Tuesday, November 14, 2023

சினம் வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது


முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

ஒரு நாள் தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது. பொன்னால் செய்த ஒரு குவலையை அவனிடம் கொடுத்தது. "உனக்குச் சினம் வரும்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர்

நிரப்பிக்குடி; பிறகு சினமே வராது" என்று கூறி மறைந்தது தேவதை. அப்போதிருந்தே அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது.

பல நாட்கள் சென்றன.

மீண்டும் ஒரு நாள் தேவதை அவன்முன் தோன்றியது. மந்திரக் குவலை கொடுத்ததற்காக பலமுறை அதற்கு நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன். "மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை. 

அது மந்திரக்குவலை அல்ல. சாதாரணமானதுதான். சினம் வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம் தானே குறையும்.

தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன. ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது" என்று கூறி மறைந்தது தேவதை

No comments:

Post a Comment