Monday, November 13, 2023

உலகம் முழுமைக்கும் ‘ஒரே வானம்’ தான்

 அது ஒரு ஷாப்பிங் மால்.


பல வடிவங்களில் அலங்கார விளக்குகள் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன.தலைக்கு மேலே மயிலிறகு போல் பல வண்ணங்களில் கண்களையும் கருத்தையும் கவரும் வண்ணம் வித விதமான ஓவியங்கள் விளக்கொளியில் மின்னிக் கொண்டிருந்தன.

விலையுயர்ந்த மரத்தாலான  கதவுகளில் வேலைப்பாடுகளும்,காதிற்குள் உரிமையாய் நுழையும் மனதை வருடும் மெல்லிய வெஸ்டர்ன் மியூஸிக்கும்,மற்றும் குளிர்சாதனத்தின் குளுகுளு காற்றில் கலந்து வந்த நறுமணமும், பாலிஷ் போடப்பட்டு  தூய்மையான பளிங்குத்தரையும் அங்கு  நடமாடும் மேல்நாட்டவர்களின் அழகிய ஷூக்களும், செருப்புகளும் உரசும் சப்தங்களும்...

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கால் பதித்தவுடன்  மனதில் எங்கிருந்தோ  கர்வமும் கம்பீரமும் ஓடி வந்து ஒட்டிக் கொள்ள ஒரே நொடியில்  கோபாலை மிடுக்கான நடைக்கு தானாக மாற்றியது.

இந்த நாட்டிலேயே நிரந்தரமாக தங்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நினைக்கும் போதே பெருமூச்சு வந்தது கோபாலுக்கு.

‘கோவாலு...நம்ம ஊட்லயே மொத ஆளா வெளிநாடு போற நீயி..வெளி நாட்டுல ரொம்ப குளிராமே.. நம்ம ஊரு கம்பளிய மறக்காம எடுத்துக்கினு போ’ கிராமத்திலிருக்கும் ஆயா கூறியது இப்போது ஞாபகம் வர..தான் அணிந்திருந்த விலையுயர்ந்த ஜெர்கினை ஒரு முறை பார்த்தான்.மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

 திடீரென்று ஏனோ தன் அப்பா முன்பு பேசியது ஞாபகத்திற்கு வந்தது.

‘கோபால்..வெளிநாடு போற.. நல்லா டிரஸ் பண்ணனும் எல்லாம் சரிதான்..அதுக்காக துணிகள்ளாம் விலை அதிகமாக வாங்கி இருக்கியேப்பா. அந்த கடைல எதுக்கு வாங்கின? நாம எப்பவும் வாங்கற கடைல இந்த வாரம் தள்ளுபடி வேற போட்டிருக்கே பாக்கலயா நீ? இதே துணிமணிகளை விலை குறைவா  வாங்கியிருக்கலாமேப்பா’

அவனது புதுப்பெட்டியில் புதுத்துணிகளை சரியாக அடுக்கிவைத்துக் கொண்டே கேட்டார் அப்பா.

கல்லூரி முடிந்து  வேலைக்கு சேர்ந்த மூன்றாவது மாதத்திலேயே கம்பெனியில் ட்ரய்னிங் என்று ஒரு மாதம் வெளிநாட்டு பயணமாக கிளம்பிய கோபால் அப்பாவிற்கு பதில் சொல்லாமல் நின்றான்.அந்த 50% தள்ளுபடிக்காக கூட்டத்தில் மாட்டிக்கொண்டு நசுங்க கோபாலுக்கு பிடிக்கவில்லை. அதுவும் கஷ்டப்பட்டு தேடி தேடி நல்ல துணியாக பார்த்து எடுப்பதற்குள் கூட்டத்தில் நசுங்கி உயிரே போய்விடும் என்று தான் வேறு கடையில் வாங்கினான் கோபால்.

