Friday, November 24, 2023

ரம்பத்தை கடித்த பாம்பு

ஒரு பாம்பு கார்பென்டரி ரூம்குள்ள தெரியாம வந்திடுச்சு... உள்ளே உள்ள கார்பென்டரி கருவிகள் மேல ஊர்ந்து போகும்போது எதோ ஒரு கூர்மையான பொருளால் அதோட உடலில் சிறு காயம் ஏற்பட்டிடுச்சு... 

உடனே சட்டுன்னு கோபத்தோட அங்க இருந்த ஒரு கூரான ரம்பத்தை போய் கடிக்க ட்ரை பண்ணிச்சு... 

இப்போ ரம்பத்தின் பற்கள் அறுத்தால் அதன் வாய் பகுதியில் கிழிச்சு ரத்தம் வர ஆரம்பிச்சது. பாம்புக்கு கோபம் தலைக்கேறி.... 

அந்த ரம்பத்தை சுற்றி வளைத்து கொல்லும் நோக்கத்தோட சுத்தி இறுக்க ஆரம்பிச்சது... தன் பலம் முழுவதையும் சேர்த்து.....என்ன ஆச்சு... முழு உடலும் ரம்பத்தின் பற்களால் வெட்டப்பட்டு, காயம் ஆகி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது... என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கிறதுக்கு முன்னால அந்த பாம்பு தனது செயலாலேயே உடல் துண்டாக்கப்பட்டு இறந்து போச்சு....

இதே போல தான் நாம் நமது வாழ்க்கையிலும் மத்தவங்க கிட்ட தேவையில்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்திட்டு அதன் வீரியம் நம்மையே தாக்கும் போது நாம பண்ணின தவறு என்னங்கிறதை உணர்ந்து அதிலிருந்து விலகி போகாமல், மேலும் மேலும் கடினமான வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பிச்சு அதன் எதிர்விளைவால் நமது மன நிம்மதியை இழந்து.... தேவையற்ற கோபம், பதட்டம், மன அழுத்தம் இவற்றால் நமது உள்ளம் மற்றும் உடல் நலத்தையும் கெடுத்துக்கொண்டு..... 
நம்மையே இழந்து விடுகிறோம்.

வைரத்தை விழுங்கிய எலி

  • எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது..

மிகவும் விலை உயர்ந்த *வைரம்* அது. வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து எப்படியாவது அந்த எலியை "ஷூட்"செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்..

எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கி’யுடன் வந்துவிட்டான்.. அதை ஷூட் செய்ய..

எலி அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியதில் திடீரென்று ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன..

ஆயிரக்கணக்கான
எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் *ஒதுங்கி தனித்தே* நின்றிருந்தது .

எலி பிடிப்பவனுக்கு அது வசதியாக போய்விட்டது..

சரியாக குறி பார்த்து அந்த எலியை டுமீல்.. என சுட்டான்..எலி *spot out..

வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான்..

ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான்..
ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்.. என்ன காரணம்? என்றான்.

அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்...

இப்படித்தான்...

'பலபேர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னை சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள்" அதுவே.. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது. என்றான்.

உறவுகளும் அப்படித்தான் சிலர் இடையில் வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி கடவுள் கொடுத்த உறவுகளை அசட்டை செய்து விட்டுவிடுகிறார்கள்.

ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும் சொந்த பந்தமும் , நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்....

நிர்வாகம் உன்னைத் தூக்கணும்னு முடிவு பண்ணா...

ஒரு அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன.
எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்தினான்.

அன்றும் அப்படித்தான்.. ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக் கொல்ல முடிவு செய்து அந்த நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான்.

மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார்.

"பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை... தண்டனையை நிறைவேற்றும் முன் எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள் அரசே. செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!"

சற்றே யோசித்த அரசன், 'பத்து நாட்கள்தானே... சரி'யென்று அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார்.

அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார்.

முதலில் அவற்றுக்கு உணவு கொடுத்து, பிறகு அவற்றுடன் விளையாடி, குளிப்பாட்டி நாய்களுடனேயே சந்தோசமாய் இருக்க ஆரம்பித்தார்.

பத்து நாட்கள் முடிந்தது.

அரசன் சொன்னபடி தனது தண்டனையை நிறைவேற்றத் தயாரானான்.

சேவகர்களை அழைத்து, மந்திரியைத் தூக்கி நாய்கள் இருக்கும் கூண்டுக்குள் எறிந்த அரசன், கண்ட காட்சியில் உறைந்து போனான்.

அவன் நம்பிய அந்த கொடூர நாய்கள் எல்லாம் இப்போது அந்த மந்திரியின் முன்னால் வாலை ஆட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தன.

"இது எப்படி சாத்தியம்.?"

அதிர்ந்து நின்ற அரசன் கேட்டதும் புன்னகையுடன் மந்திரி கேட்டார்.

"அரசே... கடந்த பத்து நாட்களும் நான் இந்த நாய்களுடன் தான் இருந்தேன். நான் வெறும் பத்து நாட்கள் செய்த சேவையை மறக்காமல் இந்த நாய்கள் இவ்வளவு அன்பைச் செலுத்தும்போது, பத்து வருடங்கள் உங்களுக்கு செய்த சேவையை மறந்து ஒரு சிறு தவறுக்காக என்னைக் கொல்ல நினைக்கிறீர்களே... இது நியாயமா.?"

மந்திரி கேட்டதும் அரசனுக்குத் தன் தவறு புரிந்தது.

வருத்தத்துடன் தனது சேவகர்களைப் பார்த்துத் திரும்பிய அரசன்,
இந்த முறை மந்திரியை முதலைகள் இருக்கும் குளத்தில் எறியச் சொன்னான்.



நீதி:

நிர்வாகம் உன்னைத் தூக்கணும்னு முடிவு பண்ணா...
அதுல மாற்றமே இருக்காது 🤷‍♂

மனத்தாழ்மையாய் நடப்பதே உண்மையான ஞானம்.

ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். 

ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர்.
அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். 

ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக் கொண்டான்.

இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான். ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும் , கவனமும் செலுத்தினார்.

சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான். தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை .

பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து , அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான்.

ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை. அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார்.

நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையே கூட எதிர்த்துப் பேசக் கூடும். வேறொரு வழியை யோசித்தார்.

மறுநாள் அவனை அழைத்தார்.
"மகனே ! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர் . பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல் . இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப் படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் " என்றார் .

கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப் படுத்தி விட்டன.

''இதோ உடனே .செய்து முடிக்கிறேன் ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி வீட்டுக்கு விரைந்தான்.

ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான்.

ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார்.அவனும் ஆசிரியர் சொன்னபடியே " அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர் . பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு."

அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரி சூடாகி விட்டார். "ஏன்டா ! இன்னிக்கு நீ பொழுது போக்க நான் தான் கிடைச்சேனா ? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா ? " என்றார்.

இந்தக் கேள்வி அவனை ஆத்திரமூட்டியது .
" அவரைப் பத்தி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான்.

ஆசாரி " அடேய் அறிவு கெட்ட வனே ! என்னதான் படிச்சிருந்தாலும் , விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது அதோட உயர , அகலந்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான் . உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார் .

எங்கோ பளீரென்று அடி விழுந்தது அவனுக்கு .
"மனித ஞானம் இவ்வளவுதானா ? இதுக்காகவா இத்தனை பேரை அவமானப் படுத்தினேன் ? " .

அவமானம் பொங்கியது . கூனிக் குறுகியபடியே ஆசியரின் முன்னால் போய் நின்றான் .
ஆசிரியர் சிரித்துக் கொண்டே கேட்டார்,

" என்னப்பா ! சவப்பெட்டி அடிச்சாச்சா " .
அவன் பதில் சொன்னான்.

"அடிச்சாச்சு. என்னோட தலைக் கனத்துக்கு ".

செல்லமே ! என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரம் தான். இதை உணர்ந்து மனத்தாழ்மையாய் நடப்பதே உண்மையான ஞானம்.

அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். 

அங்கு ஒரு நீரோடையும் பாலமும் இருந்தன. 

ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். 

அங்கு இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் இலேசாக அசைந்துகொண்டிருந்தன.

இளைஞர்கள் பாலத்தில் நின்று, ஓடை நீரில் அசைந்துகொண்டிருக்கும் முட்டையோடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால் அவர்கள் வைத்த குறி தவறித்தவறிப் போயிற்று. ஒரு முட்டையோட்டைக்கூட அவர்களால் சுட முடியவில்லை. 

இளைஞர்களின் இந்தச் செயலை விவேகானந்தர் பார்த்தார். இவர்களால் இந்த முட்டையோடுகளைச் சுடமுடியவில்லையே! என்று நினைத்தார். அதனால் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இதை அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன் கவனித்தான்.

அவன் விவேகானந்தரிடம், பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல் போன்று தெரியும். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல், இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. நீங்களே முயற்சி செய்து பாருங்கள்! அப்போது உங்களுக்கே தெரியும்! என்று கூறினான்.

 சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியைக் கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளைக் குறி வைத்து சுட ஆரம்பித்தார்.

அப்போது அங்கு சுமார் பன்னிரெண்டு முட்டையோடுகள் நீரோடையில் மிதந்துகொண்டிருந்தன. விவேகானந்தர் வைத்த குறி ஒன்றுகூட தவறவில்லை. 

வரிசையாக அவர் ஒவ்வொரு முட்டையோடாகச் சுட்டார். அங்கிருந்த அத்தனை முட்டையோடுகளும் வெடித்துச் சிதறின! இதைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள்.

அவர்கள் விவேகானந்தரிடம், நீங்கள் துப்பாக்கிச் சுடுவதில் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டீர்கள், இல்லையா? என்று வினவினார்கள். 

அதற்கு விவேகானந்தர், என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன் என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை.

அவர்கள், அப்படியானால் ஒரு குறி கூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது? என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர், எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. 

மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும் என்று பதிலளித்தார். 

மேலும் சுவாமி விவேகானந்தர் மனஒருமைப்பாடு பற்றி இவ்விதம் கூறியிருக்கிறார்: வெற்றியின் ரகசியம் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. உயர்ந்த மனிதனையும் தாழ்ந்த மனிதனையும் ஒப்பிட்டுப் பார். 

இருவருக்கும் உள்ள வேறுபாடு, தங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கும். மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர, வளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி.

குப்பைத் தொட்டி

நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.

பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.

வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். 

ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு

ஊக்கு விக்கறவனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்பான்.

ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்...
இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்.

அவனுக்கு அன்பும், அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்.

அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.

எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது.

நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது.
கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது.

வருமானம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்து விட்டது.

கொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலும் கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடி கொண்டது.

சோகமே உருவாகி விட்டான்.
ஒரு நாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலை சாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது.

அதைக் கண்ட மனைவி தழுதழுத்து ஆறுதலாய் பேசினாள்.

"ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குறீங்க"

இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே.

அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே" என்றாள்.

புது நம்பிக்கை, புது உற்சாகம் உள்ளத்தில், கொல்லன் விறகு வெட்டியாக ஆனான்,

அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது.

வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது.

ஒரு நாள் ஊடலும் ,சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்.

"மாமோய்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே !

என்ன அது?".

விறகு வெட்டியான நம்ம கொல்லன் சொன்னான்.

"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் கறிக் கொழம்புமாய் இருக்கும்.

இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதானடி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு.

இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலையே"
என்றவனுக்கு கண் கலங்கவும் தவித்துப் போனாள் அவள்.

