Wednesday, November 1, 2023

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்-விஞ்ஞானி

 

Abdul Kalam

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

பிறப்பு: அக்டோபர் 15, 1931

மரணம்: ஜூலை 27, 2015

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)  

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:      

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:     

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

மரணம்:

அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 –  சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

  • அக்னி சிறகுகள்
  • இந்தியா 2020
  • எழுச்சி தீபங்கள்
  • அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

அப்துல் கலாம் அவர்கள் தன்னுடைய இளமைக் காலம், உயர் படிப்பு, விமானம் தான் கனவு என்று இருந்து விதி வசத்தால் மாறி விஞ்ஞானி ஆனது மற்றும் அதில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் வாழ்க்கை வரலாறாக தனது சக ஊழியர் அருண் திவாரி உதவியுடன் “அக்னிச் சிறகுகள்” என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார்.

இளமைக் காலம்

ராமேஸ்வரத்தில் ஜெயனுல்லாபுதீன், ஆஷியம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் கலாம். நடுத்தர வசதிக் குடும்பத்தில் இருந்த கலாமுக்கு படிக்க பணம் சிரமமாகவே இருந்து இருக்கிறது. மேற்படிப்பு படிக்க இவரின் சகோதரி தன் நகையை வைத்துக் கொடுத்த பணத்தில் தான் படிப்பையே தொடர்ந்து இருக்கிறார்.

இந்து முஸ்லிம்

கலாமும் சரி அவரது அப்பாவும் சரி மற்ற சமுதாயத்தினருடன் ரொம்ப இணக்கமாக இருந்து இருக்கிறார்கள். அதோடு இவர்கள் இருந்த பகுதியில் இந்து முஸ்லிம் சமுதாயத்தினர் மிகவும் நெருக்கமாகப் பழகி இருக்கிறார்கள். ராமேஸ்வரத்தில் இந்து முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருந்ததைப் போல இவர் மேற்படிப்பு படிக்கப் போன இடத்தில் இல்லை என்பதைக் குறிப்பிடுகிறார்.

கலாமின் தந்தையும் ராமேஸ்வரம் கோவிலின் தலைமை குருக்கள் பஷி லட்சுமண சாஸ்திரியும் நெருங்கிய நண்பர்கள். கலாமும் சாஸ்த்ரி மகனும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள். கலாம் முஸ்லிம் அடையாளத்துடனும் சாஸ்திரி மகன் இந்து அடையாளத்துடனும் அருகருகே அமர்ந்து இருப்பதைப் பார்த்த ஆசிரியர், கலாமை பின் இருக்கையில் சென்று அமரக் கூறுகிறார். இந்த சமயத்தில் சாஸ்திரி மகன் கண்ணீர் விட்டு அழுத காட்சி தன் கண்ணை விட்டு மறையவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதன் பிறகு லட்சுமண சாஸ்திரி பள்ளிக்கு வந்து “குழந்தைகள் மனதில் இது போன்ற சமூக மத வேற்றுமைகளை புகுத்தாதீர்கள்” என்று ஆசிரியரை கண்டித்த பிறகு அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக கூறி இருக்கிறார். ஒருமுறை லட்சுமண சாஸ்திரி தன் வீட்டிற்கு சாப்பிட அழைக்க அதற்கு அவரது ஆச்சாரமான மனைவி எதிர்ப்பு தெரிவிக்கிறார் ஆனால், தன் மனைவியின் எதிர்ப்பையும் மீறி கலாமிற்கு தானே பரிமாறுகிறார். திரும்ப ஒருமுறை சாப்பிட அழைக்கும் சாஸ்திரி, முன் அனுபவங்களால் கலாம் தயங்கியதைக் கண்டு அவருக்கு ஆறுதல் கூறி அழைத்துச் செல்கிறார். இந்தமுறை அவரது மனைவியே முன்வந்து அனைத்தையும் செய்கிறார்.

