Monday, November 13, 2023

அவன் மிகவும் ஆறுதலாக திரும்பிச் சென்றான்

 அமைதியாக இருந்தது அந்த காட்டுப் பகுதி. அதில் ஒரு துறவியோடு நான் பேசிக் கொண்டிருந்தபோது கால்களை விந்தியபடி ஓர் இளைஞன் வந்தான். ‘துறவியே எனக்கு ஆறுதல் அளியுங்கள். என் பாவங்கள் என் மீது சுமையாக அழுத்துகின்றன’ என்றான். அதற்கு அந்தத் துறவி ‘என் மீதும் எனது பாவங்கள் சுமையாக அழுத்துகிறது’ என்றார். ‘ஆனால் நான் ஒரு திருடன்’ என்றான் அவன். ‘நானும் ஒரு திருடன்தான்’ என்றார் துறவி. ‘நான் ஒரு கொலைகாரன். நான் கொன்றபோது மக்கள் எழுப்பிய கூக்குரல் இன்னமும் என் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது’ என்றான் அந்த இளைஞன். ‘எனக்கும்தான்’ என்றார் துறவி. அந்த இளைஞன் துறவியை உற்றுப் பார்த்தான். அப்போது அவன் கண்களில் ஒரு புதிய மாற்றம் தெரிந்தது. குன்றிலிருந்து கீழே இறங்கினான். அப்போது அவன் விந்தி விந்தி நடக்கவில்லை.


நான் அந்தத் துறவியைப் பார்த்து ‘எதற்காக நீங்கள் செய்யாத குற்றத்தை எல்லாம் செய்ததாக அவனிடம் கூறினீர்கள்? இதையெல்லாம் அவன் நம்பியிருப்பான் என்றா நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘அவனுக்கு என் மேல் நம்பிக்கை பிறக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவன் மிகவும் ஆறுதலாக திரும்பிச் சென்றான்’ என்றார். தொலைவில் அந்த இளைஞன் உற்சாகமாக பாடிக் கொண்டே சென்றது காதுகளில் விழுந்தது. அந்த பாடலின் ஆனந்தம் பள்ளத்தாக்கு முழுவதையும் நிறைத்தது

No comments:

Post a Comment