ஆக… நாம் பேசுகின்ற பேச்சு...பேச்சாக இருக்கவேண்டுமெனில்... அதை எப்படி பேச வேண்டும் என்பதை பற்றி முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பேச வாயிருந்தும் பேச முடியா சூழ்நிலைகள் அமைவதுண்டு. பேச கூடாது என்று ஒதுங்கி போனாலும் பேச வேண்டிய வாய்ப்புகள் வருவதுண்டு. வாயை திறந்தாலும் பிரச்சனை. வாயை மூடிக்கொண்டு இருந்தாலும் பிரச்சனை என்று வித விதமாக வம்புகள் எதிரே வந்து கம்பு சுற்றுவதுமுண்டு.
மனிதர்களின் முகத்தில் உள்ள கண், காது, மற்றும் மூக்கில் மட்டும் இரண்டு வழிகள் என்று எல்லாமே இரண்டாக இருக்க… வாய் மட்டும் ஏன் ஒன்றே ஒன்று என்று இருக்கிறது?!
“மனிதன் பேசுவதைவிட, அதிகமாக கேட்க வேண்டும் என்பதற்காக இயற்கையில் அவ்வாறு படைக்கப்பட்டு இருக்கலாம். அதனால்தானோ, என்னவோ…காதுகள் எப்போதும் திறந்திருகின்றன. ஆனால் வாய்...?
அதைப் போலவே, நாம் எதை சொல்ல வேண்டுமென்றாலும், நாம் சொல்வதற்கு முன்பு, நம்முடைய பற்களையும், உதடுகளையும் தாண்டித்தான் பேச முடிகிறது. இதுவும் கூட.... நாம் பேசுவதற்கு முன்பு குறைந்தது இரண்டு முறை யோசிக்கவேண்டும் என்பதற்காக கூட இருக்கலாம்.
பொதுவாக நாம் ஒரு வார்த்தையைப் பேசிவிட்டாலே , அதைத் திரும்பப் பெற முடியாது என்பது அறிவோம். மேலும் அந்த வார்த்தைகளால் ஏற்படும் விளைவுகளுக்கு நாமே பொறுப்பாளியும் ஆகி விடுகிறோம்.
இதைத்தான் 'பேசாத வார்த்தைகளுக்கு நாம் எஜமானர்கள் என்றும் பேசிய வார்த்தைகளுக்கு நாம் அடிமைகள் என்றும்' சொல்கிறார்களோ?
'மிகவும் அவசியமான போது மட்டுமே பேச வேண்டும், பேசுவதற்கு முன்பு ஒருவர் தன்னை தானே மூன்று கேள்விகளைக் கேட்டு பார்த்து, அதற்கு உறுதியான பதிலைப் பெற்ற பின்னரே பேசவேண்டும்' என்று ரேக்க அறிஞர் சாக்ரடீஸ் தனது சீடர்களுக்கு அறிவுரை கூறி இருக்கிறாராம்.
அந்த மூன்று கேள்விகளை நாம் அனைவரும் அறிந்து கொள்வது நலமாக இருக்கும்.
முதல் கேள்வி,
“பேசும் பொருள் உண்மையா?“ என்று பேசுவதற்கு முன் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
ஆம், நாம் சொல்ல போகும் தகவலில் உண்மைத் தன்மை இல்லாமல் இருந்தால், பேசாமல் இருப்பதே நல்லது. இல்லையெனில், நம்மை அறியாமலேயே பிறர் சொன்ன பொய்களை… நாமும் பிறருக்கு சொல்லி பரப்பி விடுவோம்.
இரண்டாவது கேள்வி ,
"பேசும் பொருள் இனிமையானதா?"
பிறரைப் புண்படுத்துவதற்காக தேவையற்ற செய்திகளை, வார்த்தைகளை சொல்லக்கூடாது. முக்கியமாக கோபமாக அல்லது எதிரே நிற்பவரை பிடிக்காதபோது, அவர்கள் வருத்தப்படும்படியோ, எரிச்சலூட்டும் வகையிலோ பேசக்கூடாது.