சகோதரி கொடுத்த நகை

கலாம் வளர்ச்சியில் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் சம்சுதீன் மற்றும் அவரது சகோதரியின் கணவர் ஜலாலுதீனும் முக்கியப் பங்கு ஆற்றி இருக்கிறார்கள். இவர்களை தனது வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியத் தருணத்திலும் நினைவு கூறுகிறார். பள்ளியில், கல்லூரியில் இவருக்கு அமைந்த ஆசிரியர்கள் சிறப்பானவர்களாகவும் வழிகாட்டியாகவும் இருந்து இருக்கிறார்கள். இதனால் தானோ என்னவோ கலாமுக்கு ஆசிரியர் என்றால் ரொம்பப் பிடிக்கிறது. இதை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். விமானம் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட கலாம் படிக்க வேண்டியது குறித்து தெளிவான அறிவு இல்லாததால், படிப்பதில் தலையை சுற்றி மூக்கை தொட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று குறிப்பிடுகிறார். இவர் படிப்பிற்கு இவரது சகோதரி தன் நகையை வைத்து கொடுத்த பணத்தில் படித்து பின் அரசு உதவித் தொகை மூலம் தொடர்ந்து இருக்கிறார். தான் வேலைக்கு சேர்ந்த பிறகு நகையை மீட்டுக்கொடுத்து விட வேண்டும் என்று கூறினார் ஆனால், மீட்டாரா என்பது பற்றி குறிப்பிடவில்லை.

விமானப் படை / பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில்நுட்ப பிரிவு

படிப்பு முடிந்ததும் இரு இடத்தில் கலாமிற்கு நேர்முகத் தேர்வு வாய்ப்புக் கிடைக்கிறது. ஒன்று விமானப் படை இன்னொன்று பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில்நுட்ப பிரிவு. இதற்காக டெல்லி பயணம் செய்கிறார். பாதுகாப்பு அமைச்சகத்தின் நேர்முகத்தேர்வில் அவரின் திறமைக்கு சவால் விடும் வகையில் கேள்விகள் இல்லை ஆனாலும், நேர்முகத்தேர்வை சிறப்பாகச் செய்கிறார். இதை முடித்து டேராடூன் விமானப்படை நேர்முகத் தேர்வு செல்லும் கலாம் களைப்பு, பதட்டத்தால் தேர்வாக முடியவில்லை. ஏமாற்றத்தால் உடைந்து போன கலாம் இனி என்ன செய்யப்போகிறோம் என்ற குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறார்.

எம்மதமும் சம்மதம்

பின் கங்கையில் குளித்து மன நிம்மதி தேடி ரிஷிகேஷ் செல்லும் கலாம், அங்கே சந்திக்கும் ஒரு ரிஷியின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனையால் மனத் தெளிவு பெறுகிறார். தான் அங்கே உள்ளே நுழைந்ததுமே உடலில் ஒரு அதிர்வு ஏற்பட்டதாகக் கூறுகிறார். இதன் பிறகு தனக்கு கிடைத்த வழியான பாதுகாப்பு அமைச்சகத்தில் சேர்கிறார். கலாம் முஸ்லிமாக இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் இந்து மதக் குறிப்புகளையும் மேற்கோள் காட்டியிருக்கிறார். தன்னை எந்த மதத்தின் நபராகவும் முன்னிறுத்தாமல் புத்தகம் முழுக்க சம்பவங்களை கூறி வருவது உண்மையில் மிகப் பெரிய விஷயம்.

சம்பளம் 250 ரூபாய்

கலாமுக்கு விமானம் ஓட்ட முடியாமல் போய் விட்டதே என்ற ஏமாற்றம் இருந்தும், இங்கு விமானத்தை உருவாக்கும் பணி கிடைப்பதால் ஆறுதலடைகிறார். இவருடைய சம்பளம் 250 ரூபாய். கலாம் பின்னாளில் குடியரசுத் தலைவர் ஆனதும் போர் ஜெட் விமானத்தில் பயணித்தார். இவ்வாறு பயணித்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவரும் இவரே!

விமானத் தயாரிப்பில் ஈடுபட்டு அதில் சில காலம் சென்ற பிறகு “இந்திய விண்வெளி ஆய்வுக் குழு”விடம் இருந்து ராக்கெட் எஞ்சினியர் பொறுப்பிற்கு அழைப்பு வருகிறது. இங்கு லட்சுமண சாஸ்திரி கீதையில் மேற்கோள் காட்டியதை நினைவுபடுத்திக் கொள்கிறார். “வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி” என்பதை நினைவுபடுத்திக் கொண்டதாக கூறுகிறார்.

