Sunday, March 10, 2024

உடலே ஒரு மருத்துவர்தான்!

உயிர்ச்சக்தி ஓட்டத்தால் உடல் ஆற்றலைப் பெறுகிறது. மனம் சமநிலையில் இருக்கும் போது உடலால் தன்னைத்தானே சரி செய்து கொள்ள முடிகிறது. உடலின் இயல்பில் மனம் குறுக்கிடுவதில்லை. ஆனால் மனம் சமநிலை கெடுகிறபோது உடலின் சமநிலையும் கெடுகிறது. உடலின் இயல்பான தானே சரியாகும் ஆற்றல் சரிவர வேலை செய்வதில்லை. உடலின் 'தானே சரியாகும் ஆற்றல்'  குறித்து புரிந்து கொள்வதற்காக உடல் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


உடலின் இரு பெரும் வேலைகளாக உருவாக்குதலும், குணமாக்குதலும் இருக்கின்றன. உடல் தனக்குத் தேவையான அனைத்தையும் தானே உருவாக்கிக் கொள்கிறது. உடலில் உருவாகும் செல்களாக இருந்தாலும் சரி, அது இயங்குவதற்குத் தேவையான சத்துக்களாக இருந்தாலும் சரி! 


அதேபோல, தனக்குள் நிகழும் பாதிப்புகளையும் தானே சரிசெய்து கொள்கிறது உடல்.


உடல் எப்படி தன்னைத்தானே சரி செய்து கொள்கிறது?


சில உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம். நம்முடைய உடலில் ஒரு நீளமான, ஆழமான காயம் ஏற்பட்டு விடுகிறது. காயத்தில் இருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இது எவ்வளவு நேரம் நீடிக்கும்? ரத்தத்தை தடை ஏற்படுத்தி நாம் முயன்று நிறுத்தாவிட்டால் உடலிலுள்ள ஒட்டுமொத்த ரத்தமும் வெளியேறிவிடும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அப்படி நடக்குமா?


உடலில் இருந்து ரத்தம் வெளியேறத் துவங்கியவுடன் அது காற்றுடன் வினைபுரிகிறது. தோலின் மேற்பகுதியில் காற்றுடன் வினைபுரியும் ரத்தம் பசையாக மாறுகிறது. உடலில் ஏற்கனவே இறந்த செல்களைப் பயன்படுத்தி இந்தப் பசை உடலால் உருவாக்கப்பட்ட ஒன்று. நம் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் காயம் பட்ட இடத்திற்கு வந்து, உடலின் வெளிப்புறத்தில் இருந்து உடலுக்கு ஊறு விளைவிக்கும் துகள்கள் எதுவும் உள்ளே செல்லாதவாறு பாதுகாக்கிறது. காயத்தில் ஏற்கனவே ஊடுருவி இருக்கும் துகள்களை அகற்றுகிறது. எளிமையாகச் சொன்னால் காயத்தைச் சூழ்ந்து தூய்மைப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள இன்னொரு அணு பிளேட்லெட்டுகள் என அழைக்கப்படும் ரத்தத் தட்டுக்கள். இவை காற்றுடன் வினைபுரிந்து பைப்ரினோஜன் என்ற நூல் இழைகளை உருவாக்குகிறது. இந்த இழைகள் காயத்தின் மேற்புறத்தில் கிழிந்த தோலை இணைக்கும் வேலையிலும், காயமுற்ற தசைகளை சரி செய்யும் வேலையிலும் இறங்குகின்றன.


தோலின் மேற்புறம் பசையாலும், இழைகளாலும் மூடப்படுவதால் சில நிமிடங்களில் ரத்தம் உறைந்து வெளியேறுவது தடைப்படும். இதை ஆங்கிலத்தில் கிளாட்டிங் டைம் என்று சொல்வார்கள். ரத்தம் தானே உறைந்து தன் வெளியேற்றத்தை நிறுத்திக் கொள்ளும்.