"வேணாஞ்சாமி வேணாம், நீங்க ஏங் குலசாமி, கண்ணு கலங்காதீக,

என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்.

காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்.

கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும் என்றாள்.

மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகு வெட்டியானவன் விறகுக்கடை முதலாளியாக ஆனான்.

வருமானம் பெருகியது,
அப்புறமென்ன வீட்டில் கறிசோறுதான்.

ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன...

வந்தது கெட்ட நேரம்,
விறகு கடையில் தீ விபத்து!...
அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது.

தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி.

நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே நண்பா மறுபடியும் விறகு வெட்டி வாழ்க்கை நடத்து.

எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்.

மனைவி வந்தாள்...

கணவனின் கண்ணீரை துடைத்தாள்.

அவன் தலை சேர்த்து நெஞ்சோடு கட்டி அணைத்தாள்,

கண்ணீர் மல்க சொன்னாள்;

"இப்போ என்ன ஆயிடுச்சுனு எஞ்சாமி அழுதீக,

விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு,

கரியாத்தானே ஆகியிருக்கு,

நாளையில் இருந்து கரி வியாவாரம் பண்ணுவோம்"
தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது.

ஊக்குவிக்கவும் உற்சாகப் படுத்தவும் ஆட்களிருந்தால் கோமா ஸ்டேஜ்ல இருக்கவன் கூட ஒலிம்பிக் ஓட்ட பந்தயத்தில் ஜெயிப்பான்.

ஊக்குவிக்கறவனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்பான்.

சதா உதாசினப் படுத்தி கொண்டிருந்தால்
ஆரோக்கியமா இருக்கறவனுக்கும் குளுகோஸ்தான் போடணும்.

ஆற்றில் வெள்ளம் வந்து தண்ணீர் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் போது கரையை கடக்க எதிர் நீச்சல் அடிக்க கூடாது.

ஆற்றோட வேகத்துக்கு தகுந்த மாதிரி கரையை அதோட போக்குல போய் கடந்து தான் கரையேறணும்.

Thursday, November 23, 2023

அடுத்தவன் வேலையிலே தலையிட க்கூடாது.


வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
.
*அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் போடப்பட்டே... வந்தது.*
.
*ஒரு நாள்கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு வந்தது.*
.
*இடையில் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் வந்தால் அன்றைக்கும் சேர்த்து அடுத்த வேலைநாட்களில் அந்த கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது கண்டு அதிசயித்தார்.*
.
*கேஷியரை கூப்பிட்டு “யாருய்யா அந்த ஆள்” என்று கேட்டார்.*
.
*தெரியலை சார் ! தினமும் காலையில் 10 மணிக்கு டான்னு வருவார், பணத்தை போடுவார் போய்ட்டே இருப்பார். ஆள் கொஞ்சம் சிடுமூஞ்சி மாதிரி இருக்கிறதால நாங்கலாம் யாரும் பேசுறதில்லை சார் ! என்றார்.*
.
*மேனேஜருக்கு இப்படி ஒரு கேரக்டரை சந்திச்சே ஆக வேண்டுமென்று பெரிய ஆவலாகவிட்டது. அடுத்த நாள் காலையிலேயே வந்து காத்திருந்து அந்த நபர் வந்தவுடன் பக்கத்தில் போய் பேச்சு கொடுக்க முயன்றார். அந்த நபரோ இவரை கண்டுகொள்ளாமல் போய்விட்டார்.*
.
*அவர் புறக்கணித்ததும் வங்கி மேனஜருக்கு அவருடன் பழகி அவர் ஏன் தினமும் ஆயிரம் ரூபாய் வங்கியில் போடுகிறார் என்றும் கண்டுபிடிக்கவேண்டும் என்று பெரிய வெறியே ஆகிவிட்டது.*
.
*தினமும் பணம் செலுத்தும் இடத்தின் அருகே நிற்பது சிரிப்பதுமாய் இருந்து அந்த நபரும் லேசாக புன்னகைக்க துவங்கியிருந்தார்.*
.
*ஒரு நாள் மேனஜர் வரும் வழியில் அந்த ஆயிரம் ரூபாய் பார்ட்டி வண்டி பழுதாகி ரோட்டில் நின்றிருந்தார்.மேனேஜர் லிஃப்ட் கொடுத்து வங்கிக்கு அழைத்து வரவே கொஞ்சம் பேசவும் துவங்கியிருந்தார்.*
.
*ஒரு நாள் அவரிடம் மேனேஜர் ’சார் நாமதான் நண்பர்களாகிட்டோம்ல இப்பவாவது சொல்லுங்க,எதுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் பேங்ல போடுறீங்க. அப்படி என்ன வருமானம் வரும்படி தொழில் செய்யுறீங்க ‘ என்று கேட்டார்.*
.
*’சார், நான் வேலையெல்லாம் பாக்கலை தொழிலிலும் செய்யலை, நான் தினமும் பந்தயம் கட்டுவேன் அதுல எப்படியும் ஜெயிச்சுருவேன், அந்த காசுதான் சார் அது என்றார்*
.
*மேனேஜருக்கு நம்பமுடியவில்லை , அது எப்படி தினமும் ஒருத்தன் பந்தயத்தில ஜெயிக்க முடியும் , இந்தாளு பொய் சொல்லுறான் என்று எண்ணிக்கொண்டார். அவரின் முகமாற்றத்தை கண்ட அவன் ‘சார் இதுக்குதான் நான் யாரிடமும் இந்த பந்தய மேட்டரை சொல்வதில்லை என்றான்.*
.
*அப்படியும் சந்தேகமாய் பார்த்த மேனேஜரிடம் ” சரி சார், நாம ரெண்டு பேருமே இப்ப ஒரு பந்தயம் போடுவோம், நான் ஜெயிக்கலைன்னா பாருங்க என்றான்,*
.
*டென்சாகிய மேனேஜரும் சரிய்யா பந்தயத்துக்கு ரெடி என்னய்யா பந்தயம்னாரு.*
.
*’சார், சரியா நாளைக்கு காலையில 10.15க்கு உங்க "கால் தொடை பகுதி பச்சைக்கலரா மாறிடும்" ரெண்டாயிரம் ரூபாய் பந்தயம் ‘ என்றான்.*
.
*யோவ் என்னய்யா சொல்ற, எதாவது நடக்குற கதைய சொல்லு என்று மேனேஜர் சொல்ல..*
.
*பந்தயத்துக்கு வர்றீங்களா இல்லையான்னு கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க சார்னு கேட்டான்.*
.
*சரின்னு ஒத்துகிட்டார்.*
.
*காலையில வருவேன் உங்க " கால் தொடை பகுதி " பச்சை பசேல்ன்னு மாறியிருக்கும் ரெண்டாயிரம் ரூவாயை எடுத்து வையுங்க என்றபடி சென்றுவிட்டான்.*
.
*மேனஜர்க்கு எப்படி இவ்வளவு தைரியமா பந்தயம் கட்டுறான் என்று ஆச்சர்யம். அவன் போனவுடன் முதல் வேலையாக பாத்ரூம் சென்று தனது பேண்ட்டை அவிழ்த்து கண்ணாடியில் முன்னும் பின்னும் தொடை பகுதியை பார்த்தார், அது வழக்கம் போல் கண்ணங்கரேல் என்று என்றுதான் இருந்தது.*
.
*இருந்தாலும் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை , அரைமணிக்கொரு முறை பேண்ட்டை அவிழ்த்து பார்க்கவும் போடுவதுமாய் இருந்தார்.*
.
*விடிந்தது... முதல் வேலையாக அதை போய் பார்த்தார், இப்பவும் அப்படியே கருப்பாகவே இருந்தது. நம்ம "கால் தொடையாவது" பச்சை கலராகிறதாவது என்று அவரே சமாதானம் சொல்லிக்கொண்டே குளித்து அலுவலகம் கிளம்பினார். எங்கே பஸ்ஸில் உட்கார்தால் எதும் செட்டப் செய்து நிறம் மாற செய்து விடுவார்களோ என்று எண்ணி நடந்தே போனார்.*
.
*பத்து மணி அலுவலகத்துக்கு 9 க்கே வந்துவிட்டாலும் 10 நிமிடத்துக்கு ஒரு முறை போய் போய் பார்த்து உறுதி செய்தபடியே இருந்தார். இன்னைக்கு அவனை ஜெயிச்சு ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிறனும் என்று ஆவலோடு காந்திருந்தார்.*
.
*சொல்லி வைத்தாற்போல் சரியாக 10.15 அவன் அந்த அறைக்குள் நுழையவே வேகமாய் சீட்டிலிருந்து எழுந்து தனது பேண்ட்டை கழட்டி நின்று “ இந்தா பார்த்துக்கோ“ அப்படியே கருப்பாதான் இருக்கு என்று முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் காட்டினார்.*
.
*அவன் உடனே அருகிலிருந்தவனிடம்*.
*” என்னமோ பேங்க் ஆபிசர், பெரிய மனுசன், அப்படியெல்லாம் செய்யமாட்டருன்னு இந்தாளை நம்பி பந்தயம் கட்டினே,*
*இப்ப என்ன சொல்லுறே, எடு மூவாயிரத்தை “ என்றான் அவன்.*
.
*அப்போதுதான் கவனித்தார் பந்தயக்காரனுடன் வேறு ஒருவனும் வந்திருந்தான். அவனும் மேனேஜரை முறைத்தபடி மூன்று "ஆயிரம் ரூபாய்" தாள்களை எடுத்து நீட்டினான்.*
.
*அதை வாங்கிய பந்தயக்காரன் இரண்டாயிரம் ரூபாய்களை மேனேஜரிடம் நீட்டி*
.

view
உங்கிட்ட கட்டின பந்தயத்தில நான் தோத்துட்டேன், ஆனா இவன் கிட்ட கட்டின பந்தயத்தில ஜெயிச்சுட்டேன், ஆயிரம் ரூபாய் லாபம் என்று வழக்கமாய் பணம் கட்டும் கவுண்ட்டருக்கு போய்விட்டான்.*
.
*அவனுடன் பந்தயம் கட்டி மூவாயிரம் ரூபாய் தோற்றவனிடத்தில் நீ எதற்கு அவனிடம் பந்தயம் கட்டினாய் என்று மேனஜேர் கேட்க*
*வந்தவன் கடுப்பாகி அவரிடம்*
*“போய்யா நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ?*
.
*என்னைய பார்த்தவுடனே பேண்டை கழட்டி காமிப்பாருன்னு உன்னைய சொன்னான், ச்சேசே அப்படியெல்லாம் இருக்காதுன்னு உன்னிய நம்பி பந்தயம் கட்டினா இங்க நீ ரெண்டாயிரம் ரூபாய்க்கு இவ்வளவு கேவலமான வேலை செய்யுற த்தூ என்று துப்பிவிட்டு போனான்.*

.
*இதனால் அறியப்படுவது*
.
அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும், அடுத்தவன் வேலையிலே தலையிட க்கூடாது.

அவ்வளவுதாங்க வாழ்க்கை


ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.
ஒருநாள் ஏதோ வேலையாக நடந்து சென்றபோது செருப்பு பிஞ்சுபோச்சு..

அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.
அந்த வீட்டுக்காரரை அழைத்து...ஐயா, என் செருப்பு பிஞ்சுபோச்சு. இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப் போறேன்...

காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.
அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து...ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! 

எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான்.நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார்
சில ஆண்டுகள் கடந்தன...

ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார்.அவரின் இறுதி ஊர்வலம் செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது.

அப்போது நல்ல மழை.பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை.

அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு.
பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.

அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..

ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? "மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..