டாக்டர் விக்ரம் சாராபாய்

டாக்டர் விக்ரம் சாராபாய் (இவரை உதாரணமாக பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்), பேராசிரியர் எம் ஜி கே மேனன், அணு சக்தி கமிசன் துணைத் செயலாளர் சரஃப் ஆகிய மூவரும் தான் நேர்காணல் செய்து இருக்கிறார்கள்.

உருட்டி மிரட்டி கேள்விகளால் துளைத்தெடுக்கும் முரட்டுத் தனம் இல்லாமல், தன்னிடம் உள்ள சாத்தியக் கூறுகளை தெரிந்து கொள்ளும்படி கேள்விகள் அமைந்து இருந்ததாகக் கூறுகிறார். இந்த பணி வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காத வராது வந்த மாமணி என்று கூறுகிறார்.

முதல் சுதேசி செயற்கைக்கோள் எஸ் எல் வி

“எஸ் எல் வி” செயற்கைக்கோள் தயாரிப்பில் அனைவரும் கடுமையாக பணிபுரிகிறார்கள். செயற்கைக்கோள் தயாராகி (10 ஆகஸ்ட் 1979) மேலெழுந்து நான்காவது கட்டத்தில் செல்லும் போது தொழில்நுட்பக் கோளாறால் கடலில் விழுந்து விடுகிறது.

இதனால், விரக்தியின் எல்லைக்கே சென்ற கலாம் தன் கால்கள் மரத்து விட்டன, உடல் பலம் முழுமையும் இழந்து விட்டதாகக் கூறுகிறார். உண்மையில் படிக்கும் நமக்கும் இவரின் மன நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. தன் உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

பின் மறுபடியும் போராட்டம், மன உளைச்சல்கள், மற்றவர்களின் பரிகாசம், நெருக்கடி தொடர்கிறது. பல முயற்சிகளுக்குப் பிறகு 1980 ஜூலை 18 இந்தியாவின் முதல் சுதேசி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது.

இருபது வருடப் போராட்டம் முடிவிற்கு வந்தது. இதில் கலாம் அடையும் சந்தோசம், நாமே அடைவது போல இருக்கிறது.

உற்சாக வெள்ளம் கரைபுரண்டோட கலாம் சகாக்கள் கலாமை தங்கள் தோளில் தூக்கிவைத்து ஊர்வலமாக வருகிறார்கள். தேசமே எதிர்பார்க்கும் ஒரு முயற்சியில் / பொறுப்பில் உள்ளவர் வெற்றி பெற்றால், அவரின் மன நிலையை யாரும் விளக்க வேண்டுமா?!

சக ஊழியர்களின் வெறுப்பு

இதன் பிறகு 1981 ல் ஒரு செயற்கைக்கோள் ஏவுகிறார்கள். இதில் கலாமின் பங்கு பாதி இருந்தாலும் ஊடகங்கள் இவரையே முன்னிறுத்தியதால் இதில் சம்பந்தப்பட்ட மற்ற சக ஊழியர்களின் வெறுப்பிற்கு ஆளாகிறார். இது மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையை அவருக்குத் தருகிறது. அவருக்குக் கொடுக்கப்பட்ட “பத்மபூஷன்” விருதிலும் பலருக்கு அதிருப்தி. கலாமிற்கு அவசியமில்லாமல் முக்கியத்துவம் கொடுப்பதாக கூறுகிறார்கள். இதனால் கலாம் மன உளைச்சல் அடைகிறார்.

DRDO

இந்த நிலையில் DRDO [Defence Research and Development Organisation] என்ற அமைப்பில் சேரக் கூறி கலாமுக்கு அழைப்பு வருகிறது. இஸ்ரோவில் [ISRO – Indian Space Research Organisation] நடந்த “அரசியல்” சம்பவங்களால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்து பின் இவர்கள் அழைப்பை ஏற்று DRDO செல்வதாக முடிவு செய்கிறார். இஸ்ரோவில் கலாமை விடுவிக்க தாமதம் ஆனாலும், பின்னர் இங்கு இணைந்து விடுகிறார்.

DRDO வில் இணைந்த பிறகு இங்கு உள்ளவர்களை புரிந்து கொண்டு அவர்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்கிறார். இதற்கு சில காலம் எடுக்கிறது. அடுத்த பணியாக “பிருத்வி” ஏவுகணை தயாரிப்பது ஆரம்பமாகிறது.

