Wednesday, May 1, 2024

மே தினம் என்று சொல்லப்படும் உலகத் தொழிலாளர் நாள்

 


மே 1: மே தினம் என்று சொல்லப்படும் உலகத் தொழிலாளர் நாள் ஏன் உருவானது?* 


ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 மணி நேரம் உழைக்க வேண்டும், ஆனால் அதற்கு உரிய ஊதியம் கிடைக்காது, உழைப்புக்கு ஏற்ற ஊதியம் எங்களது உரிமை என்றெல்லாம் எதுவும் பேச முடியாது. இப்படி ஒரு சூழலில் நம்மால் வேலை செய்ய முடியுமா?


இப்படி ஒரு அடிமை வேலை வேண்டாம் என சொல்லிவிட்டு சென்றுவிடுவோம். இப்படிப்பட்ட உழைப்பு சுரண்டலுக்கும் கொத்தடிமை முறைக்கும் இன்று முடிவு கட்டியுள்ளோம்.

ஆனால் ஒரு காலத்தில் இது தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளை. தொழிலாளர்கள் முதலாளிகளால் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்கள்.


1800 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில்  மிகப்பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. இதைத்தான் வரலாற்றில் தொழிற்புரட்சி என்று கூறுகிறோம்.  தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.


பெண்களும் உழைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. குழந்தைகளை வளர்க்கும் பெண்களும் உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் குழந்தைகளுக்காக பள்ளிகள் உருவாக்கப்பட்டன. பள்ளிகள் என்றால் இப்போது உள்ள பள்ளிகள் அல்ல. குழந்தைகளை ஓரிடத்தில் அடக்கி ஒடுக்கி வைப்பதற்கு பள்ளிகள் தேவைப்பட்டன. வேலை செய்யும் வயது வரும் வரை குழந்தைகளுக்கு படிப்பையும் தொழிலையும் கற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இருந்தது.



இதனால் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் கடும் அவதிக்கு ஆளாயினர். இந்த சூழலில் தான் காரல் மார்க்ஸும் பிரடரிக் ஏங்கல்சும் தொழிலாளர்களுக்கு உரிமையும் சுதந்திரமும் நல்ல வாழ்க்கையும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதை தங்களது வாழ்நாள் கடமையாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டனர். கம்யூனிசம் என்று சொல்லப்படுகின்ற தொழிலாளர் வர்க்க தத்துவத்தை உருவாக்கினர். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். 


அடிமைப்பட்டுக் கிடந்த தொழிலாளர்கள் தங்களின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் ஒன்று திரண்டனர்.  தொழிற்சங்க அமைப்புகளை உருவாக்கினர். சில இடங்களில் வேலை நிறுத்தங்களும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. 8 மணி நேரம் தான் வேலை என்ற கோரிக்கை உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.


தொழிலாளர்களின் உரிமைக்காக 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டம் மிகப்பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


ஆனால், முதலாளிகள் தங்களுடைய காவல் படை மூலமாக  போராட்டத்தை ஒடுக்க முயற்சி எடுத்தனர். தொழிலாளர்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தினர். எண்ணற்ற தொழிலாளர்கள் இறக்க நேர்ந்தது. தொழிலாளர் வர்க்கத்தின் வீரம் செறிந்த போராட்டத்தால் 8 மணி நேர வேலை என்பது இன்று அனைத்து நாடுகளிலும் தொழிலாளர் நலச் சட்டமாக மாறி உள்ளது.

இந்தப் போராட்டத்தை நினைவு கூறவும், தொழிலாளர் உரிமைக்காகவும் குறிப்பாக 8 மணி நேர வேலை என்ற உரிமையை ஒரு போதும் கைவிட்டு விடக் கூடாது என்பதற்காகவும் ஆண்டுதோறும் மே 1 ஆம் நாள் உலகத் தொழிலாளர்  தினமாக உலகத் தொழிலாளர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

நாமும் தனிச்சிறப்பு மிக்க இவ்வரலாற்று நாளை மகிழ்ச்சியோடும் போராட்ட உணர்வோடும் கொண்டாடுவோம்! உழைப்புச் சுரண்டல் இல்லாத உலகத்தையும் தொழிலாளர்கள்  உரிமைகளோடு வாழும் உலகத்தையும் உருவாக்குவோம்!

No comments:

Post a Comment