் நிம்மதியாக இருக்கிறது. தூங்குவதற்கு முன் அதிக நேரம் தொலைபேசி பார்ப்பது பலருக்கு பழக்கமாகிவிட்டது. தொலைபேசி மூலம் நமக்கு கிடைக்கும் தகவல்கள் மிக அதிகம். சமூக ஊடகங்கள், செய்திகள், பொழுதுபோக்குகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நாம் தொலைபேசியின் மூலம் எளிதாகப் பெறலாம். ஆனால், இந்த அதிகப்படியான தகவல்கள் நம் மனதை குழப்பி கவனத்தை சிதறடிக்கின்றன.


ஸ்மார்ட்போன் அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பல ஆய்வுகள் நம்மை எச்சரிக்கின்றன. ஸ்மார்ட்போனின் ஒளியானது தூக்கத்தை பாதித்து மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் கழுத்து, தோள் மற்றும் முதுகு வலி ஏற்படலாம். மேலும், இதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு மூளை செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. 


ஸ்மார்ட்போன்கள் நம்மை மற்றவர்களிடமிருந்து பிரித்து வைக்கின்றன. நம் நண்பர்கள் குடும்பத்தினருடன் நேரில் உரையாடுவதற்கு பதிலாக தொலைபேசியில் சமூக ஊடகங்களில் உரையாடுவதற்கு அதிக நேரத்தை செலவிடுகிறோம். இது நம்முடைய சமூக உறவுகளை பாதித்து மனச்சோர்வு, தனிமை உணர்வை ஏற்படுத்துகிறது.


நாம் வேலை செய்யும்போது அல்லது படிக்கும் போது, அதிகமாக ஸ்மார்ட்போனில் கவனம் செலுத்துவதால் நம்முடைய வேலையில் கவனம் குறைகிறது. இதன் விளைவாக நாம் செய்யும் வேலைகள் தாமதமாகி, அதன் தரம் குறைகிறது. மேலும், இவை நம்முடைய தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பற்றதாக்குகின்றன. சோசியல் மீடியா மற்றும் பிற ஆபத்தான இணையதளங்கள் மூலம் நம்முடைய தகவல்கள் திருடப்படலாம். இது நம்முடைய நிதி பாதுகாப்பு, புகழ் ஆகியவற்றை பாதிக்கக்கூடும். 


ஸ்மார்ட் போன்கள் நம் வாழ்வில் பல வசதிகளை வழங்கினாலும், அதிகப்படியான பயன்பாடு நம் உடல் நலம், மனநலம், சமூக உறவுகள், உற்பத்தி திறன் ஆகியவற்றை பாதிக்கும். எனவே, இதை நம் வாழ்வில் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான பயன்பாட்டைத் தவிர்த்து நம்முடைய வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதில் அனைவரும் கவனம் செலுத்துங்கள். 


🌹🌹🌹

No comments:

Post a Comment