இளைஞர்களின் முக்கியத்துவம்

இதற்கு இளைஞர்கள் தேவை என்பதை உணர்ந்து அவர்களை இதில் பங்கு பெற வைத்து அனுபவம் பெற்றவர்களின் தலைமையில் துடிப்பான இளமையும் இணைந்து உற்சாகமாகப் பணியாற்றுகிறார்கள். இங்கும் மூத்த அதிகாரிகளிடம் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வருகிறது.

பிருத்வியின் வெற்றி

பிருத்வியின் வெற்றியில் உலக நாடுகள் அதிர்ந்து விடுகின்றன. சுதேசி ஏவுகணையான பிருத்வியின் வெற்றி பல நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது குறித்த தகவல்கள் நமக்கு இந்தியனாக மிகவும் பெருமை அளிக்கிறது. இடையில் பிரதமர் இந்திராகாந்தி ஆய்வுக் கூடத்திற்கு வந்தது, அவர் கொலையான சம்பவத்தில் ஊரடங்கு நிலை பற்றி எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்.

ராஜீவ் காந்தியின் ஊக்கம்

இவருக்குப் பின் வந்த ராஜீவ் காந்தியும் தங்களுக்கு பெருமளவில் ஊக்கம் கொடுத்ததாகவும் பல விசயங்களில் தமக்கு உறுதுணையாக இருந்தது பற்றியும் கூறுகிறார். எஸ் எல் வி 3 வெற்றியால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை பார்க்கச் செல்ல வேண்டும் என்று இவரது உயர் அதிகாரி (தவான்) கூறியதும் தான் கவனிக்கிறார், தான் சுமாரான உடையும் செருப்பும் அணிந்து இருப்பதை.

பிரதமரை பார்க்கச் செல்லும் போது இப்படியே எப்படி செல்வது என்ற தன் சங்கடத்தை வெளிப்படுத்துகிறார். இதற்கு அவரது உயரதிகாரி நீங்கள் “வெற்றி” என்னும் அழகிய உடையை அணிந்து இருக்கிறார்கள் அதனால் கவலை வேண்டாம் என்று கூறுகிறார்.

இதன் பிறகு சந்திப்பு பற்றி விவரிக்கிறார்.

அக்னி தயாரிப்பும் பிரம்மாண்டமும்

இதன் பிறகு பெரிய பணியான “அக்னி” ஏவுகணை தயாரிப்பில் இவரது குழு ஈடுபடுகிறது. 500 விஞ்ஞானிகள் இதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். படிக்கும் போதே நமக்கு எப்படி இதெல்லாம் செய்து இருப்பார்கள்! அனைத்தையும் ஒருங்கிணைத்து இருப்பார்கள்!! என்ற ஆச்சர்யம் வராமல் போகாது.

பாதுகாப்பு அமைச்சர் கே ஆர் நாராயணன் கலாமுக்கு மிகவும் ஆதரவாகவும் அவரது செயல்களுக்கு உற்சாகம் கொடுப்பவராகவும் இருந்து இருக்கிறார். குறிப்பாக நாராயணன் மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்பது கலாம் கூறுவதில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

பணியைக் காதலித்த கலாம்

கலாம் தனது பணியை மிகவும் காதலித்து இருக்கிறார். குடும்பம் என்று வந்தால் தனிப்பட்ட பணிகளின் காரணமாக தன்னால் பணியில் முழுமையாக / நேர்மையாக நடந்து கொள்ள முடியாது போகும் என்று கருதி இருக்கிறார். இதன் காரணமாகவே திருமணம் செய்து கொள்ளவில்லை போல இருக்கிறது. தன்னுடைய சிந்தனை முழுவதையும் பணியில் வெற்றி பெறுவது, இந்தியாவின் வளர்ச்சியை உயர்த்துவது என்ற விசயங்களிலே வைத்து இருந்து இருக்கிறார். வேறு எந்த சிந்தனையும் இல்லை. பணியில் தவறு ஏற்படும் போதெல்லாம் அதற்காக மிகவும் வருந்தி இருக்கிறார். தன் தவறுகளுக்கு பொறுப்பேற்கவும் தயங்கவில்லை.

