Tuesday, January 2, 2024

குரங்கு வியாபாரி

ஒரு கிராமத்தில் அதிகமான குரங்குகள் இருந்தன. அதனால் அந்த கிராம மக்களுக்கு மிக தொல்லையாக இருந்தது. அக்கிராமத்திற்கு ஒரு வியாபாரி வந்தான். அவன் அக்கிராமத்தில் உள்ள குரங்குகளை பார்த்தான். 

அக்கிராமத்து மக்களிடம் எனக்கு நிறைய குரங்குகள் தேவை படுகிறது. ஒரு குரங்கை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்கிற்கு பத்து ரூபாய் வீதம் தருகிறேன் என்றும் கூறினான். கிராமத்து மக்கள் சிலர் உனக்கு எதற்கு குரங்கு? என கேட்க, மருத்துவ ஆராய்ச்சிற்கு தேவைப்படுகிறது என்று வியாபாரி கூறினான். கிராம மக்களும் பணத்திற்கு பணமும் ஆயிற்று, குரங்கின் தொல்லையும் குறையும் என்று எண்ணி அவரவரால் எத்தனை குரங்கினை பிடிக்க முடியுமோ அத்தனை குரங்கினை பிடித்து பத்து ரூபாய் வீதம் பல பத்து ரூபாய்க்களை பெற்றனர் .

கிராமத்தில் உள்ள அனைத்து குரங்குகளையும் மக்கள் பிடித்து கொடுத்து பணம் பெற்றனர். கிராமத்தில் குரங்குகள் தீர்ந்து போயின. குரங்கு வியாபாரி எல்லா குரங்குகளையும் எடுத்துக்கொண்டு கிராமத்தை விட்டு கிளம்புவதற்க்கு முன் கிராம மக்களிடம் எனக்கு இன்னும் நிறைய குரங்குகள் தேவை படுகிறது. இனி பிடித்து கொடுக்கும் ஒவ்வொரு குரங்கிற்கும் ஐநூறு ரூபாய் வீதம் தருகிறேன் என்றும் கூறினான். 

கிராமத்திலோ ஒரு குரங்குக்கூட இல்லை . ஒரு குரங்கிற்கு ஐநூறு ரூபாய் கிடைக்கும் என்பதால் கிராம மக்கள் அனைவரும் குரங்கிற்காக தேடித்தேடி அலைந்தனர். ஒரு குரங்கும் கிடைக்க வில்லை. சில நாட்களுக்கு பிறகு ஒரு வியாபாரி இந்த கிராமத்திற்கு வந்தான். அவன் கிராமத்து மக்களிடம் என்னிடம் நிறைய குரங்குகள் உள்ளது,ஒரு குரங்கு நூறு ரூபாய் ஆகும் என்றான். கிராம மக்கள் அனைவரும் இந்த வியாபாரியிடமிருந்து நூறு ரூபாய்க்கு வாங்கி முதலில் வந்த குரங்கு வியாபாரியிடம் ஐநூறு ரூபாய்க்கு விற்கலாம் என்றெண்ணி போட்டிப்போட்டுக் கொண்டு வாங்கிக் கொண்டனர் . 


குரங்குகள் தீர்ந்து போயின.வியாபாரி கிளம்பினான் . 

கிராமமக்கள் ஐநூறு ரூபாய்க்கு வாங்கி கொள்ளப் போகும் வியாபாரிக்காக காத்துக்கொண்டிருந்தனர்.அந்த வியாபாரிவரவேயில்லை. அவன் வரப்போவேதேயில்லை. 

ஏனெனில் அந்த வியாபாரித்தான் வேறொருவனை அனுப்பி பத்து ரூபாய்க்கு வாங்கிய குரங்கை நூறு ரூபாய்க்கு விற்றுவிட்டான் .

No comments:

Post a Comment