Wednesday, May 8, 2024

வெறுப்போ வெறுப்பு

முன்பெல்லாம் நான் எனது கருத்துக்களில் பிடிவாதமாய் இருப்பேன்.நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் என்று வாதிடுவேன்.


   மற்றவரின் கருத்து தவறு என்று நிரூபிக்கவும்,எனது கருத்தை நியாயப் படுத்த வும்  மிகவும் மெனக்கிடுவேன்.


  நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரனாய் பிறரின் தவறுகளை சுட்டிக் காட்டுவேன்.


   அதே நேரத்தில் எனது தவறுகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் "எனது பாட்டில் குற்றமா...".என்று சிவபெருமானை போல் நெற்றிக் கண்ணை திறந்து விடுவேன்.


   வச்சா குடுமி,செறைச்சா மொட்டை என்கிற கதை தான். உலகத்தை திருத்த வந்த அவதார புருஷன் மாதிரி பேசித் திரிந்தேன்.


   ஒரு கட்டத்தில் வாழ்க்கையே சலிப்பாகி விட்டது. ஏன் இப்படி ஓடுகிறோம், எதற்காக ஓடுகிறோம். இந்த வாழ்க்கையே அர்த்தமில்லாமல் இருக்கிறதே என்று ஒரே  வெறுப்பு.விரக்தி.


  உலகமே நமக்கு எதிராக சதி செய்வது போல் அனைத்தின் மீதும் ,அனைவரின் மீதும் ரொம்பவே  வெறுப்பு.


 முதலில் கண்ணாடியில் தெரிந்த உருவத்தை சரி பண்ண கண்ணாடியை சரி செய்ய முயற்சிப்பது போல எனது செயல்கள் இருந்தது.அதன் பின்னர்.....


  இந்த உலகம்,ஒரு கண்ணாடி.அது நம்மைத் தான் பிரதி பலிக்கிறது. வெறுப்பு வெளியே இருக்கிறது என்று நான் எண்ணிக் கொண்டு இருந்தேன். அது நமக் குள் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.


   ஆனாலும் அதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டி ருந்தேன்.


   தீடிரென்று ஒரு நாள் ஓஷோவின் புண்ணியத்தில் படித்த "தம்மபதா" வின் வரிகள் நினைவுக்கு வந்தது.


  "நெருப்பை நெருப்பால் அழிக்க முடியாது. நீரால் தான் முடியும். அது மாதிரி வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது.அன்பு ஒன்றால் தான் அதை வெல்ல இயலும்."


  புத்தரின் அந்த தம்மபத வரிகள் தான் என்னுள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படு த்தியது. அவர் கூறிய உண்மை மிகவும் தெளிவாக புரிந்தது.


    நாளாக நாளாக என்னுள் பார்க்கத் தொடங்கியதும் வெறுப்பு உணர்வு குறை வது தெரிந்தது.


  கடந்த வருடம் ஜூன் மாதத்தில் சென்னையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்வு க்கு சென்ற போது எனது உறவினர் ஒருவரை சந்தித்தேன்.


  வெறுப்பின் உச்சக்கட்டம் அவர். அவரை பார்த்தாலே உள்ளுக்குள் எரியும். அந்த மாதிரி ஆசாமி.


   வழக்கம் போல் வெறுப்பை உமிழும் பேச்சு.அனைவரையும் திட்டி தீர்த்து விட்டார்.ஒரு அரைமணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.


   அவர் அலை கடலாய் ஆர்ப்பரித்தார் . நானோ ஆழ்கடலை போல் அமைதியாய்  இருந்தேன்.


   சாதாரணமாக அவருடன் பேசினாலே நம்முள் வெறுப்பு உணர்வு துண்டப் பட்டு விடும்.


  ஆனால் அன்று அவ்வளவு நேரம் பேசியும் என்னுள் எந்த மோசமான உணர்வும் வரவில்லை. நான் மிகவும் ஆச்சர்யப் பட்டு போனேன்.


   அவரை பார்த்தாலே நமக்கு கோபம் வருமே, இன்று எப்படி இப்படி எனக்குள்!  என்று ஆனந்தத்தில் திக்கு முக்காடிப் போனேன்.


   என்னுள் ஒரு சிறு துளி வெறுப்பு உணர்வு கூட தோன்றவில்லை. உடலிலும் எந்த வித பாதிப்பும் இல்லை.


 

  அதன் பின் நானும் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். இன்று வரை வெறுப்பு உணர்வு என்னுள் பெரிதாய் ஏதும் ஏற்படவில்லை.


   பால் பொங்குவது போல் சிலசமயம் லேசாய் எட்டிப் பார்க்கும். நாம் திரும்பி உள்ளே பார்த்தால், தண்ணீர் தெளித்தார் போல் அடங்கி விடும்.


   இன்றைக்கு whatsapp பிலும் முகநூல் பதிவுகளிலும் வெறுப்பு உணர்வுடன்  சிலர் பதிவிடுவதை காண்கிறேன்.


  சிலர் பிராமணர்களின் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள். 

சிலர் பிடிக்காத நடிகர்கள் மீது.


   சிலர் முஸ்லீம் மதத்தின் மீது.

பலர் பாகிஸ்தான் மீது.

இப்போதைய ட்ரெண்ட் சீனாவை திட்டுவது.


   முழுக்க முழுக்க வெறுப்பை உமிழும் பதிவுகள். அவர்களை நினைக்கையில் எனக்கு மிக பரிதாபமாக இருக்கும்.


   நான் எனது வெறுப்பு உணர்வில் இருந்து விடுபட வேண்டும் என்று எண்ணி முப்பதுக்கும் மேல் நீண்ட ஆண்டுகள் கழித்து தான் என்னால் அதில் இருந்து மீள முடிந்தது.


  இவர்களில் பலருக்கு தங்களிடம் வெறுப்பு உணர்வு இருக்கிறது என்ற உணர் வே இல்லாமல் இருக்கிறார்கள்.


   இவர்கள் இதில் இருந்து வெளி வர எத்தனை பிறவிகள்  ஆகுமோ....பாவம்.




┈❀🌿🀼󟽀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈ 


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!


நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...


இந்த நாள் இனிய நாளாகட்டும்.



🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

No comments:

Post a Comment