அவ்வளவுதாங்க வாழ்க்கை
ஒரு செருப்புக்கு கிடைக்குற மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது

தன் பலவீனங்களையும் பலமாக மாற்றத்தெரிந்தவனே வெற்றியாளன்.


சைக்கிள் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒரே ஒரு கால் உடைய ஒருவரும் தன் பெயரை போட்டியில் பதிவுசெய்தார். 

அருகில் இருந்தவர்கள் ''வெகு தூரம் சைக்கிளில் செல்ல வேண்டும். அப்போது கால் களைத்துப் போகுமே பரவாயில்லையா?'' என்றனர். 

அதற்கு அவர் ''உங்களுக்கு சைக்கிள் ஓட்டும்போது இரண்டு கால்களும் வலிக்கும். 

ஆனால், எனக்கு ஒரு கால்தான் வலிக்கும்'' என்றார் புன்சிரிப்புடன்.
தன் பலவீனங்களையும் பலமாக மாற்றத்தெரிந்தவனே வெற்றியாளன்.

அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க , ஒரு சிற்பியை அணுகி சென்றார் . அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர்
சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்தார்.

உடனே பணக்காரர் ” ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள் ? ” இல்லை இந்த இரண்டு சிலைகளும் வேறு வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார்.

சிற்பி சிரித்துக்கொண்டே “இல்ல ஐயா கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது” என்றார்.

பணக்காரர் ஆச்சரியத்துடன் ” என்ன சொல்றீங்க மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை… எந்த பாகமும் உடையக்கூட இல்லையே ” எனக்கேட்டார்.

“அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது பாருங்கள்” என்றார் சிற்பி
“ஆமாம் ….அது சரி ..இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள் ? ” என்று கேட்டார் பணக்காரர்.

“இது கோவில் கோபுரத்தில் நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை ” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி.
பணக்காரர் வியப்புடன் ” நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் ? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய் முட்டாள் ” என்றார்.

“அந்த சிலையில் கீறல் இருப்பது எனக்கு தெரியுமே ..எப்போது அந்த கோவில் வழி சென்றாலும் எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே ..அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன் ” என்றார் சிற்பி.

நீதி : அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே உன் மனத்திருப்திகாக வேலை செய்...

எங்களோட குறிக்கோள் இனிப்பை அடையுறது தான்

அந்த சிறுமிக்கு இனிப்பு சாப்பிடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் தனது அம்மா வாங்கி தந்த லட்டுகளை சாப்பிட்டு விட்டு மீதியை தனது அறையிலிருந்த மேசை மீது வைத்தாள்.

சிறிது நேரத்தில் எறும்புகள் மேசை மீது இருந்த லட்டை தேடி வந்து வரிசையாக கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து செல்ல ஆரம்பித்தன.

இதைப் பார்த்த சிறுமி லட்டு வைத்திருந்த பையை வேறு இடத்திற்கு மாற்றி வைத்தாள். சிறிது நேரம் கழித்து அங்கேயும் எறும்புகள் வர ஆரம்பித்தன.

எறும்புகளின் தொல்லை தாங்க முடியாமல் லட்டு வைத்திருந்த பையை வேறு இடத்திற்கு மாற்றி வைத்து, எறும்பு வராமல் இருக்க பூச்சிகொல்லி மருந்தை தூவினாள்.

சிறிது நேரத்தில் அங்கு லட்டை தேடி வந்த எறும்புகள் பரிதாபமாக இறந்து போயின.

இதைப் பார்த்த அவள் இனி எறும்புகள் லட்டை தேடி வராது என்று நினைத்தாள். சில எறும்புகள் வரிசையாக வந்து இறந்து போன எறும்புகளின் உடலை தூக்கி சென்றன.

மேலும் சில எறும்புகள் வரிசையாக வேறு வழியாக லட்டு இருக்கும் இடத்தை நோக்கி வர ஆரம்பித்தன. அதில் முதலாவதாக வரும் எறும்பை நந்தினி உற்று பார்த்த போது,

அந்த எறும்பு " நாங்க எத்தன பேரை இழந்தாலும் சரி. நாங்கள் பயந்து பின் வாங்க மாட்டோம். எங்களோட குறிக்கோள் இனிப்பை அடையுறது தான் , அது வர ஓய மாட்டோம். " என்று சொல்வது போல இருந்தது.

அன்பு எப்போதும் கருணை மயமானது

ஒரு இளைஞன், ஒரு குருவிடம் வந்தான். அவன் எல்லாவற்றையும் அனுபவித்து சலித்து விட்டதால் ஜென்குருவிடம் வந்து, ஐயாஎனக்கு உலகம் சலித்து போய்விட்டது. உங்களிடம் சீடனாய் சேர விரும்புகிறேன்என கேட்டான்.

குரு"எப்போதாவது நீ உன்னை முழுமையாக மறந்து போகும் அளவிற்க்கு ஆர்வத்துடன் ஆழமாக எதிலாவதுஈடுபட்டதுண்டாஎன கேட்டார்.

இளைஞன் சிந்தித்து விட்டு ஆமாம், சதுரங்கத்தில் மட்டுமே அது நடந்துள்ளது. சதுரங்க விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு அது மிகவும் பிடிக்கும். எனக் கூறினான்.

குரு,,,நீ காத்திரு எனக் கூறிவிட்டு அவர் தன் உதவியாளனை அழைத்து பணிரெண்டு வருடங்களாக மடாலயத்தில் தியானம் செய்து கொண்டிருக்கும் ஓரு துறவியை சதுரங்க அட்டையோடு அழைத்து வரும்படி கூறினார்.

சதுரங்க அட்டை கொண்டு வரப் பட்டது. துறவி வந்தார். அவருக்கு சிறிது சதுரங்கம் தெரியும், ஆனால் சதுரங்கம் அனைத்தையும் மறந்து விட்டார்.

குரு, அவரை பார்த்து துறவியே கேள், இது ஓரு ஆபத்தான விளையாட்டாக இருக்கப்
நீ இந்த இளைஞனால் தோற்கடிக்கப் பட்டால், இதோ இந்த வாளால் நான் உனது தலையை வெட்டி விடுவேன் என்றவர்
அவனிடம் திரும்பி, இதோ பார், இது வாழ்வா சாவா என்பதற்க்கானபோட்டிநீ தோற்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டி விடுவேன்
என்பதை நினைவில் கொள் என்றார்.

போட்டி தொடங்கியது.
இளைஞனுக்கு முழு உடலும் நடுங்கியது. அது வாழ்வா, சாவா என்பதற்குரிய கேள்வியல்லவா?

துறவி விளையாடத் தொடங்கினார். அவர் சாந்தமாகவும் அமைதியாகவும் காட்சியளித்தார். இளைஞன், அருமையாக விளையாடத் தொடங்கினான். அவன் அதுபோல இதுவரை விளையாடியதேயில்லை. ஆரம்பத்தில் துறவி வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார்.

ஆனால் இளைஞன் அதில் முழ்கிய ஓரு சில நிமிடங்களில் அருமையாக காய்களை நகர்த்த தொடங்கினான். துறவி தோற்றுப் போக ஆரம்பித்தார். அவனுடைய வெற்றி நிச்சயமாகி விட்டது.
அவன் அந்த துறவியை பார்த்தான். அவர் மிகவும் வெகுளித்தனமாய் இருந்தார். 

பனிரெண்டு வருட தியானம் அவரை மலர் போல ஆக்கியிருந்தது. போட்டியில் தோற்று அவருடைய தலை வெட்டப்படுமேஎன்பதைநினைத்ததுமே
அவர்பால் அவனுக்கு அன்பு ஏற்பட்டது.

இந்த கருணையை உணர்ந்த அந்த கணமே அவனுக்கு, தெரியாத கதவுகள் திறந்தன. 

பிறகு அவன் தெரிந்தே காய்களை தவறாக நகர்த்தினான். ஏனெனில் நான் இறந்தால் எதுவும் இழப்படையப் போவதில்லை.

ஆனால் இந்த துறவி கொலை செய்யப் பட்டால் அழகான ஓன்று அழிந்துவிடும். ஆனால் நான் பயனற்றவன். துறவியை வெற்றி பெறச் செய்வதற்க்காக தெரிந்தே அவன் தவறாக காய்களை நகர்த்தத் தொடங்கினான்.

அந்த நொடியில் குரு மேசையை தலைகீழாக கவிழ்த்துவிட்டு சிரிக்கத் தொடங்கினார். அவர், இங்கு யாரும் தோற்கவில்லை. நீங்கள் இருவரும் வென்று விட்டீர்கள். எனக் கூறினார்.
குரு,,,மகனே நீ வெற்றி பெற்றுவிட்டாய். 

உன்னுடைய வெற்றி இந்த துறவியின் வெற்றியை விடவும் பெரியது. நான் இப்போது உன்னை சீடனாக்கி கொள்கிறேன். நீ இங்கு இருக்கலாம். விரைவில் நீ ஞானமடைவாய் எனக் கூறினார்.

இதுதான் கருணை. உன்னை விட மற்றவர் முக்கியமாக படும்போது, நீ மற்றவருக்காக
பிரதிபலனின்றி உன்னை தியாகம் செய்யும் பொழுது நீ கருணை உடையவனாகிறாய்.

அன்பு எப்போதும் கருணை மயமானது.
அவை உனது இருப்பின் ஓரு இயல்பாகட்டும்

படகில் இருந்த ஓட்டை

மிகவும் வசதி படைத்த ஒரு படகின் உரிமையாளர் அதை பெயிண்ட் அடித்து அழகாக்க விரும்பி ஒரு பெயிண்ட் காண்ட்ராக்டரிடம் பணியை ஒப்படைத்தார்!

அப்பணியை கண்ணும் கருத்துமாய் , கவனத்துடன் செய்து வரும்போது அப்படகின் அடியில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதைக் கண்ட பெயிண்ட்டர் மிகவும் நேர்த்தியாக அந்த ஓட்டையை அடைத்து சீர் செய்து , பெயிண்ட் வேலையையும் முடித்து, அதன் உரிமையாளரிடம் காண்ட்ராக்ட் பேசியபடி தன் தொகையை வாங்கிக்கொண்டு , மிக அழகாக பெயிண்ட் செய்துள்ளதற்காக பாராட்டையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார் !

மறுநாள் , அந்தப்படகின் உரிமையாளர் பெயிண்டரை தேடி அவரிடத்திற்கு ஒரு பெரிய தொகை மற்றும் பரிசுடன் வந்தார்.
"நேற்றே எனக்கு சேர வேண்டியதை தந்து விட்டீர்களே ஐயா" என்றார் பணிவாய்!

அதற்கு அவர் "இது நீங்கள் செய்த பெயிண்ட்டிங்காக அல்ல ! நீங்கள் அடைத்த படகின் ஓட்டைக்காக !"

" அது ஒரு சிறிய வேலை !அதற்குப்போய் ஏன் இதெல்லாம் " என்றார் பெயிண்ட்டர் !

அதற்கு அந்த படகின் உரிமையாளர் சொன்னார்.
"நண்பரே ! உங்களுக்குத் தெரியாது என்ன நடந்தது என்று !
நான் உங்களை பெயிண்ட் செய்ய சொன்னபோது அதிலிருந்த ஓட்டையை முற்றிலும் மறந்திருந்தேன் !

பெயிண்ட் காய்ந்தபின் என் குழந்தைகள் அந்த படகை எடுத்துக்கொண்டு விளையாட்டாய் மீன் பிடிக்க போய்விட்டனர் !
அவர்களுக்கும் படகில் ஓட்டை இருந்தது தெரியாது !

