Wednesday, November 1, 2023

நாகப்பட்டினம் வரலாறு

 

வரலாறு

நாகப்பட்டினம் பண்டைய காலம் முதல் துறைமுக நகரமாகவே இருந்தது. வடநாட்டினர் தமிழரை 'நாகர்' என்றே அழைத்தனர். அதன் காரணமாக அவர்கள் வாழ்ந்த கடற்கரை நகர் நாகப்பட்டினமாயிற்று. நாகப்பட்டினத்தின் மற்றொரு பெயர் 'நீர்பெயற்று'. காவிரிப் பூம்பட்டினம் அழிவுக்குப் பின்னர் இந்நகர் பெயர் பெற்ற துறைமுகப்பட்டினமாக விளங்கியது. 'பதறிதிட்டு' என்னும் பகுதியில் முன்பு புத்தவிகாரை இருந்துள்ளது. இவ்விகாரை கி.மு. 265-270 இடைப்பட்ட காலத்தில் கட்டப்பெற்றிருக்கலாம். அசோகர் கல்வெட்டு சோழ, பாண்டிய நாடுகளில் புத்த பள்ளிகளை எழுப்பியதைக் கூறுகிறது. சினப்பயணி யுவான் சுவாங் (கி.பி. 629-645) தன் பயணக் குறிப்பேட்டில், அசோகர் எழுப்பித்த புத்தப்பள்ளியை நாகப்பட்டினத்தில் தான் கண்டதாகக் குறித்துள்ளார். புத்த விகாரங்களின் வெளிப்பகுதியில் சீன நாட்டு முறையில் கோபுரங்கள் இருந்துள்ளன. நரசிம்மவர்மன் காலத்தில் 'புதுவெளிகோபுரம்' ஒன்றை கட்டியுள்ளார். கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜயம் மன்னர் சூளாமணிவர்மன் நாகையில் 'சூளாமணி விகாரை'யை அமைத்தான். இந்த பெளத்தபள்ளிக்கு இராசராசனும் அவன் மகன் இராசேந்திரனும் 'ஆனைமங்கலம்' என்ற ஊரை பள்ளிச்சந்தமாக தானமாக அளித்துள்ளனர். இதைப்பற்றிய செப்பேடு ஹாலந்து நாட்டில் உள்ள லெய்டனில் இன்றும் உள்ளது. நரசிம்மவர்மன் எழுப்பிய 'புதுவெளிகோபுரம்' 1882 வரை இருந்துள்ளது. பின்னர் கிருத்துவ குருமார்கள் ஆங்கில அரசிற்கு எழுதி இதை இடித்து விட்டனர். இதன் அடியில் கண்டெடுக்கப்பட்ட 5 புத்தர் சிலைகளும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டது. நாகப்பட்டினத்தை அடுத்த' 'பரவை' என்ற கடற்துறை சார்ந்த ஊரில் 'நீர்ச்சுழல்' அடிக்கடி ஏற்பட்டு பல கலங்கள் மூழ்கியதற்கான அகச்சான்றுகள் பல கிடைத்துள்ளன. நாகை மாவட்டம் சோழநாட்டின் கடற்கரையோரப் பகுதியாகவே இருந்து வந்துள்ளது. சோழராட்சியில் 'சோழகுல வல்லிபட்டினம்' என்ற பெயரைப் பெற்றிருந்தது. வணிக துறைமுகபட்டினமாகவே இருந்து வந்துள்ளது. கி.பி. 10ஆம் நூற்றாண்டிலேயே இங்கு இயற்கை வாயு வெளிப்பட்டுள்ளது. அக்கால மக்கள் இயற்கைவாயு வெளிப்பட்ட கிணற்றை 'புகையுண்ணிக்கிணறு' என்று அழைத்துள்ளனர். சோழர்களுக்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சியில் நாகையை போர்ச்சக்கீசியருக்கு தாரை வார்த்தனர். கி.பி. 1500 முதல் 1658 வரை ஆண்டனர். அக்காலத்தில் போர்ச்சுக்கீசியன் பல மீனவர்களை கொன்றனர். நாகூரில் இருந்து அரங்கநாதர் கோயிலை இடித்தனர். போர்ச்சுக்கீசியர்களுடன் சண்டையிட்டு ஆலந்துக்காரர்கள் இப்பகுதியை 1658 முதல் 1824 வரை ஆண்டனர் தஞ்சை மராட்டிய மன்னர் ஏக்கோஜியுடன் உடன் படிக்கை செய்து கொண்டு குத்தகையாக நாகையை எடுத்தனர். இவர்களுக்குப் பின் நாகை ஆங்கிலேயர் கைக்கு வந்தது. விடுதலைக்குப்பி தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தஞ்சை மாவட்டத்தில் இருந்து 1991, அக்டோபர் 18ஆம் நாள் நாகையை தலைநகராகக் கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

உள்ளாட்சி நிர்வாகம்

  • நகராட்சிகள் - 3
  • ஊராட்சி ஒன்றியங்கள்- 11
  • பேரூராட்சிகள்-10
  • பஞ்சாயத்துக்கள் - 432

சட்டசபை தொகுதிகள்

  • சீர்காழி
  • பூம்புகார் மயிலாடுதுறை
  • நாகப்பட்டினம்
  • வேதாரண்யம்
  • குத்தாலம்