நீங்கள் உங்கள் பணியை காதலித்து உங்கள் முழு உழைப்பையும் செலவிட்டு இருந்தால் மட்டுமே தோல்வி அடையும் போது அதில் ஏற்படும் வலியை உண்மையாக உணர முடியும். இது கலாமுக்கு 100% பொருந்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உண்மையாக உழைப்பவர்களின் நேர்மையை யாராவது சந்தேகப்பட்டால் அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. கலாம் ஒவ்வொரு முறை வெற்றி பெறும் போதும் தன் குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் உடனில்லையே என்ற வருத்தத்தை பதிவு செய்து இருக்கிறார். இது புத்தகம் முழுக்க சீராக வருகிறது. வெற்றி பெற்றாலும் பகிர்ந்து கொள்ள அவருடன் எவருமில்லாத சோகம் நமக்கும் வருத்தத்தை அளிக்கிறது. இடையில் சகோதரி கணவர், தாய், தந்தை, உயர் அதிகாரி இழப்புகள் கலாமை மிகுந்த துயரத்தில் ஆழ்த்துகின்றன.

ஊடகங்களின் கேலி

“அக்னி” ஏவுகணை 1989 ஏப்ரல் 20 ல் சோதனை செய்து பார்க்க நாள் குறிக்கப்படுகிறது. இதற்காக சோதனைப் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றுகிறார்கள். இதற்கு ஊடகங்கள் சர்ச்சையை கிளப்புகின்றன. இருந்தும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாடே எதிர்பார்க்கும் 20 ம் தேதி! ஏவுகணை கிளம்ப சில நிமிடங்கள் இருக்க, படபடப்புடன் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கும் போது அதில் உள்ள தொழில்நுட்ப பிரச்சனையால் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இதை ஊடகங்கள் கிண்டல் செய்கின்றன.

இந்தத் தோல்வியால் அனைவரும் துவண்டு விடுகிறார்கள். அதற்கு கலாம் “எஸ் எல் வி முயற்சியில் நாங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய செயற்கைக்கோள் கடலில் விழுந்து விட்டது ஆனால், உங்களுக்கு அது போல நடக்காமல் உங்கள் கண் முன்னே முழுதாக இருக்கிறது. எனவே துவண்டு விடாமல் திரும்பக் கடுமையாக முயற்சியுங்கள்“ என்று தன் அனுபவத்தை வெளிப்படுத்துகிறார்.

கடுமையான போராட்டம்

திரும்ப அனைவரும் தூக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்கிறார்கள். யாருக்கும் இதைத் தவிர வேறு எந்தச் சிந்தனையும் இல்லை. திரும்ப 1989 மே 1 நாள் (பத்து நாட்களில்) குறிக்கப்படுகிறது. கிளம்ப 10 நொடி இருக்கும் போது திரும்பப் பிரச்சனை. திட்டம் ரத்து செய்யப்படுகிறது. “வெளிநாடுகளில் இது சகஜம் ஆனால், ஆர்வமாக உள்ள தேசம் எங்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளவில்லை” என்று வருத்தமாகக் குறிப்பிடுகிறார். உண்மையில் அப்போது அங்கு இருந்தவர்களின் மனநிலை எப்படி இருந்து இருக்கும் என்று யோசித்தால், மிகவும் பாவமாக இருக்கிறது.

இந்தச் சோதனையின் போது மக்களை வெளியேற்றுவதால், அதற்கு மக்களுக்கு இழப்பீடு போல பணம் கொடுத்து இருக்கிறார்கள். இதை ஊடகங்கள் “இப்படியே அடிக்கடி செய்தால் ஒரு புதிய வீடு கட்டி விடலாம்” என்பதைப் போல கேலி சித்திரம் வரைந்து இருக்கிறார்கள். இது அல்லாமல் பலரும் வாசகர்களுக்கு தீனி போட கிண்டல் கேலி என்று இவர்களை மிகவும் புண்படுத்தி இருக்கிறார்கள்.