அவர்கள் படகை எடுக்கும் போது நானும் வீட்டில் இல்லை !
வீட்டிற்கு திரும்பி வந்தபோது படகை எடுத்துக்கொண்டு குழந்தைகள் மீன்பிடி விளையாட போய் உள்ளதாக கேள்விப்பட்ட போதுதான் படகில் இருந்த ஓட்டை ஞாபகம் வந்தது !

மிகவும் பதறிப்போய் அவர்களைத் தேடி ஓடினேன் , என்ன ஆயிற்றோ என்று !
அவர்கள் மகிழ்ச்சியாய் குதூகலத்துடன் திரும்பி வந்துகொண்டிருப்பதை பார்த்தவுடன் நெகிழ்ந்துபோனேன் !
ஓடிப்போய் அந்த ஓட்டையை தேடினேன் !
வெகு கவனமாய் , அக்கறையோடு சரிசெய்யப்பட்டிருந்த்தை கண்டவுடன் மிகவும் ஆச்சர்யமான உங்கள் செயலை பாராட்ட ஓடி வந்தேன்.

இந்த சிறிய செயல்தான் மகத்தாய் சில உயிர்களை காப்பாற்றியுள்ளது" என்றார் !

நாமும் நம் வாழ்வில் கடமையே என காரியமாற்றாமல் , எதையும் பிரியமாய் , கவனமாய் , அக்கறையாய்,பொறுப்பாய் செய்வோம் !

சிறிய பிரச்சினை திக்குமுக்காடவைத்துவிட்டது.

அந்த நிறுவனத்தில் ஏராளமான கார்கள் தயாரிக்கப்பட்டு ஒரு கிடங்கில் அடுக்கப்பட்டிருந்தன. அதை வெளியே கொண்டுவரும் போது சிக்கல் ஏற்பட்டது.

காரின் உயரத்தைவிட வாயிலின் உயரம் ஒரு அங்குலம் சிறிதாக இருந்தது. உள்ளே ஏற்றும்போது வராத பிரச்சனை வெளியே கொண்டு வரும் போது ஏற்பட்டது. எப்படி வெளியே கொணர்ந்தாலும் மேற்கூரை இடிக்கும். குறைந்தபட்சம் காரின் மேற்புறம் கீறல் விழக்கூடும். கீறல் விழந்தால் பரவாயில்லை. 

மறுமுறை பெயிண்ட் அடித்து டபுள் கோட் கொடுத்து விடலாம் என்றார் மேலாளர். வேண்டாம். வாயிலின் மேற்புறம் ஒரு செங்கல் கனத்துக்கு இடித்துவிடுவோம். பிறகுமீண்டும் சிமெண்ட் பூசிவிடலாம் என்றார் அந்த கட்டிடத்தின் இஞ்சினியர்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த வயதான காவலாளி ஒன்று சொன்னார், அதெல்லாம் வேண்டாம், கார்களின் சக்கரத்தின் காற்றை இறக்கிவிடுங்கள் சரியாக போய்விடும் என்றார். 

கேட்டுக் கொண்டிருந்த கம்பெனியின் டைரக்டர் பொட்டில் அடித்தது போல் நிமிர்ந்தாராம்.

எப்பேர்ப்பட்ட ஆலோசனை. இஞ்சினியர்களும், டெக்னீஷியன்களும் அங்கே கூடியிருக்க எவருக்கும் தோன்றாதது ஒரு படிப்பறிவு இல்லாத வாட்ச்மேனுக்குத் தோன்றிவிட்டது. 

இவர்கள் தொழில் நுட்பத்தில் கரைகண்ட நிபுணர்கள். பெரிய பிரச்சினைகளையெல்லாம் சமாளிப்பவர்கள். ஆனால் இந்த சிறிய பிரச்சினை அவர்களை திக்குமுக்காடவைத்துவிட்டது.

அன்றிலிருந்து படித்தவன், படிக்காதவன் அனைவரிடமும் ஆலோசனை கேட்கும் பழக்கம் கட்டாய கடமையாகவே மாறிவிட்டது அங்கு. 

தற்போது முன்னணியில் உள்ள பல நிறுவனங்களிலும் இது இயல்பான நடைமுறையாகவே உள்ளது....!

Wednesday, November 22, 2023

பொய்யான வாக்குறுதி



ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்துவந்தான். 

தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு
அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு
ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை
செய்கிறேன். ஆனால் நான் செய்யும்
வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது.

மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட
வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது
உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே
சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான்.

பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை
மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது.

இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி, “மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்” என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்துக் கொண்டது.

புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று
வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, “மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம்
மிகக் குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்யக் கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றான்.

கோபமடைந்த மாடு, “எஜமான்! இந்தப் புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை” என்றது.

அதற்கு வியாபாரி, “மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்றுத் தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு, “வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்” என்று கூறியது.

மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம்
திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்கத் தொடங்கியது. ஆனால் மிகக் கடின
உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லைக் கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் கழித்து வியாபாரி, “மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றான்.

“எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன்
அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?” என்றது.

வியாபாரி அதற்கு “அவர்கள் உன்னை வேலை செய்யச் சொல்ல வாங்கவில்லை.
உன்னைக் கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றான்.

வியாபாரி சொன்ன பதிலைக் கேட்டதும்
மாட்டிற்கு கண்களில் நீர் வர
தொடங்கியது. “எஜமான்! நீங்கள்
செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன்.
இல்லாவிடில் நான் நீண்ட காலம்
ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்” என்றது.

அதைக் கேட்ட வியாபாரி, “நான் செய்தது
துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில்
சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு
இருக்கலாம்” என்றான். மாடு தன் முட்டாள்
தனத்தை எண்ணி நொந்து கொண்டது.

நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். பணியாளர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்

மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு...???



நாடாளுமன்றத்தில் பேசும் போது உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னாராம். 

“ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம். 

ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்.; அறை நிறையவில்லை. 

அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான் அறை நிறையவில்லை.

மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி அறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும் ஒளி நிறைந்தது”.

அந்த உறுப்பினர் பின் சொன்னாராம் ”அந்த மூன்றாமவன் போலத்தான் நம் பிரதமர். அவர் பொறுப்பேற்றதும் நாட்டில் இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது”

பின் வரிசையிலிருந்து ஒரு குரல் எழுந்தது . . "மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு...???

வாழ்க்கையின் ரகசியம் என்ன?



ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான்,‘அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’

அம்மா சொன்னாள், ‘எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!’

அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, அவனது ஆசிரியை
‘நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டார்.

ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன.
ஆனால், அந்தச் சிறுவன் மட்டும்
‘நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’ என்றான்.

ஆசிரியை கோபமாக,
‘உனக்குக் கேள்வி புரியவில்லை’ என்றார்.

சிறுவனோ,
‘டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை’ என்றான்

நான்காவது பொம்மை



நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார்.

அரசன் கோபமாக ” நான் என்ன சின்னக் குழந்தையா? ” இதை வைத்து விளையாடுவதற்கு என்றுக் கேட்கிறார்.

சிற்பி “இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு” என்கிறார்.

இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு.நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள் என்கிறார்.

அரசன் “இதில் என்ன விஷயம் இருக்கிறது” என்கிறார்.

முதல் பொம்மையை அரசனிடம் கொடுக்கிறார் சிற்பி.கூடவே ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து அதன் காதில் இருக்கும் ஓட்டையில் விடச் சொல்கிறார்.

சங்கிலி மறுப்பக்க காதின் வழியே வருகிறது.

சிற்பி ” மனிதர்களில் சிலர் நாம் எதைச் சொன்னாலும் இப்படித் தான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே அனுப்பி விடுவார்கள்” என்கிறார்.

இரண்டாவது பொம்மையை கொடுத்து அதையே திருப்பிச் செய்யச் சொல்கிறார்.

இந்த பொம்மையில் சங்கிலி வாய் வழியே வருகிறது.

இந்த மாறி மனிதர்கள் எதை சொன்னாலும் அதை அடுத்த நொடி வெளியே விட்டு பரப்பிவிடுவார்கள் என்கிறார்.

பிறகு, மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதையே செய்யச் சொல்கிறார்.

இதில் , சங்கிலி வெளியே வரவே இல்லை.

சிற்பி, இவர்களிடம் எதைச் சொன்னாலும் உள்ளேயே தான் இருக்கும்.வெளியே வராது என்கிறார்.

அப்போது இதில் “யார் தான் சிறந்த மனிதர் என்று” அரசன் கேட்கிறார்.

என் கையில் இருக்கும் இந்த நான்காவது பொம்மை தான் சிறந்த மனிதன் என்று சிற்பி சொல்கிறார்.

அரசன் பொம்மையின் காதின் வழியே சங்கிலியை விடுகிறார். மறுபக்க காதின் வழியே வெளிவருகிறது. சிற்பி மீண்டும் செய்ய சொல்கிறார்.இரண்டாம் முறை வாயின் வழியே சங்கிலி வருகிறது.மூன்றாம் முறை வரவே இல்லை.

சிற்பி ” நான்காவது பொம்மை போன்ற மனிதர்கள் தான் நம்பகமானவர்கள் “. அவர்களை முழுமையாய் நம்பலாம். எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசி,
எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்டு , எங்கு அமைதி காக்க வேண்டுமோ அங்கு அமைதி காப்பார்கள் என்று விளக்கம் கூறினார்.

யாருக்கு எது தேவையோ அதில் தான் பார்வை செல்லும்.



என் சிறு வயது மகனை அருகில் இருந்த சலூனுக்கு அழைத்துப் போயிருந்தேன். 

காலியாக இருந்த நாற்காலியில் பையனை உட்கார்த்தி, சலூன்காரர் கட்டிங் செய்யத் தொடங்கிய பிறகுதான் கவனித்தேன்… எதிரே சுவரில் படு கிளாமராக ஒரு போஸ்டர்!

நீலப் பூக்கள் இறைத்திருந்த சிக்கன் பிராவும் ஜட்டியும் அணிந்திருந்த அழகி ஒருத்தி, கடற்கரை மணல் துகள்கள் உடம்பில் ஆங்காங்கே ஒட்டியிருக்க, உல்லாசமாக மல்லாந்து படுத்திருந்தாள். சலூன்காரர் புதுசாகக் கொண்டு வந்து ஒட்டியிருக்கிறார்.

முன்பே தெரிந்திருந்தால், மகனை வேறு சலூனுக்கு அழைத்துப் போயிருப்பேன்.

கட்டிங் முடிந்து வீடு திரும்புகிற வழியில் மகன் கேட்டான்…

“அப்பா! பீச்ல ஒரு லேடி படுத்திருக்கிற மாதிரி ஒரு படம் ஒட்டியிருந்துதே, பார்த்தியா?”

அவனது கேள்வியில் நான் விக்கித்து நிற்க, அவனே தொடர்ந்தான்.

“அந்த லேடி பக்கத்துல ஒரு சாக்லெட் டப்பா இருந்துதே… அந்த சாக்லெட் பக்கத்துக் கடையில இருக்குப்பா! வாங்கித்தர்றீங்களா??”

நான் உணர்ந்து கொண்டேன் யாருக்கு எது தேவையோ அதில் தான் பார்வை செல்லும்.

ஒரு கோட்டை அழிக்காமலே அதை சிறிதாக்க முடியுமா



ஒரு கோட்டை அழிக்காமலே அதை சிறிதாக்க முடியுமா என்று கேட்டார் ஆசிரியர். 