பாராளுமன்ற தொகுதிகள்

  • மயிலாடுதுறை
  • நாகப்பட்டினம்

கல்வி

  • தொடக்கப் பள்ளிகள்-  823
  • நடுநிலைப் பள்ளிகள்- 177
  • உயர்நிலைப் பள்ளிகள்- 71
  • மேல்நிலைப்பள்ளிகள்- 46
  • கல்லூரிகள்- 5
  • தொழிற்கல்வி நிறுவனங்கள்- 3
  • தொழிற்பயிற்சி நிறுவனங்கள்- 2

வழிபாட்டிடங்கள்

  • வேளாங்கண்ணி மாதா கோவில்
  • நாகூர்தர்கா
  • எட்டுக்குடி
  • சிக்கல் முருகன் கோவில்கள்

மற்ற ஊர்கள்

  • மயிலாடுதுறை,
  • சீர்காழி,
  • வேதாரண்யம்,
  • செம்பனார்கோவில்,
  • வைத்தீஸ்வரன் கோவில்

இம்மாவட்டம் இந்து, கிருஸ்துவ, முஸ்லீம் சமயங்களின் சமரச மாவட்டமாக விளங்குகிறது.

தொழில்கள்

வேளாண்மைத்தொழில்

காவிரியின் கடைமடை பகுதியாக இந்த மாவட்டம் அமைந்துள்ளது. குறிப்பாக நெல்விளைச்சலில் மயிலாடுதுறை, குத்தாலம், கொள்ளிடம், நாகப்பட்டினம் முதலிய இடங்களில் விளைச்சல் அதிகம். நெல் தவிர கரும்பு, வாழை, ராகி, காய்கறிகள், பூக்கள் முதலியவை விளைவிக்கப்படுகிறது. தலைஞாயிறு விவசாய ஆராய்ச்சி நிலையம் நெல்வித்துக்களை உண்டாக்கி அறித்துள்ளது. மயிலாடுதுறையில் 2 1/2 இலட்சம் ஏக்கரில் நெல், மணிலா, எள், கரும்பு, தென்னை முதலியவை பயிரிடப்படுகின்றன.

தொழிலும் வாணிகமும்

விவசாயமே முதல்நிலை தொழிலாக இருப்பதால் வேறு தொழில்கள் இம்மாவட்டத்தில் குறைவே. உப்பளத்தொழில் இம்மவாட்டத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் காய்ச்சப்படுகிறது. வேதாரண்யத்துக்கு அருகேயுள்ள உப்பளங்கள் சிறு வணிகர்களாலும், பெருவணிகர்களாலும், குத்தகைக்கு எடுத்து நடத்தப்படுகின்றன. 'மேட்டூர் கெமிகல்' குழுமத்தார் இரசாயனப் பொருள்களின் உற்பத்தியில் பயன்படுத்துவதற்காக 'வெள்ளை உப்பு' (Reined Salt) செய்வதற்கு, வேதாரண்யத்தில், குத்தகைக்கு எடுத்து மேட்டூருக்கும், ஆல்வாய்க்கும் உப்பு அனுப்புகின்றனர். வேதாரண்யம் பகுதியில் மட்டும் ஆண்டுதோறும் 20 இலட்சம் டன் உப்புக்காய்ச்சப்படுகிறது. வேதாரண்யம் உப்பு ஜிப்சம் செய்ய ஏற்றது. இங்கு தொழிற்சாலைகள் ஏற்பட இருக்கின்றன. மீன்பிடிக்காரருக்கான வலைகள், புகையிலையும் கருப்பட்டியும் வைப்பதற்கான தாழ ஓலைப்பாய்கள் இங்கு கோடியக் கரையிலும், வேதாரண்யத்திலும் கைத்தொழிலாக வளர்ந்துவந்துள்ளது. நெல் வாணிபத்திற்கு குற்றாலம் புகழ் பெற்றது. மயிலாடுதுறையை அடுத்த கூறைநாட்டில் பட்டுப்புடவை நெய்யும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்து வருகிறது.

மீன்பிடித்தொழில்

திருமுல்லைவாயில் தொடக்கம் கோடியக்கரை வரையுள்ள கிட்டத்தட்ட 120 கி.மீ கடற்கரையைக் கொண்டிருப்பதால் சிறப்பானபயன் தொழிலாக மீன்பிடித்தல் விளங்குகிறது. சாதாரண கட்டுமரங்களை பயன்படுத்தியே இங்கு தொழில் செய்யப்படுகிறது. சில இடங்களில் இயந்திர படகு மீன்பிடியும் நடைபெறுகிறது. பூம்புகார், நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை முதலிய இடங்களில் பெருமளவு மீன்பிடிக்கப்படுகிறது. இங்கு சுறா, வாளை, திருக்கை, நெத்திலி, நண்டு மற்றும் கடலோரப் பகுதிகளில் நன்னீர் இறாலும் வளர்க்கப்படுகிறது. மீனும், கருவாடும் நாகையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாகையில் மீனவர் பயிற்சி நிலையம் உள்ளது.

கனிவளம்

நாகையை அடுத்த நரிமணம் கிராமத்தில் பெட்ரோலியம் எடுக்கப்படுகிறது. சீர்காழிக்கருகில் உள்ள நெய்பத்தூரில் இயற்கைவாயு உள்ளது. கோடியக்கரைக்கருகில் பழுப்பு நிலக்கிரி படிவுகள் இருப்பதாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தரமான எஃகு செய்வதற்கு உதவும் இல்மனைட் தரங்கம்பாடியிலிருந்து 3.கி.மீ தொலைவில் உள்ள கடற்கரையில் கிடைக்கிறது. நாகையிலும் காணப்படுகிறது. கொதிகலச் செங்கல் செய்வதற்குத் துணையாக உள்ளதும், பிளாஸ்டிக் தொழிலுக்குப் பயன்படுவதுமாகிய ஜர்க்கான் என்னும் கனிவளம் தரங்கம்பாடிக் கடற்கரை மணலில் 2 முதல் 5% இருக்கிறது. நாகூர் பகுதியருகே மட்டமான ஜிப்சம் கிடைக்கிறது.