பிறகு பல கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு தவறுகள் களையப்பட்டு அடுத்த முயற்சியாக 1989 மே 22 ல் அக்னி கிளம்ப (20 நாட்களில்) திட்டமிடப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சர் கே சி பந்த் “கலாம்! நாளை அக்னி வெற்றியை கொண்டாட நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்க.. அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல், பின் யோசித்து RCI ல் [Research Centre Imarat] நட ஒரு லட்சம் மரக்கன்றுகள் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். கலாம் அப்போது இருந்தே இயற்கையில் ஆர்வம் கொண்டு இருந்ததை அறிந்து கொள்ளலாம். இது போல ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் இடத்தில் பறவைகளுக்கு தொந்தரவு இல்லாமல் அமைக்கும் படியும் ஒரு இடத்தில் கூறி இருக்கிறார்.

அக்னி

அன்று தட்ப வெட்ப நிலை சரியில்லை, புயல் அபாயம் என்று வானிலை பயமுறுத்தியது ஆனால், இந்த முறை வெற்றிகரமாக “அக்னி” பாய்ந்து விடுகிறது. எங்களுடைய ஐந்து வார மன உளைச்சலை 600 நொடியில் சடாரென்று துடைத்து விட்டதாக குறிப்பிடுகிறார். அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமன் ஆகியோர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறார்கள்.

மேற்கு ஜெர்மனியின் உதவியுடன் இந்த ஏவுகணையை தயாரித்து இருப்பதாக மற்ற நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இது சுதேசி ஏவுகணை என்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை. கலாம் வேலப்ஸ் தீவில் நான்கு மாதம் இருந்த போது இந்த தொழில்நுட்பத் தகவல்களைத் திருடி விட்டதாக அமெரிக்க செனட் சபை, மேற்கத்திய ஊடகங்கள் கூறுகின்றன. இதற்கு கலாம் “நான் அங்கு சென்ற போது இந்த தொழில்நுட்பமே வரவில்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கலாம் சோதனையில் ஈடுபட்டு இருந்த போது திரைப்படங்களில் வருவது போல உடன் பணி புரிவரின் வியர்வைத் துளி அமிலத்தில் விழுந்ததால், வெடி விபத்து ஏற்பட்டு உயிர் தப்பியதைக் கூறுகிறார். இதில் தீக்காயம் ஏற்பட்டவருக்கு மருத்துவமனையில் சேர்க்க படுக்கை வசதி கூட இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது மட்டுமல்ல கலாம் பேருந்தில் செல்வது மற்றும் பல செய்திகளைப் படிக்கும் போது இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியில் இருக்கும் நபருக்கு எப்படி வசதிகள் கொடுக்கப்படாமல் இருந்தது என்று ஆச்சர்யமாக இருக்கிறது. (கொடுத்து இவர் வேண்டாம் என்று கூறி விட்டாரா என்பதும் புரியவில்லை).

பொக்ரான் பற்றிய தகவல்கள் இல்லை

இதன் பிறகு பொது வாழ்க்கைக்கு வருவது பற்றி கூறுகிறார். “பொக்ரான் அணுகுண்டு சோதனை” பற்றி புத்தகத்தில் தகவல்கள் இல்லை.

உலக போலிஸ் அமெரிக்கா கண்ணில் மண்ணைத் தூவி அவர்கள் செயற்கைக்கோள் கண்காணிக்கும் நேரத்தை கணித்து யாருக்குமே தெரியாமல் இந்த சோதனை நடத்தப்பட்டது. பின் இதை பிரதமர் “வாஜ்பாய்” அறிவித்த பிறகு தான் அனைவருக்கும் தெரிந்து உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இந்தியனாக ஒவ்வொருவரும் பெருமைப்பட்ட காலங்கள் அவை. அணு ஆயுத சோதனைக்காக அமெரிக்கா, இந்தியாவிற்கு பொருளாதாரத் தடை கூட விதித்தது. இந்தப் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு 1999, பொக்ரான் அணுகுண்டு சோதனை நடந்த வருடம் 1998.

அதோடு 1991 ம் ஆண்டு தன்னுடைய 60 வது வயதில் அவரது பணிக்காலம் முடிந்து மூன்று வருடம் நீட்டிப்பு பெற்றது. ஆக, இவருடைய அதிகாரப்பூர்வ அரசுப் பணிக்காலம் 1994 உடன் முடிந்து விட்டது.

புத்தகம் எப்படி இருக்கிறது?

புத்தகம் படிக்க எளிமையாக இருக்கிறது என்று கூற முடியாது. காரணம், நமக்கு பல விஷயங்கள் புரியாதது தான் ஆனால், துவக்க காலத்தில் ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நாம் நிச்சயம் தெரிந்து கொள்ளலாம் / கொள்ள வேண்டும்.