அறிவு மிக்க மாணவன் ஒருவன் அச்சிறு கோட்டின் அருகே ஒரு பெரிய கோட்டை வரைந்தான்

ஆசிரியர் மாணவர்களிடம் சொன்னார், ”இதோ பாருங்கள், இந்தப் பெரிய கோடு நமக்கு என்ன அறிவிக்கிறது? வாழ்க்கையில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் மற்றவரை வதைக்கவோ அழிக்கவோ தேவையில்லை என்பதைத்தான்.

பெரியவன் ஆக விரும்புகிறவன் பெரிய காரியங்களைச்செய்தே மேல் நிலையை அடைய வேண்டும்”.

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு



ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,

“உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது.

மூவருக்கும் ஆச்சரியம்!

உடனே கேஷியர் முந்திக்கொண்டு,

“நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்” என்கிறார்.

பூதமும் “அவ்வாறே நடக்கட்டும்” என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.

அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…

“அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்” என்றார்.

அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.

கடைசியாக மேனேஜர்,

“நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?” என்றது பூதம்.

அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர்,

“ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!”

வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவனால் உயரமுடியாது.



இரண்டு பேர் ஒரு குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் தூண்டிலில் சிக்கும் சின்னச் சின்ன மீன்களை மட்டும் பிடித்து தனது கூடைக்குள் வைத்துக்கொண்டான்.

நல்ல பெரிய மீன்கள் சிக்கும்போது அதை எடுத்து, மீண்டும் குளத்துக்குள்ளேயே விட்டுவிடுவான்.

பக்கத்திலிருந்தவனுக்கு ஆச்சரியம்! எல்லோரும் பெரிய மீன்களைத்தான் விரும்பிப் பிடிப்பார்கள், இவன் இப்படி இருக்கிறானே என்று. பொறுக்க முடியாமல் அவனிடமே கேட்டுவிட்டான்.

‘‘ஏம்பா! நல்ல பெரிய பெரிய மீன்கள் மாட்டுது. அதெல்லாம் விட்டுட்டு சின்னச் சின்ன மீனா பிடிச்சிக்கிட்டு இருக்கியே. பெரிய மீனைப் பிடிச்சு வியாபாரம் செஞ்சா நிறைய லாபம் வருமே…’’ என்றான்.

அதற்கு அடுத்தவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

‘‘என்கிட்ட சின்னக் கூடைதானே இருக்கு. அதுக்குள் வைக்கிற மாதிரி சின்ன மீன்களைப் பிடிச்சுக்கிட்டு இருக்கேன்.’’

நீதி : வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவனால் உயரமுடியாது.

பிரச்சனை இவ்வளவா?இவ்ளோதானா?


ஒரு தந்தையிடம் மகன் தனக்கு ஏதேனும் ஒரு துன்பமோ அல்லது மனக்கவலையோ ஏற்படும் போது வந்து கலங்கி நிற்பான். 

அப்போது அவனது பிரச்சனையைக் கேட்ட பின் தந்தை ஒரே வார்த்தையில் இவ்ளோதானா? உன் பிரச்சனை எல்லாம் சரியாகிடும் என்பார்.

அவனுக்கும் சில நாட்களில் அந்த பிரச்சனையோ துன்பமோ இல்லாது போய்விடும். அந்த மகனும் வளர்ந்தான். தந்தைக்கும் வயதானது அவரது மகன் தற்போதெல்லாம் எந்த பிரச்சனை வந்தாலும் தந்தையிடம் சிரித்துக் கொண்டே சொல்ல ஆரம்பித்தான். 

ஒரு நாள் மகன் தந்தையிடம் கேட்டான் "ஏம்பா நான் எவ்ளோ பெரிய பிரச்சனைனு வந்தாலும் இவ்ளோதானா? அப்படினு கேட்கிற எனக்கும் அந்த பிரச்சனை சுலபமா முடிஞ்சுடுதே எப்படிப்பா?" என்றான்.


அந்த தந்தை சிரித்துக் கொண்டே சொன்னார் " சில வருடங்களுக்கு முன்னாடி பிரச்சனைனா கண்கலங்குவ. நீ கலங்கும் போது அந்த பிரச்சனையை எப்படி தீர்க்குறதுன்றது உனக்கு தெரியாம இருக்கும் நான் இவ்ளோ தானா? அப்படினு கேட்டதும் உன் மனம் இது ஒரு பிரச்சனையே இல்லைனு ஒரு முடிவுக்கு வந்து அந்த பிரச்சனையும் முடிஞ்சுடும். 

இப்போ எவ்ளோ பெரிய பிரச்சனை உன் முன்னாடி இருந்தாலும் அதற்கான தீர்வு மட்டும் தான் உனக்கு தெரியும். சின்ன வயசில எனக்கு ஏதாவது பிரச்சனைனா என்னை பயமுறுத்த ஆள் இருந்தாங்களே தவிர தைரியம் சொல்ல ஆள் ரொம்ப கம்மியா இருந்தாங்க. அதனால தான் நான் எப்பவும் உன்கிட்ட எந்த பிரச்சனைனாலும் இவ்ளோதானானு கேட்பேன்" அப்படினு சொன்னார்.


நாம எவ்ளோ புத்திசாலியா இருந்தாலும் ஒரு நிமிடம் இவ்வளவா? அப்படினு நினைச்சா நாம அங்கேயே நின்னுடுவோம். ஆனா இவ்ளோதானா? அப்படினு நினைச்சா அதை தாண்டி அடுத்த கட்டத்துக்கு போய்டுவோம்.

அந்த காலிப்படகு



துறவி ஒருவர் எப்போதுமே கோபப்படாமல், நீண்ட நாட்களாக, உடலில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார். 

அப்போது ஒருவர் வந்து அவரிடம், "நீங்கள் கோபப்பாமல் இருக்க காரணம் என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த குரு "எனக்கு சிறு வயதிலிருந்தே படகில் பயணம் செய்வது என்றால் மிகவும் பிடித்திருந்தது. அதனால் நான் தினமும் அருகிலிருக்கும் ஏரிக்கு சென்று, படகிலேயே நீண்ட நேரம் இருப்பேன். மேலும் படகிலேயே தான் தியானம் செய்வேன்.ஒரு நாள் அதேப் போன்று படகில் அமைதியாக தியானம் செய்து கொண்டிருக்கையில், ஒரு காலிப் படகு வந்து என் படகை இடித்தது.

அதனால் நான் யாரோ கவனக்குறைவால் என் படகை இடித்துவிட்டார்கள் என்று நினைத்து, கண்களைத் திறந்து திட்டுவதற்கு முற்பட்டேன். ஆனால் என்னை இடித்த படகோ காலியாக இருந்தது. அதனால் நான் காலிப் படகிடம் கோபத்தை காண்பிப்பது முட்டாள் தனம் என்று எண்ணி அன்றிருந்து என் கோபத்தை விட்டுவிட்டேன்.

அன்று முதல் என்னை எவர் என்ன தான் திட்டினாலும், அவமானப்படுத்தினாலும், கோபப்படாமல், அப்போது நான் அந்த காலிப்படகை நினைத்து அமைதியாக சென்று விடுவேன்.

சொல்லப்போனால் அந்த காலிப்படகு எனக்கு ஒரு நல்ல பாடத்தை புரிய வைத்தது." என்று கூறினார்.

Tuesday, November 21, 2023

ஆசிரியருக்கு மதிப்பு அளிக்காதவன் முட்டாள்



ஒரு உழவன் தன் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தான்.
மனைவி அவனிடம், "எனக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும். ஆசையாக உள்ளது!'' என்றாள்.

மனைவியின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற நினைத்தான் அவன்.

"இது மாம்பழம் பழுக்கும் பருவம் அல்ல. அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மாமரத்தில்தான் எப்போதும் மாம்பழம் கிடைக்கும். என்ன செய்வது?' என்று சிந்தித்தான் அவன்.

நள்ளிரவில் யாரும் அறியாமல் அரண்மனைத் தோட்டத்திற்குள் நுழைந்தான்.

நீண்ட நேரம் தேடி மாம்பழம் இருந்த மரத்தை கண்டுபிடித்தான்.

உயரமாக இருந்த மரத்தில் முயற்சி செய்து ஏறினான். மாம்பழத்தை பறித்தான்.

பொழுது புலரத் தொடங்கியது. மரத்தைவிட்டு இறங்கினால் காவலர்களிடம் சிக்கிக் கொள்வோம். இருட்டும் வரை மரத்திலேயே ஒளிந்து இருப்போம் என்று நினைத்தான்.

மரத்தின் கிளைகளுக்கு இடையே ஒளிந்து கொண்டான்.

அவனுடைய கெட்ட நேரம், அரசர் தம் ஆசிரியருடன் அங்கே வந்தார்.

அவன் ஒளிந்திருந்த மரத்தின் நிழலில் அவர்கள் இருவரும் நின்றனர். அங்கிருந்த காவலர்கள் அரசர் அமர்வதற்காக நாற்காலி ஒன்றைக் கொண்டு வந்தனர். அதில் அமர்ந்தார் அவர்.

ஆசிரியரைப் பார்த்து, "இப்போது நான் ஓய்வாகத்தான் இருக்கிறேன். நீங்கள் பாடம் நடத்தலாம்!'' என்றார்.

"அரசே! அப்படியே செய்கிறேன்!'' என்ற ஆசிரியர் தரையில் அமர்ந்தார். அவருக்குப் பாடம் சொல்லத் தொடங்கினார்.

மரத்தில் ஒளிந்து இருந்த அவன் இதைப் பார்த்தான். "இவர்கள் இருவரும் என்னைவிட முட்டாள்களாக இருக்கிறார்களே' என்று நினைத்தான்.

"இங்கே மூன்று முட்டாள்கள்!'' என்றபடி கீழே குதித்தான். இதைக் கேட்ட அரசன், "இங்கே மூன்று பேர்தாம் இருக்கிறோம். இவன் என்னையும் முட்டாள் என்கிறானே...' என்று கோபம் கொண்டார்.

அவனைப் பார்தது,"எங்கள் இருவரையும் உன்னுடன் சேர்த்து முட்டாள்கள் என்று சொல்கிறாயா? நாங்கள் முட்டாள்களா? எங்களை முட்டாள்கள் என்று நிரூபிக்காவிட்டால் உன் உடலில் உயிர் இருக்காது!'' என்று கத்தினார் மன்னர்.

நடுக்கத்துடன் அவன், "அரசே! நான் ஏன் சொன்னேன் என்பதற்கு விளக்கம் சொல்கிறேன்.

மாம்பழப் பருவம் அல்லாத காலத்தில் என் மனைவி மாம்பழத்திற்கு ஆசைப்பட்டாள்.

அரண்மனைத் தோட்டத்தில்தான் மாம்பழம் கிடைக்கும். அங்கே சென்றால் உயிருக்கு ஆபத்து என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

இருந்தும் மனைவியின் மீது கொண்ட அன்பினால் இங்கே வந்து ஆபத்தில் சிக்கிக் கொண்டேன்.
என்னை நீங்கள் முட்டாள் என்று ஒப்புக் கொள்வீர்கள்.

"மதிப்பிற்கு உரியவர் ஆசிரியர். எப்போதும் அவர் உயர்ந்த இருக்கையில் அமர வேண்டும். மாணவர்கள் கீழே அமர்ந்து பணிவாகப் பாடம் கேட்க வேண்டும்.

ஆனால், நீங்களோ அரசர் என்பதால் ஆசிரியரை மதிக்கவில்லை. நாற்காலியில் அமர்ந்து உள்ளீர்.ஆசிரியரை மதிக்காத நீங்கள் இரண்டாவது முட்டாள்.