காட்டுவளம்

கோடியக்கரை காடே இம்மாவட்டத்திலுள்ள காட்டுவளப்பகுதியாகும். இதன் பரப்பு 4,500 ஏக்கர். அடுத்து சொல்லப்படும் சீர்காழி வட்டத் திருமுல்லைவாயில் காட்டில் பிரம்புக்கொடிகள் நிறைய உண்டு. இதனால் ஆனைக்காரன் சத்திரத்தில் பிரம்பு வேலைகள் நடைபெறுகின்றன.

சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்

பூம்புகார்

காவிரியாறு கடலோடு கலக்கும் இடமே காவிரிப் பூம்பட்டினம். ஆறு கடலுள் புகும் ஊர் என்பதையே 'புகார்' என்ற சொல் குறிக்கிறது. பூம்புகார், அக்காலத்தில் எப்படி இருந்தது என்பதை அறிய பட்டினபாலையும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் உதவுகிறது.

காவிரிப்பூம்பட்டினம்-மருவூர்பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இருபகுதிகளாக இருந்ததையும், சோழரின் தலைநரமாகவும், துறைமுக நகரமாகவும், வணிகத்தில் கொடிகட்டி பறந்தது. பல நாட்டு வணிகர்களும் திரியும் தெருக்களும், யவன இருக்கையும், கண்ணகி, கோவலன், மணிமேகலை முதலியோரின் வாழ்க்கையின் முக்கிய இடமாக இருந்ததையும் இலக்கியங்களின் வாயிலாக அறிகிறோம்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பெரும் துறைமுகப் பட்டினமாக விளங்கியது என்பதை 'பெரிப்ளூஸ்' நூலும், டாலமியின் பூகோளக் குறிப்புக்களிலிருந்தும் பாலி மொழியில் எழுதப்பட்ட மிலிந்த அரசரின் கேள்விகள் என்ற நூலிலிருந்தும் தெரியவருகிறது. பட்டினத்தாரின் நினைவை போற்றும் முகமாக பூம்புகாரில் 12 நாட்கள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதத்தில் பெளர்ணமி அன்று மக்களில் கடலில் நீராடுவ. அன்றே தமிழக அரசும் அரசு சார்பில் கவியரங்கு, கருத்தரங்கம் இசை நிகழ்ச்சி, நாடகம் முதலியவை நடத்துகிறது. ஏழுநிலை மாடமுள்ள மாளிகையை தமிழக அரசு கட்டியுள்ளது. அதில் சிலப்பதிகார காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. இங்கு தமிழக அரசின் சுற்றுலாத் துறையின் விடுதியுள்ளது.

நாகூர்

நாகப்பட்டினத்திற்கு வடக்கே 6 1/2 கி.மீ தொலைவில் நாகூர் உள்ளது. இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு தலைச்சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது நாகூர். ஹஜாரத் சையது ஷாகுல் ஹமீது குவாதிர் அலி கஞ்சசவாய் என்ற முஸ்லீம் பெரியார் 17-ஆம் நூற்றாண்டில் அடக்கமாகிய இடம் 'தர்கா' எனப்படுகிறது. இந்துக்கள் அதிகளவில் இங்கு வருகின்றனர். இங்கே அடங்கியிருக்கும் பெரியாரை இந்துக்கள் 'நாகூர் ஆண்டவர்' என்று குறிப்பிடுகின்றனர்.

நாகூர் கந்தூரி விழா முஸ்லீம் ஆண்டு தொடங்கும் போது நடைபெறுகிறது. நாகூர் ஆண்டவர் இறந்த நாள் முதல் 14 நாட்களுக்கு இவ்விழா நடைபெறுகிறது. இந்த விழா நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரும். விழாதேதி ஆண்டு தோறும் மாறும். அக்காலத்தில் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்படும்.

கந்தூரித் திருவிழாவில் பாய்மரக்கப்பல் போலவும் தோணி போலவும் மரத்தாலும் காகிதத்தாலும் செய்த பொம்மைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. கடலில் செல்லும் கப்பல்களைப் புயலினின்றும் காற்றினின்றும் நாகூர் ஆண்டவரே காப்பாற்றி அவைகளைக் கரையில் சேர்க்கிறார் என்ற நம்பிக்கை. இவ்வூர் மக்களாகிய மரக்காயரிடம் வேரூன்றியிருப்பதாலேயே இவ்வாறு ஊர்வலம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் விழவில் சந்தனக்கூடு ஊர்வலம் நிகழும். தர்காவைப் போன்ற வடிவத்தில் அமைத்த ஒரு தேரில் சந்தனம் முதலிய நறுமணப்பொருள்கள் சேமித்து வைக்கப்பெற்று, பிறகு அவையாவும் நாகூர் ஆண்டவர் சமாதியின் மீது போடப்பட்டு வழிபட வந்திருப்பவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

முஸ்லீம்கள் இத்திருவிழாவின் போது உண்ணாநோன்பு மேற்கொள்வர்; இறுதி நாளில் கடலிற்று சென்று தம் கரங்களைக் கழுவுவார்கள். இத்திருவிழாவுக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், இலங்கை, பர்மா, மலேசியா, அரபு நாடுகள் ஆகியவற்றிலிருந்தும் 2 இலட்சம் பேர் நாகூருக்கு வருகின்றனர். வருபவர்கள் மூலம் தர்காவுக்கு 10 இலட்சத்திற்கு மேற்பட்ட அளவு பணம் கிடைக்கும். செலவு போக வருவாயில் எஞ்சும் தொகை நாகூர் ஆண்டவரின் வளர்ப்புக் குழந்தையான யூசூப் என்பாரின் வாரிசுகளால் 640 பங்காக பகிர்ந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது.