நம் உடலில் இருந்து தேவையற்ற ரத்த வெளியேற்றத்தை முதற்கட்டமாக தானே நிறுத்திக் கொள்கிறது ரத்தம். இந்த முயற்சியில் முழு வெற்றி கிடைக்காத போது ரத்தம் உறைதல் தாமதமாகும். போதிய ஆரோக்கியம் இல்லாத நபர்கள், எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள், ரத்தத்தில் கலந்துள்ள நாம் சாப்பிடும் ரசாயனங்கள் போன்ற காரணங்களால் ரத்தத்தின் இந்த உறைதல் இயக்கம் தாமதமாகலாம். ஆனாலும் உடல் அப்படியே விட்டு விடுவதில்லை. ஏனென்றால் நம் உடலின் அடிப்படை அமைப்பான, தேவையான ரத்தம் வெளியேறுவதை உடல் விரும்பாது. ரத்த உறைவு முயற்சியைத் தொடர்ந்து தோலை இணைக்கும் வேலையையும் ரத்தம் செய்யும். இதனை பிளீடிங் டைம் என்று சொல்வார்கள். ரத்தம் தானாக உறைவதில் தாமதம் ஏற்பட்டாலும், தோலை இணைத்து ஒரு தடையை ஏற்படுத்துவதன் மூலம் ரத்த வெளியேற்றத்தை உடல் தடைசெய்கிறது.


இத்துடன் உடலின் வேலைகள் முடிந்து விடுவதில்லை. அந்த காயத்தினால் ஏற்பட்ட தசை, தோல் பாதிப்புகளைச் சரி செய்யும் வரைக்கும் தொடர்ந்து உடல் அந்தப் பகுதிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொண்டே இருக்கும்.


நமக்கு ஒரு காயம் ஏற்படுகிறது. உடலின் உதவியால் தானே ரத்தம் நின்று போகிறது. சரி. ஆனால் தானாகவே சரியாகிவிடுமா?

உங்களுக்கு காயங்களில் அனுபவம் இருக்குமே? ஏதாவது ஒரு காயத்தை மருந்துகள் எதுவும் போடாமல் அப்படியே விட்டு பார்த்திருக்கிறீர்களா? அந்தக்காயம் மருந்து போடாததால் பெரியதாகி, அழுகிப் போய் விடுகிறதா?


இல்லை. அவ்வாறு நிகழ்வது இல்லை. ஏனென்றால் ஒரு காயத்தை முற்றிலும் குணமாக்கி, அதன் தழும்பை நீக்கும் வரை உடல் தொடர்ந்து வேலை செய்கிறது. எவ்வளவு பெரிய காயமானாலும் சரி. நாளுக்கு நாள் அதை ஆற்றி, அதன் தொந்தரவுகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொண்டேயிருக்கிறது. இதுதான் உடலின் சீர்படுத்தும் திறன். இந்த சீர்படுத்துதலின் ஒரு பகுதியைத்தான் நவீன மருத்துவம் எதிர்ப்பு சக்தி என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது.


ஒரு சிறிய அல்லது பெரிய காயத்திற்கே இவ்வளவு வேலை செய்யும் உடல் சீர்படுத்தும் திறன் இல்லாததா? அதற்கு உதவி செய்வதாக நினைத்துக் கொண்டு நாம் செய்பவைகள் உணமையிலேயே உடலை சீர்படுத்துகின்றனவா? எல்லா மனிதர்களுக்கும் இந்த சீர்படுத்தும் திறன் இருக்குமா? இப்படி பல கேள்விகள் எழக்கூடும். உடலைப் பற்றி வெவ்வேறு பரிமாணங்களில் நாம் அறியும் போது இதற்கான பதில்களை நீங்களே சொல்லிவிட முடியும்.


பலவீனமாக களைத்துப் போயிருக்கும் ஒருவரை ஓய்வெடுக்க அனுமதித்தால் என்ன ஆவார்? நாள் முழுவதும் உடல் சோரும் அளவிற்கு உழைக்கிறோம் என்று வைத்துக் கொள்ளலாம். கை, கால்கள் எல்லாம் அயர்ச்சியடைந்துள்ளன. இந்த நிலையில் இரவு தூங்குகிறோம். மறுநாள் காலை எழும்போது முதல் நாளின் சோர்வு அப்படியே இருக்குமா? அல்லது குறைந்திருக்குமா? நிச்சயமாக குறைந்திருக்கும் அல்லது நீங்கியிருக்கும். இது எப்படி ஏற்பட்டது? இதுதான் உடலின் சீர்படுத்தும் ஆற்றல்.