மூன்றாவது கேள்வி,
"பேசும் பொருள் பயனுள்ளதா?"
நாம் சொல்ல போகின்ற அல்லது பகிரக்கூடிய, விஷயங்கள் பயனுள்ளதா? உபயோகமாக இருக்குமா? என்பதை பற்றி முதலில் யோசிக்கவேண்டும். குறைந்தபட்சம் கேட்பவர்களுக்கு ஆறுதலாக, அல்லது வழிகாட்டுதலாக இருக்குமா? என்பதை யோசித்து பேச வேண்டும்.
குறிப்பாக பேசிவிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளால் ஏன் பேசினோம் என்று யோசிப்பதை விட யோசித்து பேசுவதே சிறந்தது.
நமது பேச்சை வைத்து தான்... நாம் மற்றவர்களுடைய நினைவில் நல்லவிதமாகவோ அல்லது கெட்ட விதமாகவோ இருக்க வாய்ப்பு இருக்கின்றது. சில உறவுகள் தொடர்வதும் அல்லது முடிவதும், அவரவர் பேச்சின் தன்மை பொறுத்தே அமையக்கூடும்.
சில சமயங்களில், நாம் சொன்ன வார்த்தைகள் மூலம் ஒருவரின் வாழ்க்கை ஒளிமயமாக மாறகூடும். உங்கள்அன்பான பாராட்டு அல்லது ஊக்குவிப்பு மற்றவர்களின் மனநிலையை மகிழ்வாக மாற்றக்கூடும். அது போலவே உங்களின் தவறான வார்த்தை அல்லது பேச்சு அவர்கள் மனநிலையை கெடுத்து, அவர்களின் மகிழ்ச்சியை பாதிக்ககூடும்.
நன்றாக பழகிய சில உறவுகள், பல வருடங்களுக்கு பேசாமல் பிரிந்து கிடப்பதற்கு ஒரு குறிப்பிட்ட வார்த்தை அல்லது பேச்சே காரணமாக இருக்கிறது. அதே நேரத்தில் சுமூகமான பேச்சுவார்த்தைகள் மூலம் பல பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டிருக்கினறன.
ஆகவே, உங்கள் மதிப்பை மற்றவர்களிடம் அதிகரிக்க வேண்டுமெனில்...
தேவையிருந்தால் மட்டுமே பேசுங்கள். இல்லாவிட்டால் உங்களைப் பேச அழைக்கும் போது மட்டுமே பேசுங்கள்.
பேசும் பொழுது மென்மையான, தன்மையான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கண்ணியமாகப் பேசுங்கள்.
இறுக்கமான முகபாவத்தோடு பேசாமல் புன்னகையோடு பொறுமையாக பேசுங்கள்.
மற்றவர்களை கேலி, கிண்டல் அல்லது அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டி பேசுவதை தவிர்த்து விடுங்கள்.
மற்றவர்கள் பற்றி யாராவது குற்றம், குறை சொல்ல வந்தாலும் அதன் உண்மைத்தன்மை தெரியாமல் கருத்து சொல்ல வேண்டாம்.
பிறரைப் பற்றி அவர்கள் இல்லாத நேரத்தில் தவறாக பேசி சந்தோசப்படும் நபர்களின் பேச்சை கேட்பதை தவிர்ப்பது நல்லது.
மற்றவர்கள் மகிழ வேண்டும் என்பதற்காக, ஏதாவது ஆதாயத்திற்கு ஆசைப்பட்டு.. அவரைப் பற்றி புகழ்ந்தும் பேசவேண்டாம். அதைப்போலவே உங்களை புகழ்ந்து பேசி ஆதாயம் தேட நினைப்பவர்களை நம்பவும் வேண்டாம்.
முக்கியமாக நீங்கள் பேசும் ஒரு சொல் அல்லது ஒரு வார்த்தை மூலமாக.... உங்களுக்கோ அல்லது மாற்றவர்களுக்கோ என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அது தீமை செய்யாமல், நலம் தருகின்ற ... நன்மை தரக்கூடிய வார்த்தை என்றால் நல்லதுதானே!
No comments:
Post a Comment