நாகூர் ஆண்டவரின் மனைவி, மக்களின் சமாதியும் தர்காவிலேயே உள்ளன. வியாழக்கிழமைகளில் இங்கு மக்கள் கூட்டம் மிகுதியாக இருக்கிறது. புறாக்களைப் பறக்கவிட்டு வழிபடும் முறையும் இங்கு உண்டு. நாகூர் ஆண்டவராகிய சாகுல் அமீது, முகம்மது நபியின் வழித்தோன்றல் என்பது வரலாறு. தஞ்சை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரின் வயிற்று வலியைப் போக்கி அவனுடைய பேராதரவைப் பெற்று நாகூரில் தங்கினார். நாகூர் ஆண்டவர் உயிர்நீத்தபிறகு நாகூரில் அவருக்குத் தர்காவைக் கட்டி வைத்ததோடு கந்தூரி விழாச் செலவுக்காக நிலங்களையும் அச்சுதப்ப நாயக்கரே மானியம் விட்டிருக்கிறார்.

தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசர் பிரதாப்சிங் இந்த தர்காவின் முன்னாலுள்ள 90 அடி (28 மீட்டர்) உயரமுள்ள மினார் ஒன்றை அமைத்திருக்கிறார். இது தவிர இன்னும் நான்கு கூண்டுகள் உள்ளன. கடலிலிருந்து பார்த்தால் இவை நன்றாக தெரியும். தர்காவுக்குள் கோயில்களில் காணப்படுவது போன்ற மண்டபமும், திருக்குறளும் உள்ளன. நாகூர் ஆண்டவர் காலத்தில் வாழ்ந்த டச்சு கவர்னர், அவர் நினைவாக 'பீர் மண்டபம்' என்ற மன்றத்தை கட்டியுள்ளார். மாராட்டிய அரசர் துளஜாஜி, தர்காவின் நடைமுறைச் செலவுக்காக 6,000 ஏக்கர் நன்செய் நிலத்தை வழங்கியுள்ளார். நாகூர் ஆண்டர் தர்கா மீது பொன்னாடை போர்த்தும் உரிமை இந்துக்களுக்கு வழங்கப்படுகிறது.

வேளாங்கண்ணி

நாகப்பட்டினத்திற்கு தெற்கே 10.கி.மீ தொலைவில் கடுவையாறு கடலுடன் கலக்குமிடத்தில் உள்ளது. போர்ச்சுக்கீசிய கப்பல் கடலில் சிக்கி சின்னா பின்னமடைய இருந்த நேரத்தில் கரை சென்றால் கன்னிமேரிக்கு கோயில் எடுப்போம் என்று வேண்டிக் கொண்டதால் கி.பி. 1565 வேளாங்கண்ணியில் மாதா ஆலயம் அமைந்தது. 'அவர் லேடீஸ் டாங்க்' என்ற குளமும், நடுத்திட்டும் அழகுற அமைந்த ஆரோக்கிய மாதா ஆலயமும் காணத்தக்க இடங்கள் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30 தொடங்கி, செப்டம்பர் 8 வரை ஆரோக்கிய மாதாவின் நினைவாக இவ்வூரில் பெரிய திருவிழா நடைபெறுகிறது.

வேளாங்கண்ணிக்கு, "கீழை நாட்டு லூர் டீஸ்" (Lourdes of the East) என்ற பெயர் உண்டு.

தரங்கம்பாடி

தரங்கம்பாடியில் 'டேனிஷ் கோட்டை' காணத்தகுந்த இடமாகும். இது தமிழக கோட்டையிலிருந்து வேறுபட்டது. வெளிநாட்டுக் கட்டடக்கலையின் அழகை காணலாம். இவ்வூர் நாகப்பட்டினத்திற்கு 40 கி.மீ. வடக்கேயும், மயிலாடுதுறைக்கு 30. கி.மீ கிழக்கேயும், வங்காளக் விரிகுடாக் கடலோரத்திலுள்ள துறைமுக நகரம். தரங்கம்பாடி உடல் நலத்துடன் வாழ்வதற்குரிய சிறந்த ஊராகவும் இருந்து வருகிறது.

தரங்கம் என்பது அலைகளைக் குறிக்கும். இவ்வூரில் கடல் அலைகள் ஓசை நயத்துடன் பாடிக் கொண்டு கரையை மோதுகிறதாம். அதனால் இவ்வூரை 'தரங்கம்பாடி' என்று அழைத்தனர். இப்பொருள்பட ஐரோப்பியர் சிலரும் இவ்வூரைப்பற்றி Song of Tranquebar; waves of Tran quebor என்ற தலைப்புகளில் நூற்களுக்கும் கட்டுரைகளும் எழுதியுள்ளனர். தென்னிந்தியாவில் கிருத்துவம் பரப்பும் தலைமையிடமாகவும் இருந்தது. இங்கிருந்தே புரொட்டாஸ்டாண்ட் மதம் பரவியது. சீகன்பால்க் என்ற ஜெர்மானியர் தமிழ் எழுத்துக்களை ஜெர்மனியில் செய்ய சொல்லி தரங்கம்பாடியில் அச்சிட்டார். 'புதிய ஏற்பாடு' 1715-இல் இங்கு அச்சிடப்பட்டுள்ளது. இந்நாளில் இந்நகரம் சிற்றுராக இருப்பினும், பழைய கட்டடங்கள், பாழடைந்துள்ள சின்னங்கள், டேனிஷ்காரரின் புகழ்பரப்பும் கோட்டை, மசூதி, கோயில்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை இவ்வூரின் தொன்மையை தெரிவிக்கின்றன.

