Saturday, May 10, 2025

தீர விசாரிக்காமல் எதையும் நம்பாதீர்கள்

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

…………………………………………….........

*..''*

...................................................


ஒரு நிகழ்வை நாம் நம்புகின்றோம் என்பதற்க்காகவும், விரும்புகின்றோம் என்பதற்க்காகவும், அப்படி நடக்க வேண்டும் என்று நம் எதிர்பார்ப்பு என்பதற்க்காக, மட்டும் அது உண்மையாகி விடாது.


எதையும் கேள்வி கேட்கின்ற,தீர விசாரித்து பரிசோதனை

செய்து தெரிந்து கொள்கின்ற அறிவு நமக்கு அவசியம் இருக்க வேண்டும்.. 


யார் எதைச் சொன்னாலும் அது உண்மை தானா? என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அறிவார்ந்த மனிதனாக வளர அதுவே வழி.


நம் அய்யன் திருவள்ளுவர் கூட மிக அழகாகச் சொல்லி உள்ளார்.


எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப் பொருள்மெய்ப் பொருள் காண்பதறிவு என்று..


அதாவது., 


எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல், உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவது தான் அறிவுடைமையாகும்..


 ‘இவ்வளவு ஏன்? புத்தரே ’என் போதனைகளை யாரும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். ஒவ்வொரு வார்த்தையையும் கடுமையாச் சோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தான் அவரே சொல்லி இருக்கிறார். 


வேட்டையாடச் சென்ற ஒருவரின் கையில், பறவை ஒன்று சிக்கியது. அந்தப் பறவை, அவரிடம், உனக்கு நான் மூன்று அறிவுரைகள் தருகிறேன், என்னை விட்டு விடு என்று கெஞ்சியது. 


சரி, அந்த அறிவுரைகளைச் சொல் என்று கேட்டார் அவர். 


அதற்கு அந்தப் பறவை, உன் கையிலிருந்து என்னை விட்டு விட்டதற்குப் பிறகு முதல் அறிவுரை சொல்கிறேன் என்றது. 


நான் மரத்தில் போய் உட்கார்ந்த பிறகு, இரண்டாவது அறிவுரையையும், நான் அதிலிருந்து பறந்ததற்குப் பிறகு மூன்றாவது அறிவுரையையும் சொல்கிறேன் என்று சொன்னது பறவை. 


அவரும் அந்தப் பறவையை, தனது பிடியிலிருந்து விட்டார். 


அப்போது அந்தப் பறவை, முதலில் உன் கடந்தகாலத் தவறுகளையும், நீ இழந்தவைகளையும் எண்ணி சுமைகளாக்கி, உன் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாதே என்று சொன்னது. 


பின்னர்,அருகில் இருந்த மரத்திற்குச் சென்று  உட்கார்ந்த பின், யார் எதைச் சொன்னாலும், அதை உன் அறிவு கொண்டு சிந்தித்துப் பார், அதை அப்படியே நம்பி விடாதே. உன் அறிவு கொண்டு நீ சிந்தனை செய்தால் தான், எதையும் நீ சரியாகச் செய்ய முடியும் என்று தனது இரண்டாவது அறிவுரையைச் சொன்னது பறவை.  


இவ்வாறு சொன்ன அந்தப் பறவை, வேடரைப் பார்த்து, ''பைத்தியக்காரா, என் உடலுக்குள் இரண்டு அற்புதமான பெரிய வைரங்கள் இருக்கின்றன, என்னை கொலை செய்திருந்தால் அவற்றை நீ அடைந்து இருக்கலாம்.உன் பிடியிலிருந்து என்னை விட்டு விட்டாயே என்று சொன்னது. 


அதற்கு அந்த மனிதர், ''சரி இப்ப என்ன, விட்டு விட்டேன், வேதனை தான், பெரிய இழப்பு தான், பெரிய தவறு தான் என்று சிறிது நேரம் புலம்பி விட்டு, அந்த மூன்றாவது அறிவுரையைச் சொல் என்றார். 


அதற்கு அந்தப் பறவை,உன் கடந்த காலத் தவறுகளையும் 

நீ இழந்தவற்றையும் எண்ணி நொந்து போகாதே என்று, நான் உனக்கு முதலில் சொன்னது நினைவு இருக்கிறதா, ?

நீ அதைத்தான் இப்போது செய்கிறாய் என்று சொன்னது. 


அடுத்து, இரண்டாவது அறிவுரையாக, யார் எதைச் சொன்னாலும், அதை உன் பகுத்தறிவு கொண்டு சிந்தித்துப் பார், அதை அப்படியே நம்பி விடாதே என்று சொன்னேன். 


இவ்வளவு சிறிய பறவையாகிய என் வயிற்றில் இவ்வளவு பெரிய இரண்டு வைரங்கள் இருக்கின்றன என்று, நான் சொன்னால் அதை நீ நம்பிய உனது அறிவற்றதனத்தை என்ன சொல்வது? 


எனவே உனக்கு எது சொன்னாலும் பயன்படாது என்பதே மூன்றாவது அறிவுரை என்று சொல்லி விட்டுப் பறந்தது, அந்த அறிவாளிப் பறவை.


தீர விசாரிக்காமல் எல்லாவற்றையும் நாம் கண்ணை மூடிக் கொண்டு நம்பிக் கொண்டு இருக்கிறோம். எதையும் அறிவு கொண்டு சிந்திப்போம்..

 தீர விசாரித்து எது உண்மை,எது பொய் என்று அறிந்து  வாழ்க்கைப் பாதையிலே நடைபோட்டு முன்னேறுவோம்.. வெற்றி பெறுவோம்.


🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

No comments:

Post a Comment