"எந்த நிலையிலும் ஆசிரியர் தன் பெருமையை விட்டுத் தரக்கூடாது. பொருளாசை காரணமாக இவர் தன் நிலையைவிட்டுக் கீழே அமர்ந்து உங்களுக்கு பாடம் சொல்லித் தந்தார். இவர் மூன்றாவது முட்டாள்!'' என்றான் அவன்.

இதைக் கேட்ட அரசர், "ஆசிரியருக்கு மதிப்பு அளிக்காதவன் முட்டாள், என்பதை உன்னால் அறிந்து கொண்டேன்.
இனி இப்படிப்பட்ட தவறு செய்ய மாட்டேன்!'' என்றார்.

அவனுக்கு ஒரு கூடை மாம்பழமும், பரிசும் தந்து அனுப்பி வைத்தார்.

நம்மைப் பார்த்து தான் நம் பிள்ளைகள் வளர வேண்டும்


ஓரு 5 மாத கர்ப்பிணிப் பெண் நீண்ட தொலைவில் இருந்து இரண்டு குடம் தண்ணீர் எடுத்து வந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்து விட்டு, அடுத்த இரண்டு குடம் தண்ணீரை கொண்டு வர சென்றுவிட்டாள் ........
அந்தநேரம் அவளின் கணவன் வேலையில் இருந்து மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெய்யில். பசி வேறு அவனுக்கு.

வெய்யிலில் வந்ததால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் கதவை திறந்து செல்ல குடம் தட்டுப்பட்டு விழுந்து விடுகிறான். இரண்டு குடம் தண்ணீரும் கொட்டி விடுகிறது.

அவனுக்கு மனைவி மீது கடுமையான கோபம் வந்து விடுகிறது. கொஞ்சமாவது இவளுக்கு அறிவு வேணாம்?இப்படியா கதவுக்கு முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்னும் இரண்டு குடத்தோடு மெதுவாக வருகிறாள் மனைவி.

தூக்கி வந்த குடத்தைக் கூட இறக்க விடாமல் அவளைத் திட்டுகிறான். "உன்னையெல்லாம் உங்க வீட்டில எப்படித் தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என கண்ட படி திட்டுகிறான்.

இதைக் கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. " நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வாந்தி மயக்கத்தோட எவ்வளவு தூரத்திலிருந்து இந்த தண்ணிய கொண்டு வர்றேன் தெரியுமா?

கண்ணை எங்க வச்சுக்கிட்டு போனிங்க என்று அவள் கேட்க, இப்படியே ஒருவருக்கொருவர் பேசி வார்த்தை பெரிதாகி, அவன் அவளை அறைந்து விடுகிறான்.

உடனே அவள் 'இனி ஒரு நிமிஷம் கூட உன் கூட நான் வாழ மாட்டேன் என்று சொல்லிவிட்டு வாயும் வயிறுமாக அவளின் அம்மா வீட்டுக்கு சென்று விடுகிறாள்......

இது கணவன், மனைவிக்குள் ஒரு சின்ன பிரச்சினை எவ்வளவு பெரிய முடிவை எடுக்க வைத்து விட்டது என்பதைக் கூறும் கதை.

சரி!!!
இந்தக் கதையின் முடிவு இப்படி இருத்தால் எப்படி இருக்கும்?

வாருங்கள் பார்ப்போம்.........

அவன் குடம் தடுக்கி விழுந்து, தண்ணீரை கொட்டி விட்டான். உடனே அவனுக்கு தோன்றியது " அடடா இப்படி கவனிக்காமல் இரண்டு குடம் தண்ணீரையும் கொட்டி விட்டோமே!

"சே! பாவம் அவள். வயிற்றில் குழந்தையோடு தண்ணீர் எவ்வளவு தூரத்தில் இருந்து கொண்டு வருகிறாள்? முதல் வேலையா அவள் வந்தவுடன் மன்னிப்பு கேட்டு விட்டு நாமே போய் இரண்டு குடம் தண்ணீர் எடுத்து கொடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் போது அவள் தண்ணீரோடு வருகிறாள்.

இவன் ஓடிப் போய் அந்தக் குடங்களை இறக்கியவாறு நடந்ததைச் சொல்லி, "நான் கவனிக்காமல் குடத்தின் மேல் விழுந்து தண்ணீரைக் கொட்டி விட்டேன். பாவம்! நீ எவ்வளவு தூரத்தில் இருந்து இந்த தண்ணீரைக் கொண்டு வருகிறாய் என்னை மன்னித்து விடு. கொடு நான்போய் தண்ணீர் கொண்டு வருகிறேன் என்கிறான்.

உடனே அவள் பதறுகிறாள். " ஐயையோ விழுந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே? தண்ணீர் போனா போகட்டுங்க. நீங்க என்ன வேணும்னா கொட்டி விட்டீங்க! தெரியாமத்தானே! அங்க தண்ணிய வச்சது என் தப்பு. நான் போய் மெதுவா அப்புறமா எடுத்துக் கொள்கிறேன்.

நீங்க வாங்க சாப்பிட. நல்ல பசியோடு வந்திருப்பீங்க பாவம் என்கிறாள்

அவன் அப்படியே நெகிழ்ந்து போகிறான். அவள்மேல் அவனுக்கு இன்னும் அளவு கடந்த பாசம் உண்டாகிறது உள்ளுக்குள்.

இவ்வளவுதான் நம் வாழ்க்கையும்! கணவனோ, மனைவியோ தெரிந்து யாரும் தப்பு செய்வதில்லை. இருவரில் ஒருவர் ஒரு படி இறங்கினால், மற்றவர் கண்டிப்பாக பத்துப்படி இறங்கி வருவார்.

நம்மைப் பார்த்து தான் நம் பிள்ளைகள் வளர வேண்டும்.
புரிதலும், விட்டுக் கொடுத்தலுமே வாழ்க்கை !

நான் உங்கள் முன்னாள் மாணவன்



ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். 

அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர்
"தன்னைத் தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார்.

இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர்,

"நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.

" நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர்.

" ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனைத் திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். 

ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாகப் போய் விட்டது.

ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாகப் போய் விட்டது. அவர் கூறினார்,

மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டுப் பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். 

ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை.

பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றிக் கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னைத் திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை.

 இது எனக்கு ஒரு செய்தியைக் கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படித் தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்"

இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார்.

மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னைத் தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார்.

"ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். ஆசிரியர் கூறினார், "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.

பணியில் இருக்கிற விமானி எப்படி மது அருந்த முடியும்...?



ஒரு குரு வெளிநாட்டுப் பயணம்செய்வதற்காக,
-மிகப் பிரபலமான விமானம் ஒன்றில்
பயணம் செய்தார்.

-விமானம் நடுவானில்
பயணித்தபோது பணிப் பெண்,
-எல்லாருக்கும் வரவேற்பு பானமாக
-விலை உயர்ந்த மதுபானத்தைக்
கொடுத்து<- உபசரித்தபடி வந்து
கொண்டிருந்தார்.

-இப்போது குருவின் முறை
வந்தது.
அவரிடமும் பணிப் பெண் ஒரு
மதுக்கோப்பையை நீட்டினார்.

-அவர் வாங்க மறுத்துவிட்டார்.

பணிப் பெண்,
" ஐயா , எங்கள் விமானத்தில்
பயணிக்கிற ஒவ்வொருவருக்கும்
நாங்கள் கொடுக்கும் உயர்தர
மரியாதை இது.
ஏற்றுக் கொள்ளுங்கள் " என்றார்.

மதகுரு,
"அம்மா, உங்கள் அன்புக்கு நன்றி.
இது எனக்கு வேண்டாம் " என்றார்.

பணிப்பெண் விடவில்லை.
" உலகிலேயே விலை உயர்ந்த
மதுவகை இது. கொஞ்சம்
குடித்தால் அப்புறம் விடவே
மாட்டீர்கள் " என்றார்.

*அப்போதும் மதகுரு ஏற்றுக்
கொள்ளவில்லை.
பணிப் பெண் கடைசியாகச்
சொன்னார்,

''"இவ்வளவு தூரம் நான்
சொன்னதற்காக ஒரு
துளியேனும் பருகுங்களேன் .

குரு சொன்னார் ,
" அம்மா , நான் ஒரு --- சிந்தனையாளன்
மதுவெல்லாம் பருக மாட்டேன்.

நீங்கள் ஒன்று செய்யுங்கள்.
இதை விமான ஓட்டியிடம்
கொடுத்து விடுங்கள் ".
அவர் அப்படிச் சொன்னதும் பணிப்
பெண் ஆடிப்போனார்.

"ஐயோ,
பணியில் இருக்கிற விமானி எப்படி
மது அருந்த முடியும்...?

இதை,
அவர் குடித்தால் அவர் புத்தி
தடுமாறி விமானம் விபத்துக்கு
உள்ளாகுமே.

இத்தனை உயிர்கள் பறிபோகுமே "
என்று பதறினார்.

குரு சொன்னார்,

"''சகோதரி,
வாழ்க்கையும் இப்படிப்
பட்டதுதான்.

தகாத காரியங்களை செய்தால்
புத்தி தடுமாறி விபத்து
நேரிடும்.

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!



ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது.ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தார்.ஆச்சர்யம்..! அவருக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்..!!

கடுப்பானவர் அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினார்
மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்..!!

மூன்றாம் நாள்…
காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவர், காரை எங்கெங்கோ செலுத்தினார்.வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தார்.ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினார்.
இடப் பக்கம் திரும்பினார். வலப் பக்கம் வளைந்தார்.
இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு,வேகமாக காரைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்டார்.

வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, உன் நாய் வீட்டில் இருக்கிறதா..? என்று கேட்டார்.
இருக்கிறதே..! ஏன் கேட்கிறீர்கள்..? என்றார் மனைவி

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!
வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு.

“பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல.



ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம்
“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”

பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.

"நிறுத்துவதற்கு"

“வேகத்தைக் குறைப்பதற்கு"

“மோதலைத் தவிர்ப்பதற்கு "

"மெதுவாக செல்வதற்கு"

"சராசரி வேகத்தில் செல்வதற்கு"

என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.

“வேகமாக ஓட்டுவதற்கு * என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர்.

அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது.

ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது.

பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.

இதுபோலத் தான் தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம்.

ஒரு போட்டி தேர்வு எழுதுகிறோம். வறுமை நிச்சயமாக ஒரு தடையாகத் தான் இருக்கும். வசதி இருப்பவர்கள் கோச்சிங் சென்டர் சென்று கற்றுக்கொள்வார்கள். வறுமையை தடை என நினைத்துக் கொண்டிருந்தால் அப்படியே தான் இருக்க வேண்டும்.

ஆனால் நான் வறுமையிலிருந்து மீள வேண்டும் என்ற வேகம் மனதுக்குள் துளிர்க்கும் போது வாழ்க்கை பயணமும் மகிழ்வானதாக மாறிவிடும். அப்படி உருவாகும் வேகத்தால் தடைகளை தாண்டிச் செல்லும் சிலரைத் தான் சாதனையாளர்களாக ஆங்காங்கே ஒளிர்கிறார்கள்.

ஆயுர்வேதத்தில் விஷ மூலிகைகளை நானோ துகள்களாக உடைத்து அதனை உயிர்காக்கும் மருந்தாக செய்யும் முறை இருக்கிறது. தடைகளை சிறு துகள்களாக உடைக்கும் போது அவைகள் உங்களை வேகப்படுத்தும்.

உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்.



பழிசுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதும் சேரும்.



ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது.பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது.

அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார்.
அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.
கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பமாகிவிட்டது.
கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா?

கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை. விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றம் இல்லை. அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. அது அவனும் அறியாமல் நடந்த விஷயம்.

இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான்.
சித்திரகுப்தன் கூறியதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் அதுவரை பொறுமையாக இரு என அறிவுறுத்தினான்.

ஒரு சில நாட்கள் கழித்து அரசன் உதவி நாடிச் சென்ற சிலஅந்தணர்கள் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.
அப்பெண்மணியும் அவர்களுக்கு சரியான பாதையை கூறியதோடு நில்லாமல்

இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன் சற்று எச்சரிக்கையாக இருங்கள் என்றும் கூறினாள்.
இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும் என்று.

மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருந்தாலும் அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி, பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்துவிடும்.
உண்மையை உணராமல் அபாண்டமாக பழிசுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதும் சேரும்.

எனவே, மற்றவர்கள் பற்றி பேசும்போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்

பூச்சி காதில் இல்லை, மனதில் இருக்கிறது



அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன்..ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது..

காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்..

அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை..

மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன..

எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள்..
யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை..

மன்னனால் தூங்க முடியவில்லை.. உணவும் குறைந்து விட்டது.. மன்னன் பொலிவு இழந்தான்..
மன்னனோடு சேர்ந்து நாடும் கலை இழந்தது..

இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி அங்கு வந்து சேர்ந்தார்..

மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார்..

"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி.. நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது.."

இங்கிருந்து மூவாயிரம் மைல் தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும்..

இன்றே என் சீடர்களை அனுப்புகிறேன்.. எப்படியும் ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள்.. அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்.."

மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்..

மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது..

அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது..

மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி..

மன்னன் இப்போது நிம்மதியாகத் தூங்கினான்.. நன்றாக உண்டான்.. பழைய பொலிவு திரும்பி விட்டது..

அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன்..
அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்..

"குருதேவா! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!''

''துறவி புன்னகை பூத்தார்"..

"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?'' மன்னனின் செவிக்குள்..
''அதுதான் இல்லை.. மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம்.. சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும்.. இல்லை, வெளியே வந்திருக்கும்..

அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்தி விட்டது.. அது மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது..

அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்."

"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே.

"மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது!

பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்..

அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன்..

தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன்."

''அந்த மூலிகை?''

"நம் ஊரில் சாதாரணமாக விளையும் தூதுவளைதான்..
அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன்..

பின் ஒருநாள் பூஜை செய்து காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக் காட்டினேன்.. மன்னன் நம்பி விட்டான்.. அவன் நோயும் தீர்ந்தது.."



இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன..

காதில் நுழைந்த பூச்சி செத்து விட்டது.. மனதில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது..

இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையைத் தாமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

"எங்கப்பாகிட்ட மட்டும் பணம் இருந்தா நான் பெரிய ஆளாகியிருப்பேன்'' என்று எத்தனை பேர் ஜல்லியடிக்கிறார்கள் பாருங்கள்.
இன்று பெரிய ஆட்களாக இருக்கும் பலரும் காசில்லாத தகப்பனுக்குப் பிறந்தவர்கள் தான்..

பிரச்னை நம் பெற்றோரிடமோ, நம் ஆசிரியரிடமோ, நம் பள்ளி-கல்லூரியிடமோ, நம் சூழ்நிலையிலோ இல்லை.. அது நம் மனதில் இருக்கிறது.. பூச்சி காதில் இல்லை, மனதில் இருக்கிறது..

ஒரு இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு நம் வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம்!

கடவுளை இல்லை என்று எவ்வாறு சொல்லுவாய்



அவன் ஒரு கடைந்தெடுத்த நாத்திகன். மேடையினின்று பிரசங்கிக்கிறான்.
"அவன் பிரசங்கம் செய்தால் பிணம் கூடத் துடிக்கும்" என்று..
அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள்.

"கடவுள் இல்லை,
மதம் இல்லை,
வேதமோ
புராணமோ
எதுவுமேயில்லை.

மதத் தலைவர்கள்.....,
"தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள்"....

என்று வாய்ஜாலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள்.

கடைசியாக ...,
"கடவுளுமில்லை...., கத்திரிக்காயுமில்லை...., எல்லாம் பித்தலாட்டம்" ...
எனச் சொல்லி முடித்துவிட்டு....,

"யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" ......
என்றும் அழைத்தான்.

அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த.......,
" பெரிய குடிகாரன் ஒருவன் மேடைமீது ஏறினான்"......!!

தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து.....,

"தோலை மெதுவாக உரித்தான்"......!!
"கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" .......,
எனக் கோபங் கொண்டான் நாத்திகன்.

"பழத்தை உரித்தவன் சுளை சுளையாகத் தின்று கொண்டே"......,
பொறு....! பொறு....!

" தின்று முடித்து விட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" ........,
என்று சொல்லியவாறு ரசித்துத் ஆரஞ்சு பழத்தை தின்று கொண்டிருந்தான்.

தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி.....,

"பழம் இனிப்பாய் இருக்கிறதா"......?
.எனக் கேட்டான்.

"பைத்தியக்காரனே"......!
"நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா.....,
இல்லை புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்"......,
என்றான் நாத்திகன் ஆங்காரத்துடன்......!!

"கடவுள் யார்...?
அவர் எப்படிபட்டவர்.....?
அவரின் ஆற்றல் என்ன...?
என்பதை....,

" நீ பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு பார்த்தால் தானே உனக்குத் தெரியும்"......!!

" இப்ப நான் சாப்பிட்ட ஆரஞ்சு பழத்தின் சுவையை பற்றியே உன்னால் தெரிந்து கொள்ள முடியாத போது"......

பல ஆயிரம் வருடங்களாக நம் மூதாதையர் வணங்கி வழிபட்டு....,
நமக்கு வழிகாட்டி பாரம்பரியமாக கொண்டாடிவரும் .....,

"கடவுளை இல்லை என்று எவ்வாறு சொல்லுவாய்"......?

"அனுபவித்து, ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்"........,
என்றான் அந்த மெகாக்குடிகாரன்.....!!

கூடி இருந்த ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

ஒரு பெரிய கூட்டமே நாம் சொன்னதை வாயைப் பொத்தி கேட்டுக் கொண்டிருக்க.....,

"இந்த குடிகாரப்பயல் நம்மையே மடக்கிவிட்டானே"....
என நாத்திகன் மூக்கறுபட்டு தலைகுனிந்து போனவன் போனவன் தான்.......!!

இறைவனின் அருட்கொடைக்கு நிகர் இறைவனே

80 வயதுடைய ஒரு மனிதரின் இதயத்தில் ஆப்பரேஷன் நடந்தது.

நல்லபடியாக நடந்து முடிந்த பின்...

அவரிடம் ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் கொடுத்தனர்......

அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை....

அப்பெரியவரின் பரிதாபகரமான அழுகையைப் பார்த்த.....
மருத்துவர் கூறுகிறார்....
அழாதீர்கள் தாங்களுக்கு என்னால் முடிந்த
அளவு பில்லை குறைத்துவிடுகிறேன் என்றனர்....

அதற்கு பெரியவரின் பதிலை என்னவென்று பாருங்கள்.....

+எனக்கு அது பிரச்சினையில்லை,
பில் 10 லட்சமாக இருந்தாலும் என்னால் தர முடியும்.....

ஆனால் 80 வருடமாக என் இதயத்தை பாதுகாத்த இறைவன் ஒரு ரூபாய்கூட பில் கேட்கவில்லையே.....
இவ்வளவு நாள், இதனை உணர்ந்ததே இல்லை, இப்போது உணர்ந்தபோது,
கண்ணீர் வழிகிறது,

மூன்று மணி நேரம் மட்டும் நீங்கள் பாதுகாத்ததற்கு எட்டு லட்சத்திற்க்கு பில்....

எல்லாம் வல்ல கடவுள்
கருணையையும் அன்பையும் நினைத்து அழுதுவிட்டேன் என்றார்......

இறைவனின்
அருட்கொடைக்கு
நிகர் இறைவனே.....
- நாம் தான் நன்றி கெட்டவர்களாக
இந்த மண்ணில் வாழ்கிறோம்.....

எந்த எதிர் பார்ப்புமே இல்லாமல் எப்போழுதும் நம்மை கண்ணும் கருத்துமாக பத்திரமாக பாதுகாப்பவர் அன்பே உருவானவர் இறைவன் மட்டுமே....

நமக்கு கிடைத்த வாழ்கை எத்தனை பேருக்கு கிடைக்க வில்லை என உணர்ந்தால், நாம் தினமும் இறைவனுக்கு நன்றி சொல்ல மட்டுமே ஆலயத்திற்கு செல்வோம்

Thursday, November 16, 2023

கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது



ஒரு புகழ் பெற்ற விஷ்ணு கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார்...!!!*
"கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி".......!!!*

"அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார்"......!!

"கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம்"......!!

"இதை தவிர வேறொன்றும் தெரியாது".......!!

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர்.

"இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே".....…!!

"அவனுக்கு கஷ்டமாக இருக்காதா"......?
.என்று எண்ணிய அவர்....

ஒரு நாள் இறைவனிடம்....!!!*

“எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டே இருக்கிறாயே….!!!*

"உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன்"...!!!*

"நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா".......?
என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க,

அதற்கு பதிலளித்த இறைவன்.....,

“எனக்கு அதில் ஒன்றும் பிரச்சனையில்லை"......!!
"எனக்கு பதிலாக நீ நிற்கலாம்".....!!

ஆனால்..,
." ஒரு முக்கிய நிபந்தனை" ..!

"நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும்"......!!

வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதும்.

"யார் என்ன சொன்னாலும்"....,

" கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது"...!!!*

"நீ ஒரு சாமி விக்ரகமாக இருக்கிறாய் என்பதை மறந்துவிடக்கூடாது".........!!
என்று கூற,

அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாள்.....,
"இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு".......,

"கோவில் மூலஸ்தானத்தில் இவர் நின்று கொள்ள".......,

இறைவனோ.......,
" இவரைப் போல தோற்றத்தை ஏற்று"......,

"கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தார்"......!!

முதலில்,

"ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான்".....!!

"தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று"......,

இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு......,

"ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான்".......!!

செல்லும்போது.....,

"தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான்"........!!

இதை " இறைவன் வேடத்தில் நின்று கொண்டிருக்கும் பணியாள் பார்க்கிறார்".......!!

ஆனால், .
"இறைவனின் நிபந்தனைப்படி அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை"....!!

"அப்படியே அசையாது நிற்கிறார்"......!!

சற்று நேரம் கழித்து......,

"ஒரு பரம ஏழை அங்கு வந்தான்"..!!!*

"அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது"...!!!*

“என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது".......!!

" என்னை மன்னித்துவிடு இறைவா"........!!

"என்னை ரட்சிக்கவேண்டும்"....!!

என் குடும்பத்தில் ரொம்ப வறுமை.....!!

"மிக கஷ்டமாக இருக்கிறது இறைவா"......!!

"உன்னை நம்பியே வாழ்கிறேன் ஐயனே".......!!

எனக்கு ஒரு வழி காட்டு இறைவா” ......

என்று மனமுருக கண்கள் மூடி பிரார்த்தனை செய்தான்.

கண்ணை திறந்தவனுக்கு எதிரே,

" அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது"........!!

" உள்ளே பணத்தை தவிர".....

" தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன"........!!

" இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி".........,

"அப்பாவித்தனமாக அதை எடுத்துக் கொண்டான்"......!!

"இறைவன் வேடத்தில் நின்றிருந்த சேவகர் இதை கவனித்தார்" ......!!
.
"வாய் விட்டு எதுவும் சொல்ல முடியவில்லை"......!!