டேனிஷ் கவர்னர் வாழ்ந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள உப்பள அலுவலகமும், டேனிஷ் தளபதியுடைய இல்லத்தின் கனத்த சுவர்களும், டேன்ஸ்பர்க் கோட்டையின் கிழக்கு மதிலில் வைக்கப்பட்டுள்ள பழைய காலத்துத் துப்பாக்கியும், கோட்டையருகே கடலோரத்தில் சீகன்பால்க் நினைவு சின்னமும் காணத்தக்கவை.

1624-இல் இக்கோட்டை, டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரால் டென்மார்க் அரசருக்கு விற்கப்பட்டது. இக்கோட்டை ஐரோப்பாவிலுள்ள கோட்டைகளைப் போன்றது. நடுவே ஒரு முற்றம், சுற்றிலும் பல கட்டிடங்கள், அவற்றையடுத்துச் செங்கற்களால் உறுதியாகக் கட்டப்பெற்ற மதில்கள். மதில்களின் நான்கு மூலைகளிலும் காவல் அரண்கள். அவற்றை அடுத்து அகழிக்ள என்ற அமைப்பில் அது கட்டப்பெற்றிருக்கிறது. கோட்டைக்குள் டேனிஷ் கவர்னரின் மாளிகையும், படைத்தலைவரின் மாளிகையும், வெடி மருந்துக் கிடங்கும், கிறித்துவ ஆலயங்களும், சுங்க அலுவலகமும் சிறைச்சாலையும் இருந்தன. அவர்களுடைய தேவைக்கேற்ப, 1791 வரை பல தடவை இக்கொட்டை திருத்தியமைக்கப்பட்டது. 1845-இல் டேனிஷ்காரர்கள் பிரிட்டீசாருக்கு 12 1/2 இலட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு தங்கள் நாடு சென்றுவிட்டனர்.

கோடியக்கரை வனவிலங்கு புகலிடம்

கோடியக்காடு வேதாரண்யத்துக்குத் தெற்கே இருக்கிறது. 10 கி.மீ. நீளத்துக்கும் 5 கி.மீ அகலத்துக்கும் அடர்ந்துள்ள இக்காடு இருமருங்கிலும் கடலால் சூழப்பட்டிருக்கிறது. இதைச் சுற்றிலும் உவர்மண் இருக்கிறது. மழை குறைவாக இருப்பதால், நீண்ட அகன்ற இலையுள்ள மரங்கள் இங்கு வளருவதில்லை. பாலைப்பழம், துவரம்பழம், கொழுஞ்சிப்பழம் போன்ற சில காட்டுப் பழங்களும், கீரை, கிழங்கு வகைகள் சிலவும், சீந்தில் கொடி என்னும் மூலிகையும், கோழிதுவரை என்ற கொட்டையும் பூனைக்காய்ச்சிக் கொட்டையும் முட்புதர்களும் இக்காட்டில் மண்டிக் கிடக்கின்றன.

இங்கு வரையாடு (Black Buck) என்ற மான் இனமும், புள்ளிமானும், குதிரை, நரி முதலிய விலங்குகள் உள்ளன. இக்காடு சதுப்பு நிலத்தில் இருக்கிறது. ஆறுகளுக்கும் கடலுக்கும் இடைப்பட உப்பங்குழிகளில் பூநாரை செங்கா, நாரை, வக்கா, கூழக்கடா, சிரவி, உல்லான் போன்ற பறவை இனங்களை ஐப்பசி மாதம் முதல் தைமாதம் வரை காணலாம்.

இங்குள்ள காடுகளில் (type one para) ஒருவகைப்பறவை (Flamingo) கோடியக்கரைக்கு நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஆண்டுதோறும் வந்து செல்கிறது. இது சிவப்பு நிறமும், அழகிய தோற்றமும் கொண்டது. நான்கடி உயரம், நீண்டு சுருங்கிய கால்கள், குழாய் போன்ற வளைந்த கழத்து, ஆரஅமர உண்ணும் தன்மை, ஒற்றைக்காலில் நின்று கொண்டே உறங்கும் ஆற்றல் இத்தகைய இயல்புகள் நிறைந்தது. கோடியக்கரையில் கடலோரத்திலுள்ள நண்டு இனங்களில் சாறைக் குடிக்கவே இவை இங்கு வருகின்றன.

மாவட்டத்தின் முக்கிய ஊர்கள்

ஆக்கூர்

தரங்கம்பாடிக்குச் செல்லும் வழியில் இவ்வூர் இருக்கிறது. 'தான் தோன்றிமாடம்' என்பது இங்குள்ள கோயிலின் பெயர். சோழர்கள் திருப்பணி செய்திக்கின்றனர்.

கொள்ளிடம்

காவிரியின் அதிகமான நீரை கொள்ளுவதால் 'கொள்ளிடம்' எனப்பட்டது. நறுமணப் பொருள்களும், தைலங்கள் செய்யவும், மாலைகளில் கட்டப்படும் 'வெட்டிவேர்' இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மகாராஜாபுரம்

இவ்வூரிலிருந்தே மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், சந்தானம் போன்ற புகழ்பெற்ற பாடகர்கள் தமிழகத்திற்கு தெரியவந்தனர்.