அதோடு இன்னும் செயற்கைக்கோள், ஏவுகணை எல்லாம் மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் செயல், மக்கள் பசியால் சாகும் போது இதெல்லாம் அவசியமா என்று கேட்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். தடுக்க வேண்டியது ஊழல் தானே தவிர இது போல தொழில் நுட்பங்கள் அல்ல.

நம் நாட்டின் பாதுகாப்பின் பின்னால் இந்த ஏவுகணைகளின் பயன்பாடும், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வசதியின் பின்பும் இது போல ஒரு செயற்கைக் கோளின் பணியும் உள்ளது என்பதை உணர வேண்டும்.

அப்துல் கலாம் ஐயா! தங்களால் இந்தியா பெருமையடைந்தது, தமிழர்கள் பெருமையடைந்தோம். தங்களின் உழைப்பை, நாட்டிற்கு தாங்கள் ஆற்றிய நற்பணியை இந்த உலகம் உள்ளவரை நினைவு கூறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

அப்துல் கலாமின் உரை

2020ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக, வல்லரசு நாடாக திகழும். நம்முடைய இளைஞர்களின் துணையுடன், திறமையான, வெளிப்படையான நிர்வாகமும், அப்பழுக்கற்ற, ஊழலற்ற ஆட்சியும் இருந்தால் நிச்சயம் நாம் 2020ம் ஆண்டில் வல்லரசு நாடாக மாறி விடுவோம் என்று உறுதி பட சொன்னவர் மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.

குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர் அப்துல்கலாம் நாட்டுமக்களுக்காக 2007ம் ஆண்டு ஆற்றிய உரை:

நாட்டில் உள்ள 25 வயதுக்குட்பட்ட 54 கோடி பேரையும் ஊக்கப்படுத்தி உத்வேகத்துடன் அவர்களை சரியான பாதையில் நடைபோட வைக்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களுடைய ஆளுமைத் திறனை மேம்படுத்த வேண்டும்.

இளைஞர்கள்தான் இந்த உலகின் மாபெரும் சக்தி. வளர்ந்த, வல்லரசு இந்தியாவில் நகர்ப்புற, கிராமப்புற வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கும். மின்சாரமும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்கும். விவசாயம், தொழில்துறை, சேவைத் துறை இணைந்து செயல்படும். கல்விக்கு சிறந்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.

வாழ்க்கைக்குத் தேவையான கல்வி கற்பிக்க வசதி கிடைக்கும். கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகளுக்கு ஏற்ற நாடாக இந்தியா விளங்கும். உலகிலேயே சிறந்த மருத்துவ வசதிகள் வளர்ந்த இந்தியாவில் அபரிமிதமாக இருக்கும்.

அரசு நிர்வாகம் பொறுப்பானதாக, வெளிப்படையானதாக, ஊழலற்றதாக இருக்கும். வறுமை அறவே ஒழிந்திருக்கும். கல்லாமை இல்லை என்ற நிலையில் இருக்கும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அறவே இல்லாதிருக்கும்.

சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும். புறக்கணிப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. இப்படிப்பட்ட ஒரு வளர்ந்த, வல்லரசு நாடாக இந்தியா நிச்சயம் மாறும். மிகச் சிறந்த திறமை வாய்ந்த அரசு நிர்வாகம் உள்ள நாடாக, அமைதியான நாடாக, அனைவரும் வசிக்க ஆசைப்படும் அழகிய நாடாக நமது இந்தியா நிச்சயம் மாறும்.

நமது நாட்டில் இரண்டாவது பசுமைப் புரட்சி வர வேண்டும். தங்களது வளமான நிலங்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு முழு சுதந்திரமும், சக்தியும் கொடுக்க வேண்டும்.

விவசாய நிலங்கள் பாழ்பட்டுப் போக அனுமதிக்கக் கூடாது. விவசாயிகளும், விவசாய விஞ்ஞானிகளும், தொழிற்சாலைகளும் இணைந்து சீரிய முறையில் உழைத்தால், நமது விவசாய பொருளாதார வளர்ச்சியை ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரிக்க முடியும் என்றார் கலாம்.

No comments:

Post a Comment