Monday, November 13, 2023

உனக்கு நீயே கேட்டுப் பார்த்துக்கிட்டியா?

 அந்த மனிதருக்குப் பெரிய கனவு இருந்தது. ஆனால், அந்த மனிதர் ஒரு கட்டத்தில் தன் கனவு நனவாகும் என்கிற நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டார். தன் கனவை அடையத் தன்னிடம் போதுமான பலம் இல்லை என்று கருதினார். யாரிடமாவது உதவி கேட்க வேண்டும் என்றும் அவருக்குத் தோன்றியது. முதலில் அந்த மனிதருக்கு நினைவுக்கு வந்தது வயதான அவருடைய அம்மா. அவரிடம் கேட்டுவிடுவது என்று முடிவெடுத்தார்.


ஒருநாள் தன் அம்மாவோடு அவர் கிளினிக்குக்குச் செல்லவேண்டியிருந்தது. அது வீட்டுக்கு அருகிலேயே இருந்ததால், இருவரும் நடந்தே சென்றார்கள். மருத்துவரைப் பார்த்து, வழக்கமான சில பரிசோதனைகளை அம்மா செய்துகொண்ட பிறகு இருவரும் வீடு திரும்பினார்கள். வழியில் அவர், அம்மாவிடம் மெள்ளப் பேச்சை ஆரம்பித்தார்.

``அம்மா, என் கனவு என்னனு உங்களுக்குத் தெரியும்தானே?’’

``ஆமாம்ப்பா. அதுக்கென்ன இப்போ...’’

``இல்லம்மா. அந்தக் கனவை நனவாக்குறதுக்கான பலம் என்கிட்ட இல்லைனு தோணுது. அதுக்கான சக்தியை எனக்குக் குடுங்களேன்...’’

அம்மா சொன்னார்... ``உனக்கு உதவி செய்யறதுல எனக்கு சந்தோஷம்தான். ஆனா, அந்த அளவுக்கு சக்தி என்கிட்ட இப்போ இல்லை. இருந்த எல்லாத்தையும் உன்கிட்ட ஏற்கெனவே குடுத்துட்டேனேப்பா...’’

அந்த மனிதர் இதைக் கேட்டு துவண்டு போனார். ஆனால், கனவை நிறைவேற பலம் வேண்டுமே... யாரிடமிருந்தாவது, எந்த வழியிலாவது பெற்றுத்தானே ஆக வேண்டும்? ஒவ்வொருவரிடமாகக் கேட்டுப் பார்ப்பது என்று முடிவு செய்துகொண்டார். தனக்குத் தெரிந்த ஒரு ஞானியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். ஐயா... எனக்கு சக்தி வேண்டும். அது எங்கே கிடைக்கும்?’’ என்று கேட்டார்.

ஞானி சொன்னார்... `இமயமலையில நமக்கு வேணுங்கிற சக்தியெல்லாம் கிடைக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். நானும் இமயமலைக்குப் போயிருக்கேன். ஆனா, அங்கே பனியையும் குளிரையும் தவிர வேற எதையும் நான் பார்த்ததில்லை. எனக்கும் சக்தி எங்கே கிடைக்கும்னு சரியா சொல்லத் தெரியலையேப்பா...’’

அடுத்து அந்த மனிதர் ஒரு துறவியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். ``குருவே, என் கனவு நிறைவேறுவதற்கான சக்தி எனக்கு எங்கே கிடைக்கும்?’’ என்று கேட்டார்.

``நீ செய்யும் பிரார்த்தனையால்தான் சக்தி கிடைக்கும். அதே நேரத்தில் நீ கண்டுகொண்டிருப்பது தவறான கனவு என்றால் அதையும் நீ தெரிந்துகொள்வாய். எனவே, அமைதியாக பிரார்த்தனையில் ஈடுபடு’’ என்றார் துறவி.

அவர் சொன்னது ஒரு வழி என்றாலும், அதுவும் அந்த மனிதருக்குக் குழப்பத்தையே தந்தது. ஏதேதோ சிந்தனையில் வீடு நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்குத் தெரிந்த முதியவர் ஒருவர் எதிர்ப்பட்டார்.

``என்னப்பா... ஏதோ யோசனையோட போற மாதிரி தெரியுது!’’

அவரிடமும் அந்த மனிதர் விஷயத்தைச் சொன்னார்... ``என் கனவு நிஜமாறதுக்கு சக்தி வேணும். அது எங்கே கிடைக்கும்னு ஒவ்வொருத்தரா கேட்டுக்கிட்டிருக்கேன். ஆனா, யாராலயும் எனக்கு உதவி செய்ய முடியலை.’’

``ஒருத்தராலகூடவா முடியலை?’’

``ஆமா.’’

அந்த முதியவர் கேட்டார்... ``சரி... உனக்கு நீயே கேட்டுப் பார்த்துக்கிட்டியா?’’

அந்த மனிதருக்கு இதைக் கேட்டதும் ஏதோ தெளிவு கிடைத்ததுபோல இருந்தது.

No comments:

Post a Comment