சிறிது நேரம் கழித்து......,

"வேறு ஒரு கப்பல் வியாபாரி வந்தான்"......!!

"ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அவன் செல்லவிருப்பதால்".....,

"இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான்"......!!

"இறைவனிடம் பிரார்த்தனை செய்தான்"......!!

அந்த நேரம் பார்த்து......,

"பணப் பையை தொலைத்த செல்வந்தன்".......,

"காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்"......!!

"கப்பல் வியாபாரி பார்த்து".....
“இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும்".......!!

"இவரை பிடித்து விசாரியுங்கள்”......,
என்று காவலர்களிடம் கூற,

காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள்.

“இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி......!!”

என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல,

இறைவன் வேடத்தில் இருந்த பணியாள் ..!!!*

இறைவனை நினைத்து..., “இது நியாயமா".....?
"அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா"......?

"இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது"…...!!*
என்று கூறி,

“கப்பல் வியாபாரி திருடவில்லை".......!!

" தவறு அவர் மீது இல்லை"....!!.

என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த பணியாள்....,

"நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார்".......!!

அந்த ஏழையிடம் பணப்பையை வாங்கி கொண்டு செல்வந்தர் சென்றார்......!!

"கப்பல் வியாபாரி விடுவிக்கப்பட்டார் "......!!

"இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது"......!!

"இறைவன் வருகிறார்"....!!

இறைவனுக்கு பதிலாக நின்று கொண்டிருந்த பணியாளிடம்........,

" இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேடகிறார்"........!!

“மிகவும் கடினமாக இருந்தது".......!!

" உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன்"........!!

"ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….”......

என்று காலை கோவிலில் நடந்ததை கூறினான்.

இறைவனோ இதை கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தார்.

“நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்து கொள்ளவில்லை"...….?

"என்ன நடந்தாலும் பேசக்கூடாது"......, "அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை".......,

" நீ ஏன் மீறினாய்"..….?

"உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை"........!!!

"இங்கு வருபவர்களது சூழ்நிலையை அறியாதவனா நான்".....!!

“செல்வந்தன் அளித்த காணிக்கை".......,

"தவறான வழியில் சம்பாதித்தது"......!!

"அது அவனோட மொத்த செல்வத்தில் ஒரு சிறு துளி தான்".......!!

"ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு"...!!!*

"நான் பதிலுக்கு அவனுக்கு நிறை தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்"......!!

ஆனால்....,
"அந்த ஏழை கொடுத்ததோ".....,

"அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான்".........!!

இருப்பினும்....
" என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான்".......!!

இந்த சம்பவத்தில்,

" கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை"......!!!*

இருந்தாலும்......,

இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால்......,

"விபத்தை சந்திக்க நேரிடும்"........!!

" புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள்"........!!

அதிலிருந்து அவனை காக்கவே ......,

"அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமத்தி"......,

" சிறைக்கு அனுப்ப நினைத்தேன்".......!!

"அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான்"........!!

"அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான்".......!!

இதன் மூலம்......,
"அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும்".....!!

"அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும்"......!!

🙏🙏

இப்படி.....,
"ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன்"....!!

ஆனால்,

"நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து"...,

"உன் எண்ணங்களை செயல்படுத்தி"......,

" அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான் இறைவன் கோபத்துடன்.....!

சேவகன்,
"இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்:.....!!

“இப்போது புரிந்துகொள்".....!!!*

"நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும்"......!!!*

அது ஒவ்வொன்றையும்...!!!*

"மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது"......!!!*
"அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன்"......!!!*

"நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது"......!!!*

"கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.”.......!!!*



என்றான் இறைவன் புன்னகைத்தபடி....

நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்



ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?
அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்…
எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.
கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.

“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது.
ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை.
வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”

“வேறு ஒண்ணா…?
எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.

“உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”

“என்னது பிசினஸ் பார்ட்னரா...?"

ஆமாம்…
எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது.
அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம்.
உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன்.
நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”

“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…?
உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.

“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”

அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.

“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.

“ஆமாம்ப்பா உனக்கு 90%
எனக்கு ஜஸ்ட் 10% போதும்.
எனக்கு பணம் தேவையில்லை.
அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”

“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.

இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.

ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.

புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்….

“என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்.

“உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.

அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?

ஒரு செகண்ட் யோசியுங்களேன்….
இது தான் நமது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது.

இறைவன் தான் பிசினஸ் பார்ட்னர்.
நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).

இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை.
ஒவ்வொரு நொடியை.
நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.

ஐம்புலன்களை நமக்கு கொடுத்து,
அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா?
ஐம்புலன்கள் போதாது என்று
கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான்.
இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்…
அது முடிவே இல்லாமல்தான் போய்கொண்டிருக்கும்

இவ்வளவு தந்த அவனுக்கு
ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.
அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன்.
நமது நன்றியுணர்ச்சிக்காக
அதை எதிர்பார்க்கிறான்.
அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக...

உண்மையான தியாகிகள்



ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு.
.
ரொம்ப தூரத்தில இருந்து பறந்துவந்த

குருவி ஒண்ணு,முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து,'ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறிச்சிக்கிடட்டுமா?'ன்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு.

.
ஆனா அந்த மரம்,'அதெல்லாம் முடியாது'னு

கண்டிஷனா சொல்லிருச்சு.

.
சரினு அடுத்த மரத்துக்கிட்டே போச்சு அந்தக்குருவி.

'இடம்தானே....தாராளமா இருந்துக்கோ!'னு

பெரிய மனசு பண்ணிச்சு அந்தமரம்.

.
ஒரே மாசம்தான்......ஆத்துல வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது.அந்த வெள்ளத்த

தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் அடிச்சிக்கிட்டு போக ஆரம்பிச்சது.

.
ஆனா, குருவிக்கு இடம் கொடுத்த

ரெண்டாவது ஆலமரம் நிலையா நிலைச்சு நின்னது.

.
முதல் ஆலமரத்தைப்பார்த்த குருவி, 'அடுத்தவங்களுக்கு உதவி செய்யாதவனை ஆண்டவனே தண்டிச்சுட்டார்'னு எல்லா மனுஷங்களும் நினைக்கற மாதிரி நினைச்சது.

.
ஆனா,வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப்போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா..... 'என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு எனக்குத்தெரியும்.....நீயும் என்னோட சேர்ந்து சாக வேண்டாம்னுதான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன்... ஏ குருவியே!நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட சந்தோஷமா நல்லா இருக்கணும்!'

.
இப்படித்தான் உண்மையான தியாகிகள் வெளி

உலகத்துக்குத் தங்களை காட்டிக்கறது இல்லை!"

அப்பா சொன்ன மூன்று வாசகங்கள்



``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக் கொள்வேன்.
இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னை விட்டு விலக ஆரம்பித்தார்கள்.

ஒரு கட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய் விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை;

மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள் தாம் வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.

ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார்.

அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது;

இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக் கொள்!’ என்றார். அந்த நாட்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது.

புத்தாண்டின் போதோ, பண்டிகைகளின் போதோ தான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன்.

நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக் கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன.

அதைப் பார்த்து விட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக் கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்...

மகனே நினைவில் வைத்துக் கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத் தான்.’’

அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார்.

முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `

மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக் கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.

நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்...

மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது.

ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும், தந்திரத்தில் விழ வைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக் கொள்ள முடியாது.’

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார்.

வழக்கம் போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... மகனே நீயே தேர்ந்தெடுத்துக் கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்து விடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்...

அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன்.

அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன்.

நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்று தான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.

அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’

அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கைப் பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படி தான் நான் செயலாற்றுகிறேன்.

உண்மையைச் சொல்லப் போனால், நான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறேன்

புளியமரக்கடையில் சாப்பிட்டதுக்கான பில்



புருசன் செத்துட்டான்,பொட்டப்புள்ளையை காப்பாற்ற
புளியமரத்தடியில் நைட்டு டிபன்கடை போட்டாள் இளவயது பிரியா...

கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான், " பர்மிசன் யார்கிட்ட கேட்ட..?
மிட்நைட் ஆச்சு.. கடையைச்சாத்து " ன்னு
எதையாவது சொல்லி தினமும் ஓசியில வயிறுமுட்ட தின்பான்

பணம் குடுத்து சாப்பிடுபவர்கள்
இன்னும் ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடமாட்டார்களா..? என ஏக்கமாயிருக்கும்....
அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறுவாள் ப்ரியா...

ஆனால், " இந்த
ஓசிபோலீஸ், ஒரு தோசை
குறைவாக சாப்பிடமாட்டானா..!!"
என நினைத்தாள்.
ஆனால், அவன் ஆறஅமர உட்கார்ந்து நிறைய
தின்னுட்டு பார்சலும் வாங்கிட்டு போவான்..

என்ன செய்ய..!!??
புளியமரத்தடியில் கடைபோட்டால் இப்படித்தான் வருவார்கள்...
நம்ம தலைவிதி அப்படின்னு
போலீசுக்கு வேண்டாவெறுப்பாக பரிமாறுவாள்...

என்ன சுவையா சமைத்தாலும்,
டவுனுக்குள் நாலுகடை சாத்தின பிறகுதான்
நாலுசனம் வரும் ப்ரியாவின் கடைக்கு...
நாலு வருசம் ஆகியும்
நயாபைசா மிச்சம் பண்ணமுடியலை...

தனது
கைப்பக்குவத்தின் மீது நம்பிக்கை வைத்து
கந்து வட்டிக்கு பணம் வாங்கி டவுனுக்குள் கடையை பிடித்தாள்....

ஒரே வாரத்தில் பிரியாவுக்கு
நம்பிக்கை வந்திடுச்சு
அப்பாடா... இனி ஓரளவுக்கு
தப்பிச்சிடலாம்ப்பா
கடை வாடகை, கந்துவட்டி போக நாலு காசை கண்ணுல பார்த்திடலாம்னு
நினைச்சநேரம் ...
மறுபடியும்
அதே ஓசி போலீஸ் உள்ளே வர்றான்..

வாடி வா ..
இன்னைக்கு உன்னை நாலு வார்த்தை நல்லா கேட்கனும்...
இனி உனக்கு நான் பயப்படத்தேவையில்லை..

இன்னிக்கு சாப்பிட்டதுக்கு
இப்பவே காசைக்குடுடான்னு
சட்டமா கேட்கனும்னு நினைச்சவேளையில்...

" இந்தாம்மா ப்ரியா..
இதுல ஒரு லட்சரூபாய் இருக்கு நாலு வருசம் நான் உன் புளியமரக்கடையில் சாப்பிட்டதுக்கான பில்..
உன் புருசன் என்னோட படிச்சவன்தான்
புருசன் இல்லாம அந்த நைட்டுநேரம்,

நீ அந்த இடத்தில் வியாபாரம் பண்றது எவ்வளவு
ரிஸ்க் எனத்தெரிஞ்சதால்
உன்னோட பாதுகாப்புக்காகத்தான்
நான் தினமும் அங்கே வந்தேன்...

நான் கொடுக்கும் இந்தப்பணம்தான்
புளியமரத்தடிக்கடையின் லாப பணம் வச்சிக்கோ.." கையில் கொடுத்தான்

பிரியாவுக்கு ஒரு நிமிடம் என்னசொல்வதென்றே தெரியவில்லை...
கடைசியாகச்சொன்னாள்.

"வாங்க ....சாப்பிடுங்க...."