பலவீனம் அடைந்திருக்கும் உடலின் உள்ளுறுப்புக்களை புத்துணர்வு அடைய வைப்பது உடல்தான். சோர்வை நீக்கி, உடலின் அயர்ச்சியைப் போக்கியது உடல்தான். இதை உடல்தான் செய்கிறது என்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம். சோர்வாக இருக்கும் போது நாம் அருந்திய சத்து பானமோ அல்லது ரசாயன மருந்தோதான் நமக்கு புத்துணர்ச்சியை அளித்திருக்கும் என்று நம்புகிறோம்.


ஒரு நபருக்கு கை எலும்பு கீறல் விழுந்துவிட்டது என வைத்துக் கொள்ளலாம். ஏதோ ஒரு எதிர்பாராத விபத்து அல்லது தவறி விழுந்ததால் ஏற்பட்ட எலும்பு கீறல். இந்தக் கீறலை சரி செய்ய நம்முடைய தாத்தாமார்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? கீறல் விழுந்த பகுதியை அதன் வெப்பத்தைக் கொண்டும், வீக்கம், வலி போன்ற அறிகுறிகளைக் கொண்டும் கண்டுபிடிப்பார்கள். மேற்கூறிய தொந்தரவுகளை வைத்து எலும்பில் ஏற்பட்டுள்ளது கீறலா அல்லது முறிவா என்பதைக் கூட கண்டுபிடித்து விட முடியும். அப்படி கண்டுபிடித்த பின்பு கையின் வெளிப்புறத்தில் மேலும், கீழுமாக இரண்டு மரத்துண்டுகளை வைத்து கை அசையா வண்ணம் கட்டுப் போட்டு விடுவார்கள். இதுதான் சிகிச்சை.


பாதிக்கப்பட்ட எலும்புப் பகுதியை அசைய விடாமல், அதன் இணைப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு கட்டு மட்டும் போட்டால் போதுமா? ஆமாம் போதும். நம் உடல் என்னும் மருத்துவர் கீறல் விழுந்த அல்லது முறிந்த பகுதியை ஒட்டி விடுவார். அதற்கென்று தனியாக மருந்துகளோ, ஒட்டும் பசையோ தேவையில்லை. அதெப்படி தானாக ஒட்டிக் கொள்ளும்?

முறிந்த எலும்பு அல்லது கீறல் விழுந்த எலும்பு தானாக இணைந்து கொள்ளும் அது தான் எலும்பின் இயல்பான குணம். உயிருள்ள உடலினுள் முறிந்த எலும்புகளை இணைத்துக் கட்டிவிட்டால் அது படிப்படியாக இணைந்துவிடும் என்பதுதான் அறிவியல். அதை அறிநதிருந்தார்கள் நம் தாத்தாக்கள். இப்படி கட்டுப் போடுவது கீறல் விழுந்த பகுதி இணைவதற்கு ஏற்ற வகையில் அது அசையாமல் இருப்பதற்குத் தானே தவிர வேறு காரணம் இல்லை. இப்படி வெளியில் இருந்து உதவி செய்தால் போதும். உடல் என்னும் மருத்துவர் உடலுக்குள் செய்ய வேண்டிய வேலைகளை அவர் பார்த்துக் கொள்வார். இப்படித்தான் நம் உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்கிறது.

ஒரு சாதாரண காயத்தையும், முறிந்த எலும்பையும் உதாரணமாக சொல்லி விட்டு உடல் எல்லா நோய்களையும் சரிசெய்து விடும் என்று கூறினால் எப்படி நம்புவது? வாருங்கள் இன்னும் சில உதாரணங்களைப் பார்க்கலாம்.


தொடரும்.

No comments:

Post a Comment