சீர்காழி

சோழர்காலத்திலேயே பெருமை பெற்ற நகரமாக விளங்கியது. தேவாரம் அருளிய மூவருள் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் இவ்வூர் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு 7 கி.மீ வடக்கேயும், சிதம்பரத்துக்கு 18 கி.மீ தெற்கேயும் இத்தலம் இருக்கிறது. தமிழிசை மும்மணிகளுள் இருமணிகளான முத்துத்தாண்வரும், அருணாசலக்கவிராயரும் இவ்வூரே. சீர்காழி கோயில் மூவராலும் பாடப்பெற்றது. இந்திய நூலத் இலக்கத்தின் தந்தை எஸ். ஆர். ரெங்கநாதனும் இசையுலகில் புகழ்பெற்ற கோவிந்தராஜனாலும் இவ்வூர் புகழடைந்தது. தற்காலத்தில் பெருநனும்ராக விரிவடைந்துள்ளது.

தென்திருமுல்லைவாசல்

சம்பந்தரால் பாடப்பெற்ற தலம். சீர்காழியிலிருந்து 15கி.மீ தொலைவில் உள்ள கடற்கரையூராகும். 1941 வரை துறைமுகநகராகவும் இருந்தது. ஆசிரியர் பயிற்சி பள்ளி இங்குள்ளது. கிருஷ்ணதேவராயர் கால செப்பு பட்டயங்கள் இங்குள்ளன. அமாவாசையிலும், கிரகண நாட்களில் மக்கள் இங்கு வந்து திருமுழுக்குச் செய்வார்கள்.

வைத்தீஸ்வரன் கோயில்

'புள்ளிருக்கும் வேளூர்' என்று இவ்வூரை தேவாரம் குறிப்பிடுகிறது. இக்கோயிலில் சிவனுக்குப்பெயர் வைத்தியநாதர். இங்குள்ள முருகனுக்கு, செல்வமுத்துக்குமாரசாமி என்று பெயர். செவ்வாய்க் கிரகமாகிய அங்காரகனுக்கு உரிய தலமாக இவ்வூர் உள்ளது. இக்கோயில் தருமபுர ஆதீனத்தின் கீழ் வருகிறது.

திருவெண்காடு

சீர்காழியிலிருந்து 11 கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. தேவாரத்தால் பாடல்பெற்ற தலம். மணிவாசகரும் இத்தலத்து பெருமானை பாடிப்பரவியுள்ளார். தில்லையிற் போலவே இங்கும் நடராசசபை அமைந்திருக்கிறது. புதனுக்குத் தனிகோயிலும், சிலப்பதிகாரம் கூறும் சூரியகுண்டம்-சோமகுண்டம் என்னும் குளங்கள் இங்குண்டு. இக்கோயிலிலுள்ள அகோரவீரபத்திரருக்கு ஞாயிறு இரவில் பூசை செய்யப்படுகிறது. 1950 ஆண்டு இக்கோயில் புதைபொருள் ஆய்வு செய்த போது, உலகப்புகழ்பெற்ற சோழர்பாணி செப்புத் திருமேனிகளான புதன், அர்த்த நாரீசுவரர் திருவுருவங்கள் எடுக்கப்பட்டு தஞ்சை கலைக்கூடத்திற்கு சென்று விட்டது. இன்றும் அங்கு மாதொரு பாகனை கண்டு மகிழலாம்.

செம்பொன்னார் கோயில்

இவ்வூர் மயிலாடுதுறையிலிருந்து தரங்கை போகும் வழியில் 8.கி.மீ தொலையில் இருக்கிறது. தேவார மூவராலும் பாட தலம். சோழ மன்னர்களின் வெற்றி நினைவாக அமைந்த இக்கோயில், நாயக்க மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலில் அழகிய செப்பு விக்ரகங்களும், கொடிவட்டமும், கல்வெட்டும் குறிப்பிடத்தக்கவை.

குத்தாலம்

மயிலாடுதுறைக்கு தென்மேற்கே 10.கி.மீ தொலைவிலிருக்கிறது. நெல்வாணிகம் இங்கு முக்கியத் தொழில். தேவார மூவராலும் பாடப்பட்டத்தலம். சோழர்கள் கட்டிய மூன்று கோவில்கள் இங்கு உள்ளன. அதில் ஒரு கோயிலின் பெயர்: 'சொன்னவாறு அறிவார் கோயில்'. இக்கோயிலில் உள்ள மணக்கோல நாதர் திருமேனியும்; சண்டிசுவரும் செம்பியன் மாதேவி திருப்பணி காண வேண்டியவை.

திருக்கடவூர்

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையிலுள்ள இந்த இரயில் நிலையத்திற்கு திருக்கடையூர் என்றும் தலத்துக்கு திருக்கடவூர் என்றும் பெயர். இவ்வூர் கோயில் தேவார மூவரால் பாடப்பெற்றது. சிவபெருமானின் அஷ்டவீரட்ட தலங்களுள் ஒன்று. காலசம்கார மூர்த்தியும் எருமையுடன் கூப்பிய கையொடு நிற்கும் யமனும், அபிராம அம்மன் கோயிலும் இங்கு காணத்தக்கவை. இத்தலத்தில் எழுந்த சமய இலக்கியம்: அபிராமி அந்தாதி.

தில்லையாடி

இவ்வூர் தரங்கம்பாடி அருகில் இருக்கிறது. தமிழிசைக்குத் தரமான பாடல்களைத் தந்த அருணாசலக் கவிராயர் பிறந்தது இவ்வூரே. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளுடன் போராடிய தில்லையாடி வள்ளியம்மை பிறந்ததும் இந்தவூர்தான். வள்ளியம்மையை நினைவு கூரும் முகமாக நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

வழுவூர்

மயிலாடுதுறையிலிருந்து எட்டு கி.பி. தொலைவில் உள்ளது. நாட்டிய மேதை வழுவூர் ராமைய்யாபிள்ளை பிறந்ததும் இவ்வூரே. தேவாரத்தில் குறிப்பிடப்பட்ட வைப்புத்தலம். இங்கள்ள கோவிலில் பிட்சாடணர் திருவுருவமும், முருகன் திருவுருவமும், ஐந்து தீர்த்தங்களும், மாசிமகத்தன்று நிகழும் கஜசம்கார திருவிழாவும் காணத்தக்கவை.

மயிலாடுதுறை

  • தஞ்சை-சென்னை வழியில் உள்ள முக்கியமான இரயில் தடத்தில் உள்ளது இவ்வூர். இறைவி மயிலாக ஆடிய காவிரித் துறையில் இவ்வூர் அமைந்ததால் மயிலாடுதுறை என அழைக்கப்பட்டது. சோழர் காலத்திற்கு பின்னர் இவ்வூர் வடமொழி பெயர்பெற்று 'மாயூரம்' என்றானது. பின்னர் தமிழறிஞர்கள் போராடி பழைய பெயரை நிலைநாட்டினர். தமிழில் முதல் நாவல் படைத்த வேதநாயகம் பிள்ளை இவ்வூரினரே ஆவார்.
  • காவிரியின் வடகரையில் வள்ளலார் கோயில், துலாகட்ட மண்டபத்தருகே விசுவநாதர் கோயில், சம்பந்தர் பாடிய மயூரநாதர் கோயில், அதன் உட்கோயிலும் அருணகிரிநாதர் பாடல் பெற்றதுமாகிய குமரக்கட்டளை என்ற கோயில்களும் இங்குண்டு.
  • ஆடி 18-லும் ஐப்பசி மாதத்தில் 30 நாட்களிலும் இங்கே காவிரிக்கரையில் பல்லாயிரம் மக்கள் நீராடுவர். ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில்-கடை முகத்தன்று முழுகுவர். அன்று வரமுடியாதவர்கள் கார்த்திகை முதல் நாளில் முழுகுவர் அன்றைய பெயர்: 'முடவன் முழுக்கு நாள்'.

நாகப்பட்டினம்

1782-முதல் நாகப்பட்டினத்தைத் தலைநகராகக்கொண்டு, பிரிட்டிஷார் தஞ்சை மாவட்டத்தை ஆளத்தொடங்கினர். 1844- நாகப்பட்டினத்தில் அர்ச். சூசையப்பர் கல்லூரி தொடங்கப் பெற்றது. 1861 நாகையிலிருந்து தஞ்சைக்கு இரயில்பாதை போடப்பட்டது. 1866 இல் நகராண்மைக் கழகம் நிறுவப்பட்டது.

தென்னிந்திய இரயில்வேயின் தொழிற்கூடம் பல ஆண்டுகள் நாகையில் இருந்தது. 1928-இல் இத்தொழிற்கூடம் திருச்சியை அடுத்த பொன்மலைக்கு மாற்றப்பட்டது. இதன் விளைவாக தொழிலாளர்கள் நாகையிலிருந்து பொன்மலைக்கு சென்றனர். இங்கிருந்த பலர் மலேயா, சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்றுவிட்டனர். அதற்குக்காரணம் சுதந்திரத்திற்கு பிறகு பலமுறை புயலா இவ்வூர் பாதிக்கப்பட்டதுதான். 1941 க்குப்பிறகு நாகை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை இழந்தது. அந்த இடத்தை தூத்துக்குடி பெற்றது.

டச்சு ஆட்சியின் அறிகுறிகளாக செயிட்பீட்டர் தேவாலயம், ஹாலண்டு பங்களா, 20 அடி உயரமுள்ள கொடிமரம், டச்சுமார்கெட், ஹாலாண்டு ரோடு போன்றவை இன்றளவும் உள்ளன.

வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் தற்போது புகழ்பெற்று விளங்கும் தொழிற்பயிற்சி நிறுவனம் ஆகும்.

நாகை பாடல்பெற்ற தலம் சப்த விடங்கர் தலங்களுள் இது ஒன்று. இறைவன் பெயர் காயாரோகணசாமி, அம்மன்: நீலாய தாட்சி, இக்கோயிலில் நவக்கிரகங்கள் யாவும் மேற்கு நோக்கியிருக்கின்றன. வைகாசி பிரமோற்சவமும், ஆடிப்பூரத்தன்று பீங்கான் ரத விழாவிலும் இங்கு காணத்தக்கவை.

சிக்கல்

நாகையிலிருந்து 5கி.மீ. தொலைவில் இருக்கிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். சிக்கல் சிங்கார வேலன் கோவில் எழுநிலை மாடமும் 80 அடி உயரமுள்ள கோபுரமாக இருக்கிறது. இங்குள்ள தங்க மயிலும், தங்க ஆட்டுக்கிடா வாகனமும் காணத்தக்கவை. சிவபெருமான், சிங்காரவேலர் திருவுருவங்கள் கட்டுமலையின் மேலுள்ளன. கந்தசஷ்டி, கார்த்திகை விழாக்களை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

எட்டுக்குடி

எட்டிமரங்கள் நிறைந்த காடுகள் இருந்ததால் 'எட்டுக்குடி' என்ற பெயர் பெற்றது. நாகைக்கு தென்மேற்கே 25 கி.மீ தொலைவில் இருக்கிறது. அருணகிரிநாதரின் பாடல் பெற்றது. எட்டுக்குடிக் கோயிலில் முருகனைத் தாங்கும் மயிலின் உருவம் கல்லில் இருந்த போதும் மயியின் கால்கள் கனமின்றி மென்மையாக இருப்பது காணத்தக்கது. இது ஒரு அரிய வேலைப்பாடாகும்.

இலங்கையிலுள்ள கதிர்காமம், திருக்கேதீச்சுரம், திருக்கோணமலை மூன்றும் இந்தியத்தமிழரின் ஈடுபாட்டுக்குரிய தலங்களாக இருப்பவை போல, ஈழத்தமிழர் வழிபடும் தமிழ்நாட்டுக் கோயில்களுள் சிதம்பரம், வேதாரண்யம், எட்டுக்குடி, திருவாலங்காடு ஆகிய நான்கும் முக்கியமானவை.

வேதாரண்யம்

வடமொழியில் மாற்றபெற்ற ஊர் பெயர்களில் இந்த ஊரும் ஒன்று இங்கு மான்கள் அதிகம் இருந்ததால் பண்டையக் காலத்தில் இவ்வூரை 'திருமரைக்காடு' என்று அழைக்கப்பட்டது. இரை உணராத வேற்றுமொழியினர் 'மரை'யை மறை எனக் கொண்டு வேதம் + ஆரண்யம் = வேதாரண்யம் என்று தங்கள் போக்குக்கு ஏற்ப மாற்றி விட்டனர். வேதாரண்யம், நாகையிலிருந்து 55 கி.மீ தொலைவிலுள்ளது சிவன் மணவாளசுவாமியாக அகத்தியருக்கு காட்சி கொடுத்த இடம் என்பது ஐதீகம். திருநாவுக்கரசர் 11 பாடல்கள் பாடி இக்கோயிலின் கதவை திறந்ததும்; ஞானசம்பந்தர் பாடிய பாட்டால் மூடிக்கொண்டதாகக் கூறி இந்நிகழ்ச்சியை சித்தரிக்கும் பூட்டும் திருவிழா மாசிமாதத்தில் நடைபெறுகிறது.

யாழ்ப்பாணத்தார் இக்கோயிலுக்கு நிறைய திருப்பணி செய்திருக்கிறார்கள் இக்கோயிலில் சரசுவதி கையில் வீணையின்றி ஏடுமட்டும் இருப்பது, நவக்கிரகங்கள் கிழமை வரிசைப்படி ஒரே நேர்கோட்டு வரிசையில் அடுத்தடுத்து இருப்பது, சோழர் வரலாற்றைக் கூறும் 84 கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.

இங்கு காண வேண்டியவை

மரகத புவினி விடங்கர், இராமர் வழிபட்டலிங்கம், கதோபநிஷத்தை இயற்றிய நசிகேதர் தவம் செய்த இடம், விசுவாமித்திர தீர்த்தம், தேர் முதலியவை.

1930-ஆண்டு சர்தார் வேதரத்தினம் பிள்ளை தலைமையில் ராஜாஜி 'உப்பு சத்தியாகிரகம்' செய்த இடமானதால் இந்தியா முழுவதும் இந்த ஊரைப்பற்றி செய்தி பரவியது. மீன், உப்பு, மிளகாய், காய்கறிகள், கவுதாரி, மாம்பழம் முதலியன இவ்வூரிலிருந்து ஏற்றுமதியாகிறது.

அகத்தியாம் பள்ளி

இவ்வூர் வேதாரண்யத்திலிருந்து 2 1/2 கி.மீ தொலைவிலுள்ள கடற்கரையூர். இங்குதான் உப்பு சத்தியாகிரகம் நடத்தப்பட்டது. அதற்கான நினைவுத்தூன் இங்கு கட்டப்பட்டுள்ளது. இங்கு அகத்தியருக்கு ஒரு கோவில் உண்டு.

கோடியக்கரை

வேதாரண்யத்திலிருந்து 11 கி.மீ தொலைவிலுள்ளது. தாலமி என்ற வெளிநாட்டு ஆசிரியர் இவ்வூரை தம் படைப்பில் குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக்காரர்கள்  பாயின்ட் காலிமோர் என்று பெயரிட்டனர்.

வடக்கே இருந்து தெற்கு நோக்கிச் செங்குத்தாக வந்து கொண்டிருக்கும் நமது கடற்கரை இந்த முனையில் நேர் கோணமாக மேற்கு நோக்கிச் செல்லத் தொடங்குகிறது. கோடிக்கரையில் காலையில் கீழைக்கடலில் கதிரவன் தோன்றுவதையும், மாலையில் தெற்குக் கடலில் சூரியன் மறைவதையும் பார்க்கலாம். இதுபோன்ற காட்சியை கன்னியாகுமரியில் மட்டும்தான் பார்க்கலாம். கடற்கரையில் நீராட, ஆடி, தை அமாவாசைகளில் மக்கள் பெருங்கூட்டமாக வருகின்றனர். 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அர்த்தோத்திரய விழாவன்று கடலில் நீராடுவது சிறப்பாகக் கருதத்தக்கது.

ஆதாரம்: மாவட்ட நிர்வாகப்பிரிவு

No comments:

Post a Comment