பணம் சம்பாதிக்க ஆரம்பத்ததிலிருந்தே கோபால் பொருட்களின் விலையை பற்றி அதிகம் யோசிப்பதில்லை. அப்பா ஏன் தான் இப்படி கணக்கு போடுகிறாரோ? இந்த மிடில் க்ளாஸ் குடும்பத்திலிருந்து எப்பதான் கணக்கு பாக்காத ஹை க்ளாஸ் குடும்பமா ஆகப் போறமோ? நினைக்கும்போதே ஒரே அலுப்பாக இருந்தது கோபாலுக்கு.

இதோ திரும்பிப் பார்ப்பதற்குள் வெளிநாட்டில் மூன்று வாரங்கள்  ஓடிவிட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை.

தன்னை ஆசையாய் வழியனுப்பிய உறவினர்களுக்கு ஏதாவது அன்பளிப்பு வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று தன் அலுவலகத்தில் இருப்பவர்களிடம் விசாரித்துக்கொண்டு இந்த மாலுக்கு வந்தான் கோபால்.

அந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மாலில்...

கடைகளில் இருந்ததை விட உணவகங்களில்  தான்  மக்கள் கூட்டம் சற்று அதிகம் இருப்பது போல உணர்ந்தான்.

ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினான் கோபால்.

தரமான, அழகான பொருட்கள் எல்லாம் எட்டாத விலையில் நின்று கோபாலை பயமுறுத்தின.

பல கடைகளில் வேலை செய்பவர்கள் மட்டுமே இருந்தனர்.இவனைக் கண்டதும்  ஓடோடி வந்து பலமாக வரவேற்றனர். அவர்களிடம் வேண்டாம் என்று சொல்வதற்கே அவமானமாக இருந்தது.

சில மணி நேர தேடல்களுக்குப் பிறகு...

மிடில் க்ளாஸ் குடும்பத்தில் பிறந்துவிட்டு  தற்போது கையில் இருக்கும் சொற்ப பணத்தை வைத்துக்கொண்டு   இந்த பணக்கார நாட்டில் என்ன வாங்குவது? மனதில் தோன்றிய தாழ்வு மனப்பான்மையால் நடையில் முன்பிருந்த மிடுக்கு குறைந்து தளர் நடையானது.

ச்ச என்ன வாழ்க்கை இது??

வருத்தத்தோடு நகரும் படிக்கட்டுகளில் திரும்பி செல்வதற்காக  கீழே இறங்கி கொண்டிருந்த   கோபால்  கீழ் தளத்தில்  ஒரே ஒரு கடையில் மட்டும் மக்கள் கூட்டம்  முண்டியடித்து கொண்டிருப்பதை பார்த்தான். அதன் வாயிலையும் தாண்டி நடைபாதை வரை மிடுக்கான உடையணிந்திருந்த பல வெளிநாட்டினர் நெருக்கியடித்துக் கொண்டிருந்தனர்.ஆச்சரியம் தாங்க முடியாமல் அங்கே சென்று கடையின் கண்ணாடி சுவற்றின் வழியாக  உள்ளே இருந்த பொருட்களை எட்டிப் பார்த்தான். மற்ற கடைகளில் இருந்த அதே பொருட்கள் தான் இங்கும் இருந்தன.

பிறகு ஏன்  இந்த கடையில் மட்டும் இவ்வளவு கூட்டம்?

குழப்பமாக கடையின் முன்பக்கம் ஓடி வந்தான்.

கடையின் வாசலில் வைக்கப்பட்டிருந்த போர்டை படித்து விட்டு மலைத்து நின்றான்.
.
அந்த போர்டில்...

‘இங்கே  விற்பனையாகும் எல்லாப்பொருட்களிலும் 30% தள்ளுபடி.இன்றே கடைசி நாள்’ என்றிருந்தது.

உலகம் முழுமைக்கும் ‘ஒரே வானம்’ தான் எனப்புரிய அவனுக்கு நெடுநேரம் பிடிக்கவில்லை.


அவன் அப்பாவின் வார்த்தைகள் மனதில் எதிரொலித்தன. அப்பாவின் கருத்துகள் மிக உயர்ந்தவை.

No comments